மரணம் – மு. தனஞ்செழியன்மரணம்
**********

எல்லோரும் விரும்பி பிறக்கவில்லை
இங்கேயே இருக்கவும் விரும்பவில்லை
உடல் தளர்ந்து உயிர் பிரிவது மரணம் என்றால்
மனம் தளர்ந்து வாழும், ஒவ்வொரு நாளும் மரணமே

உயிர் போனால் இருந்த பெயர்கூட
பிணம் என்று ஆகுமே
உயிர் பிரிந்தோரின் மனமெல்லாம்
உடன் இருந்தோர்
உடன் வாழுமே

உள்ளே நுழைந்த உயிர்
வெளியே போகுதே
இவன் உயிரை விட்டு விட்டு
உடலுக்கு அழுகுறானே

உயிர் வந்த வழி தெரிந்தால்
உடல் உள்ளே நுழையலாம்
மர்மம் புரியாமல்
மரணம் என்று ஆனதே…

எங்கிருந்தோ வந்த உயிர்
இங்கே இருந்து போனதே
இங்கிருந்து போன உயிர்
எங்கிருந்து வந்ததோ?

‘நான்’ என்பது போன பின்பு
நாம் கூடி அழுகிறோம்
நான் எல்லாம் போன பின்பு
கூட நாம் என்பதில்லையே!

கூட்டில் இருந்து பிரியும் உயிர்
வேறு இடம் போகுமோ?
எங்கோ உயிர் பிறந்துவிட
இங்கிருந்து கிளம்புமோ?

மு. தனஞ்செழியன்