விஞ்ஞானிகள் ஆப்பிரிக்காவின் மிகப் பழமையான கல்லறையைக் கண்டுபிடுத்துள்ளனர்: ஒரு சிறிய குழந்தை 78000 ஆண்டுகளுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்டது.
சுமார் 78,000 ஆண்டுகளுக்கு முன்பு, கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சமூகம் சுமார் 3 வயதுக் குழந்தையை அடக்கம் செய்துள்ளது. உடலைப் பூமியில் புதைப்பதற்கு முன்பு அதன் பராமரிப்பாளர்கள் ஓர் ஆழமற்ற குழியைத் தோண்டி, அதன் சிறிய உடலைச் சுருட்டி, ஒரு தலையணையில் தலையைச் சாய்த்து வைத்திருக்கக் கூடும். குழந்தையின் கல்லறை அகழ்வாய்வை விவரிக்கும் ஒரு புதிய ஆய்வு, ஆப்பிரிக்காவில் நவீன மனிதர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்ததற்கான மிகப் பழமையான சான்றினை வெளிப்படுத்துகிறது.
“இது அழகாக அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு அடக்கம் என்பதில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இருக்க முடியாது” என்று டர்ஹாம் பல்கலைக்கழகத்தின், பழங்கற்காலம் தொடர்பான தொல்பொருள் ஆய்வாளர் பால் பெட்டிட் கூறுகிறார், அவர் பண்டைய சவக்கிடங்கு நடைமுறைகளைக் கற்றவர். “இறந்தவர்களில் சிலரை அடக்கம் செய்யும் பாரம்பரியம், ஆப்பிரிக்காவில் ஹோமோ சேபியன்களுக்கு மத்தியில் ஒரு பொதுவான வழக்கத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என்பதை இது காட்டுகிறது.”
தொல்லியல் பதிவுகளின்படி சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்ட அடக்கம் என்பது மிகவும் அரிது. முன்னதாக, ஆப்பிரிக்காவின் மிகப் பழமையான அடக்கம் என்று சந்தேகிக்கப்படுபவை: 74,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தென்னாப்பிரிக்காவின் எல்லைக் குகை மற்றும் 68,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்தின் தராம்சாவில் உள்ளவை. யூரேசியாவில், 1,20,000 ஆண்டுகள் பழமையான நியண்டர்தால்கள் மற்றும் நவீன மனிதர்களின் புதைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் சம்பந்தப்பட்ட மக்கள் இன்று வாழும் மனிதர்களுக்குச் சிறிதளவு பங்களிப்புச் செய்துள்ளனர்.

தென்கிழக்குக் கென்யாவின் கடற்கரையோரத்தில் ”பங்கா யா சைடி” என்றொரு குகையில் நீண்டு கொண்டிருக்கும் பாறையின் கீழ் 2013 ஆம் ஆண்டில் புதிய கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாளர்கள் தங்கள் அகழிகளில் ஒன்றின் சுவர்களுக்குள் ஒரு அசாதாரணமான, குழி வடிவப் படிவத்தைக் கண்டனர். அவர்கள் அதை பரிசோதித்தபோது, ஒரு சிறிய எலும்பு விழுந்தது – உடனடியாகப் பொடியாக மாறியது. ஓர் அசாதாரணமான நுட்பமான புதைபடிவத்தைக் கண்டறிந்ததை உணர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள், அடுத்த 4 ஆண்டுகளை மிகுந்த கவனமுடன் தோண்டி, எளிதில் உடையக்கூடிய எலும்புகளை பிளாஸ்டர் கொண்டு பாதுகாப்பதில் செலவிட்டனர். கென்யாவின் தேசிய அருங்காட்சியகத்தில் இரண்டு பற்கள் பின்னர் பகுப்பாய்வு செய்யப்பட்டன, அது உடலை ஒரு மனிதக் குழந்தை என்று தெளிவாக அடையாளம் காட்டியது.
ஆய்வாளர்கள் பின்னர் தொல்லெச்சங்களை மேலதிகப் பகுப்பாய்வுகளுக்காக ஸ்பெயினின் புர்கோஸில் உள்ள மனிதப் பரிணாம வளர்ச்சிக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஓர் ஆய்வகத்திற்கு அனுப்பினர். கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராஃபியைப் பயன்படுத்தி எலும்பு மற்றும் தூசு அடுக்குகளின் வழியாக மெய்நிகர் வகைப்படுத்தல் மூலம், விஞ்ஞானிகள் எலும்புகளை பகுப்பாய்வு செய்தனர். குழந்தை எப்படி இறந்தது என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் அது இருந்த நிலையைப் பார்க்கும்போது கவனிப்பாளர்கள் அதை ஓர் ஆழமற்ற குழிக்குள் வைப்பதற்கு முன்பு அதை ’கரு நிலையில்’ வேண்டுமென்றே சுருட்டியிருப்பதாகத் தெரிகிறது, என விளக்குகிறார் ஆய்வின் மூத்த எழுத்தாளர் மைக்கேல் பெட்ராக்லியா என்னும் மனித வரலாற்று அறிவியலுக்கான மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட்டின் தொல்பொருள் ஆய்வாளர். எலும்புக்கூட்டின் முறுக்கப்பட்ட தோள்பட்டை அது ஒரு கவசம் போன்ற பொருளில் இறுக்கமாக மூடப்பட்டிருப்பதைக் குறிக்கிறது, மேலும் மண்டை ஓடு திரிந்து அதன் கல்லறைக்குள் வளைந்திருக்கும் விதம் மெதுவாகச் சிதைந்துபோன ஒருவித தலையணையில் முட்டுக் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.
ஒருவகைத் தொழில்நுட்பம் (Optically Stimulated luminescence – OSL) படிவுகள்(வண்டல்கள்) கடைசியாக எப்பொழுது சூரிய ஒளியில் இருந்தது என்பதை அறிவதன் மூலம் தொல்லெச்சங்களின் காலத்தை அறிய விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது. அந்தவகையில் மேற்கண்ட தொல்லெச்சங்கள் 78,000 ஆண்டுகளுக்கு முன்பு புதையுண்டவை என்பதைச் சோதனை வெளிப்படுத்தியது. ஆப்பிரிக்காவில் அறியப்பட்ட மிகப் பழமையான மனிதப் புதைகுழியாக இது திகழ்வதாக, ஆராய்ச்சியாளர்கள் நேச்சர்(Nature) இதழில் குறிப்பிடுகின்றனர். தேசிய அருங்காட்சியகங்களின் தொல்பொருள் ஆய்வாளரும், ஆய்வின் இணை ஆசிரியர்களில் ஒருவருமான இம்மானுவேல் என்டீமா, சுவாஹிலி(Swahili) மொழியில் குழந்தைக்கு Mtoto என்று பெயரிட்டார். பின்னர் தொல்லெச்சங்கள் தேசிய அருங்காட்சியகங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

”அணிகலன் பயன்பாடு மற்றும் காவிக்கல்(ochre) நிறமி ஓவியம் உள்ளிட்ட சிக்கலான குறியீட்டு நடத்தைகள், சுமார் 1,25,000 முதல் 1,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, நம் இனத்தின் பிறப்பிடமான ஆபிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படுவதால், மனித அடக்கம் கூட அங்கேயே தோன்றி ஆரம்பகாலக் குடியேறிகளுடன் உலகம் முழுவதும் பரவியிருக்கக்கூடும் என்று நினைப்பது நியாயமானதே” என்கிறார் பெட்ராக்லியா. ”இருப்பினும், நியண்டர்டால்கள் தாங்களாகவே இறந்தவர்களை அடக்கம் செய்யத் தொடங்கினார்களா அல்லது அடக்கம் தொடர்பான நடத்தைகளின் வேர்கள், மனிதர்கள் மற்றும் நியண்டர்டால்களின் பொதுவான மூதாதையரிடம் செல்கின்றனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை” என்கிறார்.
இத்தகைய பழங்கால அடக்கங்களில் கிட்டத்தட்ட பாதி குழந்தைகள் சம்பந்தப்பட்டவை என்று பெட்ராக்லியா சுட்டிக்காட்டுகிறார். இறக்கும் இளைஞர்கள் அப்போது காணப்பட்டிருக்கலாம், இப்போது, குறிப்பாக துயரமானது, மரணத்தை நினைவுகூர சமூகத்தை தூண்டுகிறது. “இங்கே நம்மிடம் ஒரு குழந்தை உள்ளது, கால்கள் மார்பு வரை இழுக்கப்படுகின்றன, ஒரு சிறிய குழியில் – இது கிட்டத்தட்ட கருப்பையைப் போன்றது” என்று பெட்ராக்லியா கூறுகிறார்.
Mtoto வின் அடக்கத்தில் இருந்த கவனிப்பின் அளவு ஒரு குழந்தையின் மரணம் மிகவும் துன்பகரமானது என்பதைக் குறிக்கிறது, என ஒப்புக்கொள்கிறார் மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளர் ஜூலியன் ரியெல்-சால்வடோர். “குழந்தையின் உடலைப் பாதுகாக்க மக்கள் மிகுந்த முயற்சி செய்வர், இது அதன் சிதைவை மெதுவாக்கும் மற்றும் தோட்டிகளிடமிருந்து பாதுகாக்கும், இந்த எண்ணம் மக்கள் தங்கள் குழந்தைகள் மேல் ஆழமாக அக்கறை காட்டினர் என்ற உண்மையை பிரதிபலிக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.
”இந்தப் பண்டைய மனிதர்கள் அடக்கம் செய்யப்பட்டதன் முக்கியத்துவத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறியத் தொடங்குவதற்கு முன்னர் இப்பகுதியிலிருந்தும் இக்காலப்பகுதியிலிருந்தும் மேலும் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்”, என்று லண்டனில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தின் மானுடவியலாளர் லூயிஸ் ஹம்ப்ரி கூறுகிறார். இருப்பினும், பங்கா யா சைடியில் அடக்கம் செய்யப்பட்டதன் கனிவு “தனிப்பட்ட இழப்பின் வெளிப்பாடு” என்பதை வெளிப்படுத்துகிறது-இது காலத்தை மீறும் ஒரு துக்கம், என்கிறார்.
(மைக்கேல் பிரைஸ் கலிபோர்னியாவின் சான் டியாகோவில் ஓர் அறிவியல் பத்திரிகையாளர்)
நன்றி: ‘Science’ 05.05.2021
https://www.sciencemag.org/news/2021/05/scientists-unearth-africa-s-oldest-burial-small-child-laid-rest-78000-years-ago