அம்மாவிடமிருந்தே ஆற்றல்!
புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் – 12
உங்கள் உடலின் ஆற்றல் எங்கிருந்து வருகிறது? உங்கள் அம்மாவிடமிருந்துதான்! ஆம், நமது செல்களின் ஆற்றல் மையங்களான மைட்டோகாண்ட்ரியாவில் உள்ள டி.என்.ஏவை நாம் அம்மாவிடமிருந்து மட்டுமே பெறுகிறோம். அப்பாவின் மைட்டோகாண்ட்ரியாக்கள் ஏன் மாயமாகிவிடுகின்றன? கொலராடோ பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு இந்த மர்மத்தை விளக்குகிறது.
தந்தையின் மைட்டோகாண்ட்ரியல் மரபணுவின் அனைத்து தடயங்களும் விந்து முட்டையுடன் இணைந்த பின்னர் அழிக்கப்படுகின்றன. பல தசாப்தங்களாக இது நம்மை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.
அக்டோபர். 4, 2024 அன்று சயின்ஸ் அட்வான்ஸ் இதழில் வெளியிடப்பட்ட இந்த புதிய ஆய்வு, ஏன் இது நிகழ்கிறது என்பது பற்றிய புதிய கருத்துக்கள் சிலவற்றை முன்வைக்கிறது.
தந்தைவழி மைட்டோகாண்ட்ரியா – நோய்களை உண்டாக்குமா?
தந்தைவழி மைட்டோகாண்ட்ரியாக்களை நீக்கும் செயல்முறை தோல்வியடைந்து, தந்தைவழி மைட்டோகாண்ட்ரியா ஒரு வளரும் கருவில் தங்கிவிடும்போது, அது நரம்பியல், வளர்சிதை மாற்றம் மற்றும் இனப்பெருக்க பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. வைட்டமின் K2 மூலம் இந்தக் கோளாறுகளைத் தடுக்க அல்லது சிகிச்சையளிக்க முடியும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
“இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள், தந்தைவழி மைட்டோகாண்ட்ரியாக்கள் ஏன் விரைவாக அகற்றப்பட வேண்டும் என்பதற்கான முக்கியமான புதிய நுண்ணறிவுகளை வழங்குகின்றன.” என்று இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும், கொலராடோ பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு, செல்லுலார் மற்றும் வளர்ச்சி உயிரியல் துறையின் பேராசிரியருமான டிங் சியூ (Ding Xue) கூறினார்.
மைட்டோகாண்ட்ரியா – செல்லின் ஆற்றல் நிலையம்
செல்லுலார் பேட்டரிகள் என்று அழைக்கப்படும் மைட்டோகாண்ட்ரியாக்கள், அடினோசின் ட்ரைபாஸ்பேட் (Adenosine triphosphate – ATP) ஐ உற்பத்தி செய்கின்றன. ATP என்பது செல்களுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது.
மைட்டோகாண்ட்ரியாக்கள் அவற்றின் சொந்த தனித்துவமான டி.என்.ஏவைக் கொண்டுள்ளன. இந்த டி.என்.ஏ பொதுவாக தாயிடமிருந்து மட்டுமே குழந்தைக்குக் கடத்தப்படுகிறது.

தந்தைவழி மைட்டோகாண்ட்ரியா ஏன் அழிக்கப்படுகிறது?
2016 ஆம் ஆண்டில், தந்தைவழி மைட்டோகாண்ட்ரியாக்கள் எவ்வாறு அழிக்கப்படுகின்றன என்பதை விளக்கும் முதல் ஆய்வறிக்கைகளில் ஒன்றை சியூ வெளியிட்டார். “தந்தைவழி மைட்டோகாண்ட்ரியா நீக்கம் (PME)” எனப்படும் பல அம்சங்களைக் கொண்ட செய்முறையை இந்த ஆய்வு விளக்குகிறது.
“இதை ஒரு ஆண் கேட்பதற்கு அவமானமாக இருக்கலாம், ஆனால் அதுதான் உண்மை” என்று டிங் சியூ (Ding Xue) கேலியாக கூறுகிறார். “நமது (ஆண்களின்) மைட்டோகாண்ட்ரியாக்கள் மிகவும் விரும்பத்தகாதவை, இனப்பெருக்கத்தின் போது அது அழிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக பல வழிமுறைகளை பரிணாமம் கட்டமைத்துள்ளது.” என்கிறார் அவர்.
ஒரு முட்டையை ஊடுருவிச் செல்வதற்காக மில்லியன் கணக்கான பிற விந்தணுக்களுடன் போராடிய பிறகு, விந்தணு மைட்டோகாண்ட்ரியாக்கள் சோர்வடைந்து, மரபணு ரீதியாக சேதமடைந்து விடுகின்றன. இவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது பரிணாம ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவை அழிக்கப்படுகின்றன என்று ஆய்வாளர்கள் சிலர் கருதுகின்றனர்.
புழுக்களில் நடத்தப்பட்ட ஆய்வு
தந்தைவழி மைட்டோகாண்ட்ரியா அழிக்கப்படாதபோது என்ன நடக்கும் என்பதைக் கண்டறிய சியூவும் அவரது குழுவினரும் முயன்றனர்.
இந்த ஆய்வுக்காக, C. elegans எனப்படும் ஒரு வகை ஒளிஊடுருவக்கூடிய உருளைப்புழுக்களை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர். இவை மரபணு ஆராய்ச்சிக்கு மிகவும் ஏற்றவை. இந்தப் புழுக்களில் நடத்தப்படும் ஆராய்ச்சிகள் பெரும்பாலும் மனிதர்களுக்கும் பொருந்தும்.
ஆராய்ச்சியாளர்களால் புழுக்களில் PME எனப்படும் தந்தைவழி மைட்டோகாண்ட்ரியா நீக்க செயல்முறையை முழுமையாக நிறுத்த முடியவில்லை. இது இந்த பரிணாம செயல்முறை எவ்வளவு உறுதியானது என்பதற்கு ஒரு சான்று. ஆனால், அவர்களால் இந்த செயல்முறையை சுமார் 10 மணி நேரம் தாமதப்படுத்த முடிந்தது.
கருவுற்ற முட்டைகளில் PME தாமதப்படுத்தப்பட்டபோது, அது Adenosine triphosphate (ATP) எனப்படும் செல்லுலார் ஆற்றலில் குறிப்பிடத்தக்க குறைப்புக்கு வழிவகுத்தது. இதனால், புழுக்கள் உயிர் பிழைத்தாலும், அவை அறிவாற்றல் குறைபாடு, செயல்பாடு மாற்றம் மற்றும் இனப்பெருக்கம் செய்வதில் சிரமம் ஆகியவற்றை அனுபவித்தன.

வைட்டமின் K2 – புதிய நம்பிக்கை
ஆராய்ச்சியாளர்கள் MK-4 எனப்படும் வைட்டமின் K2 வகையைப் பயன்படுத்தி புழுக்களுக்குச் சிகிச்சையளித்தபோது, கருக்களில் Adenosine triphosphate (ATP) அளவுகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பின. வைட்டமின் K2 பொதுவாக எலும்பு ஆரோக்கியத்திற்கான ஒரு சத்துப் பொருளாக அறியப்படுகிறது. இந்த வைட்டமின் சிகிச்சையானது வளர்ந்த புழுக்களின் நினைவாற்றல், செயல்பாடு மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றை மேம்படுத்தியது.
மனிதர்களில் மைட்டோகாண்ட்ரியா கோளாறுகள்
பெரிய விலங்குகளில் கூடுதல் ஆராய்ச்சி தேவை என்றாலும், சில சந்தர்ப்பங்களில், புழுக்களைப் போலவே, PME எனப்படும் தந்தைவழி மைட்டோகாண்ட்ரியா நீக்கத்தில் ஏற்படும் ஒரு தாமதம் கூட நாம் கண்டறிவதற்குக் கடினமாக உள்ள மனித நோய்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்று டிங் சியூ (Ding Xue) சந்தேகிக்கிறார்.
“உங்களுக்கு Adenosine triphosphate (ATP) உற்பத்தியில் சிக்கல் இருந்தால் அது மனித வாழ்க்கைச் சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் பாதிக்கும்”
“சரியாகப் புரிந்து கொள்ளப்படாத நிறைய நோய்கள் உள்ளன. என்ன நடக்கிறது என்று யாருக்கும் உண்மையில் தெரியாது. இந்த ஆராய்ச்சி அதற்கான சில தடயங்களை வழங்குகிறது” என்று டிங் சியூ (Ding Xue) கூறுகிறார்.
தொடர்ந்து அறிவியல் பேசுவோம்!
ஆய்வுக்கட்டுரை இணைப்பு
https://doi.org/10.1126/
கட்டுரையாளர் :

த. பெருமாள்ராஜ்
Click to Join WhatsApp Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் தொடரின் முந்தைய கட்டுரையைப் படிக்க : புரிதலைப் புதுப்பிக்கும் புதிய ஆய்வுகள் – 11:- ஓவியக் காட்சியில் ஒரு சுவாரசிய ஆய்வு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

