பெண் மையமும்., ஆண் மயமும்.
– அய்.தமிழ்மணி
நூல்: தெய்வமே சாட்சி
ஆசிரியர் : ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 160 பக்கங்கள்
விலை: 150/-ரூபாய்
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யும்: thamizhbooks.com
“ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு வர்க்கம் ஒளிந்திருக்கிறது என்பார்கள். நாட்டார் தெய்வங்களுக்குப் பின்னால் சந்தேகத்திற்கு இடமின்றி உழைக்கும் வர்க்கத்தின் அரசியல் ஒளிந்திருக்கிறது. இதை ’அவர்கள்’ புரிந்து கொண்டுள்ளதால் தான் இவ்வளவு வேகவேகமாகத் தலையிடுகிறார்கள். நாம் எப்படி சும்மா இருக்கமுடியும்.?” என்று முடிகிற இந்நூலின் கடைசிப் பத்தியின் வார்த்தைகளே இந்நூலுக்கான சாட்சியாக மேலெலும்பி நிற்கிறது.
ஆடி மாத வாக்கில் எங்கள் ஊரில் மழைக்கு கஞ்சி காய்ச்சி வணங்கி ஊரெல்லாம் ஊற்றுவார்கள். இன்னமும் கூட நடைமுறையில் தான் இருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபொழுது எங்கள் தெருவில் குடியிருந்த அணைப்பட்டிக் கிழவியிடம் இதைப்பற்றிக் கேட்டிருக்கிறேன்.
அவர் கதை சொல்லுவதில் வல்லவர். ஒரு கணத்தில் அனைவரையும் ஈர்த்துவிடுவார். சீலக்காரியம்மன் முத்தாலம்மன் கச்சையம்மன் என அம்மன் கதைகளோடு மாயாஜால தந்திரக் கதைகளும் அவர் சொல்லுவார். அவரிடம் விதவிதமான கதைகள் அடங்கிக் கிடந்தன. நாங்களும் பொழுது கிடைக்கும் பொழுதெல்லாம் அவர் வீட்டில் தான் அடங்கிக் கிடப்போம் அவரது கதைகளுக்காக., கதைப் பொக்கிஷம் அவர். இப்போது எங்கள் நெனப்புகளில் மட்டுமே இருக்கிறார். மழைக் கஞ்சி காய்ச்சுவது குறித்து அவர் சொன்ன கதை.,
“ஒரு காலத்துல மழ மும்மாரி பொழிஞ்சு மக்க எல்லாரும் செழிப்பாச் சந்தோசமா இருந்தாகலாம். எல்லாங் கெடைக்குதேங்கிற மெதப்புல., மண்ணும் பயிரும் கொழிக்கக் காரணமாயிருந்த மழைய மறந்துட்டாகலாம்., அதனால அந்த மழ மேகமெல்லாஞ் சேந்து ஒன்னாக் கூடிப் பேசுனாகலாம்..” நாங்களும் ஆவலோடு கண்கள் விரிய ம் எனக் கொட்டுவோம்.
“அதுல ஒரு மேகஞ் சொல்லுச்சாம்., இந்த மனுசப் பயலுகப் பாத்தியா., இன்னக்கி நம்மனாலதேன் நல்லாருக்காங்க., ஆனாத் துளிகூட நம்ம நெனப்பு இல்லையே., நன்றி இல்லாத இவெய்ங்கள என்னான்னு பாக்கணும்., ன்னுச்சாம்”
“இன்னோரு மேகஞ் சொல்லுச்சாம்., அவெக எப்படி இருந்தா நமக்கென்ன., நம்ம வேல விழுகுறது., அதச் செய்வோம்., இதப் போயிப் பேசிக்கிட்டு., ன்னுச்சாம்”
“அதுக்கு எல்லா மேகங்களும் ஒன்னாச் சேந்துக்கிட்டு., அந்த மேகத்தத் தள்ளி வச்சுருச்சாம்., அது மட்டுமில்லாம இனி இந்த ஒலகத்துல இந்த மனுசனுகளுக்கா நாம யாரும் பேயக்கூடாதுன்னு முடிவு செஞ்சாங்களாம்.”
“பாட்டி அப்ப மிருகங்கல்லாம் என்னா பண்ணும்..” என்ற என் கேள்விக்கு.,
“அதுகளுக்கென்னா அதுக் பொழப்ப அதுக பாத்துக்கிருங்க., நீ கதைக் கேளுடா..” எனத் தொடர்ந்தார்.
“அந்த முடிவுக்குப் பெறகு பல வருசமா ஒத்தத்துளி மழ இல்லியாம்., கொளம் குட்ட எல்லாம் வத்திருச்சாம்., ஆடு மாடு கன்டுக., கோழி குஞ்சுகன்னு எல்லாம் செத்து விழுந்துச்சாம்., தர பூராங் கட்டாந்தரயாகி புல்லு பூண்டு கூட மொழக்கிலயாம். மக்க பட்டினியால துடிச்சாகலாம்.. ஆரம்பத்துல மழயத் திட்டித் தீத்தவக., ஒரு நேரத்துல., அய்யா மழச்சாமி எங்களக் காப்பாத்துங்கன்னு மனசெறங்கி வேண்டுனாகலாம்.,” விரிந்து கிடந்த எங்கள் விழிகளுக்குள் அப்படி அப்படியே ஊடுருவி விட்டுத் தொடர்ந்தார்.
“நம்ம வேலைய நாம செய்வோம்ன்னு ஒரு மேகஞ் சொல்லுச்சுல நெனவு இருக்கா., ம்., அந்த மேகம் மட்டும்., மக்களோட இரஞ்சலுக்கு எரக்கப்பட்டு., பொழி பொழின்னு பொழிஞ்சுச்சாம்.,” எங்களுக்குள்ளும் சந்தோசம் பொழிய ஆவலாய்க் கேட்டோம். அவரும் பேரார்வத்துடன்.,
”தள்ளிவச்ச மேகம் இப்படிப் பொழிஞ்சா., மத்த மேகமெல்லாம் சும்மா இருக்குமா., அந்த மேகமெல்லாஞ் சேந்து., ஒனக்குப் பொழியிற பாக்கியம் இனி இல்லன்னு சொல்லி சாபம் விட்டாகலாம்., சொந்தக் கூட்டமே இப்படிச் செஞ்சதால., தூரமா எங்கேயோ போயிருச்சாம் அந்த நல்ல மேகம்.,”
“திடீர்ன்னு விழுந்த மழைய நம்பி இருந்தத வெதச்ச சனங்க திரும்ப மழையக் காணோமேன்னு., மழ வந்த தெச நோக்கிக் கும்பிட்டாகலாம். அந்தக்கூட்டத்துல ஒரு மனுசனுக்குள்ள அந்த நல்ல மேகம் எறங்கி., ஒங்க பவுசுல எங்கள மறந்துட்டீங்க., அதுனாலதே நாங்க ஒதுங்கிட்டோம்., இனி வருசா வருசம் ஆடில எங்கள நெனச்சு நீங்க ஊரே சேந்து வேப்பங்கொல கட்டி கஞ்சி காய்ச்சி ஊருக்கே ஊத்துங்க., எங்க மனங்குளுந்து உங்க மனசு நெறைய வெப்போம்ன்னு., அப்ப இருந்துதேன் இப்படிக் கஞ்சி காய்ச்சி ஊத்துறாக.,” ன்னு சொல்லி முடித்தார்.
“பாட்டி இதெப்ப நடந்துச்சு..”
“அதெனக்குத் தெரியாது., இது எம்பாட்டி சொல்லித்தேன் எனக்குத் தெரியும்., எம்பாட்டிக்கு அதோட பாட்டி சொல்லிருக்காலாம்., இல்லைன்னா என்னயப் போல ஒரு பாட்டி சொல்லிருக்கலாம் என்றார்.
சரி இந்தப் பாட்டிகதை என்ன சொல்ல வருகிறது. தோழர் தமிழ்ச்செல்வன் சொன்ன “அவர்கள்” என்கிற அவர்களின் மழைக்கடவுளை மறுத்து இயற்கையை முன்னிறுத்துகிறது. இதில் மதச் சார்போ சாதிச் சார்போ இல்லை. இயற்கையை வழங்கிய கொடையை மதிக்க வேண்டும் என்கிறது. ஆனால் இன்று சில குழு மனிதர்கள் இதற்குள்ளும் புகுந்து வருணபகவானே என குலவையிடுவதைப் பார்க்க முடிகிறது. அவ்வரு(ர்)ண குலவை எனபது இந்நூலில் கூறியது போல..
” கிபி 7-8 ஆம் நூற்றாண்டுகளில் பெருவீச்சுடன் புறப்பட்ட பக்தி இயக்கத்தின் தொடர்ச்சியாகத் இத்தெய்வங்களைப் பெருமதக் கடவுள்களின் அம்சங்களாகவும் அவதாரங்களாகவும் திரித்து உள்வாங்கிக் கொண்டது பிற்கால வரலாறு. சுடலைமாடன் யாரு..? சிவபெருமான் அம்சமடா..” என்பதைப் போல மழைன்னா வருணபகவான் என அன்றாடம் உழைக்கும் விவசாயக்குடும்பங்களின் இயற்கை மீதான கைகூப்பலை திரித்து வைத்திருக்கிறார்கள்.
நான் இந்த மழைக்கதையைக் கூறியதற்கு காரணம் இந்நூலில் எழுதப்பட்டுள்ள பெரும்பாலான அம்மன்களின் வாக்குகள் வறட்சியைப் போக்கி செழிப்பைத் தருவேன் என்கிற கனவின் வாக்குகளாகவோ மற்றும் சாமியாடிகளின் வாக்குகளாகவோ இருக்கிறது.
இதன் வாயிலாக ஒன்றை நாம் புரிந்து கொள்ள முடியும்., குற்றம் செய்தால் மண்ணும் மனசும் பாழ்பட்டுவிடும் என்பதும். அது வாழ்வியலைப் பாதிக்கும் என்பதுமாகும்.
இதன் போக்கில் இன்னும் சற்று உள்ளே போனோமானால் பெண்ணைத் தெய்வமாக வணங்க வேண்டும் என்கிற சமூகக் கருத்துக்கு எதிரான ஆணின் குற்ற அல்லது ஆதிக்கச் செயல்களின் பரிகாரமாகவும் பார்க்கலாம்.
ஆணுக்குக் கீழாக பெண்ணை வைத்தல் என்பது மனித குல வளர்ச்சியில் சொத்துடமை வாரிசுரிமை என்ற இடத்தில் வந்து நிற்கிறது. எனக்கான வாரிசு என்ற ஆண் மனோபாவத்திலிருந்து பெண்ணே இங்கே சொத்தாக மாற்றப்படுகிறாள். இன்னும் ஆணின் பேராசை என்கிற வல்லாதிக்கமானது சொத்தை அபகரிப்பது வீரம் என்ற இடத்திலிருந்து பெண்களின் மீது பாய்கிறது. இது இன்று தனிமனிதனில் ஆரம்பித்து பெண்ணை குடும்ப கவுரவமாகச் சித்தரிப்பு செய்து வைத்திருக்கிறது.
பெரும்பாலும் இந்நூலில் சொல்லப்பட்ட கதைகள் எல்லாமே கடந்த சில நூற்றாண்டுகளுக்கு உள்ளானதாகவே இருக்கிறது. ”அவர்கள்” என்கிற அவர்களின் சமூக மற்றும் கருத்தியல் ஊடுருவலுக்குப் பின்னால் இக்கதைகள் நிகழந்தவையாக இருக்க முடியும் என்ற சிந்தனகளை ஏற்படுத்துகிறது.
அவர்களின் வர்ணாசிரம அதர்மத்தின் பாடாக ஆண்மனம் சிதைக்கப்பட்டிருப்பதையும் பெண்களின் அத்தனை உரிமைகளும் காவு வாங்கப்படுவதும் என அதற்கான வழிநிலைகள் இன்னும் தொடரவே செய்கின்றன. கூடவே சாதி இதற்கு முதல் பெருப் பங்குதாரராக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த ஆணவப்படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் ( பொள்ளாச்சி மட்டுமல்ல இன்னும் பல ஊர்களைச் சொல்லலாம் ), சேலம் ஆத்தூர் இராஜலட்சுமி படுகொலை ( ராஜலட்சுமி மட்டுமா..? ) என அப்படியே இந்திய எல்லைக்குள் விரிந்தால் காஷ்மீர் மாநிலத்தில் கோயிலுக்குள் சிறுமி கற்பழிப்பென்று தேசம் முழுக்க எத்தனை எத்தனை அத்துமீறல்கள். அப்படியே உலக எல்லை என விரிந்தால் சொல்லவே வெட்கமும் வேதனையும் கொந்தளிப்பும் வந்து சேர்ந்துவிடுகிறது என்ன பொழப்புடா என மனதிற்குள்.
ஆனால் தோழர் ச.தமிழ்ச்செல்வனின் நாம் எப்படி சும்மா இருக்க முடியும் என்கிற வார்த்தைகள் நாம் எதையாவது இவைகளுக்கு எதிராகச் செய்துவிட வேண்டும் எனத் தெம்பூட்டுகிறது.
குறிப்பாக இந்நூலின் ஒவ்வொரு கதைகளுக்குப் பின்னாலும் தோழர் தமிழ்ச்செல்வனின் பார்வை.,
“ஜென்னியும் ஒரு துர்க்கையம்மன் தான்.” என்ற இடத்திலிருந்து துவங்கி..”
“வாழ்க்கையை மேலும் அழகாக மாற்றுவதற்குத் தானே காதலே., வாழ்வையே பலி கொடுப்பதற்கா காதல்.?”
“பெண்ணை வைத்து வாழத் தெரியாத ஆண் முண்டமே உனக்கெல்லாம் எதற்கடா பெண் வாரிசு..”
“முத்தாலம்மனின் தொடர்ச்சி தானே கண்ணகி – முருகேசனின் கொலை”
“உண்மையில் ஒரு பாவமும் அறியாத அப்பெண்களின் கதறல் தான் கால வெளியெங்கும் காற்று வெளியெங்கும் நிரம்பித் ததும்பி நம்மை மூச்சு முட்ட வைக்கிறது..” என இதைப் போல எவ்வளவோ சொல்லிச் செல்கிறது.
ஆனாலும் இந்நூலின் கூறாக இந்நூலில் வெவ்வேறு இடங்களில் உள்ள இரண்டு பத்திகளை ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.
ஒன்று..
“இப்படியெல்லாம் நுட்பமாக யோசிப்பவர்களாகவும் கற்பனை வளம் மிக்கவர்களாகவும் தான் மக்கள் இருக்கிறார்கள். நம்பிக்கை சார்ந்த விசயங்களில் இப்படி இருக்கும் மக்கள் தங்கள் ஏழ்மைக்கு காரணம் என்ன .? யார்.? என்று யோசிப்பதில்லை.”
இரண்டு..
“நாம் வாழும் காலத்தின் ஆதிக்கச் சிந்தனைகளே நம் காலத்தின் சிந்தனையாக எல்லாவற்றின் மீதும் ஏறி நிற்கும் என்கிறது மார்க்சியம்”
இந்த இரண்டு பத்திகளுக்குமான தொடர்பினை ஏற்படுத்திவிட்டால் நாம் எதை முன்னெடுக்க வேண்டும் என்பதற்கான கட்டியம் என்ன என்பது தெளிவாகிவிடும்.
இந்நூலில் உள்ள கதைகளும் அவைகளுக்குச் சாட்சியாகிவிடும்.
இந்நூலின் வாயிலாகச் சமூகத்தின் சாட்சியாக முக்கியமான பணி செய்திருக்கிறார் தோழர் ச.தமிழ்ச்செல்வன்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அன்புத் தமிழ்…
ஒரு நூலை வாசித்து அதன் சுவை குறையாமலும் நூல் வாசிப்பாளரின் கருத்துகளையும் கோர்த்து வழங்கிய விதத்தை நான் மெய்சிலிர்த்து மெச்சுகிறேன்….
ஒரு முன்னணி செயல்பாட்டாளர் சிறந்த படைப்பாளாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் தன்னோடு பயணிக்கும் சக படைப்பாளிகளின் படைப்புகளை வாசித்து நூலாய்வு செய்து இலக்கியப் பெரு வெளியில் அறிமுகம் செய்யும் தன்மை கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்பதை அருமையாக உணர்த்தியுள்ளீர்கள். தொடவும். வாழ்த்துகள்.