*டிக்கி* சிறுகதை – லில்லி சிதம்பரம் 

Dikki Short story By Lily Chidambaram (*டிக்கி* சிறுகதை - லில்லி சிதம்பரம்). Book Day is Branch of Bharathi Puthakalayam.ண்ணா நகரில் பெரும் பணக்காரர்கள் வாழும் வீதியில் தனி பங்களா. கயல், ராகவன் தம்பதியர்களுக்கு ஓரே மகள் ரேகா. அவர்களின் பங்களா தான் அது.   

கயலின் தாய் லக்ஷ்மி வயதில் மூத்தவர். மனதில் குழந்தை போன்றவர்.  அவர்கள் முன்னிலையில் தான் மகளுக்கும் பேத்திக்கும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.  

“அம்மா ப்ளீஸ், வாங்க மா. அந்த நாய்க் குட்டி அழகா இருக்கு. அதை எடுத்து வந்து நாம் வளர்ப்போம்”  

“நோ ரேகா, நான் அதை அனுமதிக்க மாட்டேன்”  

ரேகாவின் உரையாடல் லக்ஷ்மி அம்மாவின் நினைவலைகளை சற்றே பின்நோக்கி அழைத்து சென்றது. 

ப்போது அவர்கள் ஈரோட்டில் வசித்து வந்தார்கள். கணவர் ராஜகோபால் பேப்பர் மில்லில் மேலாளராகப் பணியில் இருந்தார். சிறிய குடும்பம் மகன் ராகுல் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தான். மகள் கயல் திருமணம் முடிந்து சென்னையில் அண்ணா நகரில் குடியிருக்கிறார். 

ஈரோட்டில் பேப்பர் மில் நிறுவனத்தின் கெஸ்ட் ஹவுஸில் குடியிருந்தார்கள். வீட்டைச் சுற்றிப் பெரிய தோட்டம். மாமரம், தென்னை மரம், கொய்யா மரம்,  செம்பருத்திச் செடி, முல்லைக் கொடி இப்படி மரம், செடிகளால் இயற்கையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.  

முக்கியமாக மல்லிகைப்பூ கொடிகளால் ஆன வேலி காம்பவுண்ட் சுவற்றை மறைத்து மல்லிகை பூ பந்தல் அமைத்தது போல இருக்கும்.  

இவர்கள் வீட்டை ஒட்டியே பால் பண்ணை பக்கத்தில் இருந்தது. பால் பண்ணையில் ஆங்காங்கே பால் சிதறிய வண்ணம் இருக்கும். பாலின் அருமை அதை வாங்க முடியாதவர்களுக்குத் தானே தெரியும். ஆனால் அந்த வட்டாரப் பகுதி நாய்கள் அதிர்ஷடசாலிகள். எந்த நேரமும் கூட்டமாய் பணியாளர்களோடு பணியாளராக நாய்கள் சூழ்ந்திருக்கும். சிதறிய பாலை அருந்தியே நல்ல கொழுகொழுவென இருக்கும்.  

அந்நிலையில் ஒரு நல்ல முகூர்த்த நாளில் கருப்பு வண்ண நாய் ஒன்று ஐந்து குட்டிகளை ஈன்றது. அதன் பெயர் பிளாக்கி. 

ராகுலுக்கு  நாய் வளர்க்க நெடு நாளாக ஆசை. பால் பண்ணையில் பால் வாங்கப் போன போது அந்த நாய் போட்ட குட்டிகள் ஐந்தும் துருதுருவென இருந்தது அவனுடைய ஆசையை மேலும் தூண்டியது. ஐந்து குட்டிகளில் ஒரு குட்டியை கொண்டு வந்து நாம் வளர்த்துக் கொள்ளலாம் என அம்மாவிடம் ஓடி வந்து சொன்னான். அம்மாவும் பிள்ளையும் திட்டம் தீட்டினர். 

அம்மா நாய் இல்லாத போது தானே அதன் குட்டிகளைத் தொட முடியும். அம்மா நாய் வெளியே போகும் நேரத்தை இரண்டு நாள் வேவு பார்த்து வைத்து இருந்தான் ராகுல்.  

அம்மாவும் மகனும் பால் பண்ணைக்குத் திருடர்களைப் போல யாருமற்ற நேரத்தில் பிளாக்கி வெளியே சென்ற நேரம் பார்த்து உள்ளே சென்றனர். 

ஐந்து குட்டிகளும் ஒன்றின் மேல் ஒன்று படுத்துக் கொண்டு விளையாடி கொண்டு இருந்தது. ஒவ்வொரு குட்டியாக வெளியே எடுத்தான் ராகுல். லக்ஷ்மி அம்மா பிளாக்கி உள்ளே வருகிறதா என கண்காணித்து கொண்டே இருந்தார்கள். நான்கு குட்டிகள் நன்றாக கொழு கொழு என இருந்தது. ஒரு குட்டி மட்டுமே மெலிந்து சாய்ந்தபடி இருந்தது. இவன் போய் எடுத்தவுடன் அப்படியே அவன் கைகளுக்குள் தன்னை அடக்கி கொள்ள முயன்றது. இது தனக்கான குட்டி என வீட்டுக்கு எடுத்து வந்து விட்டான் ராகுல்.  

Dog, Pup, Puppy, Labrador, Lab, Animals, Doggy, Breed

மகிழ்ச்சி வெள்ளத்தில் ராகுல். லக்ஷ்மி அம்மாவிற்கு தனது மகனின் மகிழ்ச்சியே மையம். ஒரு தனி வீடு தோட்டத்தில் தயாரானது. அம்மா, மகன், தோட்டக்காரர் அனைவரும் சேர்ந்து ஒரு குடில் போன்ற அமைப்பில் கட்டி முடித்து ஆகிவிட்டது. முக்கியமாக பெயர் சூட்டல் விழா. ஒரு கேக் வாங்கி அந்த குட்டிக்கு “டிக்கி” என பெயர் சூட்டினான் ராகுல்.   

அதன் பின்னர் ராகுல் பொழுதுகள் டிக்கியோடே கழிந்தது.  

டிக்கி ஒருவரையும் வீட்டுக்கு உள்ளே அனுமதிக்காது. காவல்துறையில் பயிற்சி பெற்ற காவலாளி போல் அவர்கள் வீட்டை பாதுகாத்து வந்தது.  

லக்ஷ்மி அம்மா வெள்ளிக்கிழமை கோயிலுக்குச் செல்லும் போது பின் தொடர்ந்து செல்லும். லக்ஷ்மி அம்மாவுக்குத் தனக்கு ஒரு எஸ்கார்ட் பின் தொடர்ந்து வருவது போல ஒரு பெருமிதம்.  

டிக்கிக்கு குளிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சும் போது இடையே புகுந்து தன்னைக் குளிப்பாட்டி கொள்ளும்.      

மூன்று வருடங்கள் மிகவும் வேகமாகக் கடந்தன. ராகுல் கல்லூரிப் படிப்பு முடித்தான். 

ராஜகோபால் ஓய்வு பெறும் நாளும் வந்தது. குடும்பத்தோடு சென்னை செல்லத் திட்டமிட்டனர். 

ஆனால் அன்பு டிக்கியை எப்படி அழைத்து செல்வது. ஏன் என்றால் இப்போது அவர்கள் கூடி போகும் இடம் அடுக்கு மாடி குடியிருப்பு. அங்கு குடும்ப உறுப்பினர்கள் அதிகம் இருந்தாலே வாடகைக்கு வீடு தர மாட்டார்கள். அவர்கள் எங்கிருந்து டிக்கிக்கு அனுமதி அளிக்கப் போகிறார்கள். 

அனைவரும் மனதைத் திடமாக்கி கொண்டு டிக்கியை ஈரோட்டிலேயே விட்டுச் செல்வது என முடிவெடுத்தனர். 

இவர்கள் நடவடிக்கைகளைப் பார்த்து கொண்டு இருந்த டிக்கி ஊகித்துக் கொள்ளத் துவங்கியது. அலுவலகம் செல்லும் தாயை மழலை கொஞ்சி கொஞ்சிக் கிளம்ப விடாமல் செய்வது போல் ஒவ்வொருவர் மடியில் போய் படுத்து கொண்டு முகத்தை வருடி சுற்றி சுற்றி வந்து கொண்டே இருந்தது. 

டிக்கி முகத்தில் ஒரு சோகம் இழைந்தோடியது.  

முதல் நாள் லாரியில் அனைத்து சாமான்களும் ஏற்றப்பட்டு கொண்டு இருந்தது.  

டிக்கி லாரியைச் சுற்றிச் சுற்றி வலம் வந்தது. லக்ஷ்மி அம்மாவையும் ராகுலையும் பார்த்த வண்ணம் இருந்தது. அதனின் குடிலுக்குச் செல்லவேயில்லை.  

அன்று அவர்களுடனே படுத்துக் கொண்டது. இவர்கள் இருவருக்கும் டிக்கி இல்லாமல் எப்படி நாட்கள் நகரப் போகிறது என்ற கவலையோடு உறங்கச் சென்றனர்.  

மறு நாள் காலை ஐந்து மணிக்கு கார் வந்துவிடும் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்று பேசியதை டிக்கி கேட்டு கொண்டே இருந்தது. டிக்கி தூங்கவில்லை.  

மறுநாள் காலை இவர்கள் எழும் போது டிக்கி அருகில் இல்லை. ராகுல் அதன் குடிலில் சென்று பார்த்தான் அங்கும் இல்லை. சரி வெளியே போய் இருக்கும் என நினைத்து அனைவரும் குளித்து தயாராகி வெளியே வந்து கார் அருகில் வந்தவர்களுக்கு தூக்கி வாரிபோட்டது. டிக்கி காரின் முன்னே படுத்து கிடந்தது. ராகுல் ஓடி போய் பார்த்தான்.  அம்மா என்ற அவனின் குரல் லக்ஷ்மி அம்மாளை அதிர வைத்தது. ஆம் டிக்கி இறந்து போய்விட்டு இருந்தது. லக்ஷ்மி அம்மாளின் கண்கள் கண்ணீரில் நினனந்தது.  

லக்ஷ்மி அம்மாள் சுதாரித்து கொண்டு, ராகுலை சமாதனப்படுத்தினாள். உடனே வாட்சமேனை அழைத்து 500 ருபாய் அளித்து டிக்கி கடைசி காரியம் செய்துவிட சொல்லி கனமான மனத்தோடு சென்னை வந்து சேர்ந்தனர்.  

“அப்பா அப்பா, அம்மாவை ஓகே சொல்ல சொல்லுங்கள்” என்ற ரேகாவின் குரல், லக்ஷ்மி அம்மாவின் நினைவுகளை நிகழ் உலகிற்கு கொண்டு வந்தது.  

ஒரு வழியாக பேத்தி நாய் வளர்க்க சம்மதம் வாங்கி விட்டாள். லக்ஷ்மி அம்மாள் அவர்களுக்கு டிக்கி மறுபிறவி எடுத்து தன்னோடு விளையாட வர போகிறது என எதிர்பார்போடு கண்களில் ஏக்கத்துடன் காத்திருந்தார். 

 ********** 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.