கர்நாடகாவில் பாஜக-வினரும் இந்துத்துவாவாதிகளும் முஸ்லீம் எதிர்ப்பு, பிளவுவாத நடவடிக்கைகளில் இறங்கி, முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணியும் பழக்கத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.
உடுப்பியில் உள்ள அரசு புதுமுக வகுப்பு கல்லூரி (government pre-university college) ஒன்று தங்கள் கல்லூரி மாணவிகளில் ஆறு பேரை ஹிஜாப் அணிந்துவர வலியுறுத்தியதை, பாஜக-வின் ஏ.பி.வி.பி. என்னும் அகில் பாரதிய வித்யார்த்தி பரிசத் மாணவர் அமைப்பும், இந்து ஜகரன் வேதிகா என்னும் அமைப்பும் பயன்படுத்திக்கொண்டு, தங்கள் மாணவர்களும் காவி நிற ஹிஜாப் அணிந்து வருவார்கள் என்று கூறி கல்லூரியின் வாயிலில் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். இது சென்ற ஆண்டு டிசம்பர் 29 நடந்த சம்பவமாகும். அதன் பின்னர் இதே மாவட்டத்தில் குண்டாபூரில் மேலும் இரு கல்லூரிகளில், சில இந்து மாணவர்கள் காவி வண்ணத்தில் ஹிஜாப் அணிந்துவர அனுமதியளிக்க வேண்டும் எனக் கோருவதாகவும், எனவே முஸ்லீம் மாணவிகளும் ஹிஜாப் அணிந்துவரக் கூடாது எனக்கூறித் தடை விதித்திருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து ஏபிவிபி மற்றும் இதர இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் காவித் துண்டுகளை அணிந்துகொண்டு, “ஜெய் ஸ்ரீராம்” எனக் கோஷமிட்டுக்கொண்டு, கல்லூரிக்குள் நுழைய முயன்ற முஸ்லீம் மாணவிகளிடம் மோதுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தக் கல்லூரியில் அம்மாணவிகள் முன்னதாக ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்கப் பட்டிருந்தவர்கள்தான். அரசாங்க புதுமுக வகுப்புக் கல்லூரிகளில், எங்கெல்லாம் சீருடைகள் அணிய வேண்டும் என்று விதிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் முஸ்லீம் மாணவிகள் அணியும் ஹிஜாப் துணிக்கும் வண்ணம் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், காவிக் கும்பல் ரகளையில் ஈடுபட்டபின்னர் இவை அனைத்தும் மாறிவிட்டது.
ஹிஜாப் அணிந்துவந்த முஸ்லீம் மாணவிகள் கல்லூரி வளாகங்களுக்குள் நுழையும்போது அவர்களைத் தடுத்து நிறுத்திடும் காட்சிகள் கல்வி கற்க விரும்பும் முஸ்லீம் பெண்களைக் கற்க விடாமல் தடுத்திடும் அப்பட்டமான அநீதியாகும். இந்துத்துவா கும்பலைச் சேர்ந்த இளைஞர்கள், காவித் துண்டுகளை அணிந்துகொண்டு, கல்லூரிகளுக்குள் நுழையும் ஹிஜாப் அணிந்த முஸ்லீம் பெண்களிடம் மோதல் போக்கைக் கடைப்பிடித்தது, பல இடங்களில் மோதல்களாக வெடித்துள்ளன. இதன் விளைவாக கர்நாடக அரசாங்கம் மூன்று நாட்களுக்கு பள்ளிகளையும், கல்லூரிகளையும் மூடிவிட உத்தரவிட்டிருக்கிறது.
பிப்ரவரி 5 அன்று, அரசுக் கல்வித் துறையானது அரசு நடத்திடும் அனைத்துக் கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் சீருடைகளை நிர்ணயித்து ஓர் ஆணையை அனுப்பியிருக்கிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் சொந்த சீருடைகளைப் பின்பற்றிட வேண்டும். அரசாணையில் “சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் பொது ஒழுங்கைப்” (“equality, integrity and public order) பாதித்திடாத விதத்தில் சீருடைகள் அணிந்துவரப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது.
இவ்வாறு, பாஜக அரசாங்கம் ஹிஜாப் அணிந்துவரும் பெண்களை அரசாங்கத்தின் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அனுமதித்திடக்கூடாது என்கிற இந்துத்துவா அமைப்புகளின் கோரிக்கைக்கு, இணங்கியிருக்கிறது.
இது, பாஜக மாநில அரசாங்கத்தின் சிறுபான்மையினருக்கு எதிரான சமீபத்திய நடவடிக்கை யாகும். மாணவர்களின் உடையில் மத அடையாளங்கள் எதையும் அனுமதிக்க மாட்டோம் என்ற பெயரில், முஸ்லீம் பெண்களின் கல்வி கற்கும் உரிமைகள் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டுக்கொண்டிருக்கும் அறிக்கைகளிலிருந்து, முஸ்லீம்கள் அவர்களின் மதஞ்சார்ந்த அடையாளங்களுக்காகக் குறிவைத்துத் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதும், இரண்டாம்தர பிரஜைகளாகக் கருதப்படுவதும், அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள சம உரிமைகள் மறுக்கப்படுவதும் தெளிவாகத் தெரிகிறது. மைசூர்-குடகு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பிரதாப் சிம்கா என்பவர் வெட்கமேதுமின்றி, “நீங்கள் ஹிஜாப், பர்தா அணியமுடியும் என்றால், மதராசாக்களுக்குப் படிக்கச் செல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஒட்டுமொத்தமாகப் பார்க்காமல், ஹிஜாப் பிரச்சனையை மட்டும் தனித்துப் பார்த்திடக்கூடாது. 2019இல் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணியைக் கவிழ்த்துவிட்டு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, மாநிலத்தில் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலைத் திணித்திட விடாது முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. 2020இல் அனைத்து வகையான கால்நடைகளையும் வெட்டுவதற்கு எதிராகக் கடுமையான சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. இந்தச்சட்டம் அடிப்படையில் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிரான ஒன்று. ஏனெனில் அவர்களில் பெரும்பாலானவர்கள் இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறவர்கள்.
இதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு மதச் சுதந்திரத்திற்கான உரிமைப் பாதுகாப்பு (Protection of Right to Freedom of Religion Bill 2021) என்னும் ஒரு சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டது. இது, கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான ஒன்று என்ற பெயரில், கிறித்தவ சமூகத்தினரையும், மதக் கலப்புத் திருமணங்களையும் குறிவைத்துத் தாக்கும் விதத்தில் கொண்டுவரப்பட்டதாகும். பல இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பல்வேறு அமைப்புகள் உருவாக்கியுள்ள கண்காணிப்புக்குழுக்கள் பல்வேறு மதங்களைச் சார்ந்த இளைஞர்களும், இளைஞிகளும் கலந்து நட்புறவுடன் பழகுவதைத் தாக்குவது என்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கடற்கரை மாவட்டங்களில் இது வெட்கக்கேடான முறையில் அதிகரித்திருக்கிறது.
இதில் வேடிக்கை விநோதம் என்னவென்றால், இவ்வாறு கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ள இதே கல்வித் துறைதான், மாநிலம் முழுதும் அனைத்துக் கல்லூரிகளிலும் சுதந்திர தினத்தின் 75ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதத்தில் சூர்ய நமஸ்காரம் நிகழ்ச்சியை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருக்கிறது.
கர்நாடக அரசாங்கம், முஸ்லீம் பெண்கள் கல்வி கற்பதற்கான அடிப்படை உரிமைக்கு எதிராக நடந்துகொண்டிருக்கிறது. ஒரு கல்வி நிறுவனத்தில் ஒருவர் தன் மதஞ்சார்ந்த அடையாளத்தை உடையின்மூலம் காட்டக்கூடாது என்றால், பின் சீக்கிய மாணவர்கள் பள்ளிகளில் தலையில் தலைப்பாகை (turbans) அணிவதை அனுமதிக்க முடியாது அல்லவா? முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவதும், சீக்கிய மாணவன் தலைப்பாகை அணிவதும் அவரவர் மத நடவடிக்கைகளின் முக்கியமான அம்சமாகும்.
கல்வி கற்கவரும் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணியக்கூடாது என்னும் நடவடிக்கைக்குப் பின்னால், முஸ்லீம்களை இரண்டாம் தர பிரஜைகளாக்குவதற்கான முயற்சி ஒளிந்திருக்கிறது. இது குடிமக்களில் ஒரு பிரிவினரின் அரசமைப்புச்சட்ட உரிமைகள் சம்பந்தப்பட்ட அடிப்படை அம்சமாகும். பாதிப்புக்கு உள்ளான மாணவிகளில் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு, விசாரணையில் இருந்து வருகிறது. இதன்மீது உயர்நீதிமன்றத்தின் விரிவான அமர்வு தீர்மானித்திட இருக்கிறது. அரசமைப்புச்சட்டத்தின்கீழ் சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள உத்தரவாதங்களின்படி, கர்நாடக அரசாங்கத்தின் பாகுபாடான ஆணை ரத்து செய்யப்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
(பிப்ரவரி 9, 2022)
நன்றி:-பீப்பிள்ஸ் டெமாக்ரசி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.