சீனாவின் ஆரம்பகால பொருளாதார வளர்ச்சி, இரண்டு முக்கியமான உற்பத்தி காரணிகளை அடிப்படையாகக் கொண்டு விளங்கியது. அவை
1.அபரிமிதமான மலிவான உழைப்புச் சக்தி, 2. கணிசமான மூலதனமுதலீடுகள் ஆகியன.
1990 களிலிருந்து சீனாவின் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. என்றாலும், 2015 க்கு பின்னர் உழைக்கும் மக்கள்தொகையின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. ஒரு புறம் குறைந்துவரும் உழைப்புச் சக்தி இன்னொரு புறம் உயரும் ஊதியங்கள். இவை சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சியைத் தடுத்தன. சீனாவின் மூலதன வளர்ச்சியும் குன்றியது. கடந்த மூன்று பத்தாண்டுகளாக சீனாவின் பொருளாதாரம், அதிக கார்ப்பரேட் கடன் மற்றும் அதிகப்படியான ரியல் எஸ்டேட் முதலீடு ஆகியவற்றில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. இதற்கிடையில், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளும், 1950 ஆம் ஆண்டுகளில் இருந்து தொழில்நுட்பத்தை உருவாக்கிக் கொண்டு, புதிய் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்ததால் அவர்களது பொருளாதாரங்கள் வளர்ச்சியடைந்தன. இந்த இரண்டு நாடுகளின் அனுபவத்தைக் கண்டறிந்த சீனாவும், இதே பாதையை பின்பற்ற முடிவு செய்தது. நவீன தொழில்நுட்பத்தை சீனாவின் உற்பத்தி மற்றும் இதர எல்லா துறைகளில் பயன்படுத்த திட்டமிட்டது.
அதன்படி, சீன நாட்டின் அனைத்து துறைகளிலும் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி டிஜிட்டல்மயமான சீனாவை கட்டமைத்துக் கொண்டது. இன்று வளர்ச்சியடைந்த அனைத்து தொழில்நுட்பங்களையும் கைப்பற்றி கொண்டு அதன் மூலம் உலகின் மிகப்பெரிய பொருளாதாரச் சக்தியாக உருவெடுத்துள்ளது. என்றாலும் சீனர்களின் உழைப்பும், அதனால் உருவான மூலதனமும்தான் சீனாவின் பின்னாளைய இமாலய வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தன
என்றால் மிகையல்ல. மிககுறுகிய காலகட்டத்தில், சீன வல்லரசு எவ்வாறு நவீன தொழில்நுட்பங்களைச் சுவீகரித்துக் கொண்டது என்பது பற்றியும், முக்கியமாக 5ஜி எனப்படும் 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றையின் உலகச் சந்தையை எவ்வாறு கைப்பற்றிக் கொண்டது என்பது பற்றியும் இக்கட்டுரையில் விவாதிப்போம்.
டிஜிட்டல் சீனா

சீனாவின் உற்பத்தித்துறையானது சிக்கலான சவால்களை எதிர்கொண்டிருந்த நேரத்தில், சீனப் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில், 2015 ஆம் ஆண்டில், மேட் இன் சீனா 2025 என்ற திட்டம் சீன அரசால் கொண்டு வரப்பட்டது. இது டிஜிட்டல் தொழில்நுட்பங்களையும் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதோடு உற்பத்தியையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
உற்பத்தியிலும் நுகர்விலும் இருக்கும் பல்வேறு சிக்கல்களையும், சவால்களையும் கருத்தில் கொண்டு, சீன உற்பத்தி நிறுவனங்கள் மதிப்புச்
சங்கிலியை உயர்த்தத் திட்டமிட்டது. முந்தைய தொழில்புரட்சிகளில் நீராவி என்ஜின்கள் மற்றும் மின்சாரம் ஆகியவை அன்றைய பொருளாதாரத்தை முற்றிலும் மாற்றியமைத்ததைப் போல, டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சீனா தனது பொருளாதாரத்தை முழுவதுமாக மாற்றியமைக்க திட்டமிட்டது. இதற்காக மார்ச் 2016 இல் வெளியிடப்பட்ட 13 வது ஐந்தாண்டு திட்டத்தில் சீன அரசாங்கம் ஒரு "டிஜிட்டல் சீனா" என்ற இலக்கை வரையறுத்தது.
அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றத்தை கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. புதிய தலைமுறை தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை உருவாக்குவது முதன்மையான செயல்பாடாக அமைந்தது. மேலும் பாரம்பரிய தொழில்களைமேம்படுத்துவது முதல் புதிய தொழில்முனைவோர் வரையிலும் புதுமைகளை கொண்ட மேம்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் முனைப்பு காட்டியது. உற்பத்தி, வணிகம், அரசு நிர்வாகம் போன்ற எல்லா துறைகளும் முன் எப்போதும் இல்லாத வகையில் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தொடங்கின. இதன் விளைவாக, சில ஆண்டுகளிலேயே, சீனாவில் உள்ள நிறுவனங்கள் உற்பத்தித்திறனில் விரைவான முன்னேற்றத்தைக் கண்டன. புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், சீனா தனது உற்பத்தித்திறனை விரைவாக மேம்படுத்திக் கொண்டது. மேலும் நாட்டின் பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சியில் இவை முக்கிய பங்கு வகித்தன. இந்த தொழில்நுட்பங்கள் நிறுவனங்களுக்கு உற்பத்தித் திறனையும் வளர்ச்சிக்கான பாதையும் திறந்துவிட்டன.
குறிப்பாக உற்பத்தித் துறையில் மேற்கொண்ட முயற்சி முக்கியத்துவம் வாய்ந்தது. கருவிகளின் இணையம் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி
உற்பத்தித் துறையில், இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் பொருட்களிலிருந்து பெறப்பட்ட எண்ணற்ற தரவுகளைப் பயன்படுத்திச் சிறந்த உற்பத்திக்கான திட்டங்களை உருவாக்கப்பட்டது. உற்பத்தி நடவடிக்கைகளை இடைவிடாமல் தொடர்ந்து கண்காணிக்கப் பட்டது. இதனால், இயந்திரங்கள் தொடர்ந்து இடைவிடாமல் இயங்கின. வேலை நேரம் அதிகரித்துக் கொண்டே சென்றது. 2025 இல் சீனாவின் உற்பத்தித் துறை முழுவதும் டிஜிட்டல் மயமாக்குவதில்
கவனம் செலுத்தப் பட்டது. இன்டர்நெட் பிளஸ் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்திச் சார்ந்த தொழில்களில் பரந்த அளவில் மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டது. செயல்திறனை மேம்படுத்துவதற்காக மொபைல் இணையம், மேகத் தொழில்நுட்பம் (Cloud Computing), மீப்பெரும் தரவு, செயற்கை நுண்ணறிவு மற்றும் கருவிகளின் இணையம் ஆகியவற்றை பல்வேறு தொழில்களை ஒருங்கிணைப்பதை சீன அரசு வலியுறுத்தியது. இத்தகைய முயற்சிகளின் விளைவாக, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கண்டது. இப்போது சீனா, பொருளாதார வளர்ச்சியின் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்தது. இதனால் சீனா உலகளாவிய சந்தையில் ஒரு வலுவான இடத்தைப் பெற முடியும் என நம்புகிறது.
நவீன தொழில்நுட்பத்தில் முதன்மையான நாடு

தற்போது உயர்தொழில்நுட்பத்தில் உலகத்திலேயே முதன்மையான நாடாக சீனா விளங்குகிறது. எரிசக்தி துறையில், கருவிகளின் இணையத்தைக் கொண்டு எரிசக்தியின் தேவை மற்றும் விநியோகம் ஆகியவற்றை உரியநேரத்தில் இணைப்பதற்காக இந்த நிறுவனங்கள் செயலாற்றும் திறனைப்பெற்றிருக்கின்றன. சுகாதாரத் துறையில், டிஜிட்டல் தொழில்நுட்பம்தொலைமருத்துவத்தை (telemedicine) யதார்த்த நிலைமைகளுடன்இணைக்கப்படுகிறது. நோயாளிகள் குணமடைவதில் உள்ளமுன்னேற்றத்தை தொலைதூரத்தில் இருந்து கண்காணிக்கவும்,இணைக்கப்பட்ட கருவிகளின் வழியாக அவசரநிலைகளுக்கு உடனடியாகஉரிய வழிகாட்டுதல்களை வழங்கவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்ஆகியவர்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் மிகவும் உதவிகரமாகத் திகழ்கிறது.மேலும் சீனாவின் வாகன, தொழில்துறை உபகரணங்கள், உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் தொழில் ஆகிய துறைகளில் டிஜிட்டல்தொழில்நுட்பங்கள் இன்றியமைதாக இருக்கின்றன.
சுருக்கமாகக் கூறினால், கம்பியில்லா வலைபின்னல் (wireless network) முதல் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) வரை, சீனாமுன்னணியில் இருக்கின்றது. மேலும் தானியங்கி ஊர்திகள் முதற்கொண்டு தானியங்கி தொழிற்சாலைகள் வரை பயன்படுத்தப்படும். மேலும் கழிவிலிருந்து ஆற்றல் தயாரிப்பது முதற்கொண்டு, விண்வெளித் திட்டம் வரையிலும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில் உலக அளவில் சீன வல்லரசு முதலிடம் வகிக்கிறது. இத்தகைய தொழில்நுட்பங்களுக்கு எல்லாம் ஆதாரமான ஆற்றலை வழங்குவது, 5ஜி எனப்படும் 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றையாகும். இதன் பின்னணிக் குறித்தும் இதன் அளப்பரிய பயன்பாடுகள் குறித்தும், சீன வல்லரசு இதன் உலகச் சந்தையை எவ்வாறு கைப்பற்றியது என்பது குறித்தும் இனி சிறிது விளக்கமாகப்
பார்ப்போம்.
தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் வளர்ச்சி

தகவல் தொழில்நுட்பம், இன்று உச்சத்த்தை தொட்டிருக்கின்றது. முதலாம் தலைமுறை அலைக்கற்றைத் தொடங்கி ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை
வரை இன்று வளர்ந்துள்ளது. முதலாம் தலைமுறை அலைக்கற்றை 1979 இல் உருவானது. முதலாம் தலைமுறை அலைக்கற்றை நம்மை பேச அனுமதித்தது. அடுத்ததாக, 2 ஆம் தலைமுறை அலைக்கற்றை நாம் எழுதியதை அனுப்பப் பயன்பட்டது. 3 ஆம் தலைமுறை அலைக்கற்றையின் மூலம் நாம் இணைய வசதியைப் பெற்றோம். மேலும் 4 ஆம் தலைமுறை அலைக்கற்றையால் மேம்பட்ட இணைய வசதியைப் பெற்றிருக்கிறோம். இனி, 5 ஆம் தலைமுறை அலைக்கற்றை, ஆச்சரியப்பட தக்க முன்னேற்றங்களுடன் இணையம் நமக்கு கைவரப்போகிறது.
5G என்பது தகவல் தொழில்நுட்ப வரலாற்றில் 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றையைக் குறிக்கும். சுருக்கமாகக் கூறினால், “ஒன்றிலிருந்து ஒன்றும் இல்லை, சிறியது முதல் பெரியது, பலவீனமானதிலிருந்து வலுவானது" என்ற கூற்று தகவல்தொடர்பு துறையின் 1 ஆம் தலைமுறை அலைக்கற்றை முதல் 5 ஆம் தலைமுறை அலைக்கற்றை வரையிலான வலைப்பின்னல் அலைக்கற்றையின் வளர்ச்சியை விவரிக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏறத்தாழ ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை ஒரு புதிய தலைமுறை வலைப்பின்னல் தொழில்நுட்பம் உருவாக்கப்படுகின்றது. புதிதாக உருவாகும் ஒவ்வொரு தலைமுறை அலைக்கற்றையும் புதிய அலைவரிசையைக் கொண்டிருக்கிறது. 5 ஆம் தலைமுறை அலைக்கற்றை என்பது இப்போது நாம் பயன்படுத்தி வரும் 4 ஆம் தலைமுறை அலைக்கற்றையின் அடுத்த தலைமுறையாகும்.
5 ஜி அலைக்கற்றையின் செயல்திறன்
முந்தைய செல்போன் வலைப்பின்னல் அலைக்கற்றையைப் போல, 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் என்பது ரேடியோ அலைகள் மூலம் எடுத்துச் செல்லப்படும் சிக்னல்களைக் கொண்டு செயல்படுகிறது. உயர்ந்த செல்போன் கோபுரங்களுக்கும், செல்போனுக்கும் இடையில் அந்த அலைக்கற்றையின் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. வானொலி சிக்னல்கள், தொலைக்காட்சி, செல்போன்கள் உள்பட எல்லா வகையான தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகும் சிக்னல்கள் மூலமான கதிர்வீச்சுகள் நம்மைச் சுற்றி உள்ளன. எல்லா நேரத்திலும் மின்காந்த கதிர்வீச்சுகள் நம்மைச் சுற்றி சூழ்ந்து கொண்டு இருக்கின்றன. செல்போன்களில் பயன்படுத்தப்படும் 4 ஆம் தலைமுறை அலைக்கற்றை வலிமையானது. இதைவிட 5 ஆம் தலைமுறை அலைக்கற்றை மிகவும் வலிமை வாய்ந்தது. தற்போதுள்ளதைவிட இன்னும் அதிக எண்ணிக்கையிலான செல்போன்கள் மூலம் இன்டர்நெட் சேவையை ஒரே நேரத்தில், இன்னும் அதிகமான வேகத்தில் பயன்படுத்த இயலும்.

இந்த அலைக்கற்றைத் தரைப்பகுதியில் குறுகிய தொலைவுக்கு தான் பயணிக்கும். எனவே 5 ஆம் தலைமுறை அலைக்கற்றையின் சேவை பெறவேண்டுமென்றால், முந்தைய அலைக்கற்றை கோபுரங்களைவிட அதிக எண்ணிக்கையிலான உயர்கோபுரங்கள், தரைப் பரப்புக்கு நெருக்கமாக அமைக்கப்பட வேண்டும். இவற்றிகு இடையில் சிறிய செல்பாயிண்ட்களை நிறுவப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. பொதுவாக வலைப்பின்னல் அலைக்கற்றை, ரேடியோ அதிர்வெண்ணைக் கொண்டு இயங்குகின்றது. இந்த அலைக்கற்றை என்பது மின்காந்த அலைகள் ஆகும். அலைவரிசைகளின் நீளத்தைப் பொருத்து அதன் வேகம் மாறுபடுகின்றது. 5 ஆம் தலைமுறை அலைக்கற்றையானது, முற்றிலும் புதிய கம்பியில்லா கட்டமைப்பைக் கொண்டது. அதீத செயல்திறன் மிக்கது. எனவே எந்த தாமதமும் இன்றி மிக விரைவாக கண்ணிமைக்கும் நேரத்தில் செயலாற்றும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் இந்தத் தொழில்நுட்பத்தில் உள்ள அலைவரிசையின் நீளம் ஆகும்.
4 ஆம் தலைமுறை வலைப்பின்னலின் அலைவரிசையின் நீளம் 3 கிகா ஹெர்ட்ஸ் க்கும் குறைவாகதான் இருக்கிறது. ஆனால் 5 ஆம் தலைமுறை வலைப்பின்னலின் வலைப்பின்னல் அலைக்கற்றை 24 கிகா ஹெர்ட்ஸ் லிருந்து 100 கிகா ஹெர்ட்ஸ் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அலைநீளம் அதிகரித்திருப்பதால் 4 ஆம் தலைமுறையை விட 5 ஆம் தலைமுறை அலைக்கற்றை அதிக வேகத்துடன் செயல்படும். பல ஆயிரக்கணக்கான மின்கருவிகளை ஒருங்கிணைத்து செயல்படும். வேகமாகவும், விரைவாகவும், துல்லியமாகவும் செயல்படும் தன்மையைக் கொண்டது. எனவே லட்சக்கணக்கான மின்இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் சென்சார்கள் இணைக்கப் பட்டிருந்தாலும் அவற்றின் பேட்டரியின் திறன்களை இழக்காது. மேலும் அவற்றை குறைந்த செலவில் இணைப்பதற்கான வடிவமைப்பை பெறமுடியும். அந்தளவுக்கு 5 தலைமுறையின் அலைக்கற்றை பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய தலைமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்று இல்லாமல், 4 ஆம் தலைமுறை வலைப்பின்னலிருந்து 5 ஆம் தலைமுறை அலைக்கற்றைக்கு மாறியது என்பது இந்த தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்த மாற்றத்தில் இருக்கும் முதன்மையான வேறுபாடு என்னவென்றால், அதன் அலைவரிசை நீளமாகும். அதாவது தற்போது 4 ஆம் தலைமுறை அலைக்கற்றை கொண்டிருக்கும் அலைவரிசை 10 முதல் 300 வரையில் இருக்கின்றது. ஆனால் 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றை 700 லிருந்து 2700 வரையிலான மெகா ஹெர்ட்ஸ் கொண்டிருக்கும். அந்தளவுக்கு 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றையின் வேகம் அதிகரித்திருக்கிறது. முந்தைய வேகத்தை விட 10 மடங்கிலிருந்து 100 மடங்குவரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. அடுத்ததாக, 5 ஆம் தலைமுறை அலைக்கற்றையின் அளப்பரிய பயன்பாடுகளைப் பற்றி பார்ப்போம்.
5 G அலைக்கற்றையின் அளப்பரிய பயன்பாடுகள்
தற்போதைய நவீன தொழில்நுட்பக் கருவிகளின் வளர்ச்சிக்கு 4 ஆம் தலைமுறை அலைக்கற்றையால் ஈடு கொடுக்கமுடியவில்லை. 4 ஆம் தலைமுறை அலைக்கற்றை பதிவேற்றம் செய்வதிலும், தரவிரக்கம் செய்வதிலும் குறைந்த வேகத்தைக் கொண்டிருக்கிறது. மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்கருவிகளையும் உணர்விகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதில் குறைந்த திறனையே பெற்றிருக்கிறது. எனவே நவீன தொழில்நுட்பக் கருவிகளின் வளர்ச்சிக்கேற்ப அதிக திறனுள்ள 5 ஆம் தலைமுறை அலைக்கற்றையை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்தி, விரைவாகவும் வேகமாகவும் அதிகமாகவும் தரவேற்றம் (upload) மற்றும் தரவிரக்கம் (download) செய்துக் கொள்ள முடியும். எண்ணற்ற மின்கருவிகளையும் உணர்விகளையும் ஒருங்கிணைத்து செயலாற்ற முடியும். இனி 5 ஆம் தலைமுறை அலைக்கற்றையின் பயன்பாடுகள் குறித்து இனிப் பார்ப்போம்.
தானியங்கும் வாகனங்கள்

இந்த வாகனங்கள், போக்குவரத்து விளக்குகள், கம்பங்கள், மனித நடமாட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பலவற்றையும் ஒருங்கிணைக்க வேண்டும். இவற்றிற்கு இடையிலான எப்போதும் தரவுகளும் செய்திகளும் பரிமாறிக் கொண்டே இருக்க வேண்டும்.. இத்தகைய ஏற்பாடுகள் இருந்தால்தான் தானியங்கி வாகனங்களை சாலைகளில் எந்தவிதமான பிரச்சனையுமின்றி இயக்கமுடியும். எண்ணற்ற மின்கருவிகளை ஒருங்கிணைத்து, தரவுகளை உடனுக்குடன் பரிமாறிக் கொள்ளவும் 4 ஆம் தலைமுறை அலைக்கற்றை போதுமான அளவுக்கு திறனைப் பெற்றிருக்கவில்லை. இது போன்ற வாகனங்கிடையேயும், வாகனங்களுக்கும் இதர மின் கருவிகளுக்கும் இடையேயும் செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக் கொள்ள வேண்டுமென்றால், அதிக திறனுடைய 5 ஆம் தலைமுறை அலைக்கற்றையின் பயன்பாடு மிகவும் தேவையான ஒன்று. தானாக இயங்கும் போக்குவரத்து வாகனங்கள், ஏராளமான கணினி மென்பொருட்கள், பலவிதமான கருவிகளையும், உணர்விகளையும் கட்டுப்படுத்துகின்றன. அவை எப்பொழுதும் இணையத்துடன் தொடர்பு கொண்டிருப்பதால், மென்பொருள் மாற்றங்களை வாகங்களுக்கு நேராக அனுப்பப் படுகிறது. பயணிக்கும் பொழுது வாகனம், அதனைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளைக் காமிராக்கள் மூலம், வாகனத்தின் கணினிக்கு அனுப்பி, மென்பொருள் மூலம், அடுத்தபடி என்ன செய்ய வேண்டும் என்பதை நொடியில் முடிவெடுக்கிறது.
கூகிள் தானியங்கி வாகனம் பாதசாரிகளையும், சைக்கிள் ஓட்டுபவர்களையும் தானாக் உணர்ந்து இயங்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டது. எந்த ஒரு வாகனமும் அதைச் சுற்றியுள்ள சிக்னல், நிறுத்துமிடம் போன்ற விஷயங்களைச் சார்ந்தே வேலை செய்யும். இத்தகைய பணிகளை ஒருங்கிணைப்பதிலும் செயலாற்றுவதிலும் கருவிகளின் இணையத்தின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. இதை இயக்குவதற்கு அதி உயர்ந்த வலைப்பின்னல் அலைக்கற்றையான 5 ஆம் தலைமுறை அலைக்கற்றை மிகவும் இன்றியமையாதது. இன்று நடைபெற்றுவரும் முயற்சிகள் வாகனத் தொழிலையே மாற்றிவிடும் சக்தி கொண்டவை என்று பல வல்லுனர்களாலும் சொல்லப் படுகிறது. ஓட்டுநர் இல்லாத வாகனங்களை உருவாக்குவதற்குப் பல நிறுவனங்கள் முனைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களின் போது அமெரிக்க ராணுவத்திடம் இருந்து இந்த கண்டுபிடிப்புத் தொடங்கியது. பெரும் ஆபத்தை விளைவிக்கும் வெடிக்கும் சாதனங்களிடம் சிக்கி, அமெரிக்க படையினர் இறப்பதையும், காயமடைவதையும் தடுக்கும் முயற்சியாக இது உருவாக்கப்பட்டது. ஓட்டுநர் இல்லாத வாகனங்களை உருவாக்குவதற்கு, விஞ்ஞானிகளுக்கு அமெரிக்க பாதுகாப்புத்துறை மிகுந்த முனைப்புடன் பணியாற்றி வருகின்றது. உபேர், ஜென்ரல் மோட்டர்ஸ், கூகுள் போன்ற நிறுவனங்கள் ஓட்டுநர் இல்லாத தானியங்கி வாகனங்களை உருவாக்கி வருகின்றன.
இணையத்தால் இணைக்கப்பட்ட கருவிகள்
நம் வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள், குறைந்தபட்சம் சில மின் கருவிகளாவது நம்மைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும். 2025 ஆம் ஆண்டில் நமது வீடுகளில் ஏராளமான மின்கருவிகள் ஆக்கிரமித்துக் கொள்ளும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் புழங்குகின்ற பொதுஇடங்களில் நூறாயிரக் கணக்கான மின்கருவிகளும் (Divices), உணர்விகளும் (Censors) பொருத்தப் பட்டிருக்கின்றன. இவற்றிலிருந்து கோடிக்கணக்கான தரவுகள் பெறப்படுகின்றன. இவ்வாறு பெறப்பட்ட தரவுகள் மூலம், இவை யாவும் இணையத்தில் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்து செயலாற்றும் திறன் கொண்டவை. இவ்வாறு இணைக்கப்பட்ட மின் கருவிகளும், உணர்விகளும் இணையத்தால் இணைக்கப்பட்ட கருவிகள் (Internet Of Things) என்று அழைக்கப்படுகின்றன. இங்கு கருவிகள் பற்றியும் உணர்விகள் பற்றியும் தகவல்கள் பெறப்படும் அதே நேரத்தில், அங்கு நடமாடும் மக்கள் குறித்தும் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி, பொதுமக்களைக் கண்காணிக்கவும் முடியும். இத்தகைய இணையத்தால் இணைக்கப்பட்ட கருவிகளை திறம்படவும் சீராகவும் இயங்குவதற்கு, 5 ஆம் தலைமுறை அலைக்கற்றை என்ற அதிஉயர் தொழில்நுட்பம் முதுகெலும்பாகத் திகழ்கிறது.
போக்குவரத்து மட்டுமின்றி, வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், விவசாயப் பண்ணைகள், பொது இடங்கள், கலை அரங்கங்கள் ஆகியவை எண்ணற்ற மின்கருவிகளாலும், உணர்விகளாலும், மின் உபகரணங்களாலும் ஒருங்கிணைக்கப் பட்டிருக்கின்றன. இவற்றை இயக்க வேண்டுமானால், 4 ஆம் தலைமுறை அலைக்கற்றைப் பயன்படாது. இவற்றை இயக்க வேண்டுமானால் அதிக வேக அலைவரிசை திறன் கொண்ட மேம்பட்ட 5 ஆம் தலைமுறை அலைக்கற்றை தேவைப்படுகிறது. சீனாவின் உற்பத்தி மையமான ஷென்சென், 5 ஆம் தலைமுறை அலைக்கற்றை மூலம், பெரிய அளவிலான சாதனங்களை மேகத் தொழில்நுட்பத்துடன் (Cloud Computing) இணைக்க முடியும் என்று அறிவித்துள்ளது.
டிரோன்களும் ரோபோக்களும்

டிரோன்களைப் பயன்படுத்தி, விவசாய நிலத்தில் பூச்சி மருந்து தெளித்தல்போன்ற பணிகள் செய்யப்படுகின்றன. மேலும், இவற்றைப் பயன்படுத்தி அவசர தேவைக்கான மருந்துப் பொருட்களை தேவையான இடங்களுக்கு கொண்டுச் செல்லப்படுகின்றன. ஆளில்லா வானூர்திகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. ஆளில்லா இயங்கும் இயந்திரங்களை தானாக திறம்பட இயங்க வைக்க முடியும். இவை, இராணுவ நடவடிக்கைகளுக்கு அதிக அளவில் பயன்படுகின்றன. சமீபத்தில், ஊகான் நகரத்தில் க்ளௌட் மைண்ட் (Cloud Mind) என்ற நிறுவனம் மருத்துவ பணிகளுக்காக ரோபோக்களைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்கு உணவு, மருந்து ஆகியவற்றைக் கொடுப்பதற்காகவும், மருத்துவமனையை தூய்மைப் படுத்துவதற்காகவும் இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த ரோபோக்கள் 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றையால் இயக்கப்பட்டன. ரோபோக்களைப் பயன்படுத்தி மருத்துவமனை முழுவதும் பராமரித்த முதல் மருத்துவமனை இதுதான் என்று கூறப்படுகிறது.
சூப்பர் கம்ப்யூட்டர்
அறிவியல் தொழில்நுட்பத்தில் சீனா முதலிடம் வகிக்கவேண்டும் என்று 2016 லேயே சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒரு எதிர்கால திட்டத்தை வகுத்தார். அதன்படி சீனஅரசு தொழில்நுட்ப வளர்ச்சித் துறையில் மாபெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. முக்கியமாக குவாண்டம் ஆராய்ச்சியின் இறங்கியுள்ளது. இது சூப்பர் கம்யூட்டர் சம்பந்தப்பட்ட உயர்ந்த தொழில்நுட்பமாகும். அமெரிக்கா உட்பட வேறு சில நாடுகளும் இந்த சூப்பர் கம்யூட்டர் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளன. ஆனால் இதர நாடுகளை விடவும் சீனா சூப்பர் கம்யூட்டர் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கிறது. மேலும் சீனா தனக்கான விண்வெளித் திட்டம் ஒன்றினை தயாரித்துள்ளது
குறிப்பிடத்தக்கது. சீனா எண்ணற்ற சூப்பர் கம்யூட்டர் மையங்களை நிறுவியுள்ளது. 2019 ஆண்டின் புள்ளிவிவரப்படி உலகத்தில் உள்ள 500 சூப்பர் கம்யூட்டர்களில் 228 சீனாவினால் தயாரிக்கப்பட்டது. சீனாவின் `சன்வே தைஹூலைட்' (Sunway Taihu Light) என்றழைக்கப்படும் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் ஆகும். இது உலகின் அதிவேக திறன்கொண்ட கம்யூட்டர்களில் ஒன்றாகும். ஆனால் அமெரிக்காவிடம் 116 சூப்பர் கம்யூட்டர்கள் உள்ளன.

அமெரிக்காவின் ஐ.பி.எம் மற்றும் என்விடியா நிறுவனங்கள் இணைந்து கட்டமைத்த `சம்மிட்' (Summit) என்றழைக்கப்படும் அதிக சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர். இதன் செயலாற்றலில் உலக அளவில் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது. இது இரண்டு டென்னிஸ் மைதானங்களின் பரப்பளவில் 340 டன்கள் மொத்த எடை கொண்ட உபகாரணங்களால் கட்டமைக்கப்பட்டது. உதாரணத்திற்கு ஒன்றைக் குறிப்பிடலாம். வைரஸ் கிருமியினால் உண்டாகும் பல்வேறு நோய்களின் சிகிச்சைக்கு உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இம்மருந்துகளின் மூலக்கூறுகளை மாற்றியமைப்பதின் மூலம் இன்னும் பல மருந்துகளை உருவாக்கலாம். அத்தனை மருந்துகளையும் ஒன்றன்பின் ஒன்றாகச் சோதனைக்கு உட்படுத்திப் பரிசோதிப்பதற்குப் பல ஆண்டுகள்,பிடிக்கும். ஆனால் சில மணி நேரங்களில் இதை எளிதாக கண்டுபிடிக்கிறது. கொரோனா வகை வைரஸான கோவிட் 19 கிருமியின் தன்மைகளையும் மருந்துகளின் மூலக்கூறுகளையும் இந்த சூப்பர் கம்ப்யூட்டரின் செயற்கை அறிவின் மூலம் அதிவிரைவாக ஒப்பிட்டு ஆராய்ந்து, எந்தெந்த மருந்துகள் கிருமியை அழிப்பதிலோ எதிர்ப்பதிலோ சிறப்பாகச் செயலாற்றும் என்ற முதல் தகவலை மிகக் குறைந்த கால அவகாசத்தில் பெற்று அவற்றை மட்டும் அடுத்தகட்ட சோதனைக்கு உட்படுத்த முடியும்.
விண்வெளி சாதனைகள்
விண்வெளி ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவரும் சூழலில் அமெரிக்கா போன்ற சில நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் மும்முரமாக இறங்கியுள்ளன. மேலும் நிரந்தரமான விண்வெளிக்கூடங்களை அமைக்க முயற்சி செய்து வருகின்றன. 2022 இல் விண்வெளியில் நிரந்தரமான விண்வெளிக் கூடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் சென்றிராத சந்திரனின் வெகுதொலைவிற்கு சென்று ஆராயும் விண்கலத்தை அனுப்பிய முதல்நாடு சீனா என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற 2019, ஜனவரி மாதம் 1 ஆம் தேதி சாங் இ-4 என்ற விண்கலம் சந்திரனுக்கு அனுப்பப்பட்டது. சந்திரனில் உள்ள அரியவகை கனிமப் பொருட்களை ஆராய்வதற்காகவும், அதன் மேல்பரப்பை ஆராய்வதற்காகவும் இது அனுப்பப்பட்டது. ஜெர்மனி, ஸ்வீடன், நெதர்லாந்து, சௌதி அரேபியா மற்றும் சீனாவின் கூட்டு முயற்சியால் இந்த விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் உண்மையான சந்திரனுக்கு ஈடாக 2020 இல் சீனா ஒரு செயற்கைச் சந்திரனை தென்சீனப்பகுதியில் உருவாக்கியிருக்கிறது. இது உண்மையான சந்திரனைப் போல 8 மடங்கு அதிகம் ஒளிரும் தன்மைக் கொண்டது. இது இரவு நேரங்களில் தெருவிளக்குகளுக்குப் பதிலாக பயன்படுத்திக் கொள்ளமுடியும். சுமார் 80 கிமீ விட்டத்தைக் கொண்டது.

சோலார் ஆற்றலின் பயன்பாடு
சீனா ஒரு பிரமாண்டமான சோலார் எக்ஸ்பிரஸ் நெருஞ்சாலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இது 161 கிமீ நீளமுடையது. இதில் செல்லும் வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கும்போதே சார்ஜ் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, மிதக்கும் சோலார் ஆற்றல் உற்பத்திச் செய்யும் ஆலையை சீனா உருவாக்கியுள்ளது. உலகத்திலேயே மிகப் பெரிய மிதக்கும் சோலார் மின்னாற்றல் ஆலை என கூறப்படுகிறது. சீனா ஒவ்வொரு ஐந்து வாரமும் 9,500 மின்சார பேருந்துகளை பயன்பாட்டிற்கு விடுவதற்கு தயாராகிவருகின்றது. உலகத்தில் இருக்கும் மின்சார பேருந்து போக்குவரத்தில் சீனாவின் பங்கு 99% ஆகும் என்று கூறப்படுகிறது. இவை போக்குவரத்துக்காக மட்டுமின்றி நகரத்தின் காற்றிலுள்ள மாசுக்களை அப்புறப்படுத்தி சுத்தம் செய்யும் பணியையும் மேற்கொள்கின்றன. இவற்றை இயக்குவதற்கு பெட்ரோல் போன்ற எண்ணெய் பொருட்களைச் சார்ந்திராமல் சோலார் மின்சாரத்தை பயன்படுத்துவதாக இருக்கும். உலக அளவில் சீனா மின்சாரப் பேருந்து உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. அதுமட்டுமின்றி, 2014 லேயே சீனா முப்பரிமாண அச்சு இயந்திரத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த அச்சு எந்திரத்தைக் கொண்டு 10 வீடுகளை உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இதர பயன்பாடுகள்
உலகெங்கும் உருவாகிக் கொண்டிருக்கும் ஸ்மார்ட் நகரங்களில் டிரைவர் இல்லாத வாகனங்களை ஓட்டவும், போக்குவரத்து விளக்குகளை இயக்கவும், சுற்றுச்சூழல் மாசுக்களை உணரவும், திறன்பேசிகள் போன்ற கம்பியில்லா மின்கருவிகளை தடையின்றி இயக்கவும் இந்த 5 ஆம் தலைமுறை
அலைக்கற்றைத் தொழில்நுட்பம் பயன்படுகிறது என்று ஏற்கனவே பார்த்தோம். உண்மையில் அதிக திறனுள்ள இந்த அலைக்கற்றையானது, மருத்துவம், உற்பத்தி, பொழுதுபோக்கு போன்ற துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும் பயன்படுகின்றது என்று கூறப்படுகிறது. மேலும் கைப்பேசியில் மெய்நிகர் மற்றும் மிகைமெய் நிகர் (augmented reality / virtual reality) தொழில்நுட்பக் காணொளிகளையும், விளையாட்டு களையும் உயர்தரத்தில் பார்க்க இயலும். துல்லியமான காணொளிகளையும், அழைப்புகளையும் பெற முடியும். உடலில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும். அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் நேரடியாக மருத்துவமனைக்குச் செல்ல முடியும்.
5ஜி வலைப்பின்னல் அலைக்கற்றைக்கு எதிரான எதிர்ப்புகள்

4 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றையை பரப்புவதற்கு சுமார் 5 லட்சம் மின்கோபுரங்கள் இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன என்று புள்ளிவிவரம் கூறுகிறது. இதை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் மனித உடலுக்குள் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்றும், முக்கியமாக உடலுறுப்புகளில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் 5 ஆம் தலைமுறை அலைக்கற்றை என்பது மனித
ஆரோக்கியத்துக்கு மிகவும் கேடு விளைவிக்கும் என்ற விமரிசனங்கள் சர்வதேச அளவில் எழுந்துள்ளன. 4 ஆம் தலைமுறை அலைக்கற்றை விளைவிக்கும் ஆபத்தைவிட 5 ஆம் தலைமுறை அலைகற்றை அதிக தீங்கை விளைவிக்கின்றது என்று கூறப்படுகிறது. மேலும் 5 ஆம் தலைமுறை அலைக்கற்றையில் மில்லிமீட்டர் அலைகள் பயன்படுத்தப் படுகின்றன. இது நீண்ட தூரம் செல்லாது. மரம், கட்டிடம், சுவர் போன்ற திடப்பொருட்களைக் கடந்து செல்லாது. எனவே நூறாயிரக்கணக்கில் புதிய செல்கோபுரங்கள் உருவாக்க வேண்டும். இத்தகைய கோபுரங்களுக்கு உலகளவில் அதிகமான எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. மருத்துவர்கள், விஞ்ஞானிகள், சுகாதார ஆர்வலர்கள் போன்றோர் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
5 ஆம் தலைமுறை அலைக்கற்றையை பொருத்தவரை, அதில் மில்லிமீட்டர் அலைகள் (MMW) பயன்படுத்தப் படுகின்றன. இந்த அலைகள் சுவரை கடந்து செல்லாது. அதிக தூரம் செல்லாது. எனவே 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றையைப் பயன்படுத்த வேண்டுமென்றால், நிறைய செல்போன் கோபுரங்கள் நிறுவப்பட வேண்டும். 200 மீட்டருக்கு ஒரு செல்போன் கோபுரத்தை அமைக்கவேண்டும். இந்த செல்போன் கோபுரங்களுக்கு இடையில் செல்பாயிண்ட்கள் நிறுவப்பட வேண்டும். இந்த மில்லி மீட்டர் அலை என்பது மனிதனை நேரடியாக பாதிக்கக்கூடியது. இது தோலில் பட்டவுடன் எரிச்சல் மற்றும் தோல் சம்பந்தமான வியாதிகள் வரும் என்று கூறப்படுகிறது. 4 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றையால் ஏற்படும் பாதிப்புகளை விடவும், 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றையால் அதிகமான பாதிப்புகளை உருவாக்கும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். எனவே பல நாடுகளிலும் 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றைக்கு பலத்த எதிர்ப்புகள் வலுத்திருக்கின்றன. இத்தாலி போன்ற பல உலக நாடுகளிலும் 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றையை நிறுவக் கூடாது என்று போராட்டங்களும் வெடித்திருக்கின்றன. மேலும் 42 நாடுகளிலிருக்கும் 241 விஞ்ஞானிகள் 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றையை தீவிரமாக எதிர்த்து வருகின்றனர். இது பெல்ஜியத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
மக்கள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தும் தொழில்நுட்பம்
குடிமக்கள் மீது கட்டற்ற வகையில் அதிகாரம் செலுத்துவதற்கு உலகத்தில் உள்ள அனைத்து அரசுகளும் தயாராகி வருகின்றன. தொழில் நுட்பங்கள் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய, நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில், குடிமக்களைக் கண்காணிப்பதும் அதிகரித்து வருகின்றது. குடிமக்களின் தரவுகளைச் சேகரிக்கவும், அவற்றை அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தவும் பயன்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அரசுகள் பரவலான கண்காணிப்பு அரசியலைக் கையிலெடுத்துள்ளன. மக்கள் தங்கள் தனியுரிமையைத் தியாகம் செய்துதான் தீரவேண்டும் என்று அரசுகள் முடிவு செய்யத் தொடங்கிவிட்டன. சமீபத்தில், முகத்தை நுண்ணறிதல் மூலம் ஒருவரின் உடல்நிலையை அறியும் முறையை சீனா நடைமுறைப்படுத்தியுள்ளது. ரயில் நிலையம் போன்ற பொது இடங்களிலிருந்த வெப்ப ஸ்கேன் இயந்திரங்கள் மக்களின் நோய் தாக்கத்தைக் கண்டறிகின்றன. மொபைல் செயலிகள் மூலம் மருத்துவ அறிவுரைகள் கொடுக்கப்பட்டுவருகின்றன. 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றையைப் பயன்படுத்தி, தரவுகள் திரட்டும் மையங்களை நிரந்தரமாக வைத்துக் கொள்ளும் புதிய உள்கட்டமைப்பினை உருவாக்க சீனா துரிதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சீனாவைப் போல் தென் கொரியாவும் மக்களின் மொபைல்களை பின்தொடர்வதன் மூலம் தொற்றுப் பரவுவதைக் கண்டறிந்தது. மேலும், சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங் போன்ற கிழக்காசிய நாடுகள் இம்முறையில் வெற்றிபெற்றன. இந்நாடுகள், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்திய நிலையில், தங்கள் வெற்றியைப் பெருமையாக அறிவித்துக் கொள்கின்றன. அதன் விளைவாக, அதிக பாதிப்படைந்த ஐரோப்பிய நாடுகள், தனிநபர் கண்காணிப்பு செயல்முறையை அனுமதிக்கத் தயாராகிவிட்டன. தற்போதைய நெருக்கடி நிலையின்மூலம் கண்காணிப்பை நிரந்தரமாக்க அரசுகள் முயல்வதாக மக்கள் அச்சப்படுகிறார்கள். இனி 5 ஆம் தலைமுறை தொழில்நுட்பத்தை கைப்பற்ற அமெரிக்கா எடுத்துவரும் முயற்சிகளைப் பார்ப்போம்.
4ஜி இன் உலகச் சந்தையை ஆதிக்கம் செலுத்திய அமெரிக்கா

1990 களில் ஐரோப்பிய நாடுகள் 2G வலைப்பின்னலை மற்ற பிராந்தியங்களுக்கு முன்பே ஏற்றுக்கொண்டன; 2000 களின் முற்பகுதியில் 3 ஆம் தலைமுறை வலைப்பின்னல் தொழில்நுட்பத்தில் ஜப்பான் முன்னோடியாக இருந்தது; 2 ஆம் தலைமுறை, 3 ஆம் தலைமுறை மற்றும் 4ஆம் தலைமுறை அலைக்கற்றைகளின் ஆரம்ப வளர்ச்சி முறையே ஜப்பான், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை மையமாகக் கொண்டிருந்தது. 2011 ஆம் ஆண்டில் 4 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றையை அறிமுகத்துவதில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் இந்த முறை சீனா தொலைதொடர்புகளில் மிகவும் முன்னேறிய 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றையை சந்தைப்படுத்துவதில் முன்னணியில் உள்ளது. 4 ஜி எல்டிஇ வலைப்பின்னல் தொடங்கப்பட்ட பின்னர் சிலிக்கான் வேலி இன்ஸ்டாகிராம், உபெர் மற்றும் யூடியூப் போன்ற பயன்பாடுகளிலிருந்து லாபம் பெற்றது. 4 ஆம் தலைமுறை அலைக்கற்றையை பரந்த அளவில் கிடைக்கச் செய்த முதல் நாடு அமெரிக்கா என்பதால், அமெரிக்க நிறுவனங்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளவும், அதன் உலகளாவிய சந்தையை கைப்பற்றியிருந்தது.
அமெரிக்காவின் திட்டம்
5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றைத் தொழில்நுட்பத்தை எப்படியாவது கொண்டுவர வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கின்றது. 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றையை நோக்கிய பந்தயம் இது என்று அமெரிக்கா முழங்கியது. டிரைவர் இல்லாத வாகனங்கள் வேண்டுமானால், தானியங்கி இயந்திரங்கள் வேண்டுமானால், சுத்தமான, பாதுகாப்பான நகரங்கள் வேண்டுமானால், 5 ஆம் தலைமுறைnவலைப்பின்னல் அலைக்கற்றையைக் கொண்டுவர வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றை அவசியம் தேவை என்று கூறினார். ஏப்ரல் 2019 இல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமெரிக்காவின் உள்கட்டமைப்பை விரிவாக்குவதை வலியுறுத்திய டிரம்ப், 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றை பந்தயத்தில் சீனாவை தோற்கடித்து, அமெரிக்கா வெற்றிபெறும் என
முழக்கமிட்டார். அமெரிக்காவில் 5 ஆம் தலைமுறை அலைக்கற்றை தொழில்நுட்பத்தை உலகம் முழுவதும் விநியோகம் செய்ய அமெரிக்காவில் உள்ள CTIA என்ற கம்பியில்லா வடத்தை தயாரிக்கும் நிறுவனம் பெரும்முயற்சி எடுத்துவருகின்றது.

இதற்காக மில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்து உள்ளது. கொரானா பாதிப்பு இருந்து கொண்டிருக்கும் இந்த காலத்திலும் இந்த தொழில்நுட்பம் குறித்த உள்கட்டமைப்புப் பணிகளை செய்துகொண்டு வருகின்றது. 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றையின் செயல்வடிவம் கொடுக்க முதலில் அதற்கான உள்கட்டமைப்பை உருவாக்கவும், இணைய வசதியை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டது. உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க அமெரிக்க நிறுவனங்களான க்ரௌட் காஸ்டல், அமெரிக்கன் டவர், டவர் ஸ்ட்ரீம் போன்ற நிறுவனங்களும், இணைய வசதியை ஏற்படுத்தித் தருவதற்காக காம்காஸ்ட், வெரிஜோன், டி மொபைல், ஸ்பிரிண்ட், எடி & டி போன்ற நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 2018 ஆம் ஆண்டின் இறுதியிலேயே ஹஸ்டன், அட்லாண்டா, பாஸ்டன், சிகாகோ டென்வர், சாண்டியாகோ, நியூயார்க், வாஷிங்கடன் போன்ற நகரங்களில் 5 ஆம் தலைமுறை அலைக்கற்றையை சொந்தப் பயன்பாட்டிற்காகவும் வணிகப் பயன்பாட்டிற்காகவும் நிறுவுவதற்கான ஆயத்தப் பணிகள் ஆரம்பித்துவிட்டன. 12 அமெரிக்க நகரங்களில் மொபைல் 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றையின் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. டி-மொபைல் மற்றும் ஸ்பிரிண்ட் ஆகியவை 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தங்கள் 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் இயக்கும் என்று கூறுகின்றன.
அமெரிக்கா இதில் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றது என்று கருதப்படுகிறது. பிக் வயர்லஸ் என்ற நிறுவனமும் 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றை தொழில்நுட்பத்திற்காக மில்லியன் கணக்கான டாலர்களைச் செலவழித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்க குடிமக்கள் குறித்த அனைத்து தரவுகளை சேகரிக்கும் முக்கியமான பணியிலும் அந்நிறுவனம் ஈடுபட்டிருக்கின்றது. மேலும் தரவுகளைச் சேகரிப்பதன் மூலம் தன் நாட்டின் குடிமக்களை கண்காணிக்கப் போகின்றது. இனி 5 ஆம் தலைமுறை தொழில்நுட்பத்தில் சீனா எவ்வாறு உலகச் சந்தையைக் கைப்பற்றி முன்னணியில் இருக்கின்றது என்பதைப்
பார்ப்போம்.
5 ஜி அலைக்கற்றையின் உலக சந்தையைக் கைப்பற்றும் சீனா
சீன அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்கீழ், சீன நிறுவனங்கள் 2013 இல் 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றை குறித்து ஆராய்ச்சி நடத்தத் தொடங்கின. 2016 ஆம் ஆண்டில் தொடர்புடைய தொழில்நுட்பங்களின் தொழில்நுட்ப சோதனைகளை நடத்தின. 2016-2020 ஆம் ஆண்டிற்கான சீனாவின் ஐந்தாண்டுத் திட்டம் மற்றும் மேட் இன் சீனா 2025 திட்டம் ஆகிய இரண்டும் 5 தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றையை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கின. சீனாவின் உயர்தொழில்நுட்ப நிறுவனங்களான ஹவாய், க்வால்காம், இண்டெல் போன்றவை 5 ஆம் தலைமுறை சம்பந்தமான புதிய கண்டுபிடிப்புகளில்
ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. சீன அரசாங்கம் தனது 13 வது ஐந்தாண்டு திட்டத்தில் 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றையை ஒரு போர்தந்திரரீதியாக வளர்ந்து வரும் தொழில் மற்றும் வளர்ச்சியின் புதிய பகுதி என்று விவரிக்கிறது, மேலும்உலகளாவிய உற்பத்தியை தீர்மானிக்கும் தலைமையாக மாறுவதற்கான திட்டத்தை வகுத்துள்ளது. ஐந்தாம் தலைமுறை மொபைல் தகவல்தொடர்புகளில் முன்னேற்றம் காணுங்கள் என்று தனது முழக்கத்தை மேட் இன் சீனா 2025 திட்டம் மூலம் அறிவித்துள்ளது.

நாட்டின் மூன்று மொபைல் நிறுவனங்களான சீனா மொபைல், சீனா டெலிகாம், மற்றும் சீனா யூனிகாம் ஆகியவற்றை சீன அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது. பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் ஷென்சென் உள்ளிட்ட சில நகரங்களில் பெரிய அளவிலான 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றை பரிசோதனை அடிப்படையில் வலைப்பின்னலை நிறுவ முயற்சித்து வருகின்றது. ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் இணைக்கப்பட்ட கார்களில் 5 ஆம் தலைமுறை அலைக்கற்றையைப் பயன்படுத்த சீனா விரும்புகிறது. சியோங் என்ற ஒரு புதிய நகரம் உள்ளது. இதை தலைநகரில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பெய்ஜிங்கிற்கு தென்மேற்கே 129 கி.மீ தொலைவில் அரசாங்கம் கட்டி வருகிறது. சீனா மொபைல் மற்றும் சீனா டெலிகாம் ஏற்கனவே சோதனை நெட்வொர்க்குகளை அங்கு நிறுவியுள்ளன. 2030 ஆம் ஆண்டில் 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றை உள்நாட்டில் 8 மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று சீனா அகாடமி ஆஃப் இன்ஃபர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் டெக்னாலஜி (CAICT) மதிப்பிடுகிறது. எரிசக்தி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய தொழில்கள் 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றையை உபகரணங்களுக்காகவும் வயர்லெஸ் சேவைகளுக்காகவும் பில்லியன் கணக்கான டாலர்களை கூட்டாக செலவிடும் என்று நிறுவனம் கருதுகிறது.
5 ஆம் தலைமுறை அலைக்கற்றையை நாட்டின் தொழில்நுட்பத் துறைக்கும் சீனப் பொருளாதாரத்திற்கும் முக்கியமானதாக சீன அரசு கருதுகிறது. சுமார்
ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புள்ள புதுமையான தொழில்நுட்பத்தைக் கையில் வைத்திருக்கும் உலகளாவிய ஜாம்பவான்களான ஆப்பிள் அல்லது மைக்ரோசாப்ட் ஆகியவற்றிற்கு அடுத்த நிலையை எட்டுவதற்கு சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் தீவிமான இறங்கியுள்ளன. 5 ஆம் தலைமுறை அலைக்கற்றையைக் கைப்பற்றியதன் மூலம் உலக அளவில் கம்பியில்லா தொழில்நுட்ப வளர்ச்சியை வழிநடத்தும் முதல் வாய்ப்பாக சீனா கருதுகிறது. 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றையை நோக்கிய பந்தயத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் கடும் போட்டி நிலவுகின்றது. இதற்கான காரணங்கள் ஒன்று, எண்ணற்ற தரவுகள், இரண்டாவது அபரிமிதமான லாபங்கள்.
சீன அரசு சார்ந்த நிறுவனங்களான சீனா மொபைல்ஸ், சீனா டெலிகாம் மற்றும் சீனா யூனிக்கோம் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றையைக் கொண்டுவருவதில் தீவிரமாக இறங்கியுள்ளது. 5 ஆம் தலைமுறை அலைக்கற்றை சேவை அறிமுகத்திற்கு பிறகு ஹூவேய் மற்றும் ஸியோமி நிறுவனங்கள் செல்போன்கள் 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றையை நிறுவ முக்கிய பங்கு வகிக்கின்றன. பெய்ஜிங், ஷாங்காய் 50 நகரங்களில் இந்த சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவையை பெற இப்போதே 110 மில்லியனுக்கும்அதிகமானோர் முன்பதிவு செய்து உள்ளனர். இது நாட்டு மக்கள் தொகையில் 7% ஆகும். உலக அளவில் 5 ஆம் தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றை சேவை 2020 இல் முழுகி வீச்சில் செயல்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே சீனா 5 ஆம் தலைமுறை அலைக்கற்றை சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிவேகம் அதீத லாபம்

முதலாளித்துவம் எப்போதுமே அதிக பட்சமான லாபத்தை பெறுவதிலேயே குறியாக இருக்கும். லாபம், அதிக லாபம், அதீத லாபம். இதற்கு ஒரு முடிவே இல்லை. இதற்காக முதலாளித்துவம் தொடர்ந்து பல்வேறு யுக்திகளை செயல்படுத்தி வருகின்றது. உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், விநியோகத்தை விரைவு படுத்துவதில் தொழில்நுட்ப வளர்ச்சி எப்போதும் முதன்மையான பங்கை ஆற்றிவருகின்றது. 5 தலைமுறை வலைப்பின்னல் அலைக்கற்றை தொழில்நுட்பம் அதிவிரைவான வேகத்தில் உற்பத்தியையும் விநியோகத்தையும் அதிகரிக்கின்றது. இதன் மூலம் அபரிமிதமான லாபத்தை விரைவாகவும், வேகமாகவும் பெற்றுக் கொண்டே இருக்கவேண்டும் என்ற தீராத வெறித்தனத்தில் இன்றைய முதலாளித்துவ வல்லரசுகள் இயங்கி வருகின்றன. அதி வேகம் அதீத லாபத்தை கொடுக்கும் என்பதுதான் இன்றைய முதலாளித்துவத்தின் தாரக மந்திரம். தற்போது அதிநவீன தொழில்நுட்பங்களைப் புகுத்துவதன் மூலம் அளப்பரிய உற்பத்தித் திறனைப் பெறுவதோடு, வேலை நேரமும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. உயர்ந்த உற்பத்தித் திறனைக் கொண்ட ரோபோக்கள் எப்போதும் தொடர்ந்து இயங்குகின்றன. ஆகவே, இனி லாபம் மடங்கில் (Fold) அல்ல, வர்க்கத்தில் (Sqaure) அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு லாபம் கொழிக்கும் நவீன தொழில்நுட்பம் என்பதால், 5 ஆம் தலைமுறை தொழில்நுட்பத்திற்கான
உலகச் சந்தையைக் கைப்பற்றுவதில் அமெரிக்காவும் சீனாவும் தீவிரமான போட்டியில் இறங்கியுள்ளன. அடுத்துவரும் சர்வதேசத் தலைமையை தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாக இந்த அதிநவீனத் தொழில்நுட்பம் விளங்குகிறது என்றால் அது மிகையன்று.
References
1. How Big Wireless lobbied governments to build 5G for citizen data
collection and surveillance, MR Online.
2. There are the top 8 china technologies and electronics trends to
watch, businessinsider.com
3. China is racing ahead in 5G. Here’s what that means,
technologyreview.com
4. China forms new plan to seize world technology crown from US,
thejapantimes.com
5. Amazing exambles of tech innovation in china, techworld.com,
6. Digital China 2020 – Accenture

