தாயம்மா – மு தனஞ்செழியன்தாயம்மா

*************

கயத்தாறு மயிலே
வஞ்சி மீன் கடலே
கரிசல் வாசனையில் நான் எழுதிப்பார்க்க
என்னவளே தாயம்மா
எங்குதான் போனியோ?

பருத்தி மாரு வெடிச்சு கெடக்கு
கம்மம் புல்லும் மொளச்சு கெடக்கு
காஞ்ச பூமி கொஞ்சம் நனைஞ்சு கெடக்கு
கட்டி கூட கறையலயே
கம்மாயில தண்ணீ இல்லை
ஓடையிலும் ஓன்னும் இல்லை
நல்லியிலும் தண்ணீ வல்ல
நீ செஞ்ச களி கூட காஞ்சிப்போச்சு
அகப்பை பூரா எறும்பு மொச்சு கெடக்கு
தொழுவத்தையும் பெருக்கவில்ல
ஆடு குட்டி அப்படியே கெடக்க
புலுக்க மூத்தரம் வீச்சம் அடிக்குது
சித்ரானங்கல வாங்கியந்த பலகாரமும்
பாழா போச்சே
எந்திரியேன் தாயம்மா, சால்சாப்பு வேணாம்மா
இன்னும் செத்த நேரம், ஆனாலும்
செத்த நீயும் வரப்போவதில்லை
மெட்ராசுக்குப் போன மகென்
ஒன் துட்டி செதி தெரிஞ்சும் வல்ல
புண்ணியாடி நீ போயிட்ட
தண்ணியில்லா காட்டுல
எனக்கு இப்பதேன் தாகம் எடுக்குது தாயம்மா…

— மு தனஞ்செழியன்