அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள காலடிச்சுவடே நாவலின் கரு என கடைசியாகப் புரிகிறது.
நாவலின் கதை சொல்லியாக ராசன் உள்ளார். அவரது தாய் முத்து (முழு பெயர் நாவலில் இல்லை) தகப்பனாரின் பெயர் “பள்ளி ஆசிரியர் ‘என்று மட்டும் புரிந்து கொள்ள முடியும் .தன் தாயின் சகோதரர் காரு மாமா …காருமாமாவின் மனைவி ராசம்மா.. இவர்களின் மகன் சுந்தரம் ..மகள் ஈஸ்வரி ..கதை சொல்லியின் பெரியம்மா.. மற்றொரு சவுந்தரம் பெரியம்மா …முத்தையா வலசு பெரியப்பா இவர்கள்முக்கியமான கதாபாத்திரங்கள் .இவர்களைத் தவிர சாவித்திரி, சண்முகம் ,அம்பிகாபதி ,சங்கரன் லிங்கநாவிதன்(கிராமப்புறப் பெண்களுக்கு ஒப்பாரிப்பாடல்களை தத்ரூபமாக சொல்லிக் கொடுப்பவர்),செட்டி (நாவலில் உள்ள பெயர்)தெற்கு வளவு பாண்டி, கொன்றேவல்கவுண்டர் என பலர் வந்து போகிறார்கள்.
இன்றும் பல கிராமங்களில் நிலவும் “குடி நாவிதம்” என்னும் தொழில் செய்வோர்.. குறிப்பாக இறுதிச் சடங்குகளில் முன் நின்று கடமையாற்றுபவரை பார்க்கலாம்.
இந்த நாவலில் தேவி பாரதி குடி நாவிதராக உள்ள காருமாமா மற்றும் முத்தையா வலசு பெரியப்பா ஆகியோர் மூலம் உடையார் பாளையம் கவுண்டர் குடும்பங்களுக்கு அவர்கள் செய்த பணிவிடைகளை விலாவாரியாக ஒரு பணி கூட விட்டு விடாமல் விவரிக்கிறார். நல்லது கெட்டது அனைத்துமே குடிநாவிதர்களை மையமாக்கி நிற்பதை பார்க்கலாம் .
பெண்ணுக்கு ராசி ..சாதகம் பார்ப்பது ,மாப்பிள்ளை பற்றி உளவுவிசாரிப்பது ..பொருத்தம் பார்ப்பது தொடங்கி பந்த காலுக்கு முகூர்த்த கால் நடுவது, பத்திரிக்கைதருவது ..கூறைபுடவை எடுப்பது.. மாப்பிள்ளையின் தங்கைக்குபட்டுப் புடவை எடுப்பது ..தட்டானிடம் சென்று மாங்கல்யம் செய்வது ..சீர்வரிசை பொருள்கள் வாங்குவது.. பட்டுப் புடவை -பட்டு வேட்டி ..பிறந்த வீட்டு சீதனம்.. திருமண மேடை நிகழ்வில் கரம் பற்றி வலம் வருவது ..மறு விருந்து ..பண்டிகை சீர் செனத்தி.. என்று குடிநாவிதர் இல்லாமல் எந்த செயலுமே அந்த குடும்பங்களில் நடைபெறுவது இல்லை… என்பதை நாவல் நன்றாகவே விரிவாக விவரிக்கிறது .
அதேபோல “கெட்டதில் “ஒருவர் இறந்து விட்டால் உடனே அவரை சுத்தம் செய்து ..கைகட்டு &கால் கட்டு &வாய் கட்டு போட்டு… உடை போர்த்தி.. அலங்கரித்து ..நெற்றியில் காசு வைத்து ..வாசனை பத்தி கொளுத்தி ..சென்ட் அடித்து வைப்பது தொடங்கி …காட்டிற்குச் சென்று கடைசி மண்ணோ/ தீயோ வைக்கும் வரை குடி நாவிதனின் பங்கு மையமாக இருப்பதப்பார்க்கிறோம். காரியம் செய்பவர்களுக்கு முடிஎடுப்பது ..கொள்ளி வைக்கும் பேரன்களுக்கு தீப்பந்தம் தயாரித்து கொடுப்பது ..வாய்க்கரிசி போடுவது …சுற்றி வரும்போது பானையில் ஓட்டை போடுவது… என்று ஒருபுறம் இருக்க …மறுபுறம் எழவு செய்தியை சொந்த பந்தங்களுக்கு கொண்டு சேர்ப்பது என்று குடிநாவிதம்பற்றி ஒன்று விடாமல் வரிசைப்படுத்தி இருக்கிறார் தேவி பாரதி. இவை தவிர இவர்கள்
அன்றாடம் செய்யும் சேவிங்…கை.கால்…இழுத்து
விடுவது…நகம் வெட்டுவது..அமுக்கி விடுவது
என்பது சகஜமாக உள்ளது.
சரி இனி நாவலில் கதைக்கு வருவோம் .கதை சொல்லி தன்னுடைய பழைய நினைவுகளை ஃப்ளாஷ்பேக் பாணியில் ஆரம்பம்- கடைசி ;ஆரம்பம் -கடைசி ..என கடைசி வரை கொண்டு செல்கிறார் ஆசிரியர். நாவல் முழுவதும் சோகங்களும் துயரங்களுமே…
கணவனை இழந்த பெரியம்மா பண்ணையக்காரிகளுக்கு வீட்டு பிரசவம் பார்த்து பிழைத்து வருவதால்அவர்களால் தெய்வமாக மதிக்கப்படுகிறார் .அதைத் தவிர ஆடு, மாடு ,கோழி,வயல் வேலை ஒருபுறம் ..முடி திருத்தகங்களில் முடிகளை கூட்டி அள்ளுதல் என்பது மறுபுறம் ..ஆதரவு தேவைப்படும் சொந்த சகோதர குடும்பங்களுக்கு ஆத்மார்த்தமான ஆதரவை தருபவளாக பெரியம்மா கதாபாத்திரம் நாவல் முழுவதும் வருகிறது.
உடையாம்பாளையத்தின் குடிமாவிதனாக இருந்த பெரியம்மாவின் கணவர் இறந்த பின் அந்த ஊருக்கு புதிய குடிநாவிதனை தேடிச் செல்லும் போதுதான் முதலில் முத்தையா வலசுவும் , பின் சில காலம் கழித்து காரு மாமாவும் குடி நாவிதர்களாக வந்து சேருகிறார்கள் .இருவரும் ஊரில் உள்ள குடிகளை ஆளுக்கு பாதியாக பிரித்துக் கொண்டு பணி செய்கிறார்கள்.
காரு மாமாவின் மனைவி ராசம்மா ..மகள் ஈஸ்வரி, மகன் சுந்தரம் ஆகியோரை அழைத்துக் கொண்டு ‘செட்டி’யுடன் (நாவலில் உள்ள பெயர்) கணவனை விட்டு விட்டு சென்று விடுகிறார். தன்னை விட்டுச் சென்ற நான்கு பேரின் பாதச்சுவடுகள் வாய்க்கால் படுகை சேற்றில் பதிந்திருப்பதை அடையாளம் கண்ட காரு மாமா அந்த இடத்திலேயே வலிப்பு நோய் வந்து விழுந்து விடுகிறார் .நீர் வழி செல்லும் தெப்பம் போல செட்டி வழி மூவரும் பின் தொடர்ந்து சென்றுவிட்டதாக பொருள் கொள்ளலாம் .அதுதான் நீர் வழிபடூஉம்.
தன் மனைவி தன்னை விட்டு சென்று விடுவார் என்பதை அறிந்தே இருந்த காரு மாமாவால் தன் மகன் சுந்தரமும் மகள் ஈஸ்வரியும் தன்னை விட்டுவிட்டு தாயுடன் சென்று விட்டதை அவரால் பொறுத்துக் கொள்ளவோ..ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. தன் குழந்தைகளைத் தேடி அவர் எங்கெங்கெல்லாம் சென்றார்.. என்னென்ன கஷ்டமெல்லாம்பட்டார் என்பதை நாவல் முழுதும் நெகிழ்வாக விவரிக்கிறார் தேவி பாரதி…
உடன்பட்டுச் சென்ற மனைவி …குழந்தைகள் என்ன ஆனார்கள் என்பதை நாவலின் இறுதியில்தான் அறிய முடிகிறது. காரு மாமாவின் விருப்பப்படி அவரது மகள் ஈஸ்வரியை அவரது சகோதரி மகன் ராஜனுக்கு (அதாவது கதை சொல்லிக்கு) திருமணம் செய்து வைக்க பெரியம்மா செய்த முயற்சி வெற்றி பெற்றதா ?அதற்கு ஈஸ்வரி அம்மா ராசம்மா ஒத்துக் கொண்டாளா ?தன் மனைவி சென்று விட்ட பின் காரு மாமா மறுமணம் செய்து கொண்டாரா ?குழந்தைகளைப் பிரிந்த துயரம் அவரை என்ன செய்தது ..என்பதையெல்லாம் நாவலை படித்து தெரிந்து கொள்வதே நியாயமானதாக இருக்கும்.
அந்தக்கால எம்ஜிஆர் சிவாஜி திரைப்படங்கள்.. அவர்களின் ரசிகர்களுக்கு இடையே இருந்த மோதல்கள்.. ரேடியோ அறிமுகம்.. கருப்பு வெள்ளை சிறிய தொலைக்காட்சி பெட்டி அறிமுகம்.. அவை எப்படி தனிமையில் வாடியோருக்கு உதவியாக இருந்தன ..சமயத்தில் சண்டைகளுக்கும் காரணமாக இருந்தன என்பதை எல்லாம் பக்கம் பக்கமாக நம்பும்படி சம்பவங்களை தருகிறார் ஆசிரியர்.
குடிநாவிதர்களின் குடும்ப வாழ்க்கையை அச்சு அசலாக விவரிக்கிறது நாவல். அவர்களை எப்படி சுயநலத்துக்காக போற்றிப் பாதுகாத்தன குடும்பங்கள் என நாவலில் தெரிந்து கொள்ளலாம். வேலையில்லா திண்டாட்டத்தினால் சாயப்பட்டறையில் மிக மோசமான ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு கைகள் அரிக்கப்படுவது.. நைட்ரேட் புழங்கும் தொழிலில் ஈடுபட்டு மரணங்களை எதிர்கொள்வது.. பில்லி சூனியம் செய்வினை நம்பிக்கைகள் குடும்ப உறவுகளில் சண்டைகளை ஏற்படுத்தியது.. நேர்மையான ஆண் -பெண் பாச உறவுகள் கூட கொச்சையாக பார்க்கப்படும் எதார்த்தம் ..உடல் நலிவுற்றுஇருப்பினும் தேவைகளின் போது பெறப்பட்ட” மொய்களை” எப்படியாவது திரும்பச் செய்து விட வேண்டும் என்ற முனைப்பு.. நல்ல நிகழ்வுகளுக்கு செல்லாவிட்டாலும் இறப்பு நிகழ்வுகளுக்கு எப்படியாவது சென்று விடுவது.. முதியோர்உதவித்தொகையை எதிர்பார்த்து தபால்காரர்களுக்காக காத்திருக்கும் முதியவர்கள்.. என்று கிராமப்புற வறுமை வாழ்வை எதார்த்தமாக ஆங்காங்கே கதையின் போக்கிலேயே பதிந்துள்ளார் ஆசிரியர். கிளைமாக்ஸ் காட்சியில் தாயக்கட்டையை உருட்டி முடிவை தேடுவதற்கு பதிலாக.. நேரடியாக பேசி முடிவைக் கொண்டு வந்திருக்கலாம் என்று தோன்றினாலும் ..நாவலில் தாயக்கட்டை உருட்டல் சுவாரசியமாக..படிப்படியாக வர்ணிக்கப்படுகிறது.
நாவலில் வலம் வரும் கதாபாத்திரங்களுக்கு இடையேயான உறவுகளை வாசகர்கள் புரிந்து கொள்வதற்கு சற்றே தடுமாறினாலும் ,இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் நம்மைச் சுற்றிலும் சமூகத்தில் இருக்கின்றன என்பதை எளிதாகவே புரிந்து கொள்ளலாம்.
அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்…!
நூலின் தகவல்கள்:-
நூல் : நீர்வழிப் படூஉம்
நூலாசிரியர் : தேவிபாரதி
வெளியீடு :தன்னறம்
தொடர்புக்கு : 44 2433 2924
விலை : ரூ. 250/-
பக்கங்கள் :200
நூலறிமுகம் எழுதியவர்:-
மன்னை இரா.இயேசுதாஸ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.