நம் பூமிக்கும் வளையம் இருந்ததா? புதிய சுவாரசியம்! (Did our earth also have rings?) - புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள்

நம் பூமிக்கும் வளையம் இருந்ததா? புதிய சுவாரசியம்!

நம் பூமிக்கும் வளையம் இருந்ததா? புதிய சுவாரசியம்!

புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் – 6

“சூரிய குடும்பத்தின் மிக அழகான கோள் எது?” என்று கேட்டால் நீங்கள் எதைச் சொல்வீர்கள்? பூமியை விட்டு விட்டுப் பார்த்தால், எங்கள் மாணவர்கள் பலருக்கும் சனி கோளையே பிடித்திருக்கிறது. சனி கோளினைச் சுற்றியுள்ள வளையம் அப்படி ஓர் அழகான ஈர்ப்பை அந்த கோளின் மீது ஏற்படுத்துகின்றது.

சனிக்கு மட்டுமல்ல, வியாழன், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களுக்கும் கூட மெல்லிய வளையங்கள் இருக்கின்றன. நம் அருகிலிருக்கும் செவ்வாய்க்குக் கூட கடந்த காலத்தில் வளையங்கள் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

“நமக்குப் பின்னால் இருக்கும் எல்லா கோள்களுக்கும் வளையம் இருந்தது என்றால், நமக்கு மட்டும் ஏன் இல்லை?” என்கிற கேள்வியில் நியாயம் இருக்கிறதுதானே!

ஆமாம். பூமிக்கும் வளையம் இருந்திருக்கலாம் என்று கடந்த வாரம் வெளியான ஆய்வு ஒன்று தெரிவித்து, உலகை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

Earth rings
பூமியைச் சுற்றி ஒரு வளையம் (சித்தரிப்பு காட்சி)

பூமியின் ரோச் எல்லைக்குள்ளாக சென்ற சிறுகோளின் சிதைவு, மத்திய ஆர்டோவிசியன் காலத்தில் உடைந்த பாறைகளால் ஆன வளையத்தை உருவாக்கியது என்று மொனாஷ் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு கூறுகிறது.

சுமார் நாற்பத்தாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டோவிசியன் காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில், விண்கல் மோதல்கள் திடீரென்று உயர்ந்தன. இந்த காலத்தில் தோன்றிய பல மோதல் பள்ளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றிற்கிடையே இடைவெளி மிக நெருக்கமாக உள்ளது. அந்த நெருக்கமான இடைவெளி நேரத்தில் மட்டுமல்ல, இடத்திலும் உள்ளது ஒரு புதிரான விஷயமாக உள்ளது.

மொனாஷ் பல்கலைக்கழகத்தின் டாம்கின்ஸ் மற்றும் அவரது அணியினர், இந்த விண்கல் மோதல்கள் உச்சத்திலிருந்த போது தோன்றிய 21 மோதல் பள்ளங்களை ஆய்வு செய்ததில், அவை அனைத்தும் பூமத்திய ரேகையிலிருந்து 30 டிகிரிக்குள் இருந்ததைக் கண்டறிந்தனர்.

ஆர்டோவிசியன் காலத்தில், பூமியின் கண்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு கோண்ட்வானா என்ற ஒரு சூப்பர் கண்டத்தின் பகுதியாக இருந்தன என்பதை கருத்தில் கொண்டு இந்த கணக்கீடு செய்யப்பட்டது.

மோதல் பள்ளங்களின் நெருக்கம் மட்டும் விசித்திரமானது அல்ல; இவை அனைத்தும் பூமத்தியரேகைப் பகுதியில் உள்ளதும் மேலும் விசித்திரமானது.

இன்று நாம் பார்ப்பதை விட, அப்போது விண்கல் தாக்குதல்கள் மிக அதிகமாக இருந்திருக்கின்றன. மேலும், இந்த குறிப்பிட்ட தாக்குதல்கள் பூமியின் நடுப்பகுதியைச் சுற்றியுள்ள ஒரு குறுகிய பட்டையிலிருந்து விழுந்த பாறைகளின் கூட்டம் போல இருந்தது.

இது அவ்வாறே நடந்திருக்கலாம் என பகுப்பாய்வுகள் காட்டுவதாக, டாம்கின்ஸ் மற்றும் அவரது சக ஊழியர்கள் கூறுகிறார்கள்.

ஆண்ட்ரூ டாம்கின்ஸ், மொனாஷ் பல்கலைக்கழக புவியியலாளர்

சுமார் 46.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு குறுங்கோள் பூமியின் ஈர்ப்புப்பகுதிக்குள் பறந்து வந்தது. அது பறந்த தொலைவு, இன்னும் சற்று பூமிக்கு நெருக்கமாக இருந்தால், அது உடனடியாக கீழே விழுந்து ஒரு பெரும் மோதலை ஏற்படுத்தியிருக்கும். இன்னும் தொலைவாக பறந்திருந்தால் பெரிய பிரச்சனையின்றி அது பூமியை கடந்து சென்றிருக்கும். தூரமுமில்லாத, நெருக்கமுமில்லாத அந்த தொலைவை நாம் அறிவியலில் ரோச் எல்லை என்கிறோம்.

ஒரு பொருள் ரோச் எல்லையைத் தாண்டி, ஒரு கோளிற்கு மிகவும் நெருங்கி வரும்போது, அது ஈர்ப்பு விசையின் காரணமாக சிதைந்து, சிறிய துண்டுகளாக உடைந்துவிடும்.

ஒரு குறுங்கோள் ரோச் எல்லைக்குள் நுழையும் போது, கோளின் ஈர்ப்பு விசை அதன் மீது சமமாக செயல்படாது. கோளுக்கு நெருக்கமான பகுதி, தொலைவில் உள்ள பகுதியை விட அதிக ஈர்ப்பு விசையை அனுபவிக்கும். இதனால் குறுங்கோள் நீண்டு, இறுதியில் சிதைந்து, சிறிய துண்டுகளாக உடைந்துவிடும்.

சிதைந்த குறுங்கோளின் துண்டுகள் கோளின் சுற்றுப்பாதையில் பரவி, ஒரு வளையத்தை உருவாக்கும். இந்த துண்டுகள் ஒன்றோடொன்று மோதி, இன்னும் சிறிய துண்டுகளாக உடைந்து, ஒரு நிலையான வளைய அமைப்பை உருவாக்கும்.

கோளின் ஈர்ப்பு விசை இந்த துண்டுகளை தன்னை நோக்கி இழுத்தாலும், அவற்றின் சுற்று வேகம் அவற்றை வெளியே தள்ளும். இந்த இரு விசைகளின் சமநிலையே வளையத்தை நிலையாக வைத்திருக்கிறது.

உதாரணமாக, சனியின் வளையங்கள் இவ்வாறே உருவாயிருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். 1994 ஆம் ஆண்டில், வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு விசை, Shoemaker-Levy 9 என்ற வால் நட்சத்திரத்தை சிதறடித்து, அதன் துண்டுகளை பல ஆண்டுகளாக வியாழனைச் சுற்றி சுழலச் செய்ததை நாம், பூமியிலிருந்து தொலைநோக்கிகள் மூலம் நேரடியாகக் கவனித்திருக்கிறோம்.

எனவே, பூமியும் இவ்வாறு ஒரு குறுங்கோளை சிதறடித்து, தன்னை சுற்றி வரச்செய்திருப்பதில் பெரிய வியப்பில்லை.

தளர்வாக பிணைக்கப்பட்ட ஒரு குறுங்கோளுக்கு, பூமியிலிந்து ரோச் எல்லை சுமார் 15,800 கிலோமீட்டர் (சுமார் 9,800 மைல்) உயரத்தில் உள்ளது. இது சில செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை உயரத்தை விட குறைவானது. இந்த உயரத்தில் குறுங்கோளின் சிதறிய துண்டுகள் பூமியை நிலையான ஒரு வட்டப்பாதையில் சுற்றி வர ஆரம்பிக்கும். காலப்போக்கில் அவை, ஈர்க்கப்பட்டு, வளிமண்டலத்தில் கீழே விழ ஆரம்பிக்கும்.

“ஓரிரு கோடி ஆண்டுகளாக, இந்த வளையத்திலிருந்து வரும் பொருள்கள் படிப்படியாக பூமிக்கு விழுந்து, மேற்கண்ட பகுதியில் பெரும் அளவிலான விண்கல் மோதல்களை ஏற்படுத்தியது” என்று பேராசிரியர் டாம்கின்ஸ் கூறுகிறார்.

விண்கற்களின் தாக்குதல் பூமத்தியரேகைப்பகுதியை ஒட்டி நெருக்கமாக இருப்பது நமது முதல் சான்று.

இரண்டாவது சான்றாக, அதே காலப்பகுதியில் ஐரோப்பா, ரஷ்யா மற்றும் சீனா முழுவதும் உருவான பாறைப் படிவுகள் இருக்கின்றன. இந்த படிவுகளில் ஒரே குறிப்பிட்ட வகையான விண்கல்லின் சிதிலங்கள் அதிகமாக இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ரோச் எல்லையும், கோள்களைச் சுற்றி வளையம் உருவாதலும்

“இந்த கண்டுபிடிப்பை இன்னும் சுவாரசியமாக்குவது என்னவென்றால், அத்தகைய வளைய அமைப்பினால் சாத்தியமான காலநிலை விளைவுகளே!” என்று டாம்கின்ஸ் கூறுகிறார்.

இந்த காலநிலை விளைவுகள் மேலும் ஒரு முக்கிய சான்றாக இருக்கக்கூடும். ஆர்டோவிசியன் முடிவின் அருகில் சுமார் 44.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமி ஒரு கடுமையான பனி யுகத்திற்குள் நுழைந்தது. கடந்த ஐம்பது கோடி ஆண்டுகளில் இந்த காலகட்டமே பூமியின் வரலாற்றில் மிகக் குளிரான காலகட்டமாக இருந்தது.

அப்போது, பூமியைச் சுற்றியிருந்த வளையம் பூமியின் மேற்பரப்பில் நிழலை ஏற்படுத்தி, இந்த பனியுகத்தை தீவிரப்படுத்தியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் யூகிக்கின்றனர்.

இந்த பனியுகத்திற்கு முன்னதாக நடந்த வேறு ஒரு முக்கிய விஷயம், பெரிய ஆர்டோவிசியன் பல்லுயிர் பன்மய பெருக்க நிகழ்வாகும்.

“விரைவான காலநிலை மாற்றம் வாழ்க்கைக்கு சவால்களை உருவாக்குகிறது மற்றும் பரிணமிக்க வேண்டிய அவசியத்தை உருவாக்குகிறது. எனவே வளையம் காலநிலை மாற்றத்தைத் தூண்டியிருந்தால், அது விரைவான பரிணாமத்தையும் தூண்டியிருக்கலாம்” என்று டாம்கின்ஸ் கூறுகிறார்.

“இந்த கண்டறிதல், புவிக்கு வெளியே நிகழும் நிகழ்வுகள், பூமியின் காலநிலையை எவ்வாறு வடிவமைத்திருக்கலாம் என்பதைப் பற்றிய நமது புரிதலை அதிகரிக்கிறது” என்று பேராசிரியர் டாம்கின்ஸ் கூறுகிறார்.

ஆய்வுக்குழுவின் ஆய்வறிக்கை Earth and Planetary Science Letters என்ற இதழில் 12, செப்டம்பர், 2024 அன்று வெளியிடப்பட்டது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்… தொடர்ந்து அறிவியல் பேசலாம்.

கட்டுரையாளர் :

த. பெருமாள்ராஜ்

ஆய்வுக்கட்டுரை இணைப்பு: https://doi.org/10.1016/j.epsl.2024.118991



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *