தியா – சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான நாவல் – நூல் மதிப்புரை

Diya
Diya

விஷ்ணுபுரம் சரவணன் முகநூல் பதிவிலிருந்து…

தியா – சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான நாவல்.

தியா, கேஜி வகுப்புகள் முடிந்து, ஒன்றாம் வகுப்புச் செல்லப்போகிறாள். அதற்கு முதன்நாளிலிருந்து அவளுக்குத் தன் பள்ளியைப் பற்றி, தன் ஆசிரியையைப் பற்றி பெரும் கவலை வந்துவிடுகிறது. கேஜி வகுப்பில் பாடம் நடத்திய ஆசிரியையைப் போல 1-ம் வகுப்பிலும் வர வேண்டும் என்ற ஏக்கம் ஒரு பக்கம். தன்னிடம் எப்போதும் சண்டையிழுக்கும் வகுப்பு மாணவியைப் பற்றிய அச்சம் ஒரு பக்கம் என்றும் அவளுக்கு நெருக்கமான தோழி ஒருத்தியும் இருக்கிறாள் என்ற ஆறுதலாகவும் அன்றைய இரவைத் தவிப்புடன் கழிக்கிறாள்.

அடுத்த நாள், தியா பயந்ததைப் போலவே 1-ம் வகுப்பு எதிரியாகத்தான் வந்துதொலைத்திருக்கிறது. தோழி வேறு பிரிவுக்குச் செல்வது ஒரு துயரம் என்றால், சண்டையிழுக்கும் பெண் அருகில் உட்காருவது பெருந்துயரம். போதாக்குறைக்கு டீச்சரும் இணக்கமாயில்லை. அடுத்து வரும் நாட்களில் மனதாலும் உடலாலும் சோர்வுற்று விடும் அவளுக்கு நிம்மதி அளிக்கும்படியான பெரும் பரிசு அளிக்கிறார்கள் பெற்றோர். அது என்னவென்று புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு சிறுமியின் கண்ணோட்டத்தில் கல்வி சார்ந்த சிறு சிறு அம்சங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. அச்சம் என்பது ஒரு குழந்தையை எப்படி முடக்கும் என்பதை இந்த நாவலைப் படிக்கையில் உணர்ந்துகொள்ளலாம். மேலும், கல்வி குறித்து உரையாடல்களில் குழந்தைகளின் கருத்துகள் கொஞ்சமும் கேட்கப்படாமல் தூக்கியெறியப்படுகின்றன என்பதையும் அறைந்து சொல்கிறாள் தியா.

கல்வி என்பது கட்டட வசதிகள், ஷூ, டை, நுனி நாக்கு ஆங்கிலம் அல்லது வேறு மொழியால் தீர்மானிக்கப்படுவது அல்ல. கற்றுக்கொடுப்பவரின் உள்ளார்ந்த ஆர்வமும், அந்த ஆர்வத்தைக் கற்றுக்கொடுப்பவருக்கு கடத்தும்போதுதான் கல்வி நிறைவடைகிறது என்று தியா நமக்கு பாடம் எடுக்கிறாள். கற்றல் வெளி என்பது கட்டுப்பாடுகளும் கண்டிப்புகளும் சூழ்ந்திருக்க வேண்டியதல்ல. கதைகளும் பாடல்களும் விடுகதைகளும்தான் நிறைந்திருக்க வேண்டும் என்பதை தியா சத்தமாகச் சொல்கிறாள்.

பெற்றோர்கள் படிக்கையில் கல்வி குறித்த ஓர் உரையாடலையும், சிறுவர்கள் படிக்கும்போது பள்ளி நண்பர்களோடு விளையாடும் தன்மையோடும் எழுதப்பட்டிருக்கும் தியா நாவலை எல்லோரும் அவசியம் வாசிக்க வேண்டும். மிகக் குறிப்பாக, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இதை வாசித்து, தங்கள் பெற்றோர் – ஆசிரியர் சங்க கூட்டங்களில் பகிர வேண்டும். அதற்கான விஷயங்களை தியா அளித்திருக்கிறாள்.

மலையாளத்தில் பி.வி.சுகுமரன் எழுதிய நாவலை, யூமா வசுகி அண்ணன் சிறப்பாக தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

தியா / பி.வி. சுகுமாரன் / தமிழில்: யூமா வாசுகி / புக் ஃபார் சில்ட்ரன் வெளியீடு, சென்னை.