Image Credits: Deccan Chronicle



விடியற்காலை நாலே முக்கால் மணி இரவு பெய்ய ஆரம்பித்த மழை அந்த நேரம் வரையிலும் நிற்கவில்லை ஜோராகப் பெய்து கொண்டே இருந்தது. மக்கள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாலும் மழை உறங்குவதில்லை சாலையின் இரு புறமும் ஒரே இருட்டு ஆங்காங்கே மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன கருத்த வானில் தெரியும் நட்சத்திரங்களைப் போல.

அந்த சாலையில் தனியே ஒரு ஆட்டோ மட்டும் வந்தது அந்த ஆட்டோவை ஓட்டிக் கொண்டு வந்தவர் ரோஸி, அபியின் அம்மா. அந்த ஆட்டோவில் அபி தலையைத் துப்பட்டாவால் மூடிக்கொண்டு அமர்ந்து இருந்தாள். அந்த இருட்டில் அவள் முகம் சரியாகத் தெரியவில்லை. அந்த விடியற்காலை பொழுதில் அவர்கள் இருவரும் ஏதோ ஒரு முக்கிய வேலைக்காக அவசரமாய் சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவின் வைப்பர் ஆட்டோவின் கண்ணாடி மீது விழும் மழைத்துளிகளைச் சுத்தம் செய்து தெளிவான பார்வையை ரோஸிக்கு காட்டிக்கொண்டிருந்தது.

அந்த ஆட்டோவின் மீது விழுந்து கொண்டிருந்த ஒவ்வொரு மின் விளக்குகளின் ஒளியும் அந்த ஆட்டோவை புத்தொளி பெறச் செய்து கொண்டிருந்தது. மிதமான வேகத்தில் சென்று கொண்டு இருந்த ஆட்டோ திடீரென ஒரு டீக்கடையின் ஓரம் நின்றது அந்த டீக்கடையை சுற்றி நான்கு ஐந்து வயதான பெரியவர்கள் டீ குடித்துக் கொண்டிருந்தார்கள். ரோஸியும் இறங்கி டீ குடிப்பதற்காக சென்றால் தன் மகள் அபிக்கும் ஒரு டீயை வாங்கிக்கொண்டு வந்து ஆட்டோவில் உள்ளேயே இருந்த அபிக்கும் கொடுத்தாள். அந்த காலைப்பொழுதில் சூடாக இருந்த டீ அந்த மழை நேரத்தைக் கொஞ்சம் இதமாக்கியது.

டீ முடிந்ததும் ஆட்டோ கிளம்பியது அந்தத் தனிமையான சாலையிலே ஆட்டோவில் இருந்த இருவரும் ஒருவருக்கொருவர் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை இருவருக்குள்ளும் ஒரு அமைதி மட்டும் நிலவியது அவர்கள் தெளிவான சிந்தனையில் போய்க்கொண்டு இருந்தார்கள்.

அபி மட்டும் தன் கடந்த கால நினைவுகளை மழைத்துளிகள் உடன் சேர்த்து நினைத்துக் கொண்டிருந்தாள்.

“அம்மா காலேஜுக்கு டைம் ஆகுதும்மா, சீக்கிரம் போனும் வண்டி எடும்மா”

“இருடி வரேன் வண்டிக்கு ஆயில் தானே செக் பண்ணிக்கிட்டு இருக்கேன், உனக்கு என்ன அதுக்குள்ள அவசரம்”

“ஐயோ இன்னிக்கி பொங்கல் செலிப்ரேஷன் இருக்குமா”

என அபி சொல்லி முடிப்பதற்குள் ரோஸி பின்னாலிருந்து வந்து ஆட்டோவின் முன் சீட்டில் அமர்ந்தாள் வண்டியை எடுப்பதற்கு.

“ம்ம.. போலாமா” என ரோஸி ஆட்டோவின் கிக்கரை கைகளால் இழுத்தாள். புடவை அணிந்து அதன் மேல் காக்கி சட்டையும், நேம் பேட்சும் அணிந்து, ஒரு புரொஃபஷனல் ஆட்டோகாரியாகவே எப்போதும் இருப்பாள். ஒரு பக்கத்தில் அவளைப் பார்க்கும் பொழுது மாணிக் பட்ஷாவாகவே இருப்பாள்.

ரோஸியின் கணவர் கணேசன் இரவு நேர சவாரி ஒன்றை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது இரவு ரோந்து பணியிலிருந்த காவலர்களால் நிறுத்தப்பட்டு சந்தேகத்தின் பேரில் விசாரிப்பதற்காக அழைத்து அவரை அதே சாலையில் படுக்க வைத்து கழுத்தின் மீது முட்டி கால் போட்டு கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள் காவலர்கள். அப்போது மூச்சுவிடச் சிரமப்பட்டு கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். அபியின் ஐந்து வயதில் இந்த சமூகம் அவள் அப்பாவை பிடுங்கிக் கொண்டது.

அதன் பின்பு கணேசன் ஒட்டிக்கொண்டிருந்த ஆட்டோவை தன் மகளின் படிப்பு செலவும் குடும்பச் சூழலும் அவளை அந்த ஆட்டோவை இயக்க வைத்தது. அவள் உயரமும் கம்பீரமான தோற்றமும் அவள் அணிந்திருக்கும் காக்கிச் சட்டையும். இந்த பிரபஞ்சத்திலே தன்னை உயர்வானவளாக எண்ண வைத்தது.

இந்த உலகமே பேரிருளில் மூழ்கிக் கொண்டிருந்தாலும் இந்த இருவர் மட்டும் புது சுடராய் தங்கள் வாழ்வை நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அபி என்றும் தன் அப்பா இல்லை என்று கவலைப்பட்டதே இல்லை தன் அம்மா அணிந்திருக்கும் காக்கி சட்டைக்குள் அப்பா ஒளிந்திருப்பதை உணர்வாள்.

அபி் கொஞ்சம் அழகுதான். அவளை பார்த்தால் பொறாமை கொள்ளாத பூக்களே இந்த உலகில் கிடையாது. காகிதத்தில் அவளை வரைந்தால் அந்த காகிமும் அவள் மீது காதல் கொள்ளும். கொஞ்சம் கருப்பு தான் அந்த மழை மேகங்களை போல.

எப்பொழுதும் பஃப் வைத்தே தலை வருவாள், சுடிதார் மட்டுமே அணிவாள். ஏதாவது விசேஷங்களில் தாவணியும் அணிவதுண்டு, தாவணியில் அவளை பார்க்கும் பொழுது கொற்றவை போலவே இருப்பாள்.

அன்று கல்லூரியில் பொங்கல் பண்டிகை என்பதால் தாவணி அணிந்து ஆட்டோவில் அம்மாவுடன் சென்று கொண்டிருந்தாள். கல்லூரி வந்தது. அவள் இறங்கி அம்மாவிற்கு டாட்டா காட்டினாள், ஆட்டோ கிளம்பியது.



“அபி… நில்லு அபி…” என்று ராஜன் ஆட்டோ கிளம்பியதும் கல்லூரி நுழைவு வாசலிலிருந்து அபியை பின்னால் அழைத்துக் கொண்டே வந்தான். ராஜன் அபியுடன் படிக்கும் மாணவன் அவளை நீண்ட நாட்களாக ஒருதலையாகக் காதலித்து வந்தான்.

ராஜன் அதே கல்லூரியில் படிக்கும் பல பெண்களுக்கு இதுபோன்ற காதல் தொல்லை கொடுத்துக்கொண்டே வந்தான். அதில் அபிக்கு கொஞ்சம் கூடுதலாய் இருந்தது.

“இன்னிக்கு எனக்கு ஒரு முடிவு தெரிந்த ஆகனும் நில்லுடி” என்று அவள் பின்னாலிருந்து அவள் பையை பிடித்து இழுத்தான்.

அபி கோபத்துடன் திரும்பி “உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா அறிவில்லையா? எதுக்கு என்ன சும்மா சும்மா தொல்ல பண்ணிட்டு இருக்க? நான் தான் எனக்கு பிடிக்கலனு சொல்றேன்ல”

இது ஒரு வழக்கமான நிகழ்வுதான் என்று அபி நினைத்தாள். ஆனால் அன்று அப்படி இல்லை. ராஜன் கல்லூரியிலிருந்து யாருக்கும் தெரியாமல் எடுத்த திரவியத்தைக் கையில் மறைத்து வைத்திருந்தான் அபி மறுத்துக் கொண்டிருக்கும் பொழுதே அந்த அரக்கன் அவள் முகத்தில் திரவியத்தை அப்படியே ஊற்றி விட்டான்.

“ம்மா…………………… எரியுதே….. ய்யோ….” இன்று அந்த பாவக் குரலின் பலவீனமான அலறல் அங்கிருந்த அனைவரையும் மிரள செய்தது. அங்கிருந்த மாணவிகள் அலறியடித்து ஓடினார்கள். அங்கிருந்த பெண் பேராசிரியர்கள் கூட அருகில் வரவில்லை பயந்து அவர்களும் பின்வாங்கினார்கள்.

அவள் வலியால் துடித்தாள் என்று நாம் இதைக் கடந்து போக முடியவில்லை அந்த வலி என் உயிரை உலுக்கியது அந்த அலறல் இன்னும் காதுகளில் கேட்கிறது. திரவத்தின் வேதியியல் மாற்றத்தால் அவள் முகம் ஒரு பக்கமாக வெந்து கொண்டிருந்தது.

அவள் அன்று விழுந்தாள். அத்தனை மாணவர்களும் மாணவிகளும் பேராசிரியர்களும் சாலையில் சென்று கொண்டிருந்த பொது மக்களுக்கும் நடுவே அவள் விழுந்தாள்.

அதன் பின்பு அவள் கல்லூரிக்குப் போகவில்லை. நான்காண்டுகள் கழித்து இன்றுதான் அவள் வெளியிலேயே வந்தாள். அபியின் அம்மா திடீரென ஆட்டோவை நிறுத்தினார். சாலையின் குறுக்கே ஒரு மாடு வந்தது.

அபி நினைவுகளிலிருந்து நிதானத்திற்குத் திரும்பினாள். மாடு விலகியதும் வண்டி கிளம்பியது. இப்பொழுது நேரம் சரியாக ஐந்தே முக்கால் மணி இருக்கும். சிறிது தூரத்தில் சாலையின் ஓரத்தில் நேர்த்தியாக உடை அணிந்து முதுகுப் பை ஒன்று மாட்டி கொண்டு ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். கைகளில் மொபைலை வைத்து ஏதோ அதில் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆம் நீங்கள் நினைப்பது போல அது ராஜன் தான் ஓராண்டுக்கு முன்னால் கல்லூரி இறுதியாண்டு முடித்துப் பிரபலமான தனியார் கம்பெனியில் ஐடி ஊழியராக பணியாற்றுகிறான். மாதம் நல்ல வருமானம். காலையில் அலுவலகம் செல்வதற்கு கம்பெனியின் வாகனத்திற்காக அவன் காத்துக் கொண்டிருந்தான்.

ரோஸி, ராஜன் நிற்கும் இடத்திலிருந்து 10 அடிக்கு முன்னால் ஆட்டோவை நிறுத்தினாள். அந்தத் தனிமையான சாலையிலே அவர்கள் மூவர் மட்டுமே இருந்தனர்.

அபி மட்டும் ஆட்டோ விட்டு இறங்கினாள். மழை நின்று சாலை முழுவதும் ஈரமாகி இருந்தது. அவன் நின்று கொண்டிருந்த மரத்திலிருந்து சொட்டுச் சொட்டாய் நீர் வழிந்து கொண்டிருந்தது அவன் குடைபிடித்து இருந்தான்.



முக்காடு அணிந்து கொண்டு அபி அவனை நோக்கிச் சென்றாள். அவனால் அது யாரென்று யூகிக்க முடியவில்லை.

அவள் அவன் அருகில் போனதும் “எவ்வளவு” என்று கேட்டான்.

அபி தன் முக்காடை விலக்கினாள் ராஜனுக்கு அதிர்ச்சியும், பயமும்! அழகாய்ப் புன்னகைத்துக் கொண்டிருந்த பூவைச் சிதைத்த கொடூரன் அவள் முன்னால் நின்றிருந்தான்.

“ஏண்டி அன்னைக்கு எனக்கு ஓகே சொல்லி இருந்தா? இன்னைக்கு இப்படி ஒரு தொழில் செய்யணும்னு அவசியம் வந்து இருக்குமா, சரி சரி மூஞ்சி மட்டும் தானே போச்சு மத்ததெல்லாம் நல்லாதான இருக்கு” என்று அவன் சொல்லி முடித்தான். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அபி தன் கையில் வைத்திருந்த திரவத்தை அவன் முகத்தில் ஊற்றினாள்.

அவனும் அலறினான் யாருக்கும் கேட்கவில்லை. அதிகாரமும் ஆள் பலமும் பணமும் இருந்தால் இங்கே தவறு செய்பவர்கள் மட்டும் இயல்பாக வாழலாம், பாதிக்கப்பட்டவர்கள் முடங்கிக் கிடக்க வேண்டும் என்பது விதி அல்ல. அதே திரவத்தை அவன் மூஞ்சியில் ஊற்றினாள். வெந்து தானே போகும் வெந்து போகட்டும்.

எழுந்து வா வினோதினி…..

ராஜன் சாலையில் புரண்டு அலறிக் கொண்டிருந்தான். ஆட்டோ கிழக்கு திசை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. சூரியன் இன்னும் பிரகாசமாய் அன்றைய விடியல் விடிந்தது.

 

அன்பும் தோழமையுடன்

மு தனஞ்செழியன்.



5 thoughts on “சிறுகதை: *எழுந்துவா வினோதினி* – மு தனஞ்செழியன்”
  1. பாதிக்கப்பட்டவர்கள் மனநிலை என்றுமே இப்படி தான் நினைக்கிறது… ஆனால் திரும்ப தருவதற்கு தான் முடியவில்லை.. உங்கள் கதையில் முடிந்து இருப்பது நம் கோபத்தையும் சேர்த்து ஆசிட் ஊத்தினது போல இருக்கிறது சார் உங்கள்… எழுத்து பணி தொடரட்டும் சார்.. வாழ்த்துகள் 👍

  2. திரவிய வீச்சு கொடுரத்தின் உச்சகட்டம். முகம் மட்டுமல்லாது மனமும் சேர்த்து வெந்து விடும் வேதனையான விஷயம்.

    “இந்த உலகமே பேரிருளில் மூழ்கிக் கொண்டிருந்தாலும் இந்த இருவர் மட்டும் புது சுடராய் தங்கள் வாழ்வை நகர்த்திக் கொண்டிருந்தார்கள்” இந்த வரிகளே கதையின் சிறப்பம்சம்.

    கதையின் முடிவு அருமை. வாழ்த்துக்கள் தோழர்.

    நன்றி
    ஜெயஸ்ரீ

  3. கதையை யூகிக்க முடிந்தது..
    முற்பகல் செய்யின்,
    பிற்பகல் விளையும்..
    வாழ்த்துகள் தோழர் 💐

  4. பாதித்த பெண் அழுது கொண்டு இருப்பது நடைமுறை ‌‌உங்கள் கதையில் ஒரு மாற்றத்தை உருவாக்கி பதிவு செய்து உள்ளது சிறப்பு ‌‌வாழ்த்துகள் தோழர்

  5. சமூக அவலத்தை , நல்ல முடிவோடு மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறார் எழுத்தாளர் தனஞ்செழியன் அவர்கள்.
    நம் நாட்டில் வலியவர்களுக்கான நியாயம், அபியின் தந்தை மரணமே, எடுத்துச் சொல்கிறது.
    “அபி” போன்று இல்லாமல்,எத்தனையோ பெண் பிள்ளைகள், திராவக வீச்சுக்கு ஆளாகி,வலியோடு வாழ்ந்து, வலியோடே மரணிக்கிறார்கள். கதையின் முடிவு, நிஜமாக வேண்டும் என்று மனம் எத்தனிக்கிறது.
    கதையின் இடையில், சமூகத்தின் அவலத்தை எளிதாக கடக்க முடியவில்லை, என எழுத்தாளர் நேரடியாக பேசுவது போல் இருந்ததை தவிர்த்திருக்கலாமோ எனத் தோன்றியது.
    சிறப்பு தோழர் ,தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *