பருவப் பெண் தலையில் குடம் சுமந்து செல்வதைப்போல், தங்கள் இனத்திற்கே உரிய நேர்த்தியில் வரிசையாக இரையை சுமந்து சென்ற எறும்புகளையே கவனித்துக் கொண்டிருந்த ஆரண்யாவை காதில் பளார் என்று விழுந்த லாரியின் கனத்த சத்தம் கண் சிமிட்ட நினைவூட்டியது.
தனது கிழிந்த எலுமிச்சை நிற ஆடைக்கு தன் தையலால் புதிய பூ போட்டு கொண்டிருந்த தந்தையை நோக்கி, ”ப்பா, இந்த எறும்புக எல்லாம் எந்த ஸ்கூல் போகுது?” என்று கேட்ட ஆரண்யாவை புன்னகையோடு நோக்கினார் செல்வம்.
“ஏன் மா இப்படி கேக்கிற? ” என்று மகளை தன் மடியில் அமர வைத்து கொண்டே கேட்டார்.
“இல்லப்பா, அங்க பாருங்க எறும்புக எவ்வளவு அழகா போகுதுன்னு. அதான் யாரு சொல்லி கொடுத்ததுன்னு தெரிஞ்சுக்க”.
மகளின் மழலையின் அழகை ரசித்துக் கொண்டே, ” மழை வர மாதிரி இருக்குன்னு அடுத்த வேளைக்கு தேவையான சாப்பாட்ட முன்னாடியே எடுத்து வீட்டுக்குள்ள வைக்க போகுதுங்க. இது எறும்புக்கே உண்டான இயற்கை பழக்கம்” என்று மகளுக்கு எதார்த்தத்தை எடுத்துக் கூறினார்.
அப்பா வீடுன்னா எப்படி இருக்கும் என்று மகளின் கேள்விற்கு பிறகு தான் செல்வமற்ற செல்வம் என்பதை உணர்த்துவதை உறுதி செய்யும் விதமாக அந்த சாலையோர மரத்தின் நிழலே தன் வீடாக ஆகிப்போனது நினைவிற்கு வந்தது.
தன் தார்ப்பாய் மாளிகையின் விட்டத்தின் வழியாக மேகக்கூட்டத்தின் பயணத்தை பாதி நினைவில் ரசித்து கொண்டு இருந்த மனைவியை கண்டபோது சிவனின் ருத்ரதாண்டவம் தன் நெஞ்சில் நிகழ்வது போல் கனத்தது. ஆமைக்கும், நத்தைக்கும், குருவிகளுக்கும் ஓர் இடம் இருப்பதை எண்ணி தன் மனித பிறவியை சபித்துக் கொண்டான்.
மழை வெயிலுக்கு ஒதுங்க இடம் இல்லைனாலும் மனைவி மக்கள நிம்மதியா ஒறங்க வைக்க ஒரு குடிசை கூட இல்லாம இத்தன நாள் என்ன பொழப்பு பொழச்சேன்னு நெனச்சா பிதாமகர் பீஷ்மர் மேல பாஞ்ச அத்தன அம்பும் என் ஒத்த ஆளு மேல பாஞ்ச மாதிரி ஒடம்ப கிழிச்சு கொடையுது. இங்க கண்ணு முன்னாடி இருக்கவங்க கால் வயித்துக்கஞ்சி இல்லாம நடு ரோட்டுல படுத்து நாள கழிச்சுட்டு இருக்கப்ப, எப்பவோ கண்டுபிடிக்க போற செவ்வாயில இடத்த வாங்கி என்னத்த வாழ போறாங்கன்னு எனக்கும் ஒன்னும் வெளங்கல.
மனுசனுக்கு மனுசன் ஒதவனுங்கறது தான இயற்கை. ஆனா இங்க நம்மள நிமிந்து பாக்க கூட மனசில்லாம அவசரமா எல்லாம் எத தேடி போறாங்கன்னு புரியல. நம்ம கிட்ட ஒன்னு இருக்கும் போது அது இல்லாதவன் எப்படி கஷ்டபடுவான்னு யாராச்சும் யோசிக்கறாங்களா. செருப்பில்லாதவன் கால் இல்லாதவன பாத்து மனச தேத்திட்ட கதையா, பழைய வீட்டுக் காரனும் குடிசை வீட்டுக் காரனும் நம்மள பாத்து, வீடுன்னு நமக்கு ஒன்னு இருக்குன்னு அவனே தேத்திக்கிறான். அதுக்கு மேல இருப்பவன் இவங்கள பாத்து சமாதானம் ஆகறான். இப்புடி அவன் அவனே கீழ இருக்றவன பாத்து ஆறுதல் தேடிட்டு இருந்தா அப்பறம் கீழ இருக்றவன் என்னைக்குத்தான் ஒரு கோடாச்சு அழுச்சு அடி எடுத்து வைக்கிறது.
மனதில் இருப்பதை எல்லாம் இவ்வாறாக தன்னை ஆள்பவளான அந்த அரை நினைவு பேதையிடம் புலம்பலாக இறக்குமதி செய்து கொண்டு இருந்தார் தன் மகளுக்கு மட்டுமே செல்வந்தரான செல்வம்.
இதில் எதுவும் அவள் காதில் விழுகப்போவதும் இல்லை, விழும் ஒரிரு வார்த்தைகளில் துளி பலனும் இல்லை. ஆனாலும் தன் வேதனையை தேவையை அவளிடம் சேர்த்தால் ஏதாவது நன்மை பயக்கும் என்று நம்பிக்கை செல்வத்திற்கு.
இதையெல்லாம் கண்டும் ஒன்றும் செய்ய இயலாததாய் வழக்கம் போல கடந்து சென்றது அந்த மரத்தில் குடும்பமாக பல நாட்கள் வாழ்ந்து வரும் ஒரு கூட்டு கிளி.
********