“தண்டகாரண்யம்” திரைப்பட விமர்சனம்
உலகெங்கிலும் உள்ள பெருங்காடுகளில் பூர்வகுடிகள் வாழ்ந்து வருகிறார்கள். இயற்கையைப் பாதுகாக்க இறைவன் படைத்த அரிய படைப்புகள் அவர்கள்.
விலைமதிக்க முடியாத இயற்கையையும், இயற்கையை சமநிலையில் வைத்திருக்கும் பல்லூயிர்களையும், மற்றும் இயற்கை சேமித்து வைத்த கனிமப் பொக்கிசங்களையும் ஆதிக்க சக்திகள் களவாடுவதற்கு எதிராக தொடர்ந்து களமாடி வருபவர்கள் பழங்குடிகள்.
இயற்கையை வேட்டையாடும் ஆதிக்க சக்திகளுக்கு தடையாகவும் அச்சுறுத்தலாகவும் இருப்பவர்கள் பழங்குடிகளும் அவர்தம் தலைமுறைகளும்.
அந்த மரபில் வந்த பழங்குடிஇளைஞர்களை இந்திய ராணுவத்தில் சேர்ப்பதாகவும், அதற்காக சிறப்பு பயிற்சி தருவதாகவும் ஆசை காட்டி அழைத்துச் சென்று போலியான பயிற்சி மையத்தில் பயிற்சி என்ற பெயரில் சித்திரவதை செய்து இறுதியில் பலிகொடுக்கும் அரச வன்மத்தை தண்டகாரண்யம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
மேலை நாட்டு பெருமுதலாளிகளுக்கு தாய்நாட்டின் வளங்களை தாரை வார்க்கத் துணியும் பூர்ஸ்வா அரசின் நயவஞ்சக முகத்தினை இப்படம் கிழித்து தொங்கவிட்டிருக்கிறது.
வளங்களைச் சுரண்டுகிறவர்கள் அரசு அதிகாரிகளாகவே இருக்கிறார்கள். வளங்களை காப்பவர்கள் நக்சல்களாகவே இருக்கிறார்கள். இந்தப் பெயர் சூட்டல்களில் இருக்கும் அரசியலை இயக்குநர் அதியன் ஆதிரை அழுத்தமாக வித்தியாசப்படுத்தி முன்மொழித்திருக்கிறார். இந்த இரு துருவ போராட்டத்தை இந்தப்படம் ஆதங்கத்தோடு கண்முன் கொண்டுவந்திருக்கிறது.
படம் முழுவதும் வனங்களுக்குள்ளேயே நகர்கிறது. கடுமையான உழைப்பு ஒவ்வொரு காட்சிகளில் மிளிர்கிறது. இன்னும் நான் அந்தக் காட்டுக்குள்ளேயே நடந்துகொண்டிருக்கிறேன். எத்தனை முயன்றும் என்னால் வனத்திலிருந்து நான் விடுபெற முடியாத அளவிற்கு ஒளிப்பதிவாளர் மரகதம் சொட்டச் சொட்ட அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இந்த உலகம் உதாசீனமாக பார்க்கும் பழங்குடிகளின் எளிய அரிய சவாலான வாழ்வை இயக்குநர் அதியன் ஆதிரை கண்ணியத்தோடு அணுகியிருக்கிறார். மிகை எதார்த்தம் இல்லாத கதாபாத்திரங்களும் பின்னணியும் நம்மை படத்தோடு் ஒன்ற வைக்கிறது.

தீயவற்றிற்கு விலைபோகும் கருங்காலிகளும் வாழ்வாதாரங்களை உளச்சான்று இல்லாமல் விலை பேசும் மனித துரோகிகளும் இருக்கும் வரையில் போராளிகள் இருந்துகொண்டே இருப்பார்கள் என்னும் மைய இழை படம் முழுக்க பரவி இருக்கிறது.
காதல் காட்சிகள் அத்தனை தத்ரூபம். இன்னும் அந்தக் காட்சிகளை இயக்குநர் கூடுதலாக வைத்திருக்கலாம். பாடலையும் முழுமையாக பயன்படுத்தியிருக்கலாம்.இருந்திருந்தால் ரசனைக்கான விகிதாசாரம் சரியாக இருந்திருக்கும்.
காதலுக்காகவும் அன்பிற்காகவும் இலச்சியத்திற்காகவும் வைராக்கியத்திற்காகவும் ஏங்கும் அந்த மனிதர்களின் எளிய வாழ்வில் ஊடாடி இருக்கும் வாழ்வியல் உண்மையை காட்சியாகத் தந்து விழிபனிக்கவும் நெஞ்சம் கனக்கவும் செய்திருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை.
சகோதர கதாநாயகர்கள் இருவரும் கதாபாத்திரத்திற்கு பொருந்தி வாழ்ந்திருக்கிறார்கள். மனைவி மற்றும் காதலி கதாபாத்திரங்கள் முகபாவத்திலும் வசனங்களை உச்சரிக்கும் அழகிலும் கதாநாயகர்களை விஞ்சுகிறார்கள்.
கலைவடிவமைப்பு செயற்கையாக உருவாக்கியது என்று தெரியாத அளவிற்கு அத்தனை இயல்பாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
அழகிய பாடல்களை சுமந்து காற்றில் கலக்கும் போதும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை முகத்தில் தெளிக்கும் போதும் இசை மைய உயிராக தன் துடிதுடிப்பை கட்டியிருக்கிறது.
மரக்கடத்தல், தந்தம் திருடல், கனிமக் கொள்ளை, பூர்வகுடி நிலங்களை அபகரிப்பு, வனச்சட்டம் மீறல், பழங்குடி வெளியேற்றம், பல்லுயிர் வேட்டை முதலான பல குற்றங்களை அரசின் உதவியோடு நிகழ்த்தும் அதிகாரிகள் மற்றும் பெருமுதலைகள் வேட்டையாடப்பட வேண்டியவர்கள், மேலே குறிப்பிட்ட அனைத்தையும் பறிகொடுத்து நிர்கதியாக இருக்கும் பழங்குடிகளே அவர்களுக்கான தண்டனையை வழங்க தகுதியானவர்கள் மக்கள் போராளிகளே! என்ற உயிரை கதையில் கதகதப்போடு் ஊற்றியிருக்கிறார்.
உலகம் பேசாத பொருளை பேசும் படமாக வெளிவந்திருக்கிறது தண்டகாரண்யம் என்னும் படம். முதன்முதலாக தீய ஆதிக்கத்திற்கு எதிராக குரல்கொடுப்பதும் போராடுவதும் அறம் என்பதை நடு மண்டையில் ஆணி அடித்ததைப்போல சொல்லியிருக்கிறது.
“ஒருவரை ஒருவர் அடுதலும் தொலைதலும் புதுவது அன்று உலகத்து இயற்கை”
ராஜாக்களின் வீரம் மண்ணை அபகரிப்பதற்கானது, குறுநிலமன்னர்களின் வீரம் எளியோர்களின் அடிப்படைத் தேவையை உறுதிசெய்வதற்கானது, பழங்குடிகளின் வீரம் பிரபஞ்சத்தின் இயற்கையை சமநிலையில் வைப்பதற்கானது.
உலகிலேயே அதிகமான சகிப்புத்தன்மை வாய்ந்தவர்களும் ஆகச்சிறந்த வீரம் செறிந்தவர்களும் பழங்குடிகளே!
பழங்குடிகளைப் போற்றுவோம்!
பல்லுயிர்க் காப்போம்!!
இயக்குநர் அதியன் ஆதிரைக்கு என் மரகத முத்தங்கள்.
எழுதியவர் :
✍️ போ.மணிவண்ணன்
20.09.2025
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

