நிழலாடும் நிலாக்காலம் – சீனி. தனஞ்செழியன்பால்தேக வயதினில்
பருப்பு கடைந்தும் நிலா காட்டியும்
விளையாட்டினை தொடங்கி வைத்தாள் என் அன்னை

நடைபருவத்தில் சிறு தேர் உருட்டி
மணல் குவித்து வீடாக்கி துளிர்த்தன
எனக்கான விளையாட்டுகள்

காயா பழமாவில் திளைத்து
புனல் விளையாட்டில் தலை சிலுப்பி
கொல கொலையா முந்திரிக்காவில் இனித்து
ஒரு கொடம் தண்ணி ஊத்தி
உயிர்பெற்றது சினேக ஆட்டங்கள்

தாயமுருட்டி
சகவயது தோழிகளின் கல்லாங்காய் ஆட்டத்தில் ஆர்ப்பரித்து
கண்பொத்தி கதைபேசி நீண்டது மகிழ்வின் பொழுதுகள்

கூடியடித்த கும்மியில் மனம் லயித்து
கூட்டாஞ்சோறாக்கி முள்கீரை குழம்பு வைத்து
இறைவனுக்கும் படைத்து
பகிர்ந்துண்ட நிலா நிறைந்த இரவுகள்

வளர வளர காளையடக்கி
வில்லெறிந்து வாள்சுழற்றி
வளறி அறிந்து சிலம்பம் கற்றுக்
கடந்த ரம்மியப் பொழுதுகள்

கதைசொல்லிகள் என்று
பிரமாதிக்கிற சொல்லாடல் அன்றில்லாமல்
வெற்றிலை குதப்பிய வாய்கள் எல்லாம்
தேனுற கதை சொல்ல கண்விரிய கதை கேட்டோம்

பொம்மலாட்டம் வில்லுப்பாட்டு தெருக்கூத்து
இவற்றில் எல்லாம் அலாதிப்பிரியம்

திருவிழா மஞ்சள் நீரில்
அத்தைமகள் அன்பு
அதிகமாய் விரியும்

இளவட்டக்கல் தூக்கி
உரியடித்து சறுக்குமரமேறி
வீரமணக்க நடந்தேறும் நல் விழாக்கள்

பழம்பானைச்சோறை உயர் உணவகத்தில் வாங்கி
மிளகாய் கடிக்கையில் சன்னமாய் நெஞ்சில் நிழலாடுகின்றன
நாம் தொலைத்த விளையாட்டுகளும் விழாக்களும்

கண்ணெதிரே விற்கப்படுவது நம் பாரம்பரியம் மட்டுமல்ல
இன்னும் கூட நாகரிக போலிமண் பூசி அலைகிற நம் வாழ்வியலும் தான்…

சீனி. தனஞ்செழியன்