மரணப்படுக்கையில் நெபுலாவின் குழந்தை – துருவன் பாலா
கவிதைகள் கவி நிலா பதிப்பகம் பக். 104/ ரூ.100/-
-மனவாஸி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரும், நகராட்சி உறுப்பினராகப் பணியாற்றியவருமான துருவன் பாலா என்று பரவலாக அறியப்பட்ட கொங்கு நாட்டின் மேடைப்பாடகர் சமீபத்தில், சமகாலப் பொதுவெளியைப் பிரதிபலிப்பனவான “மரணப் படுக்கையில் நெபுலாவின் குழந்தை” என்னும் தலைப்பிட்ட காட்டமான கவிதைகள் அடங்கிய ஒரு தொகுப்பைத் தந்திருக்கிறார். பல்திறமைகளைக் கொண்டு ஒரு சமுதாயச் சிற்பியாக, மனித நேயம் மிக்கவராக இயங்கிக் கொண்டிருக்கும் துருவன் பாலாவின் முதல் கவிதைத் தொகுப்பு. முதல் கவிதைத் தொகுப்பு என்பது கவிதைகளின் பாய்ச்சலில் தெரிகிறது. தெறிக்கிறது.
இத்தொகுப்பிலுள்ள அனைத்துக் கவிதைகளுமே, போகிற போக்கில் சமுதாயத்தில் காணும் காட்சிகளைப் படம்பிடித்துக் காட்டுவதுபோல் இல்லாமல், கொஞ்சம் அக்கறையுடன் எழுதப்பட்டுள்ளது. ”நம் ஒரு நாளின் டிஜிடல் மெனு” கவிதை, நமது ஊடக மேய்ச்சலுக்கு என்னென்ன விஷயங்கள் தீனி போடுகின்றன, அவற்றை நாம் எப்படி வெகு சாதாரணமாக எடுத்துக்கொள்ளப் பழகிவிட்டோம் என்று, நமது இன்றைய மரத்துப்போன மனதைப் படம் பிடித்துக்காட்டுகிறது. “அமிலப் பதியம்” என்னும் கவிதை, இன்றைய சிறுவர்கள், நாட்டுப்பாடம் அறியாத, ஏட்டுப் பாடம் மட்டுமே அறிந்து வைத்திருக்கும் அவலத்தைக் காட்டுவதோடு, நமது வீடுகள், நவீனத் தொழுவமாய் இருக்கிறது என்பதைப் படம் பிடிக்கிறது. கழனியும் காடுகளும் குடியிருப்புக்களாக மாறிவரும் அவலத்தைப் பச்சைக் கொலைகள் சொல்கின்றன. நீரற்று வரண்டு போய்க் கொண்டிருக்கும் ஒரு குளம், தண்ணீர் நிரம்பியிருந்த நாட்களை நினைத்துப் பார்ப்பது “கனவு” சொல்லும் கவிதை. அபார்ட்மெண்டாக மாறினாலும், தன்னுடைய பெயர் அடையாளத்தைத் தொலைத்து விடாமல், “நாயக்கர் தோட்டம்” ஆகவே இருக்கும் நிலையை ஒரு கவிதை விளக்கும். மரங்களும், செடிகொடிகளும் அற்றுப் போன நவீன நகரத்தில் கட்டப்பட்ட பறவைகளின் கூடுகள், கம்பிகளாலும் ஹைடெக் கழிவுகளாலும் இருப்பதைச் சொல்கிறது.
நவீன மயமாகிவரும் சூழலை, நமது பாரம்பரியப் பாசாங்கு விழாக்கள் படம்பிடித்துக் காட்டும் ஒரு கவிதை முழுமையாகப் பார்க்கலாம்:
இண்டக்ஸன் ஸ்டவ்வில்
காப்பர் பாட்டம் பானை வைத்து
இண்டியா கேட் பாசுமதி கொண்டு
பிரஸ்டீஜ் குக்கரில்
ஜீன்ஸ் பேண்ட் அணிந்த
என் பேத்தி வைத்தாள்
ஹைடெக் பொங்கல்
குலவையில்லை
கும்மியில்லை
”ஹேப்பி பொங்கல்” சொல்லி
பொங்கல் பானையோடு சேர்த்து
மறக்காமல்
தன் ஆண்ட்ராய்டில்
அழகாய் எடுத்துக்கொண்டாள்
ஒரு செல்ஃபி.
அடுத்து, ”நிலம் பெயர்தல்” என்னும் கவிதை, படித்தவுடன் வேறு மாதிரி யோசிக்கவைத்தது:
திருப்பூருக்கு / பஞ்சம் பொழைக்கப் போன / பெரிய கருப்பத் தேவரு குடும்பம் / திரும்ப வருமுன்னு / மனசுல நெனப்பு வச்சு / தோட்டத்து வீட்டு வாசலிலே / பசியோட காத்துக் கெடக்கும் / அந்த / தேவர் வீட்டு நாயிக்கு / தெரியவா போகுது / அவுங்க / திரும்ப வரப்போறதே இல்லே / அப்பிடீங்கிற சேதி – இது கொஞ்சம் அதிகமாய்ப் பட்டாலும், வீடு வாசலே இல்லாத ஒரு தலித் பஞ்சம் பிழைக்கப் போனால் என்னவாகும் என்று யோசிக்க வைத்தது.
தமிழ் எம் ஏ, டீ ஆத்திக்கொண்டிருக்கும் அவலம், இப்படி அனேக விஷயங்களைப் பேசுகிறது இத்தொகுப்பு.
தஞ்சம் என்று தலைப்பிட்ட கடைசிக் கவிதை:
நாளெல்லாம்
ஒரு
தெரு நாயைப் போல
ஊர் சுற்றித் திரியும்
என் கவிதை
கடைசியாய்
ஏதாவதொரு
ஏழைக் குடிசையின்
பழையதைத் தின்றே
பசியாறுகிறது.
-என முடிகிறது. இவரின் கவிதை, தனது பசியாறுதலுக்காக, தெரு நாயைப் போல ஊர் சுற்றித் திரிந்து, கடைசியாய் ஒரு ஏழைக் குடிசையின் பழையதைத் தின்று பசியாறுகிறது என்ற சொல்லாடல், இவரின் கவிதைகளுக்கான பசியாறல், கடைசியாக ஒரு ஏழைக் குடிசையின் பிரச்சினையைப் பேசுவதில் தான் முடிகிறது என்று கொள்ளலாமா? எங்கு சுற்றினாலும், தன் கவிதைகளுக்குத் தீனி போடும் ஏழைகளை நோக்கியே நகர்ந்து வந்து தனது தீனியை எடுத்துக்கொள்கிறது.
கவிஞரின் முதல் முயற்சியைப் பாராட்டலாம். இன்னும் ஆழமான, காத்திரமான படைப்புகளை இவரிடம் எதிர் பார்க்கலாம் என்னும் நம்பிக்கை மனதில் எழுகிறது. துருவன் பாலாவுக்குப் பாராட்டுக்கள்.
– மனவாஸி