உலகளாவிய தொற்றுநோயின் பொருளாதார பாதிப்புகள் குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டு வந்த போதிலும், அந்த நோயால் ஜனநாயக வெளிகள் அடைபட்டுப் போகின்ற அபாயம் குறித்து அதிக கவனம் செலுத்தப்படவில்லை. இந்த உலகளாவிய தொற்றுநோயின் இவ்வாறான வெளிப்பாட்டை ஹங்கேரியில் மிகவும் வெளிப்படையாக இப்போது காண முடிகிறது.
தவறான தகவல்களைப் பரப்புவதற்கான சிறைத் தண்டனை, பிரதமரின் ஆணையின்படி ஆளுகின்ற விதத்தில் அவசரகால நிலைக்கான தெளிவான கால அவகாசத்தை குறிப்பிடாமை போன்ற கடுமையான நடவடிக்கைகளுக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலை பிரதமர் விக்டர் ஆர்பன் சமீபத்தில் பெற்றிருக்கிறார். அவசர நிலை தானாக முடிவிற்கு வரும் வகையில் சட்டத்தில் ஒரு பிரிவு சேர்க்கப்பட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை, பாராளுமன்றத்தில் மிருகத்தனமான பெரும்பான்மையைக் கொண்ட ஆளும் கட்சியால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
மூன்று மாதங்களுக்கு ஊரடங்கு இருக்கும் என்று வெளியாகி இருந்த ’போலி செய்திகள்’தான், பல மாநிலங்களிலும் புலம்பெயர்ந்து வேலை பார்த்து வருபவர்களிடம் பீதியை ஏற்படுத்தின என்ற அரசின் அதிகாரப்பூர்வ கதையை உச்ச நீதிமன்றம் விமர்சனமின்றி ஏற்றுக்கொண்டதை ஏப்ரல் 2 அன்று ஹிந்து நாளிதழில் வெளியான ’விமர்சனமற்ற ஒப்புதல்’ என்ற தலையங்கம் சுட்டிக்காட்டியிருந்தது.
’நான்கு மணிநேரத்தில் ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது என்ற மிகக்குறுகிய காலத்தில் செய்யப்பட்ட அறிவிப்பு, மாநிலங்களுடனான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவை இல்லாமை, பணம் மற்றும் உணவு இல்லாமல் தாங்கள் கைவிடப்பட்டு விட்டதாக மக்களிடம் எழுந்த அச்சங்கள், வீடுகளில் இருக்கின்ற குடும்பத்தினர் பற்றிய அவர்களின் கவலை’ போன்ற உண்மையான காரணிகளை நீதிமன்றமோ, அரசாங்கமோ கருத்தில் கொள்ளவில்லை என்று அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே வழக்கில், அரசாங்கத்திடமிருந்து உண்மை நிலைப்பாட்டைக் கண்டறிந்து கொள்ளாமல், ’எது குறித்தும்’ குறை கூறுவது அல்லது அவற்றை வெளியிடுவது போன்ற செயல்களில் ஊடகங்கள் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான உத்தரவை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இது ஒருவகையில் இந்திய ஆர்பன் தருணமாக இருந்தது. அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு மட்டுமே, அவை மட்டுப்படுத்தப்பட்ட தகவல்களாக இருக்கலாம், அவற்றின் உள்ளார்ந்த பிரச்சாரக் கூறுகளுடன் வெளியிடப்படுவதற்கு சட்டப்பூர்வமான அனுமதி கிடைக்கும்.
ஊடகங்களின் பங்கு
மத்திய அரசாங்கத்தின் அந்த வேண்டுகோள், தொற்றுநோய்களின் போது ஊடகங்களுக்கான பங்கு, நம்பகமான தகவல்களைக் கொண்ட சூழலின் அவசியம் ஆகியவற்றை உணர்ந்து கொள்வதில் அரசு நிர்வாகத்திடம் இருந்த ஜனநாயகப் பற்றாக்குறையையே சுட்டிக்காட்டியது. கோவிட்-19 பற்றி சுதந்திரமான கலந்துரையாடல்களுக்கான உரிமையை உச்சநீதிமன்றம் உறுதிசெய்திருந்தாலும், தவறான தகவல்களையும், பெருமளவிலான பீதியையும் தவிர்ப்பதற்காக, நிகழ்வுகளின் முன்னேற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே ஊடகங்கள் குறிப்பிடவும், வெளியிடவும் வேண்டும் என்று அது அறிவுறுத்தியது.
இங்கே தான் சிக்கல் ஏற்படுகிறது. போலியான செய்திகளை வெளியிடுவதும், பொதுமக்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதும் மேலிருந்தே, பெரும்பாலும் அதிகாரத்திலிருப்பவர்களாலேயே நிகழ்கிறது என்பதே இப்போதைய உண்மை. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பத்திரிகை ஆய்வுக்கான ராய்ட்டர்ஸ் நிறுவனத்தால் போலி செய்திகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த உண்மை நிறுவப்பட்டுள்ளது.
ஆயுஷ் அமைச்சகத்தின் உரிமைகோரல்கள்
இந்த நெருக்கடியின் போது ஆயுஷ் அமைச்சகம் (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) எவ்வாறு செயல்பட்டது என்பதைப் பார்ப்போம். கடந்த வார தொடக்கத்தில், இங்கிலாந்து இளவரசர் சார்லஸை சார்ஸ்-கோவ்-2 நோயிலிருந்து ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருந்துகள் குணப்படுத்தியதாகவும், அவர் உயிர் பிழைத்தது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்ற நமது பழமையான நடைமுறையை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது என்று ஆயுஷ் இணைஅமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கூறியிருந்தார். இளவரசரின் செய்தித் தொடர்பாளர் அது தவறு என்று கூறி அமைச்சரின் கூற்றை நிராகரித்தார். ’இந்த தகவல் தவறானது. வேல்ஸின் இளவரசர் ஐக்கியப் பேரரசின் தேசிய சுகாதார சேவை (என்.எச்.எஸ்) மருத்துவ ஆலோசனையையே பின்பற்றினார்.
மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்
வேறொன்றும் இல்லை’ என்று கிளாரன்ஸ் ஹவுஸ் செய்தித் தொடர்பாளர் தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பின்னர் இந்திய பத்திரிகை கவுன்சில் அறிக்கையொன்றை வெளியிட்டது. ’ஆயுஷ் குறித்த தவறான தகவல்கள் பரவுவதைத் தடுப்பது மற்றும் தொற்றுநோய் காரணமாக நாட்டில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கோவிட்-19 சிகிச்சைக்கான ஆயுஷ் மருந்துகள் மற்றும் சேவைகள் குறித்த செய்திகள், அது தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதை நிறுத்துமாறு’ அச்சு ஊடகங்களை பத்திரிகை கவுன்சில் அறிவுறுத்தியிருந்தது.
இந்த சூழலில், அரசாங்கத்திடமும், உச்சநீதிமன்றத்திடமும் சுதந்திரமான பத்திரிகை குறித்து சில கருத்துக்களை நாம் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் ஏறக்குறைய முப்பதாண்டுகளுக்கு முன்னர் ’உலகில் ஏற்பட்ட பஞ்சங்களின் கொடூரமான வரலாற்றில், சுதந்திரமான பத்திரிகைகளைக் கொண்ட எந்தவொரு சுதந்திர, ஜனநாயக நாட்டிலும் ஒப்பீட்டளவில் பெருமளவிலான பஞ்சம் இதுவரையிலும் ஏற்பட்டதில்லை’ என்று உறுதியாகக் கூறினார். ’பத்திரிகை சுதந்திரமும், நல்லாட்சியும் ஒன்றுக்கொன்றுடன் தொடர்பு கொண்டவை. நாட்டின் பொருளாதாரம் மற்றும் மனித வளர்ச்சியை ஊக்குவிப்பதில் அவையிரண்டும் தங்களுக்கிடையே ஆதரவை வழங்கிக் கொள்கின்றன’ என்று யுனெஸ்கோவின் ஆய்வு கூறுகிறது.
நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்
’நிச்சயமற்ற தன்மை நோக்கி நீளும் அணிவகுப்பு’ என்ற தலைப்பில் ஏப்ரல் 4 அன்று களநிலவரம் குறித்து தி ஹிந்துவில் வெளியான அறிக்கை, உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசு சமர்ப்பித்த கோரிக்கையின் உள்ளீடற்ற தன்மையை வெளிப்படுத்தியதோடு, இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவல நிலையையும் ஆவணப்படுத்தி இருந்தது. உலகளாவிய தொற்றுநோய் ஏற்படுத்தியிருக்கின்ற நெருக்கடிகளின் போது, கஷ்டப்பட்டு வென்றெடுத்த ஜனநாயக உரிமைகளை அரசாங்கம் குறைத்து மதிப்பிடுவதை அனுமதிக்க முடியாது என்பதையும், தனித்து சுதந்திரமாகச் செயல்படுகின்ற ஊடகங்களே ஜனநாயகத்திற்கு அடிப்படையான தேவை என்பதையும் நீதிமன்றங்கள் அங்கீகரிக்கும் என்பதே நமக்கிருக்கின்ற நம்பிக்கை.
நன்றி தி ஹிந்து, 2020 ஏப்ரல் 06
தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு