Discover the impact of ஒளி மாசு on our environment and world. Learn about the challenges light pollution poses and the need for awareness. - https://bookday.in/

ஒளி மாசு – கண்டுகொள்கிறோமா?

ஒளி மாசை கண்டுகொள்கிறோமா?

2016 -க்கு பிறகான வருடங்களில் ஆண்டு ஒன்றுக்கு 10% ஒளி மாசு கூடிக் கொண்டிருக்கிறது என்கிறது டார்க் ஸ்கை அமைப்பு (Dark sky organization ). இந்தியாவின் புறநகரங்களில் 5 முதல் 10 மடங்காகவும், மாநகரங்களில் 25 முதல் 50 மடங்காகவும் இரவு வானம் கூடுதல் பிரகாசமாக மிளிர்கிறது. 2025-க்கு பிறகு ஐரோப்பா போன்ற மேற்குலகில் பால்வெளிகள் மனித கண்களுக்கு அகப்படப்போவதில்லை என்கிறார்கள் வானியலாளர்கள்.

சைபீரியா மற்றும் அமேசான் போன்ற சில இடங்களை தவிர்த்து பெரும் பகுதியான வட அமெரிக்கா, ஐரோப்பியா மற்றும் மத்திய கிழக்காசிய நாடுகள் மனிதனால் தூண்டப்பட்ட ஒளி மாசால் பாதிக்கப்பட்டுள்ளதாக இரவுவான் ஒளிர்வுக்கான உலக அட்லஷின் (world atlas of night sky brightness ) கணினி வரைபடம் தெரிவிக்கிறது. உலக அளவில் 80% மக்களும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் 99% மக்களும் நேரடியாக, மனிதனால் தூண்டப்பட்ட இந்த செயற்கை ஒளி மாசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒளி மாசு நமது ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கும் பேரழிவாக திகழ்கிறது.

1. மாசு ஓர் அறிமுகம்

மாசு என்கிற தமிழ்ச் சொல்லுக்கு சரிநிகரான ஆங்கிலச்சொல் பொல்யூஷன்(Pollution)எனப்படும். இந்த பொல்யூஷன் என்ற ஆங்கிலச் சொல் பொலியூசனம் (Pollutionem) மற்றும் பொல்லுரே (Polluere) என்கிற இரண்டு லத்தின் சொல்லில் இருந்த பெறப்பட்டவையாகும். இதன் பொருள் அசுத்தம் எனப்படும்.

1970 வரையிலான காலகட்டங்களில் பொல்யூஷன் (Pollution ) என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான வரையறை கிடையாது. 1978-ல் அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய அறிவியல் கலைக்கூடம் (U.S. NAS-1978) மாசு என்னும் சொல்லுக்கு உறுதியான ஒரு பொருள் கிடையாது மனித செயல்களால் தூண்டிவிடப்பட்ட ஒரு “வினை” சுற்றுச் சூழலின் சுமுக செயல்பாட்டுக்கு பாதகமாக அமைந்து, பிற உயிர் ஜீவராசிகளின் வாழ்க்கைக்கு இடையூறாக அமையும் பொழுது அதை மாசு என்கிறோம் என்று வரையறைதிருக்கின்றனர்.

மாசு என்பது ஒரு பொருளோ அல்லது ஆற்றலோ தேவைக்கும் அதிகமாக இயற்கை சூழலில் கலந்து சிதையாமல்,மறுசுழற்சிக்கு உட்படாமல் உலக உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வண்ணம் சுற்றுச்சூழலில் அப்படியே தேங்கிக் கிடப்பதாகும்.மாசு பல வகைப்படும் அவை காற்று மாசு,தண்ணீர் மாசு, நிலம் மாசு, ஒலி மாசு,ஒளி மாசு நெகிழி மாசு போன்றவையாகும் மாசு எந்த வடிவளாயினும் அது பூமிக்கு கேடு விளைவிப்பவையாகும்.

2. ஒளியின் நெடும் பயணம்

ஆதி காலத்தில் மனிதனுக்கு நிலவும் நட்சத்திரங்களும் இரவில் ஒளி வழங்கியது. பிறகு அவன் தீயை கண்டுபிடித்தான் ( தீப்பந்தம் ). கி.மு 4500-ல் எண்ணெய் விளக்குகளில் தொடங்கி மெழுகு, வளிம விளக்கு என்று விளக்குகள் பல முன்னேற்றங்களைக் கண்டு பரிணமித்து வந்தது. 1802-ல் ஹம்ரி டேவியால் (Humpry Davy) முதல் மின்சார விளக்கு (Electric arc lamp) கண்டுபிடிக்கப்பட்டாலும் அதில் சில போதாமைகள் இருக்கவே அது வெகுஜன பயன்பாட்டிற்கு ஏதுவாக இருக்கவில்லை. ஏழு தசாப்தங்களில் பலரால் பல மாதிரிகளில் செரிவூட்டப்பட்ட மின்சார விளக்கு இறுதியாக 1879-ல் 1200 மணி நேரம் இயங்கக்கூடிய மின்விளக்காக வணிகப் பயன்பாட்டிற்காக எடிசனது பெயரில் காப்புரிமை வாங்கப்பட்டது.இவ்வாறு வணிகப் பயன்பாட்டிற்கு வந்த மின்சார விளக்குகள் தொழில்புரட்சி, வணிகமயமாக்கல், உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் போன்ற மாற்றத்தால் உலகம் முழுமைக்கும் ஒளிவிளக்குகள் ஒளிர ஆரம்பித்துவிட்டது. ஒளி என்றாலும் அதீத ஒளி, கண் கூசும் படியான ஒளி.

3. ஒளி மாசு என்றால் என்ன

தேவைக்கு அதிகமான ஒளியை,ஒளி மாசு என்கிறோம். இயற்கையில் வானம் ஐந்து வகையில் ஒளிர்கிறது. அவை,

★கிரகங்களுக்கு இடையேயான தூசியில் சூரியக் கதிர்கள் பட்டு பிரதிபலித்தல்(Zodiacal light ).இதனை கோள் மண்டலத்தின் ஒளி என்பார்கள்.
★ பூமி மற்றும் நிலவில் பட்டு சிதறும் சூரிய ஒளிகள்.
★வளிமண்டலத்தின் நுண் அடுக்குகளின் மெல்லியப் பிரகாசம்.
★ நட்சத்திர ஒளியை பிரதிபலிக்கும் வான்மண்டல வாயுக்கள்.
★ ஒண் முகில் படலத்தின் வானொளிகள்.

மேற்கண்ட இந்த ஐந்து வகை இயற்கை ஒளிகளும் பூமியின் உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சிக்கு இன்றியமையாததாகும். செயற்கை ஒளி என்பது உயிரினங்களுக்கு மிகவும் புதியது. பல நெடுங்காலமாக அடர் இருளில் வாழ்ந்து திரிந்த உயிரினங்கள் 19- ஆம் நூற்றாண்டுக்கு பிறகே செயற்கை ஒழிக்கு அறிமுகம் ஆகின்றன. நவயுக உலகில் சமூக பாதுகாப்பு, வணிகச் செயல்பாடு, பயணம் போன்றவற்றிற்கு ஒளிவிளக்கு இன்றியமையாததாகும். மனிதர்களின் பொறுப்பற்ற செயல்களால் தேவையில்லாத பொழுதுகளிலும் விளக்குகள் ஒளிர வைக்கப்படுகின்றது. இந்த விளக்கொளிகள் நிலத்தில் இருந்து வானோக்கி செங்குத்தாக பயணித்து வான் மண்டலத்தின் தூசு மற்றும் வாயுக்களால் உள்வாங்கப்பட்டு இரவு நேரத்தில் வானை ஒளிரச் செய்கிறது . இவ்வாறு வானோக்கி பயணிக்கும் ஒளியானது மனித பார்வையில் இருந்து பால்வெளிகளை மறைய செய்து விடுகிறது. இந்த செயல்பாட்டுக்கு பெயரே ஒளி மாசு. இந்த ஒளி மாசானது வெளிப்புற செயற்கை விளக்கொளியால் நிகழ்த்தப்படும் ஊடுருவல் ஆகும்.

மேலும் இந்த ஒளி மாசு தனித்த ஒன்று கிடையாது. விளக்கு ஒளிர மின்சாரம் தேவை. மின்சாரம் புதைப்படிவ எரிபொருளை எரிப்பதன் வழி பெறக்கூடியது. இதனால் காற்று மாசு அதிகரிக்கிறது. உலகில் உற்பத்தியாகும் மொத்த மின்சாரங்களில் 19% மின்சாரம், ஒளிவிளக்கை இயக்க பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் ஒளி மாசும்,காற்று மாசும் ஒட்டி பிறந்த இரட்டைச் சகோதரர்கள் ஆவர்.

இந்த ஒளி மாசு சுற்றுச்சூழலுக்கு பேரழிவை நேரச் செய்கிறது. இது ஒட்டுமொத்த உணவு சங்கிலியையும் சிதைக்கவல்லது.ஒளி மாசு மனிதர்களுக்கு நிறைய உடல் மற்றும் மனநல உபாதைகளை விளைவிக்கிறது.

4. ஒளி மாசின் வகைகள்

“ஒளி மாசு” என்பது பொத்தாம் பொதுவான ஒரு சொல்.ஆனால், அவை விளைவிக்கும் தீங்குகள் பல கிளைகள் கொண்டது.ஒளி மாசு ஐந்து வகைப்படும். அவை ஒளி அத்துமீறல்,அதீத வெளிச்சம், கூசொளி,ஒளி ஒழுங்கீனம் மற்றும் வான் ஒளிர்வு என்பனவாகும்.

4:1 ஒளி அத்துமீறல்.(Light trespass )
நமது குடியிருப்பின் அருகாமையில் வசிக்கும் ஒருவரது ஒளி விளக்கு, இரவில் நமது தூக்கத்தை கெடுக்கும் வண்ணம் நமது வீட்டிற்குள் அத்துமீறி ஒளியை பரப்புவதை ஒளி அத்துமீறல் என்கிறோம்.இந்த ஒளி அத்துமீறல் நமது தூக்கத்தை பாதிக்கிறது.

4:2 அதீத வெளிச்சம்.(Over illumination )

தேவைக்கும் அதிகமான ஒளியை தரும் விளக்குகளால் அதீத வெளிச்சம் ஏற்படுகிறது. தேவையில்லாத இடங்களில் விளக்கை பொருத்துதல், சரியான ஒளி விளக்கை தேர்ந்தெடுக்காதது, பகலிலும் விளக்கை ஒளிர விடுதல், சரியான திட்டமிடலின்மை போன்றவற்றால் அதீத வெளிச்சம் ஏற்படுகிறது.

4:3 கூசொளி.(Glare)

புதிதாக வந்தவன் மலைத்துப் போகலாம்,உற்சாகப்பட முடியாது

வெளிச்சம்! வெளிச்சம்! கண்ணை பறிக்கும் வெளிச்சம்.

22.07.1934-ஆம் தேதியிட்ட மணிக்கொடி இதழில் புதுமைப்பித்தனின் “கவந்தனும் காமணும்” என்கிற கதையில் மேற்கண்ட வரிகள் இடம் பெற்றிருக்கும். ஏறக்குறைய 90 ஆண்டுகளுக்கு முன்பு ஒளி மாசால் விளையக்கூடிய “கூசொளியை” பற்றி புதுமைப்பித்தன் பதிவு செய்திருக்கிறார்.

சரியான கவசம் பொருத்தப்படாத விளக்கை கண் நேரடியாக பார்க்கும் பொழுது கூசொளி உண்டாகிறது. நமது இந்தியச் சாலைகளில் பயணிக்கும் எவரும் கட்டாயம் தினமும் பலமுறை இந்த கூசொளியை அனுபவித்து இருப்பர்.சாலை விதிகளை மதிக்காமல் தேவையான பொழுது விளக்குகளை மங்கச் செய்யாமல் ஒளிர விடுவதால் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகிறது.

4:4 ஒளி ஒழுங்கீனம்.(Clutter)

தவறான இடங்களில் தேவைக்கும் அதிகமான ஒளி விளக்கை பொருத்துவதால் ஒளி ஒழுங்கீனம் ஏற்படுகிறது. இந்த ஒளி ஒழுங்கீனத்தால் வாகன ஓட்டுனர்கள் குழப்பம் அடைந்து விபத்தை ஏற்படுத்துகின்றனர்.நெடுஞ்சாலைகளில் பொருத்தப்படும் திட்டமிடலற்ற தெரு விளக்குகளாலும்,விளம்பர ஒளிப்பலகைகளாலும் இந்த ஒளி ஒழுங்கீனம் ஏற்படுகிறது. இந்த ஒளி ஒழுங்கீனம் சில சமயங்களில் விமான ஓட்டுநர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வானில் விமானத்தை இயக்குவதை சவாலாக்கி விடுகிறது.

4:5 வான் ஒளிர்வு.(Sky glow)

நட்சத்திரங்கள் இன்னும் 20 வருடங்களில் நமது கண்ணிற்கு முற்றிலும் அகப்படாமல் போய்விடும் என்கிறது கார்டியன் இதழ். மாநகரங்களில் ஜொலிக்கும் எண்ணில் அடங்கா விளக்குகள் செங்குத்தாக வானோக்கி பயணித்து வானை ஒளிரச் செய்கிறது. இதனால் சென்னை போன்ற மாநகரங்களில் இரவையும் பகலையும் பகுப்பது சிரமமாகிவிடுகிறது. பகலை விடவும் இரவு பிரகாசமாவதற்கு இந்த வான் ஒளிர்வே காரணம். வானியல் தொடர்பான முக்கிய ஆய்வுகள் செய்வதற்கு பெரும் இடையூறாக வான் ஒளிர்வு அமைந்து விடுகிறது.

5.ஒளி மாசின் தாக்கங்கள்

காற்று, நிலம், நீர் போன்ற பிற மாசுகள் பெறக்கூடிய கவனத்தையும் அக்கறையையும் இந்த ஒளிமாசு பெறுவதில்லை. இந்த அக்கறையின்மைக்கு முக்கிய காரணம் நமது விழிப்புணர்வின்மையே ஆகும். ஒளி மாசு அனைத்து உயிரினங்களையும் பலவழிகளில் பாதிப்புக் கொள்ளச் செய்கிறது.இன்னமும் ஒளி மாசால் விளையக்கூடிய ஆபத்துகளை பற்றி போதுமான ஆய்வுகள் நடைபெற்றதாக தெரியவில்லை. இந்த ஒளி மாசில் இருக்கும் ஒரே ஒரு அனுசரனையான விஷயம், பிற மாசுகள் போல் அல்லாமல் இந்த ஒளி மாசின் மீட்புக் காலம் மிக குறைவு. தேவையற்ற விளக்குகளை நாம் அனைத்தவுடன் ஒளி மாசு குறைந்து விடுகிறது.

5:1 ஒளி மாசும் தாவரங்களும்.

ஒளி மாசு தாவரங்களை பல வகைகளில் பாதிக்கிறது. தாவரங்களின் வளர்ச்சிதை மாற்றம் பெரிதும் இருளைச் சார்ந்துள்ளது. குறுகிய நாள் தாவரங்களுக்கு(Short term plants)இருள் மிகவும் முக்கியம். ஒளி மாசால் நீண்ட இரவுகள் தடைபடும் பொழுது தாவரங்களின் வளர்ச்சிதை மாற்றங்கள் பாதிப்புக்கு உள்ளாகிறது.

ஏரிகளில் வாழும் அலைவிலங்குகளை(Zooplankton ) ஒளி மாசு பாசிகளிடமிருந்து காப்பாற்றி விடுகிறது. இதனால் அலைவிலங்குகள் ஏரியின் பிற தாவரங்களை அழித்து நீரின் தரத்தை குறைத்துவிடுகிறது. ஒளிவிளக்குகள் இரவில் உலாவும் அந்துப்பூச்சி(Moths) போன்ற இரவாடிகளை கவர்ந்து விடுகிறது. இதனால் இரவில் பூக்கும் மலர்களின் மகரந்த சேர்க்கைகள் தடைப்படுவதாகவும்,மேலும் இதனால் குறிப்பிட்ட அந்த தாவர இனம் அழிவை சந்திக்க போவதாகவும் தாவரவியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஒளி மாசால் மரங்கள் இரவு மற்றும் பகல் பொழுதுகளை பிரித்தரிய இயலாமல் குழம்பிப்போகிறது. உணவுச் சங்கிலியின் மூலாதாரமாக விளங்கக்கூடிய தாவரங்கள் பாதிப்புக்குள்ளாகும் பொழுது அது ஒட்டுமொத்த உயிரினங்களையும் பாதிப்படைய செய்கிறது.

5:2 ஒளிமாசும் விலங்குகளும்.

உயிர் பரிணாமத்தில் பகலும் இரவும் சரிவிகிதம் முக்கியத்துவம் வாய்ந்தவை.உயிரினங்களில் விலங்குகள் பகலாடி (Diurnal )அதாவது பகலில் வேட்டையாடி இரவில் ஓய்வெடுப்பவை மற்றும் இரவாடி(Nocturnal ) இரவில் வேட்டையாடி பகலில் ஓய்வெடுப்பவை என்று இருவகை பகுப்புகள் உண்டு. ஒளி மாசால் இரவும் பகலைப் போல் பிரகாசமாக தெரிவதால் விலங்கினங்கள் குழம்பிவிடுகிறது.இதனால் வேட்டையாடும் திறன்,உடலியல் செயல்பாடு, உணவு சங்கிலி, இனப்பெருக்கம், இடப்பெயர்வு, தூக்கம் முதலான அன்றாடப் உயிரியல் செயல்பாடு பாதிக்கப்படுகின்றன. விலங்குகளின் இயக்கங்களுக்கு இயற்கை ஒளிகளான நிலவு மற்றும் நட்சத்திரங்கள் மிகவும் அவசியமானவை. ஒளி மாசால் இயற்கை ஒளிகள் மங்கிப் போவதால் விலங்கினங்கள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுகின்றன.

கடல் ஆமைகளில் பெண் ஆமைகள் ஒளி மங்கிய கடற்கரைகளில் முட்டையிட்டு கடலுக்குள் திரும்புவது வழக்கம். ஒளிமாசால் அடர்இருள் நிறைந்த கடற்கரைகளை கண்டுபிடிப்பதில் கடல் ஆமைகள் சிரமத்தை எதிர்கொள்கின்றன.முட்டையிலிருந்து வெளிவரும் ஆமைக்குஞ்சுகள் ஒளிவிளக்கால் ஈர்க்கப்பட்டு குழம்பி கடலுக்குள் திரும்பாமல் நிலத்திற்குள் ஊடுருவதால், விபத்தில் சிக்கி உயிரிழந்து விடுகிறது. இதனால் ஆமைகளின் எண்ணிக்கை வீழ்ந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

5:3 ஒளி மாசும் பறவைகளும்.

அமெரிக்காவில் மட்டும் ஒரு வருடத்தில் 40 லட்சம் பறவைகளுக்கு மேல் உயர்மின் கோபுரங்களில் மோதி இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பறவையியலாளர்கள்(Ornithologist ) பறவைகள் நிழலிட அமைப்பை வைத்து இடப்பெயர்வை தீர்மானிக்கிறது என்கிறார்கள். ஒளி இல்லா இடங்களில் பறவைகள் கூடு கட்டுகிறது. ஒளி அத்துமீறல்கள் அன்றாட இடங்களை விட்டு பறவைகளை வெகு தூரங்களுக்கு அப்பால் துரத்தி விடுகிறது. செயற்கை ஒளியால் நாள் பொழுது நீட்டியும் இரவு பொழுது சுருக்கியும் தெரிவதால் பறவைகளின் இடப்பெயர்வு பெரிதும் பாதிக்கப்படுகிறது.

Phinolophus Lipposidaros என்கிற ஒரு வகை வௌவால் இனம் ஐரோப்பாவில் வாழ்கிறது. இவை தனக்கு வழக்கமான இடங்களை விட்டுவிட்டு விளக்குகளால் ஈர்க்கப்படும் பூச்சிகளை உண்ண வருவதாக பூச்சியியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அந்த வௌவால் இனம் இயற்கையாக வேட்டையாடி உண்ணும் பண்பை இழப்பதாகவும், அதன் விளைவாக அந்த குறிப்பிட்ட வௌவால் இனங்களின் எண்ணிக்கை சரிந்து வருவதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உயர் ஒளி விளக்குகளால் ஈர்க்கப்படும் பூச்சி இனங்கள் தனக்கு ஆதரவான இடங்களை விட்டு வெளிவந்து விளக்குகளை சுற்றி பறந்து திரிவதால் சோர்ந்து போய் கீழே விழுந்து இறந்து விடுகிறது. இறந்தவற்றை தவலைகளும், பறவைகளும் இறையாக்கிக் கொள்வதால் வழக்கமான உணவுச் சங்கிலிகள் பாதிப்புக்குள்ளாகிறது.

5:4 ஒளிமாசும் மனிதஇனமும்.

மற்ற ஜீவராசிகளை விட ஒளி விளக்குக்கு மனிதன் மிகவும் நெருக்கமானவன்.அதிலும் முக்கியமாக மிடுக்கு பேசிகளின்(Smart phones)வருகைக்கு பிறகு அவன் கழிவறையில் கூட “ஒளிவட்டத்தோடு”தான் இருக்கிறான். அவன் வாழ்விற்கு ஒளியேற்ற வந்த இந்த ஒளியே மனிதனது உடல் நலத்திற்கும் வேட்டு வைப்பதாக உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.

அதிகப்படியான ஒளியால் மனிதனின் உயிரியல் கடிகாரம்(Circadian Rhythm )பாதிப்புக்குள்ளாகிறது.மனித உடலில் தூக்கத்தை தூண்டக்கூடிய மெலடோனின்(Melatonin )என்கிற ஹார்மோன் ஒளி மாசால் சரிவர சுரப்பதில்லை. இரவில் அடர் இருளில் மட்டுமே சுரக்கும் இந்த மெலடோனின் ஆட்கொல்லி நோய்களான புற்றுநோய் மற்றும் இருதய நோய்களை வரவிடாமல் தடுக்கும் மிகச்சிறந்த இயற்கை அரணாக திகழ்கிறது. நவயுக காலத்தில் மெலடோனினின் போதாமையான சுரப்பு தூக்கமின்மை, மன அழுத்தம், உடல் பருமன்,புற்றுநோய், கவனச்சிதறல், இருதய நோய் போன்ற தொற்றா வாழ்வியல் நோய்கள்(Non-communicable diseases )ஏற்பட காரணமாகிறது.

அலுவலகங்களில் ஒளிரக் கூடிய விளக்குகள் நமது ரத்த அழுத்தத்தை 8 புள்ளிகள் வரை உயர்த்தி விடுவதாக மருத்துவஆய்வுகள் தெரிவிக்கின்றன.மேலும் அதிகப்படியான ஒளி மாசால் ஆண்களுக்கு பாலியல் குறைபாடுகளும், விதைப்பை புற்று நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 15 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 30% மார்பகப் புற்றுநோய்கள் விளக்கொளியால் தூண்டப்பட்ட மெலடோனின் குறை சுரப்பால் ஏற்பட்டுள்ளது என்றும், மேலும் இந்த மெலடோனின் குறை சுரப்பு 2அ -கார்சிநோஜென்(CARCINOGEN)எனப்படும் புகைப்பிடித்தலால் ஏற்படும் நுரையீரல் புற்று நோய்க்கு நிகரானது எனவும் உலக சுகாதார அமைப்பு(WHO) தெரிவித்திருக்கிறது.

6. ஒளி மாசு சில தீர்வு.

ஏற்கனவே குறிப்பிட்டதுப்போல ஒளி மாசு பிறவகை மாசுகளோடு ஒப்பிடுகையில் அதன் மீட்பு காலம் மிகக் குறைவு. மக்கள் விழிப்புணர்வோடு விளக்கை இயக்கினாளே அதிகப்படியான ஆபத்துகளை தவிர்த்துவிடலாம். தேவையான இடத்தில் மட்டுமே ஒளி விளக்கை பொருத்துவது, அதீத ஒளியை தரும் விளக்கை தவிர்ப்பது, விளக்கை சிக்கனமாக பயன்படுத்துவது, உயர் கம்ப மின்விளக்குகளுக்கு ஒளி அரன்களை பொருத்துவது, ஒளி மாசு குறித்த அதிகப்படியான ஆய்வுகளை மேற்கொள்வது, அரசும், தனியார் நிறுவனங்களும் இணைந்து ஒளி மாசு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது மற்றும் ஒளி மாசை குறைப்பதற்கான சில சட்ட வழிமுறைகளை மேற்கொள்வது போன்ற செயல்பாடுகளால் ஒளி மாசின் தீங்குகளை பெருவாரியாக குறைத்து அனைவரும் நலமுடன் வாழலாம்.

நன்றி!

 

எழுதியவர் 

நந்தசிவம் புகழேந்தி

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *