Devi Bharathi in Neervazhi Padooum தேவி பாரதி நீர்வழிப்படூஉம்

 

ஆற்றின் வழியே செல்லும் படகு போல உறவுகளின் வழியே செல்லும் மனித வாழ்வும் இயற்கையாகவே செல்கின்றது. என்று கணியன் பூங்குன்றனார் எழுதிய சங்க இலக்கியப் பாடலின் வரியொன்றை எல்லா மனித உறவுகளின் உணர்வுகளையும் சுமந்து கொண்டு அலைந்து செல்லும் நாவலிற்கான பொருத்தமான தலைப்பாக சூட்டியிருக்கிறார்.

2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். எளிய மனிதர்களின் உணர்வுகள் மேல் பின்னப்பட்ட கதை. வட்டார மொழி நடை காரணமாக முரண்டு பிடித்து உள் நுழைந்த கதையை விறுவிறுவென வாசித்து முடித்ததும் நெஞ்சில் ஏறிய பாரத்தை இறக்கி வைக்க நெடுநேரமாயிற்று.

காரு மாமாவின் பிணத்திலிருந்து கதை துவங்குகிறது. அக்காள் மகன் கதை சொல்லத் துவங்குகிறார். பிணமாய் கிடந்த காரு மாமா எழுந்து கதையின் இறுதி வரை உயிர் பெற்று உலவுகிறார். மூன்று அக்காக்களும் அவர்களின் பிள்ளைகளும் நினைவுகளால் அவருக்கு உயிரூட்டிக் கொண்டே இருக்கின்றனர். அக்காவும் தம்பியும் பாசமலர் சிவாஜி சாவித்திரியுமாக அன்பால் நனைத்து வாழ்ந்த கதையை கண்ணீர் மல்க சொல்லிக் கொண்டே போகின்றனர்.

இதில் காருமாமாவின் மனைவி ராசம்மா அத்தை தன் இரு குழந்தைகளுடன் செட்டியாரோடு ஓடிப்போன அவலக் கதையும் கதை நெடுக வந்து கொண்டே இருக்கின்றது. நாவலின் இறுதியில் செட்டியாரால் கைவிடப்பட்ட ராசம்மா தன் மகளுடன் தாலியறுக்க வருகிறார். அதன் பிறகு கதை செல்லும் வேகம் வாயு வேகம் மனோவேகம் என்பார்களே அதற்கு நிகரான பாய்ச்சல்.

காட்சி ஊடகத்தில் காணக் கிடைக்கும் பரபரப்பை தன் எழுத்திலும் கொண்டு வந்தது எழுத்தாளரின் செய்நேர்த்தியை காண்பிக்கிறது. கடைக்கோடி கிராமங்களில் ஒரு நாவிதர் குடும்பம் என்ன வேலையெல்லாம் செய்யுமோ அத்தனையையும் முகச்சுழிப்பில்லாமல் காலால் இட்ட வேலையை தலையால் செய்து தரும் போதும், அந்த தொழிலாளிகள் வாழ்வில் தாழ்வுறும் போது அந்த சமூகம் அவர்களை கைவிட்டு விடுவதையும் அழகாக காட்சிபடுத்தி இருக்கிறார்.

கதையெல்லாம் காருமாமாதான். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஊனுருக அவர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடிமகனாக, ஏவலாளியாக, சிகை திருத்துவோனாக, துப்பு சொல்வோனாக, எண்ணற்ற வேலை செய்தாலும் வலிப்பு நோய் வந்து சீரழிகையில் ஊர்சனம் அத்தனையும் வெறுங்கண்களால் வேடிக்கை தான் பார்க்கிறது. வெறுங்கால்களால் உழைத்தவனுக்கு ஊரின் மரியாதை இது.

முன்னுரையில் வாழ்ந்து மறைந்த உறவினர்களின் உயிர்ப்பான வாழ்வென்று குறிப்பிடுகிறார். ஒவ்வொரு கதாபாத்திரமும் இயல்பாகவே உலவுகிறது. இழவு வீட்டில் துளிர்க்கும் காதல் இறுதி அத்தியாயத்தில் கேள்விக்குறியுடன் மர்மமாக முடிவடைகிறது. எங்கெல்லாம் சொக்கட்டான் உருட்டுகிறார்களோ அங்கெல்லாம் காலத்தின் சூதாடிகள் பெருங்கதையொன்றை எழுதிப் போகிறார்கள். இங்கும் பகடைகள் உருட்டப்படுகின்றன. காலத்தின் தாயங்கள் ஒன்றை இரண்டாக்கி இரண்டை நூறாக்குகின்றன. முடிவை உங்களின் யூகத்திற்கு விட்டு விடுகிறார் கதாசிரியர். உருளத் தொடங்கும் கதையின் நீட்சியை நம்மால் நிறுத்தவே முடியாமல் ஒரு யட்சியைப் போல் பறந்தலைகிறது.

ஒரு சின்ன கேள்வி என்னவென்றால் கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் நாவிதர் குடும்பத்து சமூக வாழ்நிலை என்னவென்பது அனைவருக்கும் தெரியும். ஆனால்நாவலில் காருமாமாவின் இறுதி ஊர்வல ஏற்பாடுகள் என்பது மிகுந்த சமூக மரியாதையோடு நடப்பதாக காட்டப்படுகிறது. ஆனால் சமூகம் சாதீயமாக வெறிபிடித்து திரிகையில் யதார்த்ததிற்கு புறம்பாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது.வாழும்போது உதவ முன்வராத மனிதர்கள் செத்த பிறகு ஆடம்பர ஆர்பாட்டத்துடன் சவ ஊர்வலத்தை நடத்துவதாக சொல்வது ஏற்கும் படியாக இல்லை. வட்டார மொழியில் 200 பக்கத்தில் காலத்திற்கும் நின்று பேசக்கூடிய காவியத்தை படைத்திருக்கிறார் தேவிபாரதி. அவருக்கு கிடைத்திருக்கிற சாகித்ய அகாடமி விருது நல்லதொரு நாவலுக்கு கிடைத்த மிகப் பொறுத்தமான விருது நாவலாசிரியர் தேவி பாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்.

 

நூலின் தகவல்:

நூல் : நீர்வழிப் படூஉம்

ஆசிரியர் : தேவி பாரதி

பதிப்பகம் : நற்றிணைப் பதிப்பகம்

வெளியான ஆண்டு : முதல் பதிப்பு, 2020

விலை : ரூ. 250/-

 

நூலறிமுகம் எழுதியவர்: 

செ. தமிழ்ராஜ்
வண்டியூர் மதுரை
9965802089
[email protected]

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *