வலிமை குன்றி வரும் ஜனநாயகம் –   நிகழ் அய்க்கண்உலகமயமாக்கல் என்பது உலகளவில் இரண்டு வகைகளில் செயல்பட்டு வருகின்றது. ஒன்று , அரசால் அங்கிகரிக்கப்பட்டுள்ள , நவதாராளமயத்தை அடிப்படையாகக்கொண்ட சட்டபூர்வசந்தை. மற்றொன்று கடத்தலை முழுத்தொழிலாகக்கொண்ட ,சட்டபூர்வமற்ற சந்தை ஆகும். 

சட்டபூர்வ சந்தையானது, உலக வங்கி,சர்வதேச நாணய நிதியம்  இவற்றினது ஆசியுடன் , உலக வர்த்தக நிறுவனத்தின் கட்டுப்பாட்டு விதிகளுடன் மேற்கொள்ளப்படுவதாகும். விரைவான  பொருளாதார வளர்ச்சியினை எட்டுவதற்கு இந்நிறுவனங்கள்யாவும் , கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை ;மக்கள் நலத்திட்டச்செலவுகளில் சிக்கனம் ;தொழிலாளர்களின் ஊதியம் உயராமல் பார்த்துக்கொள்வது ; நிதிப்பற்றாக்குறையை கட்டுக்குள் வைப்பது ;தனியார் மயம்  உள்ளிட்டவற்றினை முன்மொழிகின்றன.இதன் விளைவு , யதார்த்தத்தில் நாட்டினது ,சமூக – பொருளாதாரத்தளத்தில்  தவிர்க்கமுடியாத   சமத்துவமின்மையை ஏற்படுத்திவிடுகிறது.

 சட்ட பூர்வமற்ற சந்தையானது,  உலக வர்த்தக நிறுவன வரன்முறைக்குள் அடங்காத, உற்பத்தி –  வினியோக விதிகளுக்குள்  பொருந்தாத ,பன்னாட்டு அளவில் மறைமுகமாக நடைபெற்றுவரும் கடத்தல் சந்தையாகும் . அதாவது ,தங்கம் – போதைப்பொருட்கள் – விபச்சாரத்திற்காக பெண்கள்  மற்றும் சிறுவர்கள் – ஆயுதங்கள் கடத்துவதும்  ,குறைந்த ஊதியத்திற்கு தொழிலாளர்கள் கடத்தப்படுவது உள்ளிட்ட செயல்கள் இதில் அடங்கும். இப்படி சட்டபூர்வமற்றமுறையில் நடக்கும் கறுப்புச்சந்தையின் வழியாக, பல பில்லியன் அளவு டாலர்கள்  புரளுவதாக இருக்கின்றது . இதில் கிடைக்கும் வருமானமானது ,எந்த நாட்டினது வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கும்  உட்படுவதில்லை. இத்தகைய செயலானது ,  கறுப்புப்பணபுழக்கம்  அதிகரிப்பதற்கும் ,  ஊழல் பெருகுவதற்கும் வழிகோலியிருப்பது மட்டுமின்றி , சம்பந்தப்பட்ட நாட்டினது சமூக-பொருளாதாரத்தளத்தில் சமத்துவமின்மையின்  எல்லை விரிவடைவதற்கும்  காரணமாகி விடுகின்றது. கொரோனா காலத்திற்குப்பிறகு, ஒவ்வொரு நாளும்  இங்குள்ள தினசரி செய்திப்பத்திரிக்கை ,24 # 7 மணி நேர தொலைக்காட்சி  அலைவரிசைகளைப் பார்த்தோமேயானால் சட்டபூர்வமற்ற செயல்கள் குறித்த செய்திகளினை அதிகம் காணமுடிகிறது. குறிப்பாக ,நகைகள் பறிப்பு – திருட்டு : மதுப்பாட்டில்கள் – கஞ்சா – தங்கக்கட்டிகள் -குழந்தைகள் கடத்தல் : செல்போன் பறிப்பு  : ரம்மிவிளையாடி உயிரிழப்பு : ஏலச்சீட்டு மோசடி : குட்கா பறிமுதல் : இரு சக்கரவாகனங்கள் திருட்டு : கந்துவட்டிக்கொடுமை : பெண்கள் கற்பழிப்பு :  வறுமையினால் குழந்தைகளை விற்பனை செய்வது : வங்கியில் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பிச்செலுத்தமுடியாமை : சாராயம் காய்ச்சுதல் : ஏ.டி.எம் உடைக்க முயற்சி : வழிப்பறி … இப்படியாக நீள்கிறது. இத்தகையச்செயல்களை  வழக்கமான ஒன்று என எண்ணி கடந்துவிட முடியாது. இவற்றிற்கெல்லாம் காரணம், சமூக-பொருளாதாரத்தளத்தில் சமத்துவமின்மையின் எல்லை விரிவடைந்துகொண்டே வருவதற்கான அறிகுறிகள் என்றே கருதமுடிகின்றது.

 சந்தைமய காலத்தில்  அரசும் சரி , சந்தை நிறுவனங்களும் சரி, மக்கள் நலன் எனக்கூறிக்கொண்டு லாபத்தை முன்னிருத்தியே செயல்படுகின்றன. சமூக – பொருளாதாரத்தளத்தில் ஏற்றத்தாழ்வினை கொண்டுள்ள  ஒரு சமூகத்தில் , அரசும் -சந்தையும் சேர்ந்துகொண்டு , இப்படி ச்சளைக்காமல்  போட்டியையும் – நுகர்வையும் அனைத்து மக்களிடத்தேயும் பேதமின்றி திணிக்கும் பொழுது , எளிய மக்கள் இதனை எதிர்கொள்ளமுடியாமல் திணறுவது மட்டுமின்றி  , நுகர்வினால்  வறுமையையும்  ; வறுமையில்  நுகர்வையும் தொடர்ந்து சந்தித்திடவேண்டியிருக்கிறது.  இதன் காரணமாக , ஏற்றத்தாழ்வின் இடைவெளியை ஈடுசெய்யும் பொருட்டோ அல்லது வாழ்வாதார சிக்கல்களை தீர்க்கும் பொருட்டோ அல்லது உடனடி நுகர்வின் பொருட்டோ, தனிநபர்களில் சிலர் மேற்சொன்ன  சட்டபூர்வமற்ற வழிமுறைகளை  சில நேரங்களில் தேர்ந்தெடுக்கிற நிர்பந்தம் உருவாகிவிடுவதுண்டு.

சந்தைக்கு ,போட்டியும்- நுகர்வும்  இரு கண்கள் . இவையிரண்டும் தனிநபரை அடிப்படையாகக்கொண்டே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. போட்டியையும் – நுகர்வினையும் ஓரளவுக்காவது சமாளிக்க வேண்டுமெனில், ஒவ்வொரு தனிநபரின் வேலைவாய்ப்புக்கும்   குறைந்தபட்ச உத்திரவாதம் இருக்கவேண்டும். ஆனால் ,யதார்த்தத்தில் அப்படியெல்லாம் இல்லாமல், வேலைவாய்ப்பின்மையானது ஊரெங்கிலும் மலைபோல் குவிந்திருக்கின்றது. 

ஏற்கனவே, பொருளாதார மந்த நிலையின் காரணமாக  நிலவிவந்த வேலைவாய்ப்பின்மையானது , கொரோனா காலத்தில் இன்னும்  கூடுதலாகி  ,மிச்ச மீதியிருந்த  எளிய – மிகவும் பின் தங்கிய வகுப்பிலுள்ள மக்களின்  கொஞ்ச நஞ்ச வாழ்வாதாரக்கனவையும் சிதைத்துப்போட்டுவிட்டது. இன்னும் சரியாகச்சொன்னால் , இம்மக்களில்  திறனுள்ள மற்றும் திறனற்ற பிரிவுகளில் பணியினை இழந்தவர்கள்  மற்றும் வேலை வேண்டிக் காத்திருப்பவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர்.  

நிலைமை இப்படியிருக்கின்றபோது,கொரோனா நோய்த்தொற்றுப்பரவலின் காரணமாக  ஊரடங்கு அமலாகியிருந்த  காலத்திலும் கூட ,  பணக்காரர்களின்  லாபமானது மென் மேலும் பெருகி ஒளிர்ந்திருக்கின்றதை புள்ளிவிபரங்களின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

2020-2021 ஆம் நிதியாண்டின், முதல் காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சியானது -23.9 சதவிகிதமும் , இரண்டாவது காலாண்டில் -7.5 சதவிகிதமாகவும் இருந்திருப்பதிலிருந்து  தேசத்தின் வேலைவாய்ப்பின்மையின் கோரம்  எந்த அளவுக்கு இருந்துவந்திருக்கின்றது என்பதனை யூகித்து   அறிந்துகொள்ளமுடியும். அதே சமயம்  மார்ச் 2017  லிருந்து ஜூன் 2020 வரையிலான காலத்தில் மட்டும்  அம்பானியின் நிகரமதிப்பு 26.6 பில்லியன் டாலரிலிருந்து 74.4 பில்லியன் டாலராகவும்  , அதேகாலகட்டத்தில் அதானியின் நிகரமதிப்பு  5.37 பில்லியன் டாலரிலிருந்து 34 பில்லியன் டாலராகவும் அதிகரித்திருக்கிறது.அது மட்டுமின்றி, 2019 ஆம் ஆண்டின் படி 50 மில்லியன் டாலருக்கு மேலான நிகர மதிப்பு கொண்டுள்ளவர்களின் பட்டியலில் 4593 பேர் இருந்திருக்கின்றனர். அதுவே ஜுன் 2020 ன் படி  பட்டியலில் மேலும்  85 பேர் இணைந்திருக்கின்றனர்.  இன்னும் சற்றுக் கூடுதலாகச்சொன்னால், இந்தியாவின்  செல்வத்தின் மதிப்பில் 39 சதவீதமானது , ஒரு சதவிகித பணக்கார இந்தியர்களின் கைவசம் குவிந்துள்ளது என்கிறது புள்ளிவிபரம்.  மேலே கூறியவற்றிலிருந்து ,இக்கொரோனா காலத்திலும் பார்க்க, அரசும் – கார்ப்பரேட்டும் ஒன்றிணைந்து வறுமையில் வாடுகிற எளிய மக்களையும் விட்டுவைக்காமல்,  விதிவிலக்கின்றி சுரண்டி  லாபம் ஈட்டியுள்ளதை உறுதிசெய்வதாக இருக்கிறது. செல்வமானது பணக்காரர்களிடையே குவிகிறது ; ஏழைகள் மேலும் ஏழைகளாகி வருகின்றனர். இதுதான் இன்றைய சந்தைமய இந்தியாவின்  அவலம். இதுவே சமத்துவமின்மையின் யதார்த்தநிலை .  

மக்கள் நலனுக்கு முன்னுரிமையளித்து வந்த தாராளமய காலகட்டமானது , சந்தைமய காலத்தைவிட அரசியல் -பொருளாதார சூழலில் சிறந்ததாக விளங்கியிருக்கிறது. எப்படியெனில்,1970 களில், வளர்ந்துவரும் நாடுகளில் வர்த்தக உபரியாக ஒரு பில்லியன் டாலர்கள் இருந்தன.அதுவே  நவதாராளமயகாலமான 2000 க்கு பிறகான ஆண்டுகளில் ,11 பில்லியன் டாலர்கள் வர்த்தகப்பற்றாக்குறையாக மாறியது மட்டுமின்றி மேலும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

1970 களில் பிரமாண்டமான அடிப்படைக் கட்டுமானத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டபோதும் , 1990 களின் தனியார் மயமாக்க அலையின் போதும் இருந்ததைவிட, வளர்ந்துவரும் நாடுகளின் சொத்துக்கள் ஓரிடத்தில் சேருவது என்பது தற்போது அதிகரித்துள்ளது.பல நாடுகளில் 90 சதவிகித தனியார் சொத்துக்கள் வெறும் 1 சதவிகித குடும்பங்களிடம் குவிந்திருக்கின்றன.

1945-70 காலகட்டங்களில் உலகளாவிய அளவில் ,நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பதட்டமான சூழலைவிட , அதன்பிறகான காலகட்டங்களில் போர் நடவடிக்கைகள் மற்றும் பதட்டமான சூழலை  அதிகமாக எதிர்கொண்டு வருவதைக்காண முடிகிறது. 

சந்தைமயம்  இந்தியாவில் செயலுக்குவந்து முப்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது.  அதற்குள், இதற்கு முன்பான தாராளமயக்கால ஆட்சிமுறையில் ஜனநாயகத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கிவந்த,  வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களுக்கு பதில் சொல்லக்கூடிய பொறுப்புணர்வு என்பது  கேள்விக்குறியாகிவிட்டன . அதுமட்டுமல்லாது , ஜனநாயகத்திற்கு பலம் சேர்க்கக்கூடியதாக இருந்த மனித உரிமை ; மக்கள் நலன்; சிறுபான்மையினர் நலன் ; தலித் -பழங்குடியினர் நலன் ;  பெண்ணுரிமை ; சட்டத்தின் ஆட்சி ; உள்ளிட்ட யாவும் கொஞ்சம் கொஞ்சமாக அருகி பின்னுக்குத் தள்ளப்படுவதைப்பார்க்க முடிகிறது.சுருக்கமாகக்கூறின், சந்தை மயத்திற்குள் நுழைந்ததற்குப்பிறகான காலத்தில் ஜனநாயகமானது அதன் சிறப்பினை இழந்து நிற்கிறது .

  • சமத்துவமின்மை ஆழமாக வேறூன்றியுள்ள ஒரு சமூகத்தில்,ஆரோக்கியமான ஜனநாயகம் இருக்க வாய்ப்பில்லை என்பது நிதர்சன உண்மை
  • ஜனநாயகமற்ற பொருளாதார மற்றும் அரசியல் சக்திகள் மக்களின் தேவையைவிட லாபத்திற்கே முன்னுரிமையளிப்பதாக இருக்கின்றன. இத்தகைய போக்கானது, துன்பப்படுகிற மக்களை மேலும் துன்புறுத்தவும் ,வசதிபடைத்தவர்களை மேலும் வசதியுள்ளவர்களாக ஆக்கவும் செய்கிறது. 
  • அரசியல் சூழலானது ,ஜனநாயகத்தின் மூலம் எதிர்காலம் நலமானதாக அமையும் என்கிற உணர்விலிருந்து ஜனநாயகமே பின்னடைவை ச்சந்திக்கும் காலத்திற்கு  திசை மாறியிருக்கிறது-

ஊடகங்கள் ,கல்வி நிறுவனங்கள் ,சில நிதி நிறுவனங்கள் யாவும் தாராளமய காலத்தில்  ஜனநாயகத்திற்கு அரணாக விளங்கின.அதன் பிறகான சந்தைமய கால கட்டத்தில் ஊடகங்கள், சமூக ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள் யாவுமே வலதுசாரி அடையாள அரசியலுக்கு முன்னுரிமையளிப்பதாக மாறியுள்ளன.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான தாராளமய காலகட்டத்தில், அரசியல் என்பது , அதன் தனிச்சிறப்புக்களால் கருத்தியல் அளவில் வலது – இடது என பிரித்து அழைக்கப்பட்டு வந்தாலும், பொருளாதார வளர்ச்சிக்கான திட்டமிடுதலுக்கு மட்டுமே வலது -இடது என   வறையறுக்கப்பட்டு வந்தன. அதாவது வலது என்பது தனிநபர் சுதந்திரம் ,மற்றும் பலமான பொருளாதார வளர்ச்சிக்கு இசைவு கொண்டதாகவும் . இடது என்பது , வளத்தினை மறு பங்கீடு  மற்றும் சமூக -பொருளாதார சமத்துவத்தினை வலியுறுத்தவும் செய்தன.அதுவே தற்போதைய சந்தைமய காலத்தில் அரசியலில் வலது -இடது  என பிளவுபட்டு அடையாளத்தை உயர்த்தி நிற்பதைப்பார்க்கமுடிகிறது. 

தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பமும் அபரிமிதமாக வளர்ச்சி பெற்றுள்ள இக்காலத்தில் அடையாளத்தை அடிப்படையாகக்கொண்டு சமூகப்பிளவுகளை உருவாக்குபவையாக சமூக ஊடகங்கள் இருக்கின்றன.  சமூக அளவில் மதம் -சாதி என பிளவுபட்டும்  , பொருளாதார அளவில்  சமத்துவமின்மையையும் கொண்டுள்ள தேசத்தில் ,சமூக ஊடகங்கள் வழியாக வலதுசாரி அடையாள அரசியலும் சேர்ந்துகொள்ளும் போது , மக்களிடையே பதட்டம் மேலோங்கி, நிலைமை இன்னும் மோசமடைந்து ஜனநாயகத்திற்கான உரையாடல் முற்றிலுமாக பின்னுக்குத்தள்ளப்படுகிற அபாயம் ஏற்பட்டுள்ளது.

 ஜனநாயகத்திற்கு நேர்மாறான தன்மைகளைக்கொண்டுள்ள சந்தைமயமானது  சமூக -பொருளாதார சமத்துவமின்மைக்கு வித்திடுவது மட்டுமின்றி, தன்னை மேலும் ஸ்திரப்படுத்திக்கொள்ள கட்டுப்பாட்டுக்கு உட்படாத சந்தைமுறை  ,  நிதிமூலதனச்சந்தை மற்றும் தனியார் மயத்திற்கு முக்கியத்துவம் தந்து செயலாற்றுவதாக இருக்கிறது.ஜனநாயகத்தூண்களில் ஒன்றான  சட்டசபை-நாடாளுமன்றத்திற்கு  ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் நடத்துவது என்பது ஜனநாயக கடமைகளில் ஒன்றாகும். ஆனால் ,ஊழலும் -தேர்தலில் தில்லுமுல்லுவும் மலிந்துள்ள இச்சந்தை மயக் காலத்தில், தேர்தலானது தேச மக்களினுடைய நலனுக்கானது அன்றி,அனைத்துவகை  ஊடகங்கள் -புகழ்பெற்றவர்கள் -கார்ப்பரேட்டுகள் ஆசியுடன் பெரும்பான்மை மத -இன அரசியல் மேலெலுவதற்கு ஒரு வாய்ப்பாகிவிட்டது. தேர்தல் காலத்தில்   மேலும் குழப்பம் – மேலும் பிளவு  ஏற்படுத்தித்தான் வலதுசாரிகள் தங்களை வலுப்படுத்திக்கொள்கின்றனர்.   இவர்கள் சூழ்ச்சி மற்றும் தந்திரங்கள் கொண்ட செயல்பாடுகளை தேர்தல் சமயத்தில் கவனிக்கும் போது , அது ,நேரடியாகவும் மறைமுகமாகவும் தனது ஆதரவாளர்கள் கட்சிகள் துவங்க ஆதரவு ;  தொகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளார்களை நிறுத்தச்செய்வது  மற்றும் அதிக தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்குவது; அனைத்து ஊடகங்களின் வழியாக  வலதுசாரி அடையாளத்தை பரவலாக்க, கலவரத்திற்கு தூபமிடுவதை வாடிக்கையாகக்கொண்டுள்ளது. 

சமூகம் துண்டாடப்படுகிறது ;ஜனநாயக நிறுவனங்கள் அதன் ஆற்றலை இழந்து நிற்கின்றன ; அதிகாரத்திற்கு கீழ்படிதலை விழைகின்ற புதிய மையப்படுத்தப்பட்ட  படிநிலை அதிகார அமைப்பானது எழுச்சிபெற்றிருக்கிறது. நிலைமை இப்படியிருக்க, பொருளாதார வளர்ச்சிக்கு ஜனநாயகம் பெரும் தடையாக இருப்பதாக வலதுசாரிகள் கூறிக்கொண்டே இருக்கிறார்கள் . இதுவே இன்றைய  அடையாள அரசியல் ஜனநாயகத்தின் உண்மை நிலை.