– என். குணசேகரன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தேர்தலில் போட்டியிடுவதை, திமுக தடுத்தது என்றும், இது சமூக நீதிக்கு எதிரானது என்றும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.திமுக எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்று திருமாவளவன் மறுத்துவிட்ட போதிலும் இப்படிப்பட்ட அவதூறை பாஜகவினர் பரப்புகின்றனர்.இது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விஷமத்தனமான வேலை.
இது ஒரு புறமிருக்க, முதலில் சமூக நீதி பற்றி பேசுவதற்கு பாஜகவினருக்கு தகுதி இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். உண்மையில் இந்துத்துவா சித்தாந்தம் சமூக நீதிக்கு எதிரானது; இதை எடப்பாடி பழனிச்சாமி கண்டுகொள்ளாமல் மறைக்க முயன்றாலும் தமிழக மக்கள் அதனை நன்கு அறிந்திருக்கிறார்கள் .
பாஜகவின் சமூக நீதி ‘வேடம்’
தமிழகத்திற்குப் பிரச்சாரத்திற்கு வருகிற பாஜகவின் தலைவர்களும் இது போன்று அடுக்கடுக்காக பொய்களை அள்ளி வீசி வருகின்றனர். சமீபத்தில் சென்னை வந்த பிற்படுத்தப்பட்டோர் அணியின் தலைவர் கே லக்ஷ்மன் “தேசிய அளவில் மதம் ஜாதி பார்க்காமல் பிரதமர் மோடி அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்து வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். ஆகவே மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி விட்டனர்” என்று ‘தமாஷ்’செய்துள்ளார். இந்த தேர்தலில் இது ஒரு சிறந்த நகைச்சுவைத் துணுக்கு!
பாஜக அனைத்து வகையிலும் சமூக நீதியை ஒடுக்கி வருகின்றனர்.பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசு பெருமளவில் தனியார்மயமாக்கி வருவதால், அங்கு தற்போதுள்ள இடஒதுக்கீடு முறை ஒழிக்கப்பட்டு வருகிறது. அரசு வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால், இடஒதுக்கீட்டின் பலன் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சென்றடைவதில்லை. இதனால் ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
தமிழ்நாட்டில், நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைப்பதோடு, இது மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கிறது. இதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க முடியாது என்று பாஜக தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. இதைப்பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடியும் பேசுவதில்லை.
“மனு,சிறந்த சட்ட வல்லுநர்”- கோல்வால்கர்
பாஜகவினை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் சாதிய ஒடுக்குமுறை அமைப்பை நிலைநிறுத்தும் கொள்கை கொண்ட அமைப்பு .
பட்டியலின, பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களை காலம் காலமாக சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாக்கிய மனுதர்ம மனித விரோத சித்தாந்தத்தை வலுப்படுத்தும் குறிக்கோள் கொண்ட அமைப்பாக ஆர். எஸ். எஸ். நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது.வர்ணாசிரம முறையை நவீன காலத்திலும் நிலைநாட்டிட இந்துத்துவா சக்திகள் முயற்சிக்கின்றனர்.
புதிய கல்விக் கொள்கை இதற்கு ஒரு உதாரணம்.இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிப்பது, இந்தியாவின் பன்முகத்தன்மையை அழித்து ஒற்றைக் கலாச்சாரத்தை உருவாக்கும் முயற்சி.அத்துடன், ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவு மாணவர்களின் கல்வி வாய்ப்புக்களைப் பறித்து சமூக நீதியையும் துடைத்தெறியும் முயற்சியாக இருக்கிறது.மனுஸ்மிருதி’யை பாடத்திட்டத்தில் சேர்க்கும் முயற்சிகள் பாஜகவின் சமூக நீதி வேடத்தைக் கலைத்து விட்டது.
ஆர்எஸ்எஸ்-ன் இரண்டாவது தலைவரான கோல்வால்கர் வர்ணாசிரம முறைக்கு ஆதரவான கருத்துக்களைக் கொண்டிருந்தார் என்பதற்கு அவர் எழுதிய சிந்தனைத் தொகுப்பு நூல் ( “Bunch of Thoughts” ) முக்கியமான சான்று.வர்ணாசிரம முறையை சிறந்த சமூக அமைப்பாக அவர் கருதினார்.சாதி என்பது பிரிவினையை ஏற்படுத்தவில்லை, மாறாக சமூகத்தின் பணிகளைப் பகிர்ந்து கொடுத்தது என்று சாதிய ஏற்றத்தாழ்வுகளை அவர் நியாயப்படுத்தினார்.
மனுவை உலகின் மிகச்சிறந்த சட்ட வல்லுநர் (Law Giver) என்று புகழ்ந்தார்.கோல்வால்கர் எழுதினார்:
“”சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பும் (வர்ணங்கள்) அதன் பணிகளைச் செய்வது இறைவனுக்குச் செய்யும் சேவையாகக் கருதப்பட்டது. ஒரு பிராமணன் அறிவைப் பரப்புவதையும், ஒரு சூத்திரன் தனது திறமையால் சமுதாயத்திற்குச் சேவை செய்வதையும் ஒரே மாதிரியான புனிதமான பணிகளாகவே மனு கருதினார்.” (Bunch of Thoughts நூலில் இருந்து).
சமூகத்தில்இடஒதுக்கீடு சாதி உணர்வை மேலும் தூண்டும் என்பது அவரது ‘பொன்னான’கருத்து. கோல்வால்கர் கருத்துக்களை ஏற்க மாட்டோம் என்று அண்ணாமலையோ அல்லது பாஜக தலைமையோ அறிவிப்பு வெளியிடுவார்களா?
உயர்கல்வி நிறுவனங்களில் சமூக அநீதி!
உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் (SC/ST/OBC) சந்திக்கும் பாகுபாடுகளைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல்கலைக்கழக மானியக் குழு புதிய விதிமுறைகளை வகுத்தது. இந்த விதிமுறைகளில் பல குறைபாடுகள் உள்ளன.IIT, IIM மற்றும் AIIMS போன்ற நிறுவனங்களையும் இந்த விதிகளின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. ஏனெனில் அந்த நிறுவனங்களில் தான் சாதியப் பாகுபாடுகள் பற்றிய புகார்கள் அதிகமாக எழுப்பப்படுகின்றன.ரோகித் வெமுலா போன்ற மாணவர்களின் தற்கொலைகளுக்குப் பிறகு, இத்தகைய சட்ட ரீதியான பாதுகாப்பு அவசியம் என்ற கருத்து வலுப்பெற்ற நிலையில், ஒரு கண் துடைப்பு என்ற வகையில்தான் மேற்கண்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தாலும் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து சரியான விதிமுறைகளை அமலாக்குவதற்கு தவறியுள்ளது.
பீகார் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின வாக்காளர்கள் பாஜகவிற்கு வாக்களித்து ஆட்சிக்கு வர உதவி செய்தனர்.ஆனால் 90% க்கும் அதிகமான அந்தப் பிரிவு மாணவர்களை கல்வி நிலையங்களில் பாதுகாப்பதற்கு, ஒரு சிறு கூட்டத்தின் எதிர்ப்பைக் காரணம் காட்டி பாஜக தயக்கம் காட்டுகிறது. இது சமூக நீதிக்கு பாஜக இழைத்து வருகிற ஒரு பெரும் அநீதி.
பாஜக ஆளும் மாநில அரசுகள்
நாடு முழுவதும் சங்கப் பரிவார அமைப்புகள் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளும் தாக்குதல்களும் , அவர்களை அந்நியர்களாக சித்தரித்து மேற்கொள்ளப்படும் வெறுப்புப்பிரச்சாரங்களும் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானவை.
பசுப் பாதுகாப்புக் குழுக்கள் என்ற பெயரில் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மீது சங்கப் பரிவாரங்கள் நடத்துகிற தாக்குதல்களையும், கும்பல் வன்முறைகளையும் ஆளும் பாஜக அரசுகள் தடுக்கவில்லை. அதற்கு பதிலாக இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகின்றனர்.
பாஜக ஆளும் மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்படுகின்றன. ‘லவ் ஜிஹாத்’, ‘கர் வாபசி’ போன்ற சொல்லாடல்கள் மூலம் சமூகத்தில் அச்ச உணர்வையும், மத ரீதியான பிளவுகளையும் திட்டமிட்டு உருவாக்குகின்றனர்.
இத்தகைய தாக்குதல்கள் வெறும் உடல் ரீதியான வன்முறையோடு நின்றுவிடவில்லை. சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தைச் சிதைப்பது,அரசியல் ரீதியாக அவர்களை ஓரங்கட்டுவது எனப் பல வழிகளில் தாக்குதல்கள் நீடிக்கின்றன. இது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச்சார்பற்ற கொள்கைகளுக்கும் முரணானது;சமூக நீதிக் கோட்பாடுகளையும் இந்த தாக்குதல்கள் குழிதோண்டிப் புதைத்து வருகின்றன.
சமூக நீதியும் இடதுசாரிகளும்.
சமூக நீதி என்பது கல்வி, சுகாதாரம்,வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் ஆகிய தேவைகள் அனைவருக்கும் நிறைவேற்றப்படுகிறதா என்ற கேள்வியோடு இணைந்தது.உண்மையான அனைவருக்குமான வளர்ச்சி முன்னெடுக்கப்படுகிறதா என்பதுதான் முக்கியமானது.
-”நமக்கு எதிராக அவர்கள்” என்ற நூலில் டாக்டர் ரெக்ஸ் சற்குணம் எழுதியுள்ளார்:” “அமெரிக்கா முதல் இந்தியா வரை அனைத்துப் புதிய தாராளமய ஆட்சிகளாலும் மக்கள் மீது ஒரு பெரிய மருத்துவ மோசடி செய்யப்படுகிறது.கார்ப்பரேட் இன்சூரன்ஸ் துறையால் பெரும்பகுதி பணம் பறிக்கப்படுகிறது. மற்ற பெரிய பயனாளிகளாக பெரு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தரகர்கள் உள்ளனர்…பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ அமைப்புகளைக் கட்டி எழுப்புவதற்கு பதிலாக மக்கள் பணம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் விரயமாக்கப்படுகிறது … “ .
இதனால் ஏழை நடுத்தர மக்கள் அனைவருக்கும் தேவையான மருத்துவ, சுகாதார வசதி கிடைக்கவில்லை. ஒன்றிய பாஜக அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.6% மட்டுமே சுகாதாரத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளது.
உடல் ஆரோக்கியத்துடன் உயிர் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்படுகிற சூழலில் சமூக நீதி எங்கே இருக்கிறது?
இடதுசாரிகள் சமூக நீதிக்கான போராட்டம் பொருளாதார சமத்துவப் போராட்டத்தோடு இணைந்தது என்கிற கருத்தியல் கொண்டவர்கள். ஏனெனில் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் பொருளாதார, வாழ்வாதார வாய்ப்புகளை மறுக்கப்பட்டு வறுமை, வீழ்ச்சி அடைந்த வாழ்க்கைத் தரம், வேலையின்மை, வேலை இழப்பு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக நீதிக்கான தற்போதுள்ள நடவடிக்கைகள் போதுமானதல்ல. இட ஒதுக்கீடு உள்ளிட்ட கொள்கைகளை வலியுறுத்தவும் ,அது தனியார் நிறுவனங்களில் முறையாக அமலாக்கவும் இடதுசாரிகள் போராடி வருகின்றனர். அதே நேரத்தில் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கான கோரிக்கைகளுக்காகவும் தெருவில் இறங்கி போராடுபவர்கள் இடதுசாரிகள். அத்தகைய தனித்தன்மையோடு இடதுசாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.கிராமப்புற நில உடைமை உறவுகளில் சமத்துவ மாறுதல்களை ஏற்படுத்தாமல் சமூக நீதியை அடைந்திட இயலாது. இதன் காரணமாக கிராமப்புற வர்க்கப் போராட்டங்களை கம்யூனிஸ்டுகள் வரலாற்று ரீதியாக முன்னெடுத்து வந்துள்ளனர்.
சமூக நீதி முன்னெடுப்பு வரலாற்றில் தமிழகத்திற்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளது. இதனை அழித்திட பாஜக முயற்சித்து வருகிறது திராவிட கட்சிகளின் ஒன்றான அதிமுகவை கூட்டணி சேர்த்துக் கொண்டு இந்த சூழ்ச்சி வலையை பாஜக பின்னி வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியை முறியடிப்பது சமூக நீதி காக்கும் மிக முக்கியமான கடமை.
========================================================.
எழுதியவர்:
– என்.குணசேகரன்
மத்தியக்குழு உறுப்பினர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

