Book Day | டி.கே.ரங்கராஜன் மாநிலங்களவை உரைகள் - கடிதங்கள் | Book Review

டி.கே.ரங்கராஜன் மாநிலங்களவை உரைகள் – கடிதங்கள் : நூலறிமுகம்

ஜனநாயக சக்திகளுக்கு ஒரு கையேடு
  

சிபிஐ (எம் ) கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்த தோழர் டி கே ரங்கராஜன் அவர்கள் மாநிலங்களவையில் ஆற்றிய உரைகள், அவர் பல்வேறு அமைச்சர்களுக்கு எழுதிய கடிதங்கள் ஆகியவற்றைத் திரு ச.வீரமணி தமிழாக்கம் செய்துள்ளார். அதைப் பாரதி புத்தகாலயம் நூலாக வெளியிட்டு இருக்கிறது. 310 பக்கங்கள் கொண்ட அந்த நூலில் அவர் ஆற்றிய உரைகள் கடிதங்கள் என 104 விஷயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தோழர் சீத்தாராம் யெச்சூரியும், ஜி. ராமகிருஷ்ணன் அவர்களும் அணிந்துரையும், முகவரையும் அளித்துள்ளனர். தோழர் டி .கே. ஆருக்கு உதவியாளராக இருந்த ராமசுப்பிரமணியன் எழுதிய முகவுரையும் இதில் இடம் பெற்றிருக்கிறது.

 

டி. கே. ரங்கராஜன் - தமிழ் விக்கிப்பீடியா
                           தோழர் டி.கே.ரங்கராஜன்

இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளவற்றில் 21 உரைகள் நேரடியாகத் தொழிலாளர்கள், விவசாயிகள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து உள்ளன. அவரது கன்னி உரையே தொழிலாளர் நலச் சீர்திருத்தங்கள் தொழிலாளர் அமைச்சகச் செயல்பாடுகள் குறித்ததாக அமைந்திருக்கிறது. திருப்பூர் தொழிலாளர் பிரச்சனை; ஜிப்மர் ஊழியர்கள் பிரச்சனை; ஏழை விவசாயிகளுக்கு மின்சாரம் கிடைப்பதற்கான கோரிக்கை; அப்ரண்டீஸ் சட்ட முன்வரைவின் மீதான உரை; கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைகள் தொடர்பாகவும், விவசாயி நெருக்கடியும் விவசாயிகளின் அவலை நிலை தொடர்பாகவும், பயிர் காப்பீடு தொடர்பாகவும், கொப்பரை தேங்காய்க்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பது தொடர்பாகவும் ஆற்றிய உரைகள் – இப்படி மற்றவர்கள் அதிகம் கவனம் செலுத்தாத பல பிரச்சனைகளை தோழர் டி. கே. ரங்கராஜன் பேசியிருக்கிறார். தலித் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாகப் பலமுறை அவர் பேசியிருக்கிறார்.

தோழர் டி.கே.ஆர் அவர்கள் முதல் முறை மாநிலங்களவைக்குச் சென்றபோது கொதி நிலையில் இருந்த ஈழத் தமிழர் பிரச்சினை குறித்தும் அவர் பலமுறை பேசியிருக்கிறார்.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது தொடரும் அட்டூழியங்கள், அங்கே அவர்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டியதன் அவசியம், இலங்கையில் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் – எனப் பலவற்றைக் குறித்தும் அவர் கவனத்தை ஈர்த்திருக்கிறார். கௌரி லங்கேஷ் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்களைப் படுகொலை செய்வதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் எழுப்பி இருக்கிறார்.

அவரது கன்னிப் பேச்சின் போது நீதித்துறை குறித்த தன்னுடைய கவலையை எழுப்பி இருக்கிறார். “1960களில் 1970களில் 1980களில் பிறப்பிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருந்தன. அந்தத் தீர்ப்புகளில் சமூகநீதியின் கூறுகள் இருந்தன. அப்போது வந்த எந்த தீர்ப்பை வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் – அது நீதியரசர் சின்னப்ப ரெட்டி பிறப்பித்த தீர்ப்பாக இருந்தாலும் சரி, அல்லது நீதியரசர் விஆர் கிருஷ்ணயர் பிறப்பித்த தீர்ப்பாக இருந்தாலும் சரி, அந்தத் தீர்ப்புகள் அனைத்தும் இன்றைக்கும் கூட முத்திரை பதித்திடும் தீர்ப்புகள் ஆகும்” எனக் குறிப்பிட்டு விட்டு தற்போது நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள் எப்படி தொழிலாளர்கள் உரிமைகளைப் பாதிக்கின்றன என அவர் விவரிக்க முற்பட்டபோது மாநிலங்களவை துணைத்தலைவராக இருந்த பேராசிரியர் பி.ஜே. குரியன் குறுக்கிட்டு “நீங்கள் நீதித்துறையை விமர்சிக்கக் கூடாது. இது அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. எச்சரிக்கையாக இருங்கள். இது உங்கள் கன்னிப் பேச்சு. நீங்கள் தீர்ப்புரையோடு ஒத்துப் போகாமல் இருக்கலாம் அதனை விமர்சனம் செய்யக் கூடாது” என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

தனது கன்னிப் பேச்சில் முறைசாரா தொழிலாளர் பிரச்சினை குறித்துப் பேசியிருக்கும் தோழர் டி. கே. ஆர் “மத்திய அரசாங்கம் சிறிய அளவிலான தொழில் மற்றும் முறைசாரா தொழில்துறைக்காக அர்ஜுன் சென் குப்தா தலைமையில் ஒரு குழுவை நியமித்தது அக்குழு தன் அறிக்கையை அளித்து இருக்கிறது. எனினும், அரசாங்கம் அதனை மறுவரைவுக்கு உட்படுத்த வேண்டும் என்று கருதுகிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நீங்கள் அறிமுகம் செய்த சட்ட முன் வடிவுடன் எவரும் ஒத்துப் போகவில்லை. நாடாளுமன்ற நிலைக்குழு அதை நிராகரித்தது. பல லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு உதவிடும் விதத்தில் ஒரு சட்ட முன் வடிவை அரசாங்கம் கொண்டுவர வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் து. ராஜா அவர்கள் ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். அதன் மீதான விவாதத்தில் கலந்து கொண்ட தோழர் டி. கே .ஆர் அவர்கள், “ மரண தண்டனை என்பது இந்தியாவில் மட்டுமல்ல மற்ற இடங்களிலும் கூட ஒரு ஆழமான பிரச்சினையாக மாறியிருக்கிறது. நாம் 21ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். இது ஒரு நவீன உலகம் ஆகையால் நாம் மக்களை சரி செய்ய வேண்டி இருக்கிறது. உலகில் 140க்கும் மேற்பட்ட நாடுகள் இதுவரை மரண தண்டனையை ஒழித்துக் கட்டி விட்டன. மரண தண்டனை ஒழிப்பு மக்களால் வரவேற்கப்படும்” என்று பேசியிருக்கிறார்.

Comrade TKR (TK Rangarajan) is a very senior party member. An experienced leader of the trade union movement. He served for decades in various leading role

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்ட போது அது தொடர்பாகப் பேசிய தோழர் டி. கே. ஆர் அவர்கள், “ நம் நாட்டில் தமிழ் மொழியும் ஒரு பழமையான மொழி. செம்மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் மட்டுமின்றி ஐந்து மொழிகள் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எனவே செம்மொழிகள் வாரம் என்று கொண்டாட வேண்டும்” என கோரிக்கை விடுத்திருக்கிறார்.

மாநிலங்களவையில் சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்பட்ட போது அது தொடர்பான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தோழர் டி.கே.ஆர் அவர்கள், “பெண்களின் முன்னேற்றம் குறித்து தந்தை பெரியார் எழுதியவை, பேசியவை அனைத்தும் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் பெண்களின் முன்னேற்றத்திற்காக தந்தை பெரியார் எப்படி பாடுபட்டார் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

டாக்டர் அம்பேத்கரின் 125 ஆவது பிறந்தநாள் தொடர்பான விவாதத்தில் பங்கேற்றுப் பேசும்போது ‘ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் மாநிலங்களுடைய உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியமேயொழிய தனியாக இந்தியா என்று ஒன்றும் கிடையாது. ஆகவே இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும் என்று சொன்னால் மாநிலங்களின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் அதை பாழ்படுத்திய பிறகு நீங்கள் அம்பேத்கரைப் புகழ்ந்து பேசுவதில் பிரயோஜனமே இல்லை” என்று பாஜக அரசின் இரட்டைவேடத்தை அவர் ல்டுத்தியிருக்கிறார்.

“தலித்துகள் பழங்குடியினர் நாடு முழுவதும் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் எல்லா மாநிலங்களிலும் இதுதான் நிலைமை. நான் வாழ்கின்ற தமிழகத்திலும் தீண்டாமைக் கொடுமை என்பது இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு வடிவத்தில் மட்டுமல்ல பல வடிவங்களில் அது தொடர்கிறது” எனக் குறிப்பிட்டு அவர் பேசிய உரையின் சில பகுதிகள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டு இருக்கின்றன.

தோழர் டி கே ஆரின் உரைகள் நாடாளுமன்றத்துக்கு புதிதாக செல்லும் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் உதவக்கூடியவையாகும். இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் பலவும் அவர் சார்ந்த சிபிஐ (எம்) கட்சியைச் சாராத உறுப்பினர்களுக்கும் உடன்பாடு உள்ளவை தான். அவர் பேசியதில் எனக்கு உடன்பாடில்லாத ஒரு விஷயத்தைப் பற்றி இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் சட்ட மேலவை உருவாக்க வேண்டும் என்று 2010ம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையிலான அரசு ஒரு சட்டத்தை இயற்றி அதை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக அனுப்பியது. அதன் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தோழர் டி. கே. ஆர் அவர்கள், “1986 இல் சட்டமன்ற மேலவை சரியாகவே ஒழித்துக் கட்டப்பட்டது. ஆளுநரே தேவையில்லை, அந்தப் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறபோது ஏன் மேலவை மட்டும் வேண்டும் என்று விரும்புகிறார்கள்? என எனக்குத் தெரியவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார். “மொத்தமுள்ள 28 மாநிலங்களில் ஆறு மாநிலங்கள் மட்டுமே சட்டமன்ற மேலவையைப் பெற்றிருக்கின்றன. ஆகையால் என்னைப் பொறுத்தவரை சட்டமன்ற மேலவை தேவையில்லை” என்று குறிப்பிட்டதோடு சட்டமன்ற மேலவை என்பது “ஒரு ஓய்விடம்” என்றும் கேலி செய்திருக்கிறார். அந்த சட்ட முன் வடிவை அவர் எதிர்ப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்தக் கருத்தோடு நாம் உடன்பட முடியவில்லை. சட்ட மேலவையை உருவாக்குவதற்கான சட்டம் 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட போது நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். அந்த விவாதத்திலும் பங்கேற்று ஆதரித்துப் பேசினேன். அதுமட்டுமல்லாமல் ஜூனியர் விகடன் இதழில் அது தொடர்பாக பத்தி ஒன்றையும் எழுதினேன்.

தமிழகத்தின் சட்டமன்ற வரலாற்றில் சட்ட மேலவைக்கு முக்கியமான பங்கு உண்டு. இந்திய அரசு சட்டம் 1935 இன் படி முதன்முதலில் சட்டமேலவை உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு மேலவை என்கிற பெயரில் ஒரு அவை இருந்தபோதிலும் தற்போது பல மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ள மேலவைக்கும் அதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முன்பிருந்த மேலவையின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல. அதன் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவார்கள். 1937ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமைக்கப்பட்ட மேலவையானது சட்டப்பேரவையைப் போல ஐந்தாண்டுக்கு ஒருமுறை கலைந்துவிடக்கூடியதாக இல்லாமல் நிலைத்திருக்கக்கூடியதாக அமைக்கப்பட்டது. மேலவையின் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பதவி இழந்து, வேறு உறுப்பினர்கள் பதவி ஏற்பார்கள் என்ற நடைமுறை அப்போதுதான் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக கொண்டு வரப்பட்ட மேலவையில் குறைந்த பட்சம் 54 உறுப்பினர்கள் இருப்பார்கள் என வரையறுக்கப்பட்டது. அந்த நடைமுறை 1952ஆம் ஆண்டு வரை நீடித்தது.
அதுவரை 54 உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வந்த மேலவைக்கு 1952ஆம் ஆண்டுக்குப் பிறகு 72 உறுப்பினர்கள் என எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.

தமிழகத்தின் முக்கியமான தலைவர்கள் பலரும் சட்டமேலவையில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். மேலவையின் விதிகளின்படி அதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிற உறுப்பினர் அமைச்சராக நியமிக்கப்படலாம் என வரையறுக்கப்பட்டிருந்ததால் மூதறிஞர் ராஜாஜியும், பேரறிஞர் அண்ணாவும் சட்டமேலவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தான் முதலமைச்சர்களாகப் பதவி வகித்தனர்.

நாடாளுமன்றத்தில் மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக மாநிலங்களவை இருப்பதை நாம் அறிவோம். அதுவும் ஒரு மேலவைதான். நமது நாட்டில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளிலும் இப்படியான இரு அவைகள் நடைமுறையில் இருக்கின்றன. நேரடியாக உறுப்பினர்களை மக்கள் தேர்வு செய்து அனுப்புகின்ற அவை ஒன்று. பல்வேறு தரப்பினரை பிரதிநிதித்துவம் செய்வதற்கென தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்படுகிற மேலவை மற்றொன்று. அமெரிக்காவில் இப்படி இரு அவைகள் இருந்தபோதிலும், அந்த இரு அவைகளின் உறுப்பினர்களும் நேரடியாகத் தேர்தல் மூலமே தேர்ந்தெடுக்கப்படுகிற நிலை உள்ளது. அத்தகைய நடைமுறை உள்ள நாடுகள் மிகக்குறைவுதான்.

தமிழகத்தில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த சட்டமேலவையானது பல்வேறு சிறப்பு வாய்ந்த விவாதங்கள் நடைபெற்ற பெருமைக்கு உரியதாகும். பேரவையில் நடைபெற்ற விவாதங்களை விடவும், மேலான தரத்தில் சட்டமேலவை விவாதங்கள் அமைந்திருந்ததை நாம் அறிய முடிகிறது. கட்சிகள் காரசாரமாக மோதிக்கொள்ளும் சட்டப்பேரவையைப் போலல்லாது நயத்தக்க நாகரீகத்தைப் பேணுகிற அறிவார்ந்த விவாதங்களை நடக்கிற மன்றமாக மேலவை விளங்கியது. இதை சுட்டிக்காட்டுவதற்குத்தான் பேரவையையும், மேலவையையும் ‘கப் அண்டு சாசர்’ என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் வர்ணித்தார். கப்பிலே இருக்கும் தேனீர் சூடாக இருந்தால் அதை ஆற்றிக் குடிப்பதற்கு எப்படி சாசரைப் பயன்படுத்துகிறோமோ அப்படி சூடு பறக்கும் விவாதங்கள் நடைபெறும் பேரவையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட கருத்துகளை ஆற, அமர விவாதிக்கும் இடமாக மேலவை விளங்குகிறது என்ற பொருளில்தான் அவர் அப்படி கூறினார். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மேலவை எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் 1986ஆம் ஆண்டு அவசர அவசரமாகக் கலைக்கப்பட்டது.

மேலவை கலைக்கப்பட்டதற்கான காரணத்தை அறியும்போது அதை மீண்டும் கொண்டுவர வேண்டியதன் தேவையை நாம் உணரலாம். 1984ஆம் ஆண்டு ஈழப் பிரச்சனையை முன்வைத்து அன்று எதிர்க்கட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் அவர்களும், பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களும் தமது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தார்கள். அதன்பிறகு கலைஞர் அவர்கள் மேலவைக்கு முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவர் மேலவை உறுப்பினராகப் பதவி ஏற்றார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் எம்.ஜி.ஆர். மேலவையையே கலைக்கின்ற முடிவுக்கு வந்தார் என்பது அரசியல் வரலாறு தெரிந்தவர்களுக்கு நன்கு புரியும். அன்று சமூகத்தின் பல தரப்பினரும் வேண்டாம் என்று சொல்லியும்கூட கேட்காமல் எம்.ஜி.ஆர். விடாப்பிடியாக மேலவையைக் கலைக்கின்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். 1986ஆம் ஆண்டு மே மாதத்தில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்துக்கு அதே ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். அப்போது மத்திய அரசோடு இணக்கமான உறவை கொண்டிருந்த காரணத்தால் மிக விரைவாக அந்த சட்டத்துக்கான ஒப்புதலை எம்.ஜி.ஆரால் பெறமுடிந்தது.

எம்.ஜி.ஆர். எடுத்த முடிவை மாற்றுவதில் உறுதியாக இருந்த தி.மு.க. 1989ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக சட்டப்பேரவையில் அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. மீண்டும் சட்டமேலவையை உருவாக்க வேண்டும் என்ற அந்தத் தீர்மானம் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக டெல்லிக்கு அனுப்பப்பட்டது. அப்போது இருந்த ஒன்றிய அரசு நிலையற்றதாக இருந்த காரணத்தினால் தமிழக அரசின் தீர்மானத்துக்கு உடனடியாக ஒப்புதல் பெறமுடியவில்லை. 1990ஆம் ஆண்டு மே மாதத்தில் மாநிலங்களவை அதற்கான ஒப்புதலை வழங்கியது. அதன்பிறகு நாடாளுமன்ற மக்களவைக்கு அந்தத் தீர்மானம் அனுப்பப்பட்டது. அதனிடையில் தி.மு.க. ஆட்சியை கலைக்க வேண்டுமென்று இங்கிருந்த எதிர்க்கட்சியினர் நெருக்குதல் கொடுத்த காரணத்தாலும், அவர்களுக்கு ஏற்ற ஆட்சியாளர்கள் அங்கே பொறுப்பேற்ற காரணத்தாலும் அந்தத் தீர்மானம் நாடாளுமன்ற மக்களவையில் …

விவாதத்தின் இறுதியில் பேசிய அம்பேத்கர் அதற்குப் பின்வருமாறு அதற்குப் பதிலளித்தார் : “ மேலவைகளில் பட்டியலின மக்களுக்குப் பிரதிநிதிதுவம் வேண்டும் என்ற பிரச்சனையை எனது நண்பர் முனுசுவாமி பிள்ளை எழுப்பியிருக்கிறார். அரசியல்சட்ட வரைவுக்குழுவானது ஆலோசனைக்குழுவின் அறிக்கைக்குக் கட்டுப்பட்டது. 1947 ஆகஸ்டு மாதத்தில் இந்த அவையின் முன்னால் வைக்கப்பட்ட அந்த அறிக்கையில் பின்வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன:

1) மக்கள் தொகையின் அடிப்படையில் மத்திய அவையிலும், மாகாண அவைகளிலும் முஸ்லிம்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்.

2) இந்திய அரசு சட்டம் 1935 ன் பட்டியல் 1 ல் விவரிக்கப்பட்டுள்ளதும் பட்டியலின சாதிகள் எனக் குறிக்கப்பட்டுள்ளதுமான பிரிவினரும் அதே உரிமைகளைப் பெறுவார்கள்.

இதன் பொருள் என்னவென்றால் மத்திய, மாகாண கீழ் அவைகளில் மட்டும்தான் இட ஒதுக்கீடு உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. அதுவே அரசியல் நிர்ணய சபையின் முடிவாக இருக்கும்போது அதற்கு முரணான விதத்தில் அரசியலமைப்பு வரைவுக்குழு எந்த முடிவையும் எடுக்க முடியாது.” என அம்பேத்கர் தெரிவித்தார். “ டாக்டர் அம்பேத்கரின் விளக்கத்தில் எனக்கு உடன்பாடில்லை. எனவே அவையிலிருந்து வெளிநடப்புச் செய்வதன்மூலம் எனது திருத்தத்தை நான் வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்” என முனுசுவாமி பிள்ளை கூறி வெளிநடப்புச் செய்தார்.

எஸ்சி,எஸ்டி மக்களுக்கு மேலவைகளிலும் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதுதான் டாக்டர் அம்பேத்கரின் விருப்பமும்கூட. ஆனால், அரசியல் நிர்ணய சபையில் அதற்குக் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்பதால்தான் அதை அரசியலமைப்புச் சட்ட வரைவில் அவரால் சேர்க்க முடியவில்லை. அவர் மேலவை தேவையில்லை எனக் கருதவில்லை.

இந்தியாவெங்கும் இருக்கின்ற சட்டப்பேரவைகளிலும், பாராளுமன்றத்திலும் எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு உள்ளது. ஆனால், இத்தகைய இடஒதுக்கீடு சட்டமேலவையிலோ, மாநிலங்களவையிலோ கிடையாது. ஆனால், சட்டமேலவை சென்னை மாகாணத்தில் 1937 ஆம் ஆண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டபோது அதில் இட ஒதுக்கீடு இருந்தது. மொத்தமிருந்த 54 உறுப்பினர்களில் 35 இடங்கள் பொது இடங்களாக வைக்கப்பட்டிருந்தன. 7 இடங்கள் முஸ்லீம்களுக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. ஐரோப்பியர்களுக்கு ஒரு இடமும், இந்திய கிறிஸ்தவர்களுக்கு 3 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. 1952ஆம் ஆண்டில்தான் இந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. எனவே, திரு வி.ஐ.முசுவாமி பிள்ளை வலியுறுத்தியவாறு மேலவைகளிலும் எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பதே ஜனநாயக ரீதியிலான நிலைபாடாக இருக்க முடியும். மேலவையே வேண்டாம் என்பது ஜனநாயக மறுப்பே தவிர வேறல்ல.

புதிதாக உருவாக்கப்படும் மேலவையில் எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சட்டப் பேரவையில் நான் 2010 இல் வலியுறுத்தினேன். அப்போது அதை இடதுசாரி உறுப்பினர்கள் ஆதரிக்கவில்லை. இப்போது சமூகநீதி குறித்த அவர்களுடைய பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் மகளிர் இடஒதுக்கீட்டுக்கான சட்டமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த நேரத்திலாவது மேலவைகளில் எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டைக் கொண்டுவர வேண்டும் என இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்த முன்வர வேண்டும்.

இந்த நூலின் அணிந்துரையில் தோழர் சீத்தாராம் யெச்சூரி “ சாமானிய மக்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதற்கு ஆர்வம் காட்டும் அனைவருக்கும், நம் நாட்டின் முன் உள்ள சவால்களைத் தெரிந்துகொள்ள விரும்பும் அனைவருக்கும், நாட்டின் குடியரசு அமைப்பை ஆர்.எஸ்.எஸ் விரும்பும் பாசிசப் பார்வைகொண்ட ‘ இந்து ராஷ்டிரமாக’ மாற்றுவதற்கு ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் முன்வைத்திடும் அரசியலைப் புரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கும் இந்தப் புத்தகத்தை மனபூர்வமாகப் பரிந்துரைக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நூலைப் படிப்பவர்கள் அனைவரும் அதை வழிமொழியவே செய்வார்க

 

நூலின் தகவல்கள் 

நூல் :

ஆசிரியர் : ச. வீரமணி

பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

விலை : ரூ.295

 

 

நூலறிமுகம் எழுதியவர்:

Image

ரவிக்குமார் MP

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *