மீண்டும் ஒரு தேர்வு சர்ச்சையில் சிக்கித்தவிக்கிறது நமது தமிழக அரசு. “தேர்வு எதற்காக?”, என்ற கேள்விக்கு விடை தெரியாமலேயே தேர்வு என்ற ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றனர் நம் மாணவர்கள். மாணவர்களுக்கு தெரிய வேண்டுமோ இல்லையோ, எதற்காக தேர்வு வேண்டுமென்ற புரிதல் தேர்வு வைப்பவர்களுக்கு தெரியவேண்டும் அல்லவா? தேர்வு நடத்துபவர்களுக்கும் தெரியவில்லை, தேர்வை எதிர் கொள்பவர்களுக்கும் தெரியவில்லை. ஆனால் தேர்வு மட்டும் நடைபெற்றே ஆக வேண்டும். தேர்வு இல்லாவிடில் நாளைய இவ்வுலகம் இருண்டுவிடும் என்ற மனோபாவம் நமக்கு எங்கிருந்து வந்தது? நீர், நிலம், காற்று , இருப்பிடம் ஆகியவையே உயிர் வாழத் தேவையானவை என்று சிறுவயதில் படித்துள்ளேன். ஆனால் தற்போதைய மாணவர்கள் இந்த பட்டியலில் தேர்வையும் சேர்த்து படிக்கிறார்களளோ என்ற ஐயம் தோன்றுகிறது. ஒருமுறை, ஓர் ஆண்டு,மக்களின் நலனுக்காக, மாணவர்களின் உயிர் பாதுகாப்பிற்காக தேர்வை ரத்து செய்யும் துணிவற்ற கல்வி முறையை கொண்ட நாடு நமது நாடு என்று நினைக்கும் போதே சற்று வெட்கமாக உள்ளது. மாணவர்கள்,கற்றல் அடைவுகளை (Learning Outcome) பெற்றுள்ளனரா? இல்லையா? என்பதை மதிப்பீடு செய்து அனைத்து பங்காளர்களுக்கும் (Stakeholder) தெரியப்படுத்துவதே தேர்வின் நோக்கமாகும்.
“அதை மறந்துவிட்டு பத்தாம் வகுப்பு பரிட்சை இல்லை என்றால் பதினொன்றாம் வகுப்பிற்கு மாணவர்களை எப்படி தேர்ந்தெடுப்பது?”, “ஐயையோ! அது பெரும் தலைவலி! அவ்வாறு செய்யாமல் விட்டால் அது எவ்வளவு பெரிய பிழை ஆகி விடும்? திறமை உள்ள எத்தனை மாணவர்கள் இதன் மூலமாக பாதிக்கப்படுவார்கள் தெரியுமா?” ஒரு வருட காலமாக,இன்னும் சரியாக சொல்ல வேண்டுமாயின் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்தே இந்த பத்தாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண்களை அள்ளிக் குவிக்க வேண்டும் என்று தயார் செய்து வைக்கப்பட்ட குதிரைகளாக மாணவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். தேர்வு , மதிப்பெண் ஆகிய இரண்டு கடிவாளங்களை கட்டிக் கொண்டுள்ள நம் குழந்தைகள் வாழ்க்கை திறன் கல்வியில் (Life Skills Education) அதலபாதாளத்தில் கிடக்கின்றனர். இந்த மதிப்பெண் ஓட்டப்பந்தயத்தில் ஓடி ஜெயிக்க வேண்டும். அப்போதுதான் தனக்கும் பெருமை, தன் குதிரைக்கும் பெருமை என்று நினைக்கும் சமூகத்தை சுயநலம் பிடித்த சமூகம் என்றே சாட முடிகிறது. இந்த ஓட்டத்தில் ஓடுவதற்கு சத்தில்லாமல்,சோர்ந்து போய், உரிய தயாரிப்புகள் இல்லாமல் இருக்கும் பாவப்பட்ட குழந்தைகளைப் பற்றி சிந்திக்க இங்கு யாருக்கும் நேரமில்லை. தான் ஓட வேண்டும்! தான் ஜெயிக்க வேண்டும்! ‘உன் வேலை என்னவோ அதை மட்டுமே நீ பார்! உன்னை சுற்றி நடப்பதை பார்க்க வேண்டிய அவசியம் உனக்கில்லை!’ என்ற கற்பிதத்தை மெல்ல மெல்ல சமூகத்தில் ஊர போட்டுள்ளனர்.அதற்கு நமது கல்வி முறையும் தீனி போட்டுள்ளது. இதுதான் தற்போதைய தமிழக அரசின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவிப்பின் சாராம்சம்.
கொள்ளைநோய்
‘கொரோனாவே’ நீ தோற்று விட்டாய்!எங்கள் ஊரில் நோயா?அல்லது தேர்வா? என்று வரும்போது நீ தோற்றுவிட்டாய். தேர்வு தான் வென்றது. உலக நாடுகள் தோற்கடிக்க முடியாத உன்னை எங்கள் நாட்டு தேர்வுமுறை ஓரம் கட்டி விட நினைக்கிறது. பெருமிதம் கொள்வதா? அல்லது பரிதாபம் கொள்வதா? இதுவே எங்கள் நிலைமை.
பேரிடர் காலத்தில் பொதுத்தேர்வா?
உலகெங்கிலும் 3 லட்சம் உயிர்களை பரி கொடுத்துள்ள ஒரு பேரிடர் காலத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற அரசின் முடிவு யாரை திருப்திப்படுத்த?பொதுமக்களையா? அவ்வாறாயின் அந்த பொதுமக்கள் யார்? ‘அப்பா கூலி வேலைக்கு செல்ல, அம்மா வீட்டு வேலைக்கு செல்ல,கொள்ளை நோயின் தாக்கத்தால் இருவரும் வேலை இழந்து தவிக்க; சோற்றுக்கே வழியில்லாமல் தன் பிள்ளைகளின் பசியை ஆற்ற முடியாமல், அரசாங்கம் கொடுத்த ஆயிரம் ரூபாயில் எந்த செலவை முதலில் செய்வது என்று அறியாமல் விழி பிதுங்கி, மனம் குமுறி, வறுமையின் கொடுமை தன் பிள்ளைகளுக்கு தெரியாதபடி, எப்படியாவது அவர்களுக்கு ‘ஒரு வேளை உணவு’ அளித்துவிடவேண்டும் என்ற ஏக்கத்தோடு யாராவது நிவாரணம் தருவார்களா என வீதியை வெறிக்க பார்த்துக் கொண்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த ஏழை எளிய குடும்பங்கள் உங்கள் பொதுமக்கள் இல்லையா? அல்லது அந்த குடும்பங்களிலிருந்து வரக்கூடிய குழந்தைகள் யாரும் பத்தாம் வகுப்பு படிக்க வில்லையா? பத்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளும் அவர்களது குடும்பங்களும் பசியால் வாடும் போது அக்கறை கொள்ளாத அரசாங்கம்,அவர்கள் எதிர்காலம் குறித்து மிகுந்த அக்கறையோடு நடந்துகொள்வது,பொருத்தமற்ற சூழலில்; பொருத்தமற்ற அக்கறையாக தென்படுகிறது. அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவின் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடிவது ஒன்றே ஒன்றுதான். அரசாங்கத்தின் பொருளாதாரத்தை உயர்த்த ஏழை எளிய மக்களின் பணம் தேவைப்படுகிறது. ஆனால் கொள்கை சார்ந்த முடிவு எடுக்கும்போது அந்த ஏழை மக்களை, அவர்கள் குடும்பங்களைப் பற்றிய நினைப்பு அரசாங்கத்திற்கு வர மறுக்கிறது.
‘கற்கை நன்றே,கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்றார் அவ்வையார். என் மாணவர்களும் மிகுந்த ஏழ்மை நிலையில் இருந்தாலும், ‘இந்த கல்வி ஒன்று மட்டுமே நம் நிலையை மாற்றும்,உயர்த்தும்’, என்ற எண்ணத்தோடு தங்களுக்கு கிடைக்கப்பெற்ற குறைந்தபட்ச வளங்களை மூலாதாரமாகக் கொண்டு படித்து வருகின்றனர்.அவ்வாறான பின்புலத்தில் இருந்து வந்த அரசு பள்ளி மாணவர்கள் இந்த கொள்ளைநோய் பெருக்கத்தால் வறுமையிலும் வறுமையை சந்தித்து வருகின்றனர். ‘சாப்பாட்டிற்கு வழியில்லை, போட்டிருந்த பள்ளி சீருடைகள் கொரோனா கால பொதுமுடக்க காலங்களில் போட்டு போட்டே கிழிந்துவிட்டன, காலுக்கு செருப்பு இல்லை, பஸ்சுக்கு பணமில்லை, பேனா பென்சில் யாராவது வாங்கித்தருவார்களா?’ இந்த சூழலில்தான் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவித்துள்ளது தமிழக அரசு. யாரை திருப்திப்படுத்த இந்த அறிவிப்பு எப்போதுமே ஏழை எளிய மக்கள் வெகுஜனங்கள் என்ற கட்டுக்குள் அடங்க மாட்டார்களோ! வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசிக்க கூட முடியவில்லை இந்த வெள்ளை வேட்டி சட்டை காரர்களுக்கு.
ஒரு மாதகால பொது முடக்கத்தில் தம் வேலையை இழந்து, வாழ்வதற்கு வழி தெரியாமல், அரசாங்கம் கொடுக்கும் சிறு நிவாரணங்களையும் பெறமுடியாமல், சொந்த ஊருக்கு திரும்பி விடலாம் என்று கிளம்பினார்கள் புலம்பெயர் தொழிலாளர்கள். நடைபயணமாக, சைக்கிள் பயணமாக, டிராக்டர் பயணமாக கிளம்பினர். பாதுகாப்பற்ற பயணங்களில் பறிபோயின பல உயிர்கள். ரயில் தண்டவாளங்களில், சாலையோர விபத்துகளில், டிராக்டர் பயணத்தின் போது மின்சாரம் பாய்ந்து, ‘இதோ ஊரை நெருங்கி விட்டோம்’ என்று ஆசை ஆசையாய் முன்னேறிச் செல்லும்போது உடம்பில் தெம்பில்லாமல் சுருண்டு விழுந்து இறந்தனர். அவ்வாறு இறந்தவர்களில் எத்தனை குழந்தைகள் இருந்தனர் என்ற கணக்கு அரசாங்கத்திடம் உள்ளதா? அந்த குழந்தைகள் மீது இல்லாத அக்கறை பத்தாம் வகுப்பு படிக்கும் இந்த குழந்தைகள் மீது பொங்கி வருகிறது என்றாள் அதை எங்களால் நம்ப முடியவில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தத்தம் சொந்த ஊர்களுக்கு உயிரோடு அனுப்பி வைக்கவே முடியாத அரசு பொதுத் தேர்வு நடத்துவதை மிக முக்கியமாக பார்ப்பது வேதனையே.
பெருந்தொற்று சமயங்களில் முதல் நடவடிக்கையாக பள்ளிகளையே மூடுகின்றனர். 2006 ஆம் ஆண்டு ஏற்பட்ட இன்ஃப்ளூயன்சா நோய்தொற்று சமயங்களில் செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவிலும் , 2016ஆம் ஆண்டு H1N1நோய்த்தொற்றின் போது செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவிலும், இவ்வாறு பள்ளிகளை மூடுவதன் வாயிலாக நோய் தாக்கத்தின் வீரியம் உச்ச நிலையை அடைவது சராசரியாக 30% வரை குறைக்கப்படுகிறது மற்றும் நோய் பரவல் தாமதம் ஆக்கப்படுகிறது என்ற கருத்தை The New York Times தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதேபோல் 2018 ஆம் ஆண்டு இன்ஃப்ளூயன்சா நோய்தொற்று சமயத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சுமார் 31 ஆய்வறிக்கைகள் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இதே தகவல் The Lancent child & Adolescent Health என்ற பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது.ஆதாரங்கள் அவ்வாறு இருக்க இந்திய அளவில் நோய்தொற்றில் இரண்டாம் இடம் வகிக்கும் தமிழகம் தற்போதைய நிலைமை படி சுமார் 10,000 பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கொண்டுள்ளது. நாளுக்கு நாள் இவ்வெண்ணிக்கை உயர்ந்து கொண்டே தான் உள்ளது. ஆனால் அரசாங்கமோ நோய்த்தொற்று இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என்று தொடர்ந்து கூறி வருகிறது. மே 14 ஆம் தேதி அன்று தமிழக அரசு மருத்துவர்களோடு நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஒட்டுமொத்தமாக ஊரடங்கை தளர்த்துவது நோய் பரவலை அதிகப்படுத்தும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அவசரகதியில் இத்தேர்வை நடத்தவேண்டிய அவசியமில்லை மேலும் மாணவர்கள் பள்ளிக்கு தேர்வு எழுத செல்ல ஆரம்பித்தாள் நோய் யார் மூலமாக பரவியது ( Contact tracing) என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்றும் உலகளாவிய நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஆசிரியர்கள் நிலைப்பாடு:
பரவலான ஆசிரியர்கள் இத்தேர்வை நடத்திவிட வேண்டும் என்பதை தங்கள் கருத்தாக கொண்டுள்ளனர் அவர்களிடம் ஏன் இந்த தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்ற காரணம் கேட்டால் அல்லது தேர்வு நடத்தாவிட்டால் என்ன ஆகும் என்ற கேள்விக்கோ திடமான பதில் இல்லை. தேர்வு,மதிப்பெண், அதன் அடிப்படையில் பதினொன்றாம் வகுப்பிற்கு என்ன படிக்கலாம் என்று தேர்வு செய்யலாம். இவ்வாறு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பதினோராம் வகுப்பிற்கு பெயர் விருப்பப்பாடம். ‘விருப்பப்பாடம்’ என்றால் என்ன? மாணவர்கள் விருப்பப்பட்டு தேர்வு செய்வதா? அல்லது கிடைத்த மதிப்பெண் அடிப்படையில் எது கிடைக்கிறதோ அதை தேர்வு செய்வதா? விருப்பப்பாடம் விருப்பத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை ஆசிரியர்கள் புரிந்துகொண்டால் தேவையற்ற இத்தேர்வை நடத்த ஒப்புக் கொள்ள மாட்டார்கள். மாறாக பத்தாம் வகுப்பில் இதுவரை நடைபெற்ற மாதாந்திர தேர்வுகள்,காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு பதினொன்றாம் வகுப்பிற்கு மாணவர்களின் விருப்பப் பாடத்தை தேர்ந்தெடுக்க அறைகூவல் விடுப்பார்கள்.
பெற்றோர்கள் நிலைப்பாடு:
பெரும்பாலான பெற்றோர்களுக்கென்று சொந்த கருத்து கிடையாது. அனைவரும் என்ன செய்கிறார்களோ அதையே தங்கள் பிள்ளைக்கு அவர்களும் செய்வார்கள். அனைவரும் பள்ளிக்கு அனுப்புகிறார்கள், நானும் என் பிள்ளையை பள்ளிக்கு அனுப்புகிறேன். அனைவரும் சிறப்பு வகுப்பிற்கு அனுப்புகிறார்கள், நானும் என் பிள்ளையை சிறப்பு வகுப்பிற்கு அனுப்புகிறேன். அனைவரும் தேர்வு வேண்டும் என்கிறார்கள், நானும் என் பிள்ளையை தேர்விற்கு அனுப்புகிறேன். அரசாங்கம் என்பது நமக்கானது. நம்முடைய கருத்தையும் அவர்களிடம் எடுத்துக் கூறலாம் என்று அறியாதவர்களாகவே பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
மாணவர்கள் நிலைப்பாடு:
ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமே ஏன் கட்டாயமாக தேர்வு வேண்டும் என்ற கேள்விக்கு விடை தெரியாத போது குழந்தைகளுக்கு மட்டும் எவ்வாறு தெரியப்போகிறது . அரசாங்கம் கால அட்டவணை கொடுத்தாள் பரீட்சைக்கு தயாராவார்கள். படித்தார்களோ இல்லையோ தேர்வு எழுதுவார்கள். வெற்றி பெற்றால், ஆசிரியரும், பெற்றோரும் காரணம் என்பார்கள். தோல்வியடைந்தால் தாங்கள் தான் இதற்கு முழு காரணம் என்று எண்ணி தற்கொலைக்கு முயல்வார்கள். இது அவர்களின் குறையே அல்ல. இவ்வாறு இருக்கவே சமூகம் அவர்களை பழக்கி வைத்திருக்கிறது. ‘உனக்கு தேர்வு வேண்டுமா வேண்டாமா ?’ என்று கேட்டாள் ஒன்றாம் வகுப்பு குழந்தை யோசிக்காமல் பட்டென பதில் சொல்லும் “எனக்கு தேர்வு வேண்டாம் என்று”. ஆனால் ஏனோ பத்தாம் வகுப்பு குழந்தைக்கு இந்த பயம் இல்லாமல் பதில் சொல்லும் பழக்கம் வரவில்லை இன்னும்.
அரசின் நிலைப்பாடு:
கொரோனாவோடு வாழப் பழக வேண்டும் என்று அரசு கூறிவருகிறது. கண்டிப்பாக வாழக் கற்றுக் கொள்வோம். ஆனால் அந்த வெள்ளோட்டத்திற்கு பத்தாம் வகுப்பு மாணவர்களையா பயன்படுத்துவது?
அரசாங்கம் செய்ய வேண்டியது:
இந்தியாவின் மகாராஷ்டிரா, பஞ்சாப், சட்டீஸ்கர் போன்ற பிற மாநிலங்கள் விடுபட்டுப் போன ஒன்று, இரண்டு பாடங்களுக்கான தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன. மேலும் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் சிபிஎஸ்சி வெளிநாடுகளில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளின் பொது தேர்வுகளை ரத்து செய்துள்ளன. ஒரு அசாதாரணமான சூழலில் இவ்வாறு தேர்வுகளை ரத்து செய்வது என்பது அரசாங்கம் நெறிமுறைகளை பின்பற்றுவதை காட்டிலும் மக்கள் மீது அக்கறையோடு உள்ளது என்பதையே உணர்த்தும். அந்த அக்கறை நம் மாணவர்கள் மீது தமிழக அரசு காட்ட வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.
‘எதிர்காலத்தில், பத்தாம் வகுப்பு சான்றிதழ் என்பது மாணவர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது, அனைத்து வேலைவாய்ப்புகளுக்கும் பத்தாம் வகுப்பு சான்றிதழ் அவசியம் தேவைப்படும். அதனால்தான் நாங்கள் இந்த பொதுத்தேர்வை நடத்துகிறோம்’ என்கிறது அரசு தரப்பு. எனக்கு தெரிந்து ரயில்வே துறையில் பணிக்கு சேர்வதற்கும், மற்றும் சில அரசுப் பணியில் சேர்வதற்கும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு சான்றிதழ் தேவைப்படுவதும் உண்மைதான். ஆனால், இந்த அனைத்து தேர்வுகளின் போதும் பத்தாம் வகுப்பு சான்றிதழ் பிறந்த தேதிக்கு அத்தாட்சியாகவே கேட்கப்படுகிறதே தவிர, பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையில் கொண்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லை என்பதே உண்மை. எனவே பத்தாம் வகுப்பு சான்றிதழ் தான் மாணவர்கள் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது என்பது பொய். மேலும் நாங்கள் பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய கோருகிறோமே தவிர உங்களை சான்றிதழ் வழங்க வேண்டாம் என்று கூறவில்லை. பத்தாம் வகுப்பு என்பதால் வாரத் தேர்வு, பருவத் தேர்வு, காலாண்டு அரையாண்டுத் தேர்வு என இவ்வாண்டு முழுதும் மாணவர்கள் பற்பல தேர்வுகளை எழுதி இருப்பர். அத்தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களுக்கு கிரேடு முறையில் சான்றிதழ் வழங்கலாம் அவ்வாறு செய்வதால் அனைத்து தரப்பு மாணவர்களும் பயனடைவர். அரசு இந்த யோசனையை கருத்தில் கொள்ள வேண்டும்.
பல சமயங்களில் யார் பூனைக்கு மணி கட்டுவது? என்பதே பிரச்சனை. அதுபோலத்தான் முற்றிலுமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எப்படி ரத்து செய்வது? அதற்கு மாற்று ஏற்பாடு என்ன செய்வது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை காணும் துணிச்சல் இல்லாமல் எப்போதும் செய்வதையே இப்போதும் செய்துவிட்டு போவோம் என்ற முடிவுக்கு வந்துள்ளது தமிழக அரசு.
முடியாது என்ற காலத்தில் ஊர்தோறும் பள்ளிக்கூடம் தொடங்கினார் காமராசர். முடியாது என்ற காலத்தில் மதிய உணவு திட்டத்தை பள்ளிகளில் அறிமுகப்படுத்தினார் அவர். அவருக்கு பின் வந்த மற்ற முதலமைச்சர்களும் முடியாது என்று நினைத்த பல காரியங்களை மாணவர்களின் நலனை முன் நிறுத்தி செய்துள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்க இந்த கொள்ளைநோய் தொற்று காலத்தில் மாணவர்களின் உடல்நிலை, மனநிலை மற்றும் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நோய் பரவல் மிக தீவிரமடையும் என்ற இக்காலகட்டத்தில் இத்தேர்வை நடத்துவது சிறந்த யோசனை அல்ல. அதே நேரத்தில் மூன்று நான்கு முறை தேர்வை தள்ளிவைப்பது என்பது மாணவர்களிடையே மனச்சோர்வை ஏற்படுத்தும் என்பதும் உண்மையே. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து, இந்தியாவின் பேரிடர் காலத்தில் மக்களுக்கான அரசாக தமிழக அரசு இருந்தது என்ற பெயரோடு, மீதமுள்ள இன்னும் பிற மாநிலங்களும் தமிழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய நாமே வழிவகுக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்கள் நலனையே பெரிதாக எண்ணும் என்பதை இப்பொதுதேர்வு ரத்தின் மூலமாக மக்களுக்கு நிரூபித்து ஜனநாயகத்தின் வேர்களை துளிர்விட செய்வோம்.
-கட்டுரையாளர்: இரா.கோமதி, தொடக்கப்பள்ளி ஆசிரியை,புதுச்சேரி
அருமையான கருத்து பதிவு. ஒவ்வொரு தரப்பினர் நிலையையும் சுட்டிக் காட்டி இந்நாளிற்கு இச் சூழ்நிலைக்கு ஏற்ற கருத்துகளை நல்கோர்வையாக்கி கட்டுரை படைத்துள்ளீர்கள். சிறப்பு. ஏற்க வேண்டும் அரசு.. ஏற்ற வேண்டும் நம்பிக்கை விளக்கு..
வாழ்த்துகள் சகோதரி!