“பறவைகள் மனிதன், இல்லாமல் வாழ இயலும் !, ஆனால் பறவைகள் இல்லாமல் மனிதன் வாழ இயலாது!!” என்று மிகச் சிறந்த பறவை அறிஞர் டாக்டர். சலீம் அலி கூறிய சொற்றோடர், உண்மை ஆகும். ஆம், மனித வாழ்வில் உணவு, மருத்துவம், பல்வேறு பொருளாதார பயன்கள், தருவது, தாவரங்களும், அவற்றை சார்ந்த பறவைகள் என்பது ஐயமில்லை. எனினும் மனித குல வளர்ச்சி, அறிவியல் தொழில் நுட்பம், பெரும் தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள் அதிகரிப்பு, மக்கள் குடியிருப்புகள் பெருக்கம் போன்றவையால் இயற்கை பாதிக்கிறது.
உலகெங்கும், இத்தகைய பிரச்சினைகளை தொடர்ந்து, நம் எதிர்கால சந்ததி, பல்வேறு துன்பங்களை சந்திக்க உள்ள நிலை பற்றியும் இயற்கை அறிவியல் அறிஞர் பெருமக்கள் எச்சரித்து வருகின்றனர். சப் சஹாரன் ஆப்பிரிக்கா பகுதியில், உள்ள தென் மேற்கு கென்யாவில், பல்வேறு காரணங்களினால், பறவை, இனம் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருகின்ற நிலை,மிகவும் கவலைக்குரியது. ஆப்பிரிக்கா உலகில் காணப்படுகின்ற பறவை சிற்றினங்களில், 20% சதவீதம்,எண்ணிக்கையினை தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றில் 90% பறவைகள் உள்நாட்டு, அந்த வாழிடத்துக்கே உரிய இனங்கள் ஆகும்.
இப்பறவைகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டு வந்த ஜெர்மனி நாட்டின், ஹோஹென் ஹெம் பல்கலைக்கழக விஞ்ஞானி ஜோசப் டெகுட்டு என்பார், சப் சஹாரன் ஆப்பிரிக்காவின் சில நிலப் பகுதிகள், அரிய பறவைகள், விலங்குகளின் முக்கியமான இயற்கை வாழிடங்களாக அமைந்துள்ளது என்றும் ஆனால் அவை பல்வேறு காரணிகளால், பாதிக்கப்பட்டு வருகிறது என கூறுகிறார்.
அங்குராய், புசியா, லாம்ப் வெ பள்ளத்தாக்கு ஆகிய மூன்று இடங்களில் ஆய்வு அவரால் மேற்கொள்ளப்பட்டது. இங்கு பொதுவாக, நில பயன்பாட்டு முறைகள், குறிப்பாக மக்கள் குடியிருப்பு விரிவாக்கம், கால்நடை உற்பத்தி, தீமை தரும் பூச்சி ஒழிப்பு, அதனை தொடர்ந்து உணவுப் பயிர் விளைச்சல், போன்ற காரணங்களால், அந்த இயற்கைப் பகுதியில் உள்ள, அல்லது வருகை தரும், பறவை இனங்கள் பாதிக்கபடுகின்றன.
இந்த விக்டோரியா ஏரி சமவெளிப் பகுதியில் ஏராளமான, வெவ்வேறு பறவை சிற்றினங்கள் அதிகம் காணப்படுகின்றன. ஆஸ்ட்ரிச் என்ற நெருப்பு கோழி (ostrich), கினியா கோழி (Guinean fowl), பிசன்ட் (Pheasant ), பிளமிங்கோ என்ற பூ நாரை (FLAMMINGO), முக்குளிப்பான் (Grebes), வாத்து, பெரு வாத்துக்கள் (Ducks &Geese ), நீர்கோழி (Rails, water fowl), அல்லி கோழி (Jacana ), பெரிய வரகு கோழி (Bustard), குயில் (CUCKOO), பாறை புறா, மணிபுறா (Pigeon, Doves), டுராக்கோ (Turaco ), தோல் கால் பறவை (Finfoot) ஆகியவை அவற்றில் ஒரு சிலசிற்றினங்கள் ஆகும். இத்தகைய பறவைகளின் உயிரின வேற்றுமை, பல அரிய,அபூர்வ, அழிநிலையில் உள்ளவை. இவை வசிக்கும் இயற்கை நிலப்பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன.
தொந்தரவு உள்ள இயற்கை பகுதி மற்றும் தொந்தரவு இல்லாத பகுதி என்ற இரு இடங்களில் ஒப்பு நோக்கி பார்க்கும் போது பறவைகள் குறைந்து போன நிலை ஆய்வு மூலம் அறியப்பட்டுள்ளது. அங்குராய் என்ற இடத்தில் 71 பறவை சிற்றினங்கள் பதிவு செய்யப்பட்டது. அவற்றில் 7 சிற்றினங்கள் முழுமையாக காணாமற்போய்விட்டது. இந்த இடம் அதிகமாக பாதிக்கப்பட்ட இயற்கைப் பகுதி ஆகும். புசியா என்ற இடத்தில் 63 பறவைகள் சிற்றினங்கள் கண்டறியப்பட்டது. அவற்றில் 15 சிற்றினங்கள் தற்பொழுது இல்லை. லாம்ப் வெ பள்ளத்தாக்கு, ஓரளவு தொந்தரவு குறைவாக உள்ள இந்த பகுதியில் காணப்பட்ட 32 பறவை இனங்களில் 22 பறவை இனங்கள் குறைந்து போய்விட்டன.
இவற்றில் குறிப்பிட்ட சில இனங்கள், பருவ கால பறவைகள்ஆகும். ஐரோப்பா, வடக்கு ஆசியா, மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா போன்ற இடங்களிலிருந்து,வலசை எனும் இடப் பெயர்ச்சி செய்யும் பறவைகள் உள்ளன. இவை விவசாயம் மற்றும் வளர்ச்சி பணிகளால் பாதிக்கப் பட்டுள்ளன. மேற்கு கென்யா நாட்டில் பறவைகள் வேற்றுமை மற்றும் எண்ணிக்கை சிறப்பாக உள்ளது.
முன்னொரு காலத்தில், ட்ரிப்பனோ சொமியாசிஸ் (TRYPANOSOMIASIS) என்ற நோய் உருவாக்கும் செட் சீ (TseTse fly) பூச்சிகள், அதிகமாக இப்பகுதியில் இருந்து வந்ததால், மக்கள் நெருக்கம் இல்லாமல் இருந்தது. மேலும், சமீப காலத்தில், வேதிபூச்சி கொல்லிகள் மூலம் அங்கு பூச்சிகள் அழிக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயம் அங்குள்ள நிலங்களில் மேற்கொள்ளப்பட்டது. மக்கள் குடியேற்றமும் தொடர்ந்து ஏற்பட்டது. ஆனால் அங்கு காணப்பட்ட, வசித்து வந்த அரிய பறவையினங்கள் வெளியேறின.
இது பற்றிய ஆய்வுகளும்,, லாம்ப் வெ பள்ளத்தாக்கு, ருமா தேசிய பூங்கா, ஆகிய இடங்களில் நீள் கோட்டு (TRANSECT) முறையில் கணக்கெடுப்பும் நிகழ்த்தப்பட்டன. பறவைகளின் எண்ணிக்கை, இனம் கண்டறிய, அவற்றின் நேரடி தோற்றம், குரல் வழியாக மீண்டும், மீண்டும் பல முறை கணக்கெடுப்பு செய்து தவறு இல்லாமல் உறுதி செய்யப்பட்டது. நிலப் பயன்பாட்டு முறைகளில், அளவு மாற்றியமைத்தல், மண்ணின் தரம் மாறுதல்கள்,, மரக்காடுகள், புல்வெளிகள் அழிக்கப்படுதல், இயற்கையான பழ மரங்கள் மாற்றப்பட்டு, வேற்று இனங்கள் (Alien invasive species) ஆக்கிரமிப்பு போன்றவை பறவைகள் மறைவதற்கு முக்கிய காரணிகள் ஆகும்.
பறவைகள் எண்ணிக்கை அடர்வு, வேற்றுமை, மனித தொந்தரவு அதிகம் உள்ள பகுதியில் மிக குறைவாக உள்ள நிலை, இயற்கை பகுதிகளில் பறவை ஆய்வு முடிவுகளை ஒப்பு நோக்கும் போது தெளிவாகிறது. சில சிற்றினங்கள் வாழிடத்திற்கு ஏற்ற முறையில், தகவமைத்துக் கொண்டு வசிக்கும் நிலையும் அறியப்பட்டது. இடபெயர்ச்சி செய்ய இயலாத பறவை இனங்கள், மனித தொந்தரவு பகுதியில் உணவு, வாழிட பற்றாக்குறை, எதிரி விலங்கு பயமுறுத்தல் ஆகியவற்ற்றாலும் பாதிப்பு அடைகின்றன.
ஏனெனில் வலசை போகும் பறவைகள் இயல்பாக இயற்கை பகுதியில் சரண் அடைகின்றன. தரை வாழ், உணவு தேடும் பறவைகள் மிகுந்த பாதிப்பு அடைகின்றன. உயர் தர பெரும் நிலப்பகுதி வாழிடங்கள் குறைவாக ஆகிவிட்டது. எனவே வெவ்வேறு பறவை இனங்கள் குறைந்து போய்விட்டன. சரி! இந்நிலையினை மாற்ற வருங்காலத்தில் எப்படிப்பட்ட இயற்கை பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள முயற்சி செய்யலாம்!?… கொஞ்சம் சிந்திப்போம்…
மனித முன்னேற்றம், விவசாயம்,வளர்ச்சி த் திட்டங்கள் ஆகியவற்றுடன், பறவைகளும் காப்பாற்றப்பட, நீடித்த நிலையான வளர்ச்சி முறை (SUSTAINABLE DEVELOPMENT) பின்பற்றப் படவேண்டும்.
1.நிலப்பயன்பாட்டில், முறையான அறிவியல் கோட்பாடுகள் மேற்கொள்ளப் பட வேண்டும். வாழிட பண்புகளான, உணவு, தங்குமிடம் போன்றவையுடன் அவை இருக்க ஏற்ற பகுதி தேர்ந்தெடுக்கலாம்.
2.சூழல் பயன்பாட்டு கட்டண முறை (ECOSYSTEM PAYMENT SERVICES) பின் பற்றலாம். இயற்கைச் சூழல் பாதிக்கச் செய்யும் நிலையில், நுகர்வோர் உரிய தொகை செலுத்த செய்யவேண்டும்.
3.பறவைகள் எண்ணிக்கை, அவற்றின் வசித்தல், உணவு பாதுகாப்பு, பற்றிய கண்காணிப்பு உறுதி செய்ய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் நன்று.
4.விவசாயவளர்ச்சி மற்றும் இயற்கை பறவைகள் வாழிட பாதுகாப்பு வன பகுதிகள் ஒருங்கிணைந்து “வேளாண் காடுகள் (AGROFORESTRY) முறைகளை மேற்கொள்ள இயலும். விவசாய நிலங்களுக்கு இடையில் மரக்கன்றுகள் நட்டு வளர்ச்சி செய்யும் நிலை வரவேண்டும்.
5.இயற்கை சுற்றுசூழல் கல்வி, முக்கியத்துவம் மக்களுக்கு அவ்வப்போது அவசியம் தர முயற்சி செய்யலாம். ஆப்பிரிக்கா போன்ற “வளம் குறைவு மற்றும் மக்கள் பெருக்கம் உள்ள பகுதிகளில் இயற்கை பாதுகாப்பு, சற்று கடினம் என்றாலும், பருவ கால மாற்றம் (CLIMATE CHANGE) ஒரு புறம் அச்சுறுத்தும் நிலையில் பல்வேறு அறிவியல் பூர்வ நடவடிக்கை மேற்கொள்வதில் தயக்கம் கூடாது.
நம் இந்திய நாட்டிலும் இத்தகைய பல்வேறு இயற்கை வாழிடங்கள், வளர்ச்சி பணிகள் மூலம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே நாமும் இதனைப் பற்றி சிந்திக்கலாமே!!!
எழுதியவர்:
முனைவர் பா. ராம் மனோகர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.