“பைசன் காளமாடன்” திரை விமர்சனம்
“பைசன் காளமாடன்” இயக்குனர் மாரி செல்வராஜிடமிருந்து மற்றுமொரு சிறந்த படைப்பு.
துருவ் விக்ரம் – முதல் இரண்டு படங்களை விட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு கபடி வீரனுக்குரிய உடல்வாகு அதற்கான மெனக்கிடல், உடல்மொழி, எமோஷனல் காட்சிகளில் நேர்த்தியான நடிப்பு, சண்டைக் காட்சிகளில் அசுரத்தனமான உழைப்பு என அத்தனை வகையிலும் நல்ல முன்னேற்றம்.
முதல் படம் ரீமேக். இரண்டாவது படம் அப்பாவுடன் என்று அவரை நோக்கி வந்த விமர்சனங்களுக்கான பதிலாக இதில் தனது தனித்துவத்தை நிரூபித்துள்ளார்.
பசுபதி கதாபாத்திரம் – கிராமப்புறங்களில் எளிய குடும்பத்தில் இருந்து முன்னேறி வந்திருக்கும் அத்தனை குழந்தைகளின் தகப்பன்களின் சாயல்.
தனக்குரிய வேலிகளையும் சேர்த்து உடைத்து தன் பிள்ளைகள் எவரும் வேலி போட முடியாத தூரத்திற்கு/ உயரத்திற்கு செல்ல வேண்டும் என்னும் தகப்பன்சாமிகளின் நடமாடும் உருவம்.

அருவி மதன் – தன்னை விட பெரிய இடத்திற்கு தன் மாணவன் செல்லும் போது ஒரு ஆசிரியருக்கு உண்டாகும் போதையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் தம் சொந்த வாழ்வின் முன்னேற்றத்தில் அருவி மதன் கதாபாத்திரம் போன்ற ஓர் ஆசிரியர் நிச்சயமாக இருந்திருப்பார்.
ரஜிஷா விஜயன்- நம் கனவுகளை, ஆசைகளை,லட்சியத்தை குடும்பச் சூழலுக்கு பலி கொடுக்க வேண்டிய சூழல்களில் தன் தோள் கொடுத்து, தன்னைப் பலி கொடுத்து நமக்கு தன்னம்பிக்கை ஊட்டும் அக்காவாகப் படம் முழுவதும் தெரிகிறார் ரஜிஷா விஜயன்.
இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும், திரைக்கதையையும் நேர்த்தியாக எழுதியதிலும் அதை மிகச் சரியாக காட்சிப்படுத்தியதிலும் வெற்றி பெற்றுள்ளார் மாரி செல்வராஜ்.
இவர்களைத் தவிர லால், அமீர், லெனின் பாரதி, அழகம்பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நிவாஸ் கே பிரசன்னா பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் முன்னணிக்கு வந்துள்ளார். குறிப்பாக பின்னணி இசையில் அதகளம் செய்துள்ளார்.

90களின் வாழ்வியலை உள்ளபடியே நம் கண்முன் நிறுத்துவதில் கலை, ஆடை வடிவமைப்பு மற்றும் ஒளிப்பதிவு துறைகளின் அபரிமிதமான உழைப்பு தெரிகிறது.
நாயகன் நாயகி இருவருக்கிடையிலான காதலில் வயது, குலதெய்வம், வர்க்கம், ஆணாதிக்கம், பெண்ணியம், குடும்ப கௌரவம், சமூகத்தின் புற அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு அரசியல்களைக் கட்டுடைத்துள்ளார் மாரி செல்வராஜ்.
எந்த ஒரு தனி மனிதரும் பிளாக்கும் இல்லை. ஒயிட்டும் இல்லை. கிரே தான்.
ஒருவரை நாம் பார்த்த, கேட்ட அறிந்த தகவல்களின் அடிப்படையில் மட்டுமே அறிவதை விட ஆராய்ந்து அறிவதே சிறந்தது.
மாற்றுக்கருத்துடையவராக இருப்பவரெல்லாம் எதிரி இல்லை. எதிர்க்கருத்தை வெளிப்படுத்துபவர்கள் எதிரிகளாக மட்டுமே இருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகிறது பைசன்.

கத்தி எடுத்தவர்களில் நாம் யாரைப் போராளியாக, தலைவராகப் பார்க்கிறோம். யாரை வன்முறையாளராகப் பார்க்கிறோம்.
இவ்வாறான பல்வேறுபட்ட அரசியல் பார்வைகளை, புரிதல்களை உரையாடலுக்கு உட்படுத்துகிறது பைசன்.
திரைக்கதை, ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, கலை, வசனங்கள், நடிப்பு, ஆடை வடிவமைப்பு என அத்தனை துறைகளின் துணையோடு பைசன் ஆகப் பெரும் வலிமையோடு வளர்ந்து நிற்கிறது.
பைசன் – அறிவாற்றல் மிகுந்த காளை 💙🔥💐
எழுதியவர் :
✍🏻 ச.முகிலன்,
மார்க்கநாதபுரம்,
mukilan0923@gmail.com
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Super 👍