கவிதை: *ஏரடா உயிரியக்கத்தின் வேர்* – சீனி.தனஞ்செழியன்ஏரடா உயிரியக்கத்தின் வேர்
கார்ப்பரேட்டுகளின் கோரக்
கால்களை ஆட்சிகள் கழுவிக் கொண்டிருக்கின்றன
உச்சத்திலேறும் உழுகுடி வாழ்வென பூசி மொழுகிக் கொண்டிருக்கின்றன
உங்கள் தரகுகளுக்கு எங்கள் இறகுகளைப் பிய்த்தெறிய தங்கமுலாம் சட்டங்கள்
ஆகாயம் வரை ஆகா ஓஹோவென போடுகிறீர் திட்டங்கள்
ஏற்கனவே வயல்வெளிகள் காங்கிரீட் காடுகளாய்
விற்று பாதிபேர் உங்கள் வலையில் செம்மறி ஆடுகளாய்
விலை வைக்கலாம் என சொல்லி உலைவைத்த கதை ஊரறியும்
வியர்வை நிறைந்த எங்கள் வாழ்வை என்றடா இந்த நாடறியும்?
களைப்பை மறைத்து கலப்பைத் தூக்கித் திரிகிறோம்
மழைநிறை நாளிலும் சேதங்கண்டு வெஞ்சூரியனினும் அதிகமாய் எரிகிறோம்.
உடுப்பில் மிடுக்கற்ற
உழைப்பு மிடுக்காளர்கள் நாங்கள்
சேறுசகதியில் உழன்று வாழ்ந்தாலும்
தினவுப்பன்றிகள் அல்ல
இந்த வீரம்நிறை ஆண்கள்
கூழைக் குடித்திடினும்
கூழைக்கும்பிடு எங்களிடத்தில் இல்லை
உயிர்வற்றும் நாள்வரை உழுது பிழைப்பதே எங்கள் இறுதி எல்லை
பசி இல்லை என்ற சொல்லின் ஆதிபகவன்கள்
ஏறெடுத்து எவன் பார்க்காவிடினும்
ஏரெடுத்துழுது சோறுபோடும் வீர மறவன்கள்
நலம் காக்கிறோமென நயவஞ்சகம் வேண்டாம்
நெஞ்சகமெல்லாம் நல்லெண்ணமிருப்பின்
தலைநகர் கூடலை கவனியுங்கள்
கடலினும் விஞ்சி சேர்ந்திருக்கும் தங்கங்கள் உரைக்கும் வார்த்தைகள் உறைக்கட்டும் உங்களுக்கு
உங்கள் அரசியல் விளையாட்டுகளை மாடோடு நிறுத்திக்கொள்ளவும்
கூடிய காளைகளின் கோரிக்கை கொம்புகளின் கூர்மை அறியுங்கள்
ஏனென்றால்,
நாமனைவரும் இறுதிவரை உண்ண வேண்டும் சோறு
அந்த எண்ணத்திற்குப் போடாதீர் கூறு
அடச்சீயென அலட்சியப்படுத்தக் கூடியதல்ல
இந்த எழுச்சி
நல்ல சட்டங்களால் விவசாய வீடுகளில் உருவாகட்டும் நல்மலர்ச்சி
அதுவரை தொடரும் இந்த ஏர்களின் கிளர்ச்சி.
சீனி.தனஞ்செழியன்,
இராணிப்பேட்டை.