சுஜாதாவின் ‘காரணம்’ சிறுகதை முன்வைத்து எழுதப்பட்ட ‘பிறழ் நடத்தையும், பெற்றோர் பொறுப்பும்‘ கட்டுரை – மணி மீனாட்சிசுந்தரம் | Tamil Educational Article | www.bookday.in

சுஜாதாவின் ‘காரணம்’ சிறுகதை முன்வைத்து எழுதப்பட்ட ‘பிறழ் நடத்தையும், பெற்றோர் பொறுப்பும்‘ கட்டுரை – மணி மீனாட்சிசுந்தரம்

சுஜாதாவின் ‘காரணம்’ சிறுகதை முன்வைத்து எழுதப்பட்ட ‘பிறழ் நடத்தையும், பெற்றோர் பொறுப்பும்‘ கட்டுரை

– மணி மீனாட்சிசுந்தரம்

“மீனாக்காதான் பதியன்
கொண்டு வந்தவள்.
‘எங்கள் வீட்டுப் பூவைவிட
இது சிறியது’ என்றாள்.
பேராச்சியே பெரும்பாலும்
தண்ணீர் ஊற்றினாள்.
‘ இந்தப் பாடு பட்டதுக்கு
இதைவிடச் சிவப்பாக இருக்கணும்’
என்பது அவள் எதிர்பார்ப்பு.
சிந்தபூந்துறை வீட்டில் பூத்த
செம்பருத்தி போல இல்லை
என்ற குறை வள்ளிக்கு,
நினைத்தது போலத்தானே
பூத்திருக்கிறேன் என
நெகிழ்ந்து கிடந்தது
நிலம்”

கவிஞர் கல்யாண்ஜியின் கவிதை இது.ஒரு செடியின் வளர்ச்சியில் நிலத்திற்கு எவ்வளவு பங்கும் உரிமையும் இருக்கிறதோ, அவ்வளவு உரிமையும் பங்கும் நற்பண்புகளோடு ஒரு குழந்தை வளர்வதற்கு அக்குழந்தையின் பெற்றோரிடம் இருக்கிறது. நன்னடத்தையுடன் குழந்தை வளர்வதற்குப் பள்ளிகளும் ஆசிரியர்களும் பக்கக் காரணங்கள் தாம். முதன்மைக் காரணம் பெற்றோரும் குடும்பமுமே. அது குறித்துப் பேசுகிறது எழுத்தாளர் சுஜாதாவின் ‘காரணம்’ என்ற சிறுகதை.

பதின்ம வயதுடைய மாணவர்களில் சிலர் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை அங்கொன்றும் இங்கொன்றுமாக நாம் அறிந்திருப்போம் ; நேரடியாகவும் தெரிந்திருப்போம். ஆனால், இக்கதை எட்டு வயதே ஆன மூன்றாம் வகுப்பு மாணவனைக் குறித்துப் பேசி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

அது ஒரு அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி. அங்குப் பணிபுரியும் மூன்றாம் வகுப்பு ஆசிரியரான மாணிக்கத்தைத் தலைமையாசிரியர் தன்னுடைய அறைக்கு அழைத்து,
/” உங்கள் வகுப்பில் உள்ள வடிவேலு எப்படி?” / என்று கேட்கிறார். அதற்கு ஆசிரியர் , / “அவன் சற்று வித்தியாசமானவன். படிப்பில் அக்கறை கிடையாது. மிக மௌனமானவன்.அழுத்தமானவன். பேசமாட்டான். ஆனால்…. “/என்று சொல்லிக்கொண்டிருந்தபோதே, எதற்காக அவனைப் பற்றித் தலைமையாசிரியர் விசாரிக்கிறார் என்ற யோசனையில் /” அவனைப் பற்றி ஏதாவது புகார் வந்திருக்கிறதா சார் ?”/ எனக் கேட்கிறார்.

உடனே தலைமையாசிரியரிடம் இருந்து ஆசிரியர் எதிர்பார்க்காத ஒரு பதில் வருகிறது. /” புகார் வந்திருக்கிறது. அவனைப் பற்றியில்லை. உங்களைப் பற்றி”/ என்று கூறியபடி தனது மேசையிலிருந்த கடிதத்தை எடுத்து ஆசிரியரிடம் நீட்டுகிறார்.

/”மேன்மை தங்கிய தலைமையாசிரியர் அவர்களுக்கு, என் மகன் வடிவேலு உங்கள் பள்ளியின் ஆசிரியர் மாணிக்கம் என்பவரைப் பற்றி என்னிடம் வந்து சொன்ன ஒரு சம்பவத்தைப் பற்றி உங்களுக்கு எழுத வேண்டியது அவசியமாகிறது. சென்ற புதன்கிழமை என் மகனை மாணிக்கம் மதகருகே அழைத்துச்சென்றதாகவும் அங்கே என் மகனை…..”/

வடிவேலுவின் அப்பா எழுதிய கடிதத்தைப் படிக்கப் படிக்க ஆசிரியர் அதிர்ந்து போகிறார்.
அவரது உடலில் படபடப்பும் நடுக்கமும் கூடுகிறது. /” சார், இது என்னைப் பற்றிய அபாண்டம்” என்கிறார் ஆசிரியர்./
ஆனால், தலைமையாசிரியரோ, ” எட்டு வயதுப் பையன் இதை முழுவதும் கற்பனை பண்ணிக் கொண்டு தன் அப்பாவிடம் சொல்லியிருக்க முடியுமா?”என்று ஆசிரியரைச் சந்தேகிக்கிறார். படிக்கும் நமக்கும் கூட அந்தச் சந்தேகம் வருகிறது. நமக்குக் கதையில் வரும் மாணவனையும் ஆசிரியரையும் பற்றித் தெரியாது. ஆனால், ஒரு தலைமையாசிரியருக்குத் தன்னிடம் பணிபுரியும் ஆசிரியரைப்பற்றித் தெரிந்திருக்க வேண்டாமா? அப்படித் தெரிந்தவர்களே சந்தேகிக்கும்போது சம்பந்தப்பட்டவருக்குக் கோபம் வருவது இயல்புதானே?

தலைமையாசிரியர் வேண்டுமென்றே தன் மீது பழி போடுவதாக நினைக்கிறார் ஆசிரியர். இருவருக்கும் இடையே வார்த்தைகள் தடிக்கின்றன.

மாணிக்கம் ஆசிரியர் அவனை அடிக்கவில்லை. அவருடைய பாடத்தில் தேர்ச்சி பெறும் அளவுக்கு மதிப்பெண்கள் எடுத்திருக்கிறான். பிறகு என்ன காரணத்தினால் இப்படி ஒரு பழியை அவர்மேல் சுமத்தியிருக்கிறான் என்பதும் தலைமையாசிரியருக்குத் தெரியவில்லை.

ஆனால், தன் மீது ஏன் வடிவேலு இப்படி ஒரு பழியைச் சுமத்தியிருக்கிறான் என்பதை மாணிக்கம் ஆசிரியர் ஊகித்துவிட்டார். அவர் வடிவேலுவைப் பலமுறைக் கையும் களவுமாகப் பிடித்திருக்கிறார். ஆனால், இதை இப்போது சொன்னால் தலைமையாசிரியர் நம்புவாரா? என
அவர் யோசிக்கும்போதே தலைமையாசிரியர் அவரிடம்,/” மிஸ்டர் மாணிக்கம், நீங்கள் அவனை அன்று தனியாக அழைத்துச் சென்றீர்களா? இல்லையா? “/எனக் கேட்கிறார்.

ஆசிரியர், “ஆமாம் அழைத்துச் சென்றேன். அவனுக்குப் புத்திமதி சொல்வதற்கு…அவனுடன் பேசுவதற்கு.அவனுக்கு ராமகிருஷ்ணரின் வாழ்க்கையிலிருந்து ஒரு கதை சொன்னேன்.அந்தப் பையன் ஒரு…”/ என்று தயக்கத்துடன் தொடர முற்படும்போது, தலைமையாசிரியரிடம் இருந்து தொடர்பில்லாத ஒரு கேள்வி வருகிறது./” மிஸ்டர் மாணிக்கம், நீங்கள் ஏன் இதுவரையில் கல்யாணம் செய்துகொள்ளவில்லை?”/ என்று கேட்கிறார்.

தலைமையாசிரியரின் இந்தக் கேள்வி, தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதுபோல் இருப்பதை மாணிக்கம் ஆசிரியரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. /”மாணிக்கத்திற்கு நெற்றி நரம்புகள் வெடிக்கும் அளவுக்குக் கோபம் வந்தது”/

/” ஸார், ஒரு நல்ல பள்ளியின் தலைமையாசிரியர் என்கிற ரீதியில் உங்களுக்கு உங்கள் ஸ்டாஃபிடம் கொஞ்சம் நம்பிக்கை, மரியாதை, பண்பான பழக்கம் வேண்டாம்? இந்தக் கடிதத்தைக் கிழித்துக் குப்பையில் போட்டிருக்க வேண்டாம்? இந்த மாதிரி ஒருத்தன் கடிதம் எழுதிக் கொடுக்கிறான் என்றால் அதை அவன் முகத்தில் எறிந்திருக்க வேண்டாம்? என்ன ஆசாமி நீ…”/

உரையாடல் பிரச்சனையை விட்டு விலகி தனி மனிதர்களுக்கு இடையேயான சண்டையாக முற்றுகிறது.

மாணிக்கம் ஒரு தாளை எடுத்து நடுங்கும் கரங்களால் இந்தப் பள்ளியில் வேலையைத் தொடர விருப்பமில்லை என எழுதி தலைமையாசிரியரிடம் வீசி விட்டு வெளியே செல்கிறார்.

மாணிக்கம் ஆசிரியர் அப்பள்ளியின் நிர்வாக ஊதியத்தில் பணியாற்றும் ஆசிரியராக இருக்கலாம். இந்தப் பள்ளி இல்லாவிட்டால் வேறு பள்ளி என முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், இந்தக் காலம் என்றால் விசாரணைக்கு முன்பே ‘ போக்சோவில்’ சிறைக்குச் செல்ல வேண்டியதாயிருக்கும்.

ஒரு பள்ளியில் மாணவன்- ஆசிரியர் இடையேயான ஒரு பிரச்சினை முறையாக அணுகப்படாமல் போகுமானால், இதுபோன்றதொரு நிலைதான் ஏற்படும். அதற்கு, அரசுப் பள்ளியோ, தனியார்பள்ளியோ முழுப்பொறுப்பு பள்ளி நிர்வாகமேயாகும்.

பள்ளியை விட்டு வெளியே வந்த ஆசிரியர், அதற்குக் காரணமான மூன்றாம் வகுப்பு மாணவனான வடிவேலுவைப் பற்றிச் சிந்திக்கிறார்.
/” வடிவேலு எப்படி அத்தனை இளம் மனம் இத்தனை விகாரமாக முடியும்? எப்படி…எப்படி இத்தனைப் பெரிய வயது வந்த பொய்யை உன்னால் ஜோடிக்க முடியும்?”/ என்று யோசிக்கிறார்.

வகுப்பில் வடிவேலுவின் சக வகுப்பு மாணவிகள், அவன் வயதுக்கு மீறிய பாலியல் சேட்டைகளில் ஈடுபடுவதாக மாணிக்கத்திடம் புகார் செய்கின்றனர்.
மாணிக்கத்துக்கு அது அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரு சின்னப் பையன் இப்படி நடந்து கொள்வானா? என்று அதிர்ந்து போகிறார்.

வடிவேலு தன்னுடைய புத்தகத்திற்குள் அந்த மாதிரி புத்தகத்தை வைத்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது./” சார், என்னவோ பண்ணான் சார்” என்ற அந்த அறியாச் சிறுமியின் குரல் அவர் மனத்தில் எதிரொளித்தது. ” இல்லை சார், இல்லை சார், இவதான் என்னை வடிவேலு மாங்கா பறிச்சுத் தாடானா… வித்தை காட்டறேன் வாடான்னு….”/ வடிவேலுவின் நினைவுகளுடன் ஆசிரியர் அவனது வீட்டை நோக்கி நடக்கிறார். வழியில் வந்த மாணவனிடம் வடிவேலுவின் வீட்டு அடையாளத்தைத் கேட்டுக்கொண்டு நடக்கிறார்.

பள்ளியில் ஒரு மாணவனிடம் தொடர்ச்சியாகக் காணப்படுகின்ற நெறிபிறழ் நடத்தையைக் காணும் ஒரு ஆசிரியர், அதைத் தானே சரிசெய்து விடலாம் என நினைப்பது தவறாகும். பல சமயங்களில் அது அவருக்கு எதிராகவே திரும்பிவிடும். ஆசிரியர் தனித்து விடப்படுவார். கதையிலும் அதுவே நடந்திருக்கிறது. உடனடியாகத் தலைமையாசிரியரின் கவனத்திற்கு அப்பிரச்சனையைக் கொண்டு செல்லவேண்டும். பெற்றோரை அழைத்து இப்பிரச்சனையின் ஆணிவேரைக் கண்டறிந்து, அம்மாணவனை நல்வழிப்படுத்தும் முயற்சிகளைச் செய்ய வேண்டும். இவையெல்லாம் பள்ளியின் பிற மாணவர்கள் அறியாதவாறு செய்யப்படுவதே மிகச் சரியான வழிமுறையாகும்.

ஆசிரியர் வடிவேலுவின் வீட்டை நோக்கி விரைகிறார். வடிவேலுவின் அப்பாவைப் பார்த்து அவனது வயதுக்கு மீறிய செயல்களைப் பற்றிக் கூறவேண்டும் . இப்போதிருந்து அவனைத் திருத்தச் செய்யவேண்டிய செயல்களை அவருக்குச் சொல்ல வேண்டும் என நினைத்தபடி வடிவேலுவின் வீட்டை அடைகிறார் ஆசிரியர்.

ஆசிரியர் செய்வது காலம் கடந்த முயற்சி என்றாலும், பிரச்சனைக்கான காரணத்தை அவர் கண்டறிய முடியாதவராக இருந்தாலும், தனது பணிக்கு ஆபத்து வந்தபோதும் தன்னுடைய மாணவனை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற அவருடைய நல்ல‌ நோக்கத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.

“வீட்டுக் கதவு அரைகுறையாக மூடியிருக்கிறது.வாசலில் கோலமில்லை. உள்ளே இருட்டாக இருக்கிறது. கதவைத் தட்டலாமா? கூப்பிடலாமா? “என்று ஆசிரியர் யோசிக்கும் போதே உள்ளே பேச்சுக் குரல் கேட்கிறது.

கணவன் – மனைவிக்கு இடையேயான கொஞ்சல் பேச்சு ஆசிரியரை நிறுத்துகிறது.
/” விடுங்க, மகன் பார்த்துவிடப் போகிறான் ” என்று மனைவி கூறுவதும்,” வடிவேலுவை சோடா வாங்கக் கடைக்கு அனுப்பியிருக்கிறேன் ” / என்று கணவன் கூறுவதும் கேட்கிறது.
குழந்தை உள்ள வீட்டில் எந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று அறியாத, தன்னடக்கமில்லாத் தம்பதிகளின் செயல் அங்கு நடக்கிறது. காது கூசும் படியான ஆபாசப் பேச்சுக்களுடன்.

கதை முடிவுக்கு வருகிறது. கதையை இப்படி முடிக்கிறார் ஆசிரியர்.

/” அப்புறம் அருவருப்பான சிரிப்பு. வெளியே வந்து நடந்த மாணிக்கத்திற்கு வடிவேலுவின் மேல் அளவில்லாத இரக்கம் ஏற்பட்டது”./

நல்லதோ, கெட்டதோ எதையும் கூர்ந்து பார்க்கும் இயல்புடையவர்கள் குழந்தைகள். குழந்தைகளின் எட்டு வயதில் பழக்கங்கள் படியத் தொடங்குகின்றன என்கிறது குழந்தை உளவியல். அறியாச் சிறுவனான வடிவேலுவுக்கு இந்த மாதிரியான பழக்கங்கள் படிய யார் காரணம்?

யாரிடம் சொல்லி மாணவனைத் திருத்த வேண்டும் என ஆசிரியர் நினைத்தாரோ, அவர்களே திருத்தப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இப்படி, தம் சொந்தக் குழந்தையின் எதிர்காலத்திற்குச் சூனியம் வைக்கும் பெற்றோர்கள்தாம் பிறழ்நடத்தையுடைய இளைய சமுதாயம் உருவாக முதற் காரணமாக இருக்கிறார்கள். அவர்களை நல்வழிப்படுத்தாமல் முழுமையான நல்ல இளையோர் சமுதாயம் உருவாக வாய்ப்பேதுமில்லை.

துணை நின்ற நூல்கள் :
———————————–
1. சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள்- உயிர்மை பதிப்பகம், சென்னை – 20.
2. கல்யாண்ஜி கவிதைகள், வ.உ.சி நூலகம், சென்னை – 14.

கட்டுரை ஆசிரியர் குறிப்பு :

எழுத்தாளர் தி.ஜானகிராமனின் (Thi. Janakiraman) முள்முடி சிறுகதை சுருக்கம் (Moolmudi Short Story) | சிதறல்கள் சிறுகதை கட்டுரை

மணி மீனாட்சி சுந்தரம், மதுரையில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழக அரசின் புதிய பாடநூல் உருவாக்க ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். அகில இந்திய வானொலியிலும், மதுரைப் பண்பலையிலும் நூல் விமர்சனம், சுற்றுச்சூழல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து வழங்கி வருபவர்.முகநூல் குழுக்களில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கி வருபவர்.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 1 Comment

1 Comment

  1. நாகேந்திரன் இ

    உளவியல் சிக்கல் நிறைந்த கதையை அலசி ஆராய்ந்து கூறியவிதம் மிகவும் சிறப்பு ஐயா. கல்யிண்ஜி கவிதையில் ஆரம்பித்து சுஜாதாவின் கதையைக்கூறி,தங்களது கருத்தை வைத்து எழுதப்பட்ட செயல் சிறப்பு ஐயா. வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *