ஆத்தா (Aatha) – நூல் அறிமுகம்
மருத்தவர் காசியால் அவரது மறைந்த அன்னையின் ஓராண்டு மறைவுதினத்தை நினைவு கூறும் வகையில் அன்னையின் வாரிசுகளால் அன்னையைப் பற்றி எழுதியதை தொகுத்துக் கூறும் நூல் ஆத்தா. இதில் சிலர் ஆங்கிலத்திலும் அன்னையைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். அவரவர் அனுபவத்தை மிகைப்படுத்தாமல் மிகவும் இயல்பாகவும் எந்த மெலோ டிராமாவிற்கு இடமளிக்காமலும் பகிர்ந்து கொள்வதால், புனைவில்லா இலக்கியத்தில் இடம் பெற வேண்டிய முக்கியமான நூலாக இதைக் கருதுகிறேன். இதை நான் முக்கியமான நூலாக கருதுவதற்கு மேலும் மூன்று காரணங்கள் உள்ளன, முதலாவதாக, எட்டுக் குழந்தைகளை பெற்றெடுத்த ஒரு தாய் வறுமையில் உழன்று வாழ்க்கையுடன் போராடி அந்த எட்டு குழந்தைகளையும் வறுமையில்லா வாழ்க்கைக்கு கொண்டு சென்ற இந்த நிஜக் கதை போராடும் எளிய மனிதர்களுக்கு நம்பிக்கையூட்டும் நூல் என்பதால் இது எனக்கு முக்கியமான நூலாகப் படுகிறது. இரணடாவதாக, மறைந்த முன்னோருக்கு மரியாதை செலுத்தும் போது எந்த வித சடங்கு சம்பிரதாயங்கள் மூட நம்பிக்கைகளுக்குள் சிக்காமல் ஒரு மாற்றுப் பண்பாட்டை முன்னெடுக்கும் விதமாக இந்த நூல் தொகுக்கப்பட்டு அவரது முதல் நினைவுதினத்தையொட்டி வெளியிடப்பட்டதாலும் இது எனக்கு முக்கியமானதாகப் படுகிறது, மூன்றாவதாக இந்நூலானது ஒரு சமூக அறிதல்சார் சாய்வை (Social Cognitive Bias) உடைக்கிறது.
நம் எல்லாருக்கும் நாம் வாழும் சமூகம் ஒரு அறிதல்சார் சாய்வை உண்டாக்கியிருக்கிறது. எதையுமே ஆழமாக பார்க்காமல் எடுத்த எடுப்பில் மேம்போக்காக கருத்தை உண்டாக்கிக் கொள்ளுதலையே அறிதல்சார் சாய்வு என்கிறேன். காமாட்சி என்ற பெயரைக் கேட்டதும் பெண் என்றுதான் முடிவெடுப்போம். காமாட்சி என்ற பெயருடைய ஆண்களும் இருக்கிறார்கள். அதுபோலத்தான் காரைக்குடி செட்டியார் என்றால் தனவந்தர்கள் என்ற புரிதல் நமக்கு உண்டு. காரைக்குடி செட்டியார் சமூகத்தில் பொருளாரதாரத் துன்பத்தில் உழன்றவர்கள் இருக்கமாட்டார்கள் என்ற நமது அறிதல்சார் சாய்வை இநநூல் உடைக்கிறது. நான் பழகிய செட்டியார் நண்பர்களின் வீடுகள் ஒரு தெருவிலிருந்து இன்னொரு தெருவிற்கு பரவியிருக்கும். குறைந்தபட்சம் 20 அறைகளாவது இருக்கும். வீட்டு உபயோகப் பண்டங்கள் ஒவ்வொன்று இருக்க வேண்டிய இடத்தில் ஒவ்வொன்றும் டஜன் கணக்கில இருக்கும். அது அம்மியாக இருந்தாலும் சரி ஆட்டுக்கல்லாக இருந்தாலும் சரி. இதுவே எனக்கு தெரிந்த காரைக்குடி செட்டியார் சமூகம். காரைக்குடி செட்டியார் சமூகத்தில் இன்னொரு பிரிவினர் இருக்கிறார்கள் என்பதையிம் அப்பிரிவினர் பர்மாவிலும் மலேஷியாவியலும் வணிகம் செய்து வந்த முதல் செட்டியார் பிரிவினருக்கு உதவியாளர்களாக பணியாற்றியவர்கள் என்பதையும் இந்நூல் வாசிப்பவர்கள் அறிய முடிகிறது. முதல் பிரிவினர்தான் தனவந்தர்கள் இரண்டாவது பிரிவினர் முதல் பிரிவினருக்கு உழைப்பு சக்தியை விற்று பிழைத்தவர்கள். அதனால் இரண்டாவது பிரிவினர் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள்.
அறந்தாங்கி – திருமயம் – திருப்பத்தூர் – காரைக்குடி – தேவகோட்டை – அறந்தாங்கி ஊர்களை புள்ளிகளாக வைத்து அவற்றை கோடுகள் மூலம் இணைத்தால் இதற்குள் வரும் நூற்றுக்கணக்கான கிராமங்களில் சில கிராமங்கள் செட்டியார்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களாகும். செட்டிநாடு என்றும் இப்பகுதி அழைக்கப்படுகிறது. அதில் ஒன்று நாகுடி என்ற கிராமம். நாகுடியில்தான் ஆத்தா நீண்டகாலம் வாழ்ந்திருக்கிறார்கள். ஆத்தாவிற்கு எட்டு பிள்ளைகள், ஆத்தாவின் கணவர் ஒரு உறவினரிடம் இருந்து வாடகைக்கு எடுத்து ஒரு சிறிய பேக்கரியை நடத்துகிறார. மழையில் அந்த பேக்கரியின் மண்சுவர் கரைய, கடன்வாங்கி அதை காங்கிரீட் கட்டிடமாக்குகிறார். அத்துடன் குடியிருப்பதற்கான வீட்டையும் கட்டுகிறார். இது நடந்து முடிந்த பிறகு இடத்தின் உரிமையாளர் கட்டிடத்தின் உரிமை கோரி அவர்களை அங்கிருந்து வெளியேற்றுகிறார். மொத்த குடும்பம் நடுத் தெருவில். இருந்த இடமும் போயிற்று பிழைத்த பிழைப்பும் போயிற்று, நிலுவையில் கட்டிடம் கட்ட வாங்கிய கடன். இங்கிருந்துதான் ஆத்தாவின் போர்ப்பயணம் துவங்குகிறது. குழந்தைகள் படிப்பில் எந்த வித சமரசமும செய்யாமல் எந்தக் குழந்தையையும் வேலைக்கு அனுப்பாமல், இட்லிக்கடை, சிறிய உணவகம், ஆடு, மாடு, கோழிகள் வளர்த்தல் என்றெல்லாம் போராடி ஒவ்வொருவராக படிப்பை முடித்து நல்ல வேலையில் அமர்கிறார்கள். பணியில் ஓய்வுபெற்ற முதல் மகன் ஓய்வுபெறும்போது தமிழ்நாடு மின்வாரியத்தில் செயற்பொறியாளர். இரண்டாவது மகன் ஓய்வு பெற்ற போது தொலைபேசித்துறையில் இயக்குனர் ஆறாவது மகன் காசி சொந்தமாக மருத்துவமனை என்று ஒட்டுமொத்த குடும்பமே வறுமையிலிருந்து விடுபட்டதற்கு முதுகெலும்பாக திகழ்ந்தவர் ஆத்தா.
ஆத்தாவைப் பற்றி 57 பதிவுகள் இந்நூலில் உள்ளது. பதிவு செய்தவர்கள் மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பதிவுகள் சரமாரியாக இருக்கின்றன. ஒருவர் ஆத்தாவைப் பற்றி கவிதையாக எழுதுகிறார் என்றால் இன்னொருவர் ஆத்தாவிற்கு கடிதமாக எழுதுகிறார், இன்னொருவர் நினைவுக் குறிப்பை எழுதுகிறார். நடக்கத் துவங்கிய குழந்தை தட்டுத்தடுமாறி நடப்பதுபோல் எழுதத் கற்றுக் கொண்ட கொள்ளுப் பேத்திகள் கோட்டு ஓவியங்களும் அதன் மேல் உதிர்க்கப்ட்ட பூக்கள் போன்ற சொற்களும் இடம் பெற்றிருக்கினறன. இப்படி ஆத்தாவின் கடைசி 55 ஆண்டுகால வாழ்வு பதியப்பட்டிருக்கிறது. இப்பதிவுகளில் ஆத்தாவின் உழைப்பு, அர்ப்பணிப்பு, தொழில்முனைவுத்திறன் (entrepreneurial skill), பாசத்துடன்நீட்டிய நேசக்கரம் (Emotional Support), தலைமைப் பண்பு (Leadership skill), வழிகாட்டும்திறன் (Mentorship), மேலாண்திறன்(Managerial skill) ஆகியவை ஆழமாக பதியப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் மென் தேர்ச்சித்திறன் (Soft Skill) என்றழைக்கப்படும் தேர்ச்சித்திறன்கள். இன்றைக்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் எம்பிஏ படித்து மேலாளர்களாக பணியாற்றும் ஊழியர்களுக்கு பல மணிநேரங்கள் செலவழித்து பயிற்சியளிக்கப்படுகிறது. பொதுவாக இம்மாதிரியான பயிற்சிகளில் பயிற்சி வகுப்பு நடைபெறும். பிறகு ஓராண்டு காலத்தில் பயிற்சி வகுப்பில் கற்றதை செயலாக்கியதன் வாயிலாக கண்கூடான முன்னேற்றத்தை அடைய முடிந்திருக்கிறதா என்பதை நிகழ்வுகளின் வாயிலாக பரிசோதித்து தேர்ச்சித்திறன் உயர்ந்திருக்கிறதா என்று முடிவெடுப்பார்கள். பல லட்சம் செலவில் தேர்ச்சித்திறனை உற்பத்தி செய்யும் நடப்புகாலத்தில், எதுவுமே செலவழிக்காமல் 7ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஆத்தாவிற்கு அனுவத்தின் வாயிலாக கிடைக்கப் பெற்றிருக்கிறது என்பது ஆத்தாவின் கூர்மதியையும் (Sharpness), இலக்கை நோக்கிய பயணம் (Result oriented journey) தகவமைத்துக்கொள்ளும் (Adaptability) திறனையும் சுட்டிக்காட்டுகின்றன. இவையெல்லாவற்றிற்கும் மகுடம் சேர்க்கும் குணமாக அவரிடம் இருந்தது கல்வி வேட்கையாகும். ஒரு பிற்போக்கு சமூகத்தில் கல்வி மறுக்கப்பட்ட பெண்ணின் எதிர்வினையாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஆண் பெண் வித்தியாசம் பாராமல் கல்வியை கொண்டு செல்லும் இந்த வேட்கையானது பாரம்பர்மாக தொடரும் பண்பாட்டை உடைத்து நொறுக்கும் கோபம் அதில் அடங்கியிருக்கிறது என்பதையும் இந்நூலை வாசிப்பவர்களால் உணர முடியும்.
இந்நூலில் ஆத்தாவின் குடும்ப மரம் (Family Tree) வரையப்பட்டிருக்கிறது. இது வாசகனுக்கு ஒவ்வொரு பதிவாளர்கள் யார் என்பதை அடையாளம் காண உதவுகிறது. அத்துடன் குடும்ப மரத்தில் உள்ள அனைவரும் கிட்டத்தட்ட பதிவுகள் இட்டிருக்கிறார்கள். வாசகன் குடும்ப மரத்தையும் பதிவாளர்களின் பெயர்களையும் மாற்றி மாற்றி பார்த்து ஒவ்வொரு தலைமுறையும் வாழ்ந்து மறைந்த அந்த மனுஷியை எப்படி பார்க்கிறது அறிந்து கொள்ளும் விதமாக நூல் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வாசகனுக்கு தலைமுறை நோக்குநிலை பற்றிய புரிதல் கிடைக்கிறது. ஆத்தாவின் குடும்பம் ஒரு ஜனநாயகக் குடும்பம் என்பது நூலை வாசிப்பவரகள் அறியலாம். இவ்வளவு பெரிய குடும்பம் காலச் சூறாவளியை எதிர்த்து நின்று ஜனநாயக பூர்வமாக இயங்குவது ஆச்சரியமளிக்கிறது. அதற்கு ஒரே ஆதர்ஷ சக்தி ஆத்தா தான். செட்டிநாட்டின் மண்வாசனையை பிரதிநிதித்துவப்படுத்தும் குறுஞ்சொற்றாளர் என்ற பதிவும் ஆத்தாவின் பேச்சில் அவ்வப்போது தென்படும் சொலவடைகளும் (எடுத்துக்காட்டு யாருமில்லாத வீட்டில் தனியாக அமர்ந்திருப்பதைப் பார்த்து கேட்கும் பேரனிடம் வீட்டுக்கு நான்தான் பூட்டு என்று கூறுவதை) பதியப்பட்டிருக்கிறது. 1973-74 அரிசிப் பஞ்சம் பற்றிய தவகல், இன்றைக்கு ஓலோ மோட்டார் சைக்கிள் வருவதற்கு முன்பே 1970களில் சைக்கிளை ஓட்டுவதற்கு ஓட்டுனர் அமர்த்தி சைக்கிளில் பயணம் செய்தவர் ஆத்தாவின் கணவர் போன்ற ஒருதலைமுறைக் கதைகள் இந்த பதிவுகள் அத்துணையிலும் நெடுக பரவிக்கிடக்கிறது. இந்நூலில் குடும்பத்தாரின் கறுப்பு-வெள்ளை படங்கள், கலர்ப்படங்கள், கோட்டோவியங்களாக மாற்றப்பட்ட படங்கள் ஆகியவை இணைக்கப்பட்டிருப்பது இது ஒரு ஆவண நூல் என்ற தோற்றத்தை தருகிறது.
ஆத்தா, தன் குடும்பம், அதன் முன்னேற்றம் மட்டுமே குறிக்கோள் என்று இயங்கியவர் கிடையாது. அவருக்கு இருந்த சூழநிலையில் அப்படித்தான் இயங்க முடியும். ஆனால் அதனையும் தாண்டி நாகுடி பஞ்சாயத்தின் பெண் உறுப்பினர் என்பதையும், ஆத்தாவின் குடும்பத்தைவிட அதிக துன்பத்தில் உழலும் குடும்பப் பெண்கள் ஆத்தாவிடம் தங்கள் ஆற்றாமையைக் கூறும் போது அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக பேசுவதும், உணவகம் நடத்தும்போது தம்மைவிட பரம ஏழைகளிடம் கறாராக கணக்குப் பார்த்து வாங்காமல் சற்று மனிதாபிமானத்துடனும் அணுகியது, அவருக்கே உரித்தான முற்போக்கு அரசியல் பார்வை, வறுமைக்குப் பின் அவர் செலவழித்த நேரங்களில் தொலைக்காட்டி நாடகங்களைவிட செய்திநேரங்களுக்கு முன்னிரிமை கொடுப்பது போன்றவைற்றை வைத்துப் பார்த்தால் ஆத்தா ஒரு Sur real Character ஆகத் தோன்றும். எனினும் இது உழைக்கும் மக்களின் அடிப்படைப் பண்பாகும். ஆத்தா என்பது உழைக்கும் மக்களின் ஒரு சாம்பிள். எனவே, ஆத்தா ஒரு Sur real Character அல்ல. இதே போன்ற எண்ணற்ற ஆத்தாக்கள் நம் தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். ஆத்தாக்களின் முதல் பதிவாக இந்நூல் வந்துள்ளது. இதுபோன்று பல ஆத்தாக்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் முதன் அடியாக இந்நூல் அமைந்திருக்கிறது. மறைந்த முன்னோருக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு மாற்றுப் பண்பாட்டுப்பாதையை இந்நூல் திறந்திருக்கிறது. தமிழ் மக்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இது. புனைவல்லா இலக்கிய நூல்களின் வரிசையில் கம்பீரமாக ஆத்தா அமர்ந்திருக்கிறது.
நூலின் விவரம்:
நூல்: ஆத்தா
ஆசிரியர்: டாக்டர் எஸ். காசி
வெளியீடு: ஸ்ரீ பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.180
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
எழுதியவர்:-
விஜயன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.