கடந்த மாதம் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் முகநூல் பக்கத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து ஒருவர் எழுதியிருந்த பதிவில்,

நண்பர்கள் யாருடைய அறைக்குச் சென்றாலும் சரி, நிஜமாவே சரக்கு அடிக்க மாட்டீங்களா மாரி? என்று துவங்கும் உரையாடல்களில்

அவர்களிடம் ஏதேதோ காரணங்களைக் கசிந்துருகும் கதைகளாகச் சொல்லிக் குடிக்காமல் தப்பியிருக்கிறேன். அதில் நிறைய கதைகள் உதாசீனப்படுத்தப்பட்டு இருக்கின்றன. நிறைய கதைகள் வெறுமனே போதையில் சொல்லிச் சிரிக்கப்பட்டிருக்கின்றன. நிறைய கதைகள் பொய்யென தொடக்கத்திலேயே அவமானப்படுத்தப் பட்டிருக்கின்றன. ஆனால், யாரிடத்திலும் சொல்லாத ஒரு கதை என்னிடம் மிச்சமிருக்கிறது. அதை நிச்சயம் உங்களால் நிராகரிக்கவும் முடியாது, உதாசீனப்படுத்தவும் முடியாது.

என்ற வரிகள் மேற்கோள் காட்டப்பட்டிருந்தன. இது மட்டுமல்ல இதுபோன்ற ஏராளமான ‘தனது வாழ்க்கைக் கதைகளை’ “மறக்கவே நினைக்கிறேன்”  எனும் இந்த புத்தகத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் சொல்லியிருக்கிறார் என்பது உண்மையிலேயே அதுவரை எனக்கு தெரியாது.

ஆம், அவர் சொல்வது போலவே யாராலும் நிராகரிக்கவோ, உதாசீனப்படுத்தவோ முடியாத, அதுவரை யாரிடமும் சொல்லப்படாத, தான் மறக்க நினைத்த கதைகளை, நம்மிடம் சொல்கிறார் மாரி செல்வராஜ். 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஆனத்த விகடனில் 31 வாரங்களாக வெளிவந்த தொடர்களின் தொகுப்பு தான் இந்த புத்தகம்.

புத்தகம் முழுக்க அவ்வளவு மனிதர்கள். அவ்வளவு சம்பவங்கள். அத்தனை பேரையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அத்தனை சம்பவங்களையும் நமக்கு கதையாக சொல்கிறார்.

எதற்காக ரயிலில் பாய்ந்து இறந்துபோனாள் என கடைசிவரை தெரியாத, “நடிகை சினேகாவைவிட அழகான மாணவி செல்வலட்சுமி”, பறவைகளை நேசிக்கும், அவைகளோடு உரையாடும், அவை உதிர்க்கும் இறகுகளை தனக்கு எழுதப்பட்ட கடிதமாக வாசிக்கும் ஸ்டிபன் சுந்தரம் வாத்தியார், தங்களின் ராஜி பூனை, இறைதூதுவன் மூக்கையா தாத்தா, மாஞ்சோலை கலவரத்தில் தாமிரபரணியில் கொல்லபட்ட குமார், தனது முதல் காதலியான கார்த்திகா எனும் கார்த்திக், தனது பிரியத்திற்குரிய ஜோ, கிருஸ்துமஸ் தாத்தாவாக வரும் ஜோவின் மாமா, ஊரை விட்டு ஓடிபோன சுப்பக்கா, பட்டாசுக்கு பயப்படும் தனது தோழி ராஜி, பாலியல் தொழிலாளி சொட்டு அக்கா, சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தபோது, யாருமாற்றிருந்த நிலையில் தனக்கு அடைக்கலம் தந்த  இருட்டுநாட்டு பெருமாள் அண்ணாச்சி, ரயில் சினேகிதி மணிமேகலை, சின்னகுப்பை மாமா என இத்தகைய மனிதர்களின் பட்டியல் நீளும்…

Image

தாமிரபரணி படுகொலை

தேடித் தேடி திருட்டுத் தனமாக அடுத்தவர்களின் டைரியை படிக்கும் தனது பழக்கத்தை வெளிப்படையாக போட்டுடக்கும் தனது முதல் கட்டுரையில் துவங்கி, 30 கட்டுரைகளில் சொல்லபட்ட கதைகள் மொத்தமாக தனக்குள் ஏற்படுதியுள்ள, ஏற்படுத்திவரும் தாக்கங்கள் என்னென்ன என்று விளக்கும் 31-வது கட்டுரை வரை எந்தவித ஒளிவு மறைவுமின்றி, ஒப்பனையற்ற வார்த்தைகளால் தனது கதைகளை சொல்கிறார் மாரி செல்வராஜ்.

ரயிலில் பாய்ந்து இறந்துபோகும் அளவிற்கு அந்த மாணவி  செல்வ லட்சுமிக்கு  என்ன தான் பிரச்சனை என்று தன்னால், கடைசிவரை தெரிந்துகொள்ளவே முடியாத அந்த மரண குறிப்பேட்டின் பக்கங்கள்…

ஆண்கள் மட்டுமே பயிலும் பள்ளியில் இருக்கும் மாணவர்களின் உளவியல் என்னவாக இருக்கும் என்பதை சொல்லும் பக்கங்கள், அங்கு கோஷ்டிகளான இருக்கும் அஜித்தின் திலோத்தம்மா குரூப், விஜயின் குஷி பாய்ஸ் குரூப் பற்றியும், விடுதி மாணவர்கள் குரூப், சாதி ரீதியாக சுற்றித் திரிந்த கோஷ்டி பற்றி… தோழிகளின் அன்பு கிடைக்காத ஏக்கம் பற்றி,  சோத்துக் களவாணிகள் என்று பெயர் பெற்றது பற்றி, ருசியாக சாப்பிட முடியாத நண்பன் பற்றியெல்லாம் விவரிக்கும் பக்கங்கள்…

பறவைகளை தானும் தனது கூட்டாளிகளும் கண்ணி வைத்து சாகடித்ததும் ஸ்டீபன் வாத்தியார் என்ன ஆனார்?  ராஜி யார்? ராஜிக்காக அக்காவின் வேண்டுதல் என்ன? ராஜிக்கு என்னதான் ஆனது? என்று சொல்லும் பக்கங்கள்… தனக்கு மாரிச்செல்வம் என்றும், தனது உடன்பிறப்புகளுக் அவர்களின் பெயர்கள் என்னென்ன காரணக்களுக்காக வைக்கபட்டன என்றெல்லாம் விவரிக்கும் கதைகளை அம்மா சொல்லும் பக்கங்கள்…

Image

விகடனில் தொடராக வெளியானபோது

சம்படி ஆட்டம் என்றால் என்ன? யார் யார் அதில் எப்படி ஆடுவார்கள்?  அவர்கள் என்னென்ன கொடுமைகள் அனுபவிக்கிறார்கள்? தன்னால் எப்படி எடுத்த எடுப்பிலேயே ஒரு கைதேர்ந்த சம்படி ஆட்டக்காரனைப்போல ஆட முடிந்தது?   தீவிரவாதி என்றாலே முஸ்லீம் தானா? மாணவர்கள் வரைந்ததாக பாதிரியார் ஒருவர் கொடுத்த ஆல்பத்தில் என்ன தான் இருந்தது? நண்பன் ரசூலின் மனமாற்றத்திற்கும் நட்பை இழந்ததற்கும் என்ன காரணம்?

பொதுத்தேர்வு முடிவுகள் மாணவர்களுக்கு ஏற்படுத்தும் பயமும், மன உளைச்சலும் எத்தகையது? 999 மதிப்பெண் எடுத்திருந்தபோதிலும் தற்கொலைக்கு தள்ளப்பட்ட தனது நண்பனின் மரணம் இந்த கல்விமுறை பற்றியும், சமூக உளவியல் குறித்தும் எழுப்பும் கேள்விகள்…

உச்சிக் குடும்பனும் உளுவத் தலையனும் யார்? உச்சிக் குடும்பனை தான் திருடிவிட்டபோது, அந்த நாடகக்காரரின் வேதனையை தான் உணர்ந்ததை சொல்லும் பக்கங்கள்… பூங்குழலியின் அக்கா கல்யாணத்துக்கு சென்றபோது என்ன நடந்தது? உதவி இயக்குனர் வாய்ப்பு தேடி அலைந்த போது உதவிய வாட்ச்மேன் தாத்தா எப்படி பலூன் வியாபாரியாக மாறினார்?

Image

வாட்ச்மேன் தாத்தா

தனது முதல் காதலியான கார்த்திகா எனும் கார்த்திக் ஒரு திருநங்கை என்று அறிந்துகொண்ட அந்த கணத்தில் தனக்குள் எத்தகைய மனநிலை உருவானது? தனது பிரியத்திற்குரிய ஜோவை ஒரு கிறித்துமஸ் இரவில் தேவாலயத்தில் பார்த்தபோது தனது உணர்வுகள் என்னவாக இருந்தது?

என்பதையெல்லாம் விவரிக்கும் பக்கங்கள் அனைத்திலும் மாரிசெல்வராஜின் தூய்மையான கருப்பு நிறம் போலவே  உண்மையும் எதார்த்தமும் நிரம்பி வழிகிறது. இக்கதைகளில் வரும் சம்பவங்கள் நமது வாழ்வின் ஏதேனும் ஒரு கட்டத்தில் நமக்கும் நடந்திருக்கும். இக்கதைகளில் வரும் மனிதர்களை நாம் நிச்சயம் நமது வாழ்வில் கடந்து சென்றிருப்போம். இன்னும் சொல்லப்போனால், நாமும் இத்தகைய மனிதர்களாக பல சமயங்களில் இருந்திருப்போம்.

Image

பொதுவாக நாவல்கள், கதைகளை படிக்கும்போது, அதில் வரும் காதாப்பாத்திரங்கள் பல நேரங்களில் நமக்குள் தாக்கத்தை ஏற்படுத்தி சில பல நாட்கள் நம்முடனே, நம் நினைவலைகளில் பயணிக்கும். ஆனால் மிக சில கதைகளின் கதாப்பத்திரங்கள் தான் நீளும் வாழ்வின் நெடுந்தூர பயணத்தில் நெடுங்காலம் நம்முடன் பயணிக்கும். இந்த புத்தகத்தில் உள்ள மாரி செல்வராஜின் ஒவ்வொரு கதைகளும் இத்தகைய கதைகள் தான். அவரால் மட்டுமல்ல. வாசித்துவிட்ட பிறகு இவற்றை, இவர்களை நம்மாலும் மறக்க முடியாது.

இந்த ஒவ்வொரு கதையும் சொல்லவரும் செய்திகளை இரண்டொரு வரிகளில் சொல்லி முடித்து விடலாம். ஆனால் இந்த செய்திகளை உணர்த்தும் சம்பவங்களைப் பற்றியும், அவை நமக்குள் ஏற்படுத்தும் தாக்கங்கள், உணர்வுகள் பற்றியும் எழுத துவங்கினால் இந்த உணர்வுகள் பலநூறு பக்கங்களுக்கு தீயெனப்பற்றி படர்ந்து செல்லும்.

Image

பரியேறும் பெருமாள் படம் பார்த்திருக்கிறீர்களா நீங்கள்? மாரி செல்வராஜ் இயக்கிய அவரின் முதல் திரைப்படமான அதை பார்த்துவிட்டு, இக்கதைகளை நீங்கள் படித்தால், இந்த ஒவ்வொரு கதைகளிலும் வரும் சம்பவங்களையும், மனிதர்களையும் தான் அவ்வளவு நேர்த்தியாக படத்தின் ஒவ்வொரு காட்சியாகவும், கதாப்பாத்திரமாகவும் இவர் காட்டியிருக்கிறாரா என்று அடிக்கடி உங்கள் கண்கள் ஆச்சரியதில் விரியும். ஏற்கனவே இக்கதைகளை புத்தகமாகவோ, ஆனந்த விகடனில் தொடராகவோ வாசித்திருந்த நிலையில், இப்படத்தை பார்த்தவர்களுக்கும் இதே உணர்வு தான் ஏற்பட்டிருக்கும்.

அது என்ன என்ன சம்பவங்கள்? காட்சிகள்? கதாப்பத்திரங்கள்? எந்தெந்த மனிதர்கள்? என்பதையெல்லாம் நீங்கள் படிக்கும் போதே தெரிந்துகொள்ளுங்கள். நான் ஏதும் சொல்லவில்லை. ஏனெனில், அதையெல்லாம், தெரிந்துக்கொண்ட, உணர்ந்த அந்த உணர்வுகளை நீங்களும் உணரவேண்டும்…

நானும் மாரி செல்வராஜை போலவே இப்போது எந்தவித ஒளிவு மறைவுமின்றி உண்மையை சொல்கிறேன். எனக்கு அந்த ஆச்சரியமான, வியப்பான உணர்வுகளை, மனநிலையை வார்த்தைகளால் விவரிக்க தெரியவில்லை… அந்த உணர்வுகளை, ஆச்சரியத்தை உங்களுக்கு அப்படியே ஏற்படுத்தும் வல்லமை மாரி செல்வராஜ் அண்ணனுக்கும், அவரது எழுத்துக்கும் மட்டுமே உள்ளதாக கருதுகிறேன்.

புத்தகத்தை வாசிக்க துவங்கியபோது, தோழர்களிடம் “மாரி அண்ணன் கிட்ட கதை கேட்க போறன்…” என்று சொல்லிவிடு தான் வாசிக்க துவங்கினேன். வாசித்து விட்டு சொல்லு என்று சொன்ன தோழர்களுக்கு மட்டுமல்ல, இந்த புத்தகத்தை வாசிக்கப்போகிற உங்களுக்கும் இதைத்தான் சொல்ல நினைக்கிறேன்.

Image

“ யாருக்கு தான் கதை பிடிக்காது? அதுவும், புத்தகத்தில் கதையை வாசிக்கிறோம்

என்கிற உணர்வே ஏற்படாமல்,

நம் அருகில் ஒருவர் உட்கார்ந்து சொல்வது போல இருக்கும்

கதையை கேட்க யாருக்கு தான் பிடிக்காமல் போகும்?

அதுவும் மாரி அண்ணனின் கதை என்றால்,

அதை மாரி அண்ணனே சொன்னால்…?

இதற்கு மேலும் நான் சொல்லவா வேண்டும்?”

சீக்கிரம் போய் கதை கேளுங்கள்… சொல்வதற்கு மாரி அண்ணன் காத்துக்கொண்டிருக்கிறார்… மறக்காமல் கேளுங்கள் அவர் மறக்க நினைத்த கதைகளை… மறக்க முடியாத கதைகளை…

புத்தகத்தின் பெயர் : மறக்கவே நினைக்கிறேன்

ஆசிரியர் : மாரி செல்வராஜ்

பக்கங்கள் : 286

பதிப்பகம் : வம்சி பதிப்பகம்

விலை : ரூ.250

குறிப்பு:

முதல் பதிப்பு 2013-ம் ஆண்டு விகடன் பிரசுரமாக வெளியிடப்பட்டது (விலை ரூ.150).

அந்த பிரதிகள் அனைத்தும் விற்று தீர்ந்துபோன நினையில், இரண்டாவது பதிப்பாக தற்போது வம்சி பதிப்பகம் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

Image

தோழமையுடன்…

க.வி.ஸ்ரீபத்,

இந்திய மாணவர் சங்கம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *