மறுவாசிப்புச் சிறுகதை: சவநஸ்யயவ்வனப்பிராப்தியாதிகதனம்
– ச.சுப்பாராவ்
நீலா நதியின் நீர் யமுனை நீரைப் போல் வெண் நுரை போல் இல்லாமல், கலங்கிய கருநீல நிறத்தில் இருந்தாலும், அதன் குளிர்ச்சியும், அதில் ஸ்நானம் செய்தால் வரும் உற்சாகமும் தனிதான். ஆரம்பத்தில் சுகன்யாவிற்கு அதன் நீலநிறம் பார்த்து அச்சமாக இருந்தாலும், இப்போது பழகிவிட்டது. திடீரென சூரியனின் கிரணங்கள் மறைந்து, அந்தி நேரத்துக் குளிர்ந்த காற்று அடிக்க ஆரம்பித்ததும் தான், நீண்ட நேரமாக நீந்தி விளையாடிக் கொண்டு நேரத்தை விரயம் செய்து விட்டோமே, என்று அவசர அவசரமாக கரைக்கு வந்தாள். கணவரின் சந்தியாவந்தனத்திற்காக தாமிரக் குடத்தில் நீரை எடுத்துக் கொண்டு ஆஸ்ரமம் நோக்கி நடந்தாள்.
யாருமற்ற வனந்திரம் என்றாலும் கூட யாரோ தன்னை குறுகுறுவென்று பார்ப்பது போன்ற உணர்வு. வேகமாக இங்கிருந்து போய் விட வேண்டும் என்று நினைத்தாலும், ஈரமான உடையோடு வேகமாக நடக்க முடியவில்லை. இடதுபுறத்தில் இருந்த ஒரு பெரிய பலாச மரத்திற்குப் பின்னாலிருந்து இரு இளைஞர்கள் வேகமாக வந்தார்கள். அவர்களில் சற்று ஒல்லியான உடல்வாகுடன் இருந்தவன், “ஸ்திரீயே ! சற்று நில் !“ என்றான் அதிகாரமான குரலில்.
சுகன்யா நிமிர்ந்து பார்த்தாள். ஒரே அச்சில் வார்த்தவர்கள் போல் இருவருக்கும் ஒரே உருவஅமைப்பு. தேவலோகத்து மாந்தர் போன்ற அழகும், கம்பீரமும். ஷிப்ர எனும் தாமிரத் தலைக் கவசத்தை மீறி, தோள் வரை பரளும் ஸ்வர்ண நிற தலைமுடி. இளைஞர்கள் என்பதால் தாடி இல்லை. உயர்குடியினர் அணியும் அர்ஜுன்வாஸ் எனும் வெள்ளை ஆடை. மார்பில் ருக்ம எனும் சங்கிலி. தோள் வளைகள். பல ஆண்டுகளாக அணில்களையும், மான்களையும். குரங்குகளையும் மட்டுமே பார்த்து வந்த சுகன்யாவிற்கு திடீரென எதிரே இரண்டு அழகான யுவர்களைப் பார்த்ததும் ஜிவ்வென்று இருந்தது. கன்னங்கள் புது ரத்தம் பாய்ந்ததில் சிவந்தன. இந்த வனத்தில் யார் வரப்போகிறார்கள் என்று வெளியே செல்லும் போது கட்டாயம் போர்த்திக் கொண்டு செல்ல வேண்டிய த்ராபி என்ற மஞ்சள் நிறப் போர்வையைப் போர்த்திக் கொள்ளாது வந்தது தவறோ? நீண்ட வனவாசத்தில் அவள் உடைகள் குறித்து அக்கறை காட்டுவது குறைந்து போனது உண்மைதான். அவளைப் போன்ற நடுத்தர வயதுப் பெண்களைப் போல் நான்கு ஜடை போட்டுக் கொள்ளாது, கபர்த் முறையில் சுதந்திரக் கூந்தலாக விட்டிருந்தாள். காதில் எளிய குண்டலங்கள். வாஸஹ அந்திரம் என்னும் உள்ளாடை மட்டும் அணிந்து, மார்பின் பிளவில் சரிந்து இறங்கும் நிஷ்க எனும் ஒற்றைச் சங்கிலியுடன் அந்த இளைஞர்களின் முன் நிற்க மிக மிக வெட்கமாக இருந்தது.
ஒல்லியானவன் மீண்டும் பேசினான். தேவ பாஷை. இந்த முறை வடநாட்டினர் அண்ணியை அழைக்கும் பொதுவான சொல்லால் அவளை அழைத்தான். “ அண்ணி, நீ மானுடப் பெண் போலவும் இருக்கிறாய். தேவலோக அப்சரஸ் போலவும் தெரிகிறாய். திருமணம் ஆனவள் போல் தெரிகிறது. மெய்யாகவே உன்னை மணந்தவன் கொடுத்து வைத்தவன். ஆனால், அவன் ஏன் உன்னை யாருமற்ற இந்த வனாந்திரத்தில் குடி வைத்திருக்கிறான்? புஷ்பக விமானத்தில் பறக்க வேண்டிய தேவதையை பாதரட்சைகளின்றி, இப்படி கல்லிலும், முள்ளிலும் நடக்க வைத்திருக்கிறான்? தேவர்களின் தலைநகரான அமராவதியில் மகாராணியாக இருக்கத் தக்கவளை இப்படி தாமிரக் குடத்தில் தண்ணீர் சுமக்க வைத்து விட்டானே ! நீ யார்? உன் விருத்தாந்தம் என்ன? விளக்கமாகச் சொல். நாங்கள் உனக்கு உதவுவோம்,“ என்றான். இது வரை பேசாமல், அவளை அங்குலம் அங்குலமாகப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த மற்றவன், “நாங்கள் தேவலோகத்து வைத்தியர்கள். அஸ்வினி சகோதரர்கள் எனும் இரட்டையர்கள்,“ என்று தங்களை அறிமுகம் செய்து கொண்டான்.
தேவலோக வைத்தியர்களா? நம் பிரச்சனைக்கு இவர்களால் தீர்வு கிடைக்கக் கூடும் என்று சுகன்யா தன் சோகக் கதையைச் சொல்லலானாள்.
அவள் பக்கத்து நாடான குருதேசத்து அரசர் சர்யாதியின் மகள். பெயர் சுகன்யா. இருபது ஆண்டுகளுக்கு முன் தந்தையார் பரிவாரங்களோடு வேட்டைக்கு இந்த வனத்திற்கு வந்த போது சுகன்யாவும், அவள் தோழிகளும் அவரோடு சேர்ந்து வந்தார்கள். மதியம் உணவுண்டு, பரிவாரங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் சுகன்யாவும், அவளது தோழிகளும் வனத்தில் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். பந்து எங்கோ ஒரு புதருக்குள் விழுந்து விட்டது. பந்தை எடுத்து வர வேண்டியது சுகன்யாவின் முறை. பந்தைத் தேடியபடி வனத்திற்குள் சற்று தள்ளி வந்துவிட்டாள். ஒரு புதரில் கிடந்த பந்தை எடுத்துக் கொண்டு திரும்பும் போது தான் அந்தப் புற்றைப் பார்த்தாள். புற்றின் உச்சியில் இரண்டு ஓட்டைகள். ஓட்டைகளில் மின்மினிப் பூச்சிகள் பளீரென ஒளிர்ந்ததைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து இரண்டு பூச்சிகளையும் நறுக் நறுக்கென்று குத்திவிட்டாள். அடுத்த கணம் பயங்கரமான அலறல். புற்றின் அந்த இரு ஓட்டைகளிலிருந்தும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
புற்றின் அலறல், அதை மீறிய சுகன்யாவின் அலறல் கேட்டு, அரசரும், பரிவாரங்களும் ஓடி வந்தார்கள். புற்றை நீக்கினால் கண்களில் ரத்தம் வடிய வயதைக் கணிக்க முடியாத முனிவர் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். எல்லோரும் அவர் கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினார்கள். அவர் பெயர் சியவனர். மிகப் பெரிய தபோதனரான பிருக மகரிஷிக்கும், புலோமா என்ற ரிஷிபத்தினிக்கும் பிறந்தவர். தன்னைச் சுற்றி புற்று உருவானது கூடத் தெரியாமல் ஆழ்ந்த தவத்தில் மூழ்கிவிட்டவர். தவவலிமையில் ஒளிர்ந்த அவரது கண்களைத் தான் சுகன்யா மின்மினிப் பூச்சி என நினைத்துக் குத்திக் குருடாக்கி விட்டாள் !
“தபோதனரே ! எங்களைச் சபித்து விடாதீர்கள்… இதற்கு என்ன பரிகாரம் என்று கூறுங்கள். நீங்கள் எங்களோடு அரண்மனைக்கு வாருங்கள். உங்கள் தவவாழ்க்கை சிறிதும் பாதிக்கப்படாது நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்,“ என்று மன்னன் சர்யாதி சியவனரின் பாதங்களைப் பிடித்துக் கெஞ்சினார். சபிப்பதானால், இதற்குள் சபித்திருப்பார். எனவே, சாபம் குறித்து அஞ்ச வேண்டாம், என்ன பரிகாரமோ அதைச் செய்து விடலாம் என்று மன்னரின் யோசனை ஓடியது.
சியவனர் வலியைப் பொறுத்துக் கொண்டு வேதனையோடு பேச ஆரம்பித்தார். “நான் இயல்பாகவே சாதுவான ஒரு முனிவன். ஒரு பாவமும் அறியாத என் கண்களை உனது மகள் அறியாமல் பறித்து மாபெரும் பாவம் செய்து விட்டாள். அவளை அந்தப் பாவத்திலிருந்து மீட்பது தந்தையாகிய உனது கடமை. அதற்கான வழியைச் சொல்ல வேண்டியது முனிவனான எனது கடமை. இதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. உன் மகளை எனக்கு பாணிக்கிரஹணம் செய்து கொடு. அவள் எனக்கு தர்மபத்தினியாக இருந்து, எனது தவவாழ்க்கைக்கு உதவட்டும். இதுவே, இந்தப் பாவத்திற்கான பரிகாரமாகும்,“ என்றார்.
சர்யாதியும் யோசித்தான். முனிவர் ஏதேனும் சாபமிட்டு, நாட்டில் மழை பொழியாது போய்விடுமோ? தீராத பஞ்சம் ஏற்பட்டுவிடுமோ? ஏதேனும் கொள்ளை நோய் வந்து நாட்டு மக்கள் கொத்து கொத்தாக அழிந்து படுவார்களோ? என்றெல்லாம் அச்சப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் முனிவரின் இந்த பரிகாரம் மிக எளிய தீர்வாகத் தெரிந்தது. சர்யாதியின் அந்தப்புரத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட மனைவிகள். அவர்களுக்குப் பிறந்த நூற்றுக்கணக்கான குழந்தைகள். அந்த சமயத்திலேயே குறைந்த பட்சம் ஏழெட்டு மனைவிகள் கர்ப்பமாக இருந்தார்கள். கணக்கு சரியாகத் தெரியவில்லை.
நாட்டுக்காக ஒரு மகளை ஒரு வனவாசியான முனிவருக்கு தாரை வார்த்துத் தருவதில் அவருக்கு எந்த மனவருத்தமும் இல்லை. எப்படியோ தானும், நாடும் முனிவரின் சாபத்திலிருந்த தப்பிவிட்டது தான் முக்கியமாகப்பட்டது. சரி என்று சொல்லிவிட்டார். இளம்பெண்ணான சுகன்யா மனதிலும் நாட்டைக் காக்க தன் வாழ்வைத் தியாகம் செய்யும் அந்த பெருமித உணர்வுதான் அப்போது நிறைந்திருந்தது. திருமணமும் நடந்து விட்டது. அன்றிலிருந்து இந்த கானக வாழ்வுதான். தவவாழ்க்கைதான்.
“நாட்டி்ற்காக உனது இளமையை, மகிழ்ச்சியான மணவாழ்க்கையை விட்டுக் கொடுத்த உன்னை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. உன்னைப் போன்றவர்களுக்கு ஏதேனும் உதவி செய்யாவிட்டால் நாங்கள் தேவலோகத்தினர் என்பதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும். சற்றுப் பொறு. உனக்கு எவ்விதமாக உதவலாம் என்று யோசித்து வருகிறோம்,“ என்று ஒல்லியானவன் சொல்ல, இருவரும் சற்று தள்ளி நின்று தங்களுக்குள் ரகசியமாகப் பேசிக் கொண்டார்கள்.
ஒரு சில விநாடிகளில் அவளிடம் வந்தார்கள். இருவரில் சற்று அதிகம் பேசாத மற்றவன்,“ உன் கணவருக்கு கண்பார்வை தருவது என்று தீர்மானித்து விட்டோம்.
அதற்கு பிரதியுபகாரமாக நீயும் நாங்கள் சொல்வதை ஏற்க வேண்டும்,“ என்றான். இது போன்ற இளைஞர்கள் என்ன பிரதியுபகாரம் கேட்பார்கள் என்று சுகன்யாவிற்கு நன்றாகவே தெரிந்தது. ஆனாலும் கணவருக்கு கண்பார்வை வந்துவிட்டால் ! பதினைந்து வயதிலிருந்து கண்பார்வையற்ற ஒருவரைப் பார்த்துக் கொள்வது எவ்வளவு கடினமானது ! அதுவும் எந்த வசதியும், உதவிக்கு யாருமே இல்லாத இந்த அத்துவானக் காட்டில் ! சுகன்யா தன் திருமணத்திற்குப் பிறகான வாழ்வை நினைத்துப் பார்த்தாள். காலையில் அவர் எழுந்ததும் தந்த சுத்திக்கு வேப்பங்குச்சியும். தண்ணீரும் எடுத்துத் தரவேண்டும். காலைக்கடன் கழிக்க பாத்திரத்தில் நீர் எடுத்துக் கொண்டு அவரை மறைவிடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர் காலைக்கடனைக் கழிக்கும் வரை சற்று தள்ளி நிற்க வேண்டும். பின்னர் மண் கொண்டு அவர் கால்களைச் சுத்தம் செய்து மெல்ல கைப் பிடித்து ஆஸ்ரமத்திற்கு அழைத்து வரவேண்டும்.
ஸ்நானத்திற்கு உஷ்ணஜலம் எடுத்து வைத்து, “ சுவாமி, உஷ்ணஜலம் தயார். மந்திரங்களால் அதைப் புனிதப்படுத்தி ஸ்நானம் செய்யலாமே,“ என்று பணிவாகச் சொல்ல வேண்டும். அவர் வருவதற்குள் பிராதஸ்ஸந்திக்கான பொருட்களை எடுத்து வைக்க வேண்டும். அது முடிந்ததும், தேவபூஜை. அதற்குப் பிறகு, அக்னிஹோத்திரம். பின்னர் நானாவித பழங்களையும் செந்நெல்லன்னத்தையும் பரிமாற வேண்டும். அவர் போஜனம் செய்ததும், மான்தோல் மேல் புலித்தோலை விரித்து, அவரை சயனிக்க வைத்து கைகால்களை அமுக்கிவிட வேண்டும். அவர் சற்று பகல் நேர உறக்கத்தில் ஆழும்போது, எஞ்சிய பழங்களையும் அன்னத்தையும் புசிக்க வேண்டும். மீண்டும் சந்தியாவந்தனத்திற்கான ஏற்பாடுகள். மாலை நேர வழிபாடுகள்.
அவையெல்லாம் முடிந்ததும், அவர் சொல்லும் புராண, இதிகாசக் கதைகளை சற்று காதாரக் கேட்க வேண்டும். இரவிற்கான ஹோமம் முடிந்ததும், புசிக்க பழங்கள், பால் தந்து, படுக்கை விரித்து படுக்கச் செய்ய வேண்டும். மீண்டும் கால் அமுக்குதல். க்ரீஷ்ம ருதுக் காலத்தில் விசிறியினால் விசிறி வெம்மையைத் தணித்தால்தான் அவர் சுகமாக நித்திரை செய்வார். ஹேமந்த ருதுக்காலத்தில் பனியைச் சமாளிக்க விறகுக் கட்டைகளைப் போட்டு கணப்பு உருவாக்க வேண்டும். அது புகையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
புகையினால் அவருக்கு இருமல் வந்துவிடக் கூடாதல்லவா? இடையில் அதிதியாக யாரேனும் ரிஷிகள் வந்து விட்டால், அதிதி பூஜை செய்து, அதிதி மனம் குளிரச் செய்ய வேண்டும். அதிதி தேவோ பவ என்று அதிதியை தெய்வமாக அன்றோ சொல்கிறார்கள். இதற்கு நடுவில் தண்ணீர் எடுத்து வர வேண்டும். கோபூஜைக்கென இருக்கும் பசுவை கவனிக்க வேண்டும். இரு வேளைகளிலும் பால் கறக்க வேண்டும். நித்யப்படி ஹோமத்திற்கான ஹவிஸ் சமைக்க, முதல்நாளே நெல்லைக் குத்தி வைக்க வேண்டும். அவருக்கு கண் வந்து விட்டால் இதில் எவ்வளவோ வேலைகள் குறையும். அஸ்வினி இளைஞர்கள் கேட்கும் பிரதியுபகாரம் என்னவென்றாலும் சரி என்று சொல்லிவிட முடிவு செய்தாள்.
“எங்கள் மந்திர சக்தியால் உன் கணவருக்கு கண்பார்வை கிடைக்கச் செய்கிறோம். அவர் எங்களோடு சேர்ந்து இந்த நீலா நதியில் மூழ்கி எழுந்தாரென்றால் பார்வை வந்துவிடும். அவ்வாறு நாங்கள் எழும் போது, அவர் எங்களைப் போன்றே இளைஞராக மாறிவிடுவார். உருவமும் எங்களது உருவத்தைப் போன்றே இருக்கும். நீ ஒரே உருவில் இருக்கும் எங்கள் மூவரில் ஒருவரை உன் கணவராகத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். இது தான் நிபந்தனை,“ என்றான் இரண்டாவது அஸ்வினி.
சரிதான். “ஆனால், நான் வயது முதிர்ந்த பேரிளம்பெண்,“ என்றாள் சுகன்யா சற்று தயக்கத்தோடு. அவள் மனதில், தன் வயது அவர்களது மனதை மாற்றக் கூடும் என்ற நப்பாசையும் இருந்தது.
“நீண்டகாலமாக வெளியுலகத் தொடர்பின்றி இருப்பதால் உனக்கு உலக நடப்பு தெரியவில்லை. இந்தக் காலத்தில் இளைஞர்களுக்கு நடுத்தர வயதுப் பெண்கள் மீதுதான் ஈர்ப்பு அதிகமாக இருக்கிறது. மேலும், நாங்கள் தேவலோகத்தினர். எங்கள் உலகில் இது போன்ற விஷயங்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் தருவதில்லை. நீ உன் கணவரிடம் சொல்லி அவரை அழைத்து வந்தாயானால், அவருக்கு கண்பார்வை தந்துவிடுவோம்,“ என்றான் முதலாமவன்.
ஓட்டமும் நடையுமாக ஆஸ்ரமம் வந்து சுகன்யா சியவனரிடம் நடந்தவற்றை எல்லாம் சொல்லி அவரைத் தன்னோடு வருமாறு அழைத்தாள். “ஆனால், சுகன்யா, நீ எப்படி என்னைத் தேர்ந்தெடுப்பாய்? கண் கிடைத்து, நீ கிடைக்காமல் போய்விட்டால்?“என்று ரிஷி பதறினார். “அதெல்லாம் ஒன்றும் ஆகாது. உங்களுக்கு முதலில் பார்வை வரட்டும். மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்,“ என்றாள் சுகன்யா. தன்னுடன் பலகாலம் கூடவே இருந்ததால், தன் தவவலிமையில் பாதியாவது இவளுக்கு இருக்கும் போல் தெரிகிறது. அதனால்தான் இப்படி தைரியமாக முடிவெடுத்திருக்கிறாள், என்று நினைத்தபடி, “சரி, அழைத்துச் செல்,“ என்று காற்றில் துளாவி, அவள் கையைப் பிடித்துக் கொண்டு கிளம்பினார் சியவனர்.
அஸ்வினி சகோதரர்கள் அதற்குள் ஏதோ மூலிகைகளை வைத்து மருந்து தயாரித்து வைத்திருந்தனர். மெல்லிய குரலில் ஏதோ மந்திரங்களை முணுமுணுத்தபடி, மூலிகைச் சாற்றை சியவனரின் இரு கண்களிலும் இரண்டு சொட்டு விட்டனர். சியவனர் எரியுமோ என்று பயந்தார். எனினும், பனித்துகள்களை்ப் போட்டது போல் குளிர்ச்சியாகத்தான் இருந்தது. அவரை சட்டென்று நீலா நதியில் தள்ளிவிட்டுவிட்டு, தாங்களும் நதிக்குள் பாய்ந்தார்கள்.
சில விநாடிகளில் நதியிலிருந்து ஒத்த உருவமும்,நடையுடை பாவனைகளும் கொண்ட மூவர் எழுந்து கரைக்கு வந்து சுகன்யா முன்பு நின்றார்கள். பேசினால் குரல் காட்டிக் கொடுத்து விடுமோ என்று மூவரும் வாய் திறக்கவில்லை. சுகன்யா மூவர் முகத்தையும் கூர்ந்து பார்த்தாள். அதில் ஒரு இளைஞனிடம் சென்று, “சுவாமி,“ என்று கரம் பற்றினாள்.
“அண்ணி, தாங்கள் ரிஷி பத்தினி என்பதை நிரூபித்தீர்கள். ஒரே உருவம் இருந்த போதிலும் தங்களது பர்த்தாவை சரியாகத் தேர்ந்தெடுத்தீர்கள். உங்களுக்கு எங்கள் ஆசிகள்,“ என்று அஸ்வினி குமாரர்கள் இருவரும் ஒரே குரலில் வாழ்த்தி விட்டு, காட்டிற்குள் மறைந்தார்கள்.
உணர்ச்சிவசப்பட்டிருந்த சியவனர் ஆஸ்ரமம் திரும்பும் வரை எதுவும் பேசவில்லை. உள்ளே நுழைந்ததும், “சுகன்யா, எப்படி என்னை சரியாகக் கண்டுபிடித்தாய் ? உன் கற்புத் திறத்தாலா? என் தவவலிமை உனக்கும் சிறிது வந்துவிட்டதா?“ என்றார் நன்றியும், பெருமையும் பொங்க.
“கற்புத் திறமும் இல்லை. ஒரு கத்திரிக்காயும் இல்லை. அவர்கள் இருவர் முகத்திலும் அத்தைகளை வளைத்துப் போட ஆசைப்படும் இளைஞர்களின் இச்சை அப்பட்டமாகத் தெரிந்தது. உங்கள் முகத்தில் பல வருடங்களாக கணவர் பதவியில் இருப்பவர்களுக்கே உரித்தான ஒரு அசட்டுக் களை பிரமாதமாக வழிந்தது.
உங்களை அடையாளம் காண அது போதாதா?“ என்றாள் சுகன்யா அலட்சியமாக.
அப்படியானால் கற்புத் திறம்? தவவலிமை ? சியவனர் சமாளித்துக் கொண்டு, ” சுகன்ஸ், பார்வை வந்ததை சற்று கொண்டாடலாமா?“ என்றார். அப்படிக் கேட்கும் போது தன் முகத்தில் வழிந்த அசட்டுக் களை அவருக்கே தெரிந்தது.
“இந்த இளைஞர்களோடு இவ்வளவு நேரம் செலவழித்ததில் எல்லா வேலையும் கெட்டு விட்டது. அதுதான் கண்பார்வை வந்துவிட்டதே ! மசமசவென்று உட்கார்ந்திருக்காமல், எழுந்து போய் பாலைக் கறக்கும் வேலையைப் பாருங்கள், நான் நாளைய ஹோம ஹவிஸுக்கு நெல் குத்த வேண்டும்,“ என்றாள் சுகன்யா.
“வழக்கமாக நீ எந்தப் பாத்திரத்தில் பால் கறப்பாய்?“ என்று கேட்டபடி தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்தார் சியவனர்.
——————————————————————————————————
தேவி பாகவதத்தின் ஏழாவது ஸ்கந்தத்தின் சவநஸ்யயவ்வனப்பிராப்தியாதிகதனம் என்ற ஐந்தாவது அத்தியாயத்தில் சொல்லப்பட்ட கதையின் மறுவாசிப்பு.
எழுதியவர் :
– ச.சுப்பாராவ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.