ஒரு காலத்தில் பெரும்பாலானோர் டைரி எழுதுவார்கள். நாள் தவறாமல் தாங்கள் சந்தித்த அனுபவங்களை சுகதுக்கங்களை குறித்து வைப்பார்கள். அதிலும் காதலிப்போர் எழுதும் டைரிக்குறிப்புகள் மிகுந்த சுவாரசியம்மிக்கது. இளமை துடிப்புமிக்க காலங்களில் எழுதப்படும் எழுத்துக்களும் வசியம் மிக்கது. அதனை திருட்டுத்தனமாக எடுத்து படிப்பது அதனினும் இன்பமூட்டுவது. அடுத்தவர் ரகசியமென்றால் மனம் சப்பு கொட்டுவது இயற்கையானதொன்றுதானே நவீனமான உலகில் இப்போதெல்லாம் டைரி எழுதுகிறார்களா என்று தெரியவில்லை.
ஆனால் அருள்மொழி எழுதிய டைரி என்பது அப்படி அல்ல. எலியை பொறிவைத்து பிடிப்பது என்பார்களே அப்படி பெண்களை உளவு பார்ப்பது, வேவுபார்ப்பது, துப்பு துலக்குவது, என பெண்களுக்கெதிரான அத்தனை அயோக்கியத்தனங்களும் கொட்டிக்கிடப்பதை கருவாக்கி கதையாக்கம் செய்துள்ளார்.
திரும்பும் திசையெல்லாம் கண்காணிப்பு காமெராக்கள் கண்கொத்தி பாம்புகளாய் பெண்களை துரத்திக்கொண்டிருந்தால் அவர்கள் என்னதான் செய்வார்கள்.அப்படி ஒரு சிறுமிக்கு நேர்ந்த அனுபவமே தலைப்பு கதையாய் மாறியிருக்கிறது சொந்த சாதிக்கு துரோகம் செய்வதற்கு மிகுந்த துணிச்சல் வேண்டும். அந்த வகையில் அசாத்திய தைரியத்தோடு தன் வட்டார சாதீய வீடுகளில் எங்கெல்லாம் பெண்ணடிமைத்தனம் பற்றிப் பரவலாக பல்வேறு வேடம் கட்டி உலவுகிறதோ அத்தனை பாத்திரங்களையும் துலக்கி அதன் இருள் படிந்த பக்கங்களை வெளிச்சமிட்டு காட்டியுள்ளார் கதாசிரியர் அருள்மொழி அவர்கள்.
மொத்தம் 14 சிறு கதைகள். தண்ணி பைப் எனும் கதையைத் தவிர 13 கதைகளும் பெண்ணிய வாழ்க்கைப்பாடுகளை உள்மனக்குமுறல்களை எந்த வகையிலும் அடிமைக் கூண்டிலிருந்து வெளியேறிவிட முடியாத கையறுநிலையினை காட்சிப்படுத்தியுள்ளார். பெண்களின் வலியை வேதனையை பெண்குரலாய் கேட்கும்போது அதன் துயரம்யாவும் பெருமதிப்பாய் மாறுகிறது.
இது நாமெல்லாரும் பார்த்த பார்த்துக்கொண்டிருக்கிற பார்க்கப்போகிற அக்கம்பக்கம் வீடுகளில் மட்டுமல்ல நமது வீட்டிற்குள் உறவுகளுக்குள் தோழமைகளுக்குள் பார்த்தும் கேட்டும் கண்ணற்ற குருடர்களாய் காதற்ற செவிடர்களாய் நமது செளகரியங்களை காக்கும் பொருட்டு நழுவிக் கொண்டிருக்கும் நமது அநியாயங்களையும் சேர்த்துத்தான் கேள்வியெழுப்பியிருக்கிறார். இதை வாசித்த பிறகாவது பெண்களின் உள்மனக்காயங்களுக்கு மருந்திடாவிட்டாலும் பரவாயில்லை வன்முறை ஏதும் நிகழ்த்தாதிருப்போம்.
எனக்கு பிடித்த கதை என்பதைவிட மனதை உலுக்கிய கதையாக கோழைத்தனத்தை சொல்லலாம். டாக்டருக்கு படித்த, டாக்டருக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட பெண்களால் கூட பெண்ணடிமைத்தனத்திலிருந்து மீளமுடியாமல் மனம் மருகி படித்த வேலைக்கு செல்லமுடியாமலும் கிடைத்த வேலைக்குச் சேர முடியாமலும் முதுகெலும்பற்ற கணவனால் பழமைவாத மாமனார் மாமியாரால் ஏமாற்றப்பட்டு சிறு குழந்தையை விட்டுவிட்டு தூக்கில் தொங்கிவிடும் மாலதி போன்றோர் இங்கு ஏராளமுண்டு.
படித்த பெண்களுக்கே இந்தக் கதி எனும்போது படிப்பறிவற்ற பணபலமற்ற ஏழை எளிய பெண்களின் நிலை இன்னமும் நுகத்தடிகளில் வைத்து அழுத்தப்பட்ட மாட்டின் நிலைதானே. ஆணாதிக்கம் பெண்களை வைத்தே பெண்களை பழிதீர்க்கிறது. தானொரு ஆயுதம் என்பதை உணர்ந்து பெண்கள் நிமிர்கையில் அவர்களுக்கான புதிய வானம் திறக்கும்.
14 ஆவது கதையான தியாகத்தில் அந்த கிராமத்து வீட்டில் பெண்கள் யாவரும் விதவிதமாக வந்து போகும் உறவுகளுக்கெல்லாம் சமைத்துப்போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சமையல் புத்தகமே எழுதலாம் அத்தனை விவரணையான சமையல் குறிப்புகள். பாரத்தை சுமக்கும் பொதி மாடுகளுக்கு கழுத்தில் மணியை கட்டிவிட்டு அந்த சத்தத்தின் ஓசையே சங்கீதமாக எண்ணிக்கொண்டு மிகுந்த துயரத்தையே மறந்து பெரும்பாரத்தை சுமந்தலையும் பெண்களாக எந்த நேரமும் சோற்றை வடித்துக் கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
எந்தவொரு பெருமதிப்பும் இல்லாமல். தாயாரும் சகோதரியும் படும்பாட்டைக் காணச்சகிக்காமல் சுதந்திரமாக மனத்திற்கு பிடித்தவனோடு வாழச் சென்றுவிடுகிறாள். ஊரே அமளிதுமளிப்பட மெளனமாய் புளியை கரைத்து கொண்டிருக்கும் தாயாரின் செய்கையே ஊராரின் வயிற்றுக்கான பழமைவாதத்திற்கெதிரான புளி கரைக்கும் செயலாகும்.
முதல் கதையான அதிகாரத்தில் ஊராட்சி மன்றத் தலைவியே ஆனாலும் பெண்ணாக, படி அடுக்குகளில் குழிதோண்டி புதைக்கப்பட்ட, சிறகுகள் எல்லாம் பிடிங்கி எறியப்பட்ட, பறத்தலுக்கு தகுதியற்ற, பறவையாகவே மிக கீழான நிலையில் வைத்து பார்க்கப்படுவதை, அரதப்பழசான சமூக நடைமுறையை கதையாக்கம் செய்திருக்கிறார்.
பழைய பஞ்சாயத்துத் தலைவரின் பழமைவாத பார்வையும் பெண்களை கேவலமாக பார்க்கும் இழிந்த குணத்தையும் தோலுரிக்கிறார். காப்பி போட்டுக் கொடுக்கும் சம்பவத்தை வைத்து சொல்லியிருக்கிறார். இக்கதையில் ஒரு சட்டப்பிழை இருக்கிறது. பஞ்சாயத்துதலைவியான ஒருவர் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்ற முடியாது இதைத் தவிர்த்திருக்கலாம்.
ஒட்டுமொத்த கதைத்தொகுப்பும் சன்னமான குரலில் இருளில் விசும்பிக்கொண்டிருக்கும் பெண்களின் கண்ணீரை எழுதி உலகிற்குக் காட்டுகிறது. துயரங்களின் கதைசொல்லலே நோக்கமாக இருப்பதால் எழுத்தின் அழகியல் குறைவாய் இருக்கிறது. அதற்கும் கவனம் செலுத்தி இருக்கலாம். கருத்துக்களின், பிரச்சனைகளின் தொகுப்பு எனும் பார்வையை தவிர்த்திருக்கலாம்.
தமிழின் புதுவரவான சிறுகதையாசிரியர் அருள்மொழி அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
செ. தமிழ் ராஜ்வண்டியூர்
நூல்:டைரி
எழுத்தாளர்: அருள்மொழி
பக்கம்:214
விலை: 200
வெளியீடு:பாரதி புத்தகாலயம்