பசுமைப் புரட்சியின் முதன்மையான நோக்கம், தொழில்நுட்ப மற்றும் நிறுவன ரீதியான மாற்றங்கள் வழியாக உணவு உற்பத்தியில் தன்னிறைவினை அடைதல் மற்றும் வேளாண்மை வளர்ச்சியினை எட்டுதல் ஆகும். எனவே, 1960களில் வேளாண் சார்புக் கொள்கைகளும், திட்டங்களும் வகுக்கப்பட்டன. இந்த அடிப்படையில், விவசாயிகளின் நலனை மேம்படுத்தவும், வேளாண் உற்பத்திப் பொருட்களின் விலை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கவும் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் பொருட்களின் உற்பத்தி அதிக அளவில் காணப்படும்போது அதற்கான சந்தை விலை குறைந்துவிடுகிறது, இதனால் விவசாயிகள் பெரும் இழப்பினைச் சந்திக்கின்றனர். எனவே, அரசே தன்னுடைய காப்பு இருப்புக்கு (Buffer Stock) தேவையானதை நேரடியாகக் கொள்முதல் மையங்களைத் திறந்து இடைத்தரகர்களின் தலையீடு இன்றி கொள்முதல் செய்கிறது. அப்போது அரசு அறிவிக்கின்ற குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு வேளாண் விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து வாங்குகின்றனர். ஆனால், இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது சட்டப்பூர்வமானதல்ல. அரசின் முறைப்படுத்தப்பட்ட மண்டிகள், தனியார் மண்டிகளில் இது கட்டாய நடைமுறையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ் அரசு கொள்முதல் மையங்கள் நிலையாக ஆண்டு முழுவதும் செயல்படாது, அறுவடைக் காலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இம் மையங்கள் செயல்படும். இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளும் இவ் ஆதரவு விலையினால் பயன்பெற முடியாது. பொதுவாக விவசாயிகள் தங்களின் வேளாண் விளைபொருட்களைத் தனியார் மண்டிகள், வேளாண் விளைபொருட்களுக்கு இடுபொருட்களை அளிப்பவர்கள், தரகு முகவர்கள், அரசு அல்லது கூட்டுறவு போன்றவர்களிடம் விற்பனை செய்கின்றனர். இந்தியாவைப் பொருத்தமட்டில் வேளாண் உற்பத்தி பொருட்கள் சந்தை படுத்துதலில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இந்திய விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைப் பெருமளவிற்குத் தனியார்களிடம் விற்பனை செய்கின்றனர் (நெல் விற்பனையில் உத்திரப் பிரதேசம் 81.35 விழுக்காடும், மேற்கு வங்காளம் 87.58 விழுக்காடும், கர்நாடகா 95.45 விழுக்காடும், இது போன்று கோதுமை விற்பனையில் உத்திரப் பிரதேசம் 85.38 விழுக்காடும், குஜராத் 80.71 விழுக்காடும், ராஜஸ்தான் 76.17 விழுக்காடும் தனியார்களிடம் விற்கின்றனர்). தனியார்கள் வேளாண் உற்பத்தி பொருட்களைக் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக் குறைவான விலைக்கே வாங்குகின்றனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் மட்டுமே அதிக அளவாகக் குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசு வேளாண் விளைபொருட்களை நேரடியாக இந்திய உணவுக் கழகத்திற்குக் கொள்முதல் செய்கிறது. இதற்கு முக்கியக் காரணம் இந்த மாநிலங்களில் நீர்ப்பாசன வசதி, அதிக உற்பத்தி திரன், நெல், கோதுமை அதிக அளவில் உற்பத்தி, சிறந்த சந்தைக் கட்டமைப்பு, அரசுக் கொள்முதல் மையங்கள் அதிக அளவில் செயல்படுவது போன்றவற்றைச் சுட்டிக்காட்டலாம். 2019-20ல் மொத்த நெல் உற்பத்தியில் 43.86 விழுக்காடும், கோதுமை உற்பத்தியில் 31.72 விழுக்காடும் தேசிய அளவில் அரசு கொள்முதல் செய்கிறது. பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய நான்கு மாநிலங்களில் அதிக அளவில் அரசு நேரடி நெல் கொள்முதலைச் செய்கிறது. இதுபோல் ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசத்தில் அதிகமாகக் கோதுமையை அரசு நேரடியாகக் கொள்முதல் செய்கிறது (Gopi Sankar Gopikuttan et al 2022).

குறைந்தபட்ச ஆதரவு விலை

குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு அளிக்கப்படும் உத்தேசமான விலையாகும். இதில் விவசாயிகள் ஆதாயம் பெரும் வகையில் விலை தீர்மானிக்கப்பட்டிருக்கும். குறைந்தபட்ச ஆதரவு விலையானது பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தப்படும்போது விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான செலவு மற்றும் விலைக்கான வேளாண்மைக் குழுவின் (Commission for Agricultural Costs and Prices – CACP) பரிந்துரையின் அடிப்படையில் ஒன்றிய அரசு அறிவிக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையினை CACP, கணக்கிடும்போது, வேளாண் பொருட்களின் தேவை மற்றும் அளிப்பு, உற்பத்திச் செலவு, உள்நாட்டு வெளிநாட்டுச் சந்தையில் விலையின் போக்கு, விளைபொருட்களுக்கிடையே உள்ள விலையின் ஒப்புமை, வேளாண் மற்றும் வேளாண் சாரா வர்த்தக நிலை, உற்பத்தி செலவினை விடக் குறைந்தபட்சம் 50 விழுக்காடு விளிம்புநிலை, குறைந்தபட்ச ஆதரவு விலையினால் நுகர்வோருக்கு ஏற்படும் விளைவுகள் போன்றவை அடிப்படையாகக் கொள்கிறது. இவ்விலை வேளாண் பொருட்கள் கொள்முதல் செய்யும் போது கட்டாயம் அனைத்து கொள்முதல் செய்பவர்களும் பின்பற்றவேண்டியதில்லை. விவசாயிகளும் தங்களின் உரிமை என இவ்விலையினைக் கோரவும் முடியாது. அதாவது குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது சட்டப்பூர்வமானது அல்ல. 1966-67ல் முதன் முதலில் கோதுமைக்கு இவ்விலை (ஒரு குவிண்டாலுக்கு ரூ.54 நிர்ணயிக்கப்பட்டது) அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து டி.எல்.தந்த்வாலா குழுவின் பரிந்துரைப்படி நெல்லிற்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கப்பட்டது. தற்போது 23 வகையான வேளாண் விளைபொருட்கள் (7 தானிய வகை, 5 பருப்பு வகை, 7 எண்ணெய் வித்துகள், 4 வாணிப விளைபொருட்கள்) குறைந்தபட்ச ஆதரவு விலைகள் அறிவிக்கப்படுகிறது (Udit Misra 2022). இவ்விலையினால் அதிக அளவிற்கு நெல், கோதுமை விளைபொருட்கள் பயன் அடைகின்றன. இவ் விளைபொருட்களுக்கு ஆண்டிற்குச் சம்பா (காரீப்), குறுவை (ரபி) ஆகிய பருவ காலங்களுக்கு விலை (நெல்லைப் பொருத்தமட்டில் சன்னரகம், சாதாரண ரகம் என தனித்தனியே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது) என பிரித்து ஒன்றிய அரசு அறிவிக்கிறது.

குறைந்தபட்ச ஆதரவு விலையினைத் தீர்மானிப்பதில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுக் காரணிகளின் தாக்கமும் உள்ளடங்கியுள்ளது. பன்னாட்டுக் காரணிகளில் முக்கியமானது உலக வர்த்தக அமைப்பு ஆகும். இந்த அமைப்பின்படி மொத்த வேளாண் உற்பத்தி (2004ல்) மதிப்பில் 10 விழுக்காட்டுக்குமேல் மானியங்கள் வேளாண் விளைபொருட்களுக்கு அளிக்கக் கூடாது என்கிறது. இந்த அடிப்படையில் இந்தியா மீது பலநாடுகள் மானியம் அதிகமாக அளிப்பதாகத் தொடர்ந்து உலக வர்த்தக அமைப்பிடம் புகார் அளித்து வருகின்றன. ஆனால் உண்மையில் பல வளர்ந்த, வளரும் நாடுகளைவிட இந்தியா குறைவான அளவிலேயே மானியம் வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது (Nitya Nanda 2021). இந்தியாவில் 86 விழுக்காடு குறு, சிறு விவசாயிகள் ஆவார்கள், இவர்களுக்கு வேளாண் இடுபொருட்களான இரசாயன உரம், பூச்சிக்கொல்லி, விதை மற்றும் நீர்ப்பாசனத்திற்கு அரசின் மானியம் தேவையாக உள்ளது. மானியம் அளிக்கவில்லை என்றால் இவ்விவசாயிகள் பெரும் இழப்பினை எதிர்கொண்டு விவசாயத்தைவிட்டு அதிகமாக வெளியேறும் நிலை ஏற்படும், விவசாயத் தற்கொலைகளும் அதிகரிக்கும். மேலும் இந்தியா உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான ஏழைகளைக் கொண்டுள்ள நாடாகும். இதனைக் குறைக்க அனைவருக்கும் உணவு பாதுகாப்பு அளிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, வேளாண் விளைபொருட்களுக்கு மானியங்கள் வழங்கி உற்பத்தியினை பெருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. பன்னாட்டுத் தொடர் அழுத்தத்தின் காரணமாக 2020ல் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் (1.வேளாண்மை உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வணிபச் சட்டம், 2) வேளாண் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்தச் சட்டம், 3) அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்) அடிப்படையில் அரசு மானியங்களைக் குறைப்பதற்காகக் கொண்டுவரப்பட்டது. இச்சட்டங்களால் விவசாயிகள், வேளண்சார் முகவர்கள், அரசு மண்டிகள் பெருமளவிற்குப் பாதிப்படையும். குறைந்தபட்ச ஆதரவு விலையும் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும், பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் விவசாயம் சென்றடையும் என்பதால் விவசாயிகள் பெரும் இழப்பினை எதிர்கொள்ள நேரிடும். எனவே, விவசாயிகளின் கடும் போராட்டங்களை முன்னெடுத்தனர். விவசாயிகளின் கடும் எதிர்ப்பினால் ஒன்றிய அரசு இச்சட்டங்களை 2021ல் விலக்கிக்கொண்டது. மேலும் பன்னாட்டு அளவில் கோதுமை, அரிசி விலைகள் நிலையற்ற போக்கினைக் காணமுடிகிறது. இதனால் இந்திய விவசாயிகள் கடும் இழப்பினை அவ்வப்போது சந்திக்கவேண்டியுள்ளது எனவே குறைந்தபட்ச ஆதரவு விலையினை நிர்ணயிக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. உள்நாட்டு அளவில் அரசியல், நிதிப்பற்றாக்குறை, காப்பு இருப்பு போன்ற முக்கியக் காரணிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையினை தீர்மானிப்பதாக உள்ளது. நாட்டின் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் முன்பு ஆளும் அரசியல் கட்சிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையினை அதிகமாக உயர்த்துவார்கள் அதன் பின் குறைவாக உயர்த்துவார்கள். நிதி பற்றாக்குறையினைக் காரணம் காட்டி குறைந்தபட்ச ஆதரவு விலையின் உயர்வினை மட்டுப்படுத்தப்படுகிறது. இதேபோல் காப்பு இருப்பின் அடிப்படையினையும் கருத்தில்கொண்டு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு தீர்மானிக்கப்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலையின் வழியாக அரசு கொள்முதல் செய்யப்படும் உணவு தானியங்கள் நாட்டின் ஏழை எளிய விளிம்பு நிலையில் மக்களுக்கு உணவளிப்பதற்குப் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்ச ஆதரவு விலை கணக்கிடுதல்

எல்.கே.ஜா குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வேளாண் விளைபொருட்களின் செலவுகள் கணக்கிடுவதற்கு 1965ல் வேளாண் விளைபொருள் விலைக் குழு நடைமுறைக்கு வந்தது. இதனைத்தான் வேளாண் செலவு மற்றும் விலைக் குழு (Commission for Agricultural Costs and Prices – CACP) என 1985முதல் அறியப்பட்டது (Kadasiddappa Malamasuri et al 2013). ஜா குழுவின் கணக்கிடும் முறை கடினமாகவும், எளிமையாகப் புரிந்துகொள்ள இயலாமல் இருந்தது, எனவே எஸ் ஆர் சென் தலைமையில் 1979ல் ஒரு குழு அமைக்கப்பட்டு வேளாண் விளைபொருட்களின் செலவுகளைக் கணக்கிட சில சீர்திருத்தங்களை முன்மொழிந்தது. 1990ல் சி.எச்.அனுமந்தப்பா தலைமையிலான குழு, மேலாண்மை செலவு, சொந்த நிலத்திற்கான வாடகை மதிப்பு, போக்குவரத்து செலவு பொன்றவை வேளாண் விளைபொருட்களின் செலவில் கணக்கிடப் பரிந்துரைத்தது. 2003ல் ஒய்.கே.அலக் தலைமையிலான குழு குறைந்தபட்ச ஆதரவு விலையினைத் தீர்மானிக்க பல்வேறு பரிந்துரைகளை அளித்தது.

2004ல் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில் தேசிய விவசாயிகள் குழு அமைக்கப்பட்டது. இக்குழு 2004 – 2006ஆம் ஆண்டுக்குள் ஐந்து பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. இக்குழுவின் பரிந்துரையின்படி வேளாண் விளைபொருட்களுக்கான செலவுகளுடன் அச்செலவில் 50 விழுக்காட்டையும் கூட்டி குறைந்தபட்ச ஆதரவு விலையினை நிர்ணயிக்கவேண்டும் என்றது. இதன்படி 2018ல் (A2 + FL) + 50% என்ற அடிப்படையில் கணக்கிட்டு (A2 என்பது செலவு, FL என்பது சொந்த குடும்ப உறுப்பினர்களின் உழைப்பின் மதிப்பு) குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படுகிறது. ஒன்றிய அரசு எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையினை நிறைவேற்றியுள்ளதாக பிரகடனப்படுத்துகிறது. ஆனால் இக்குழுவின் பரிந்துரையினை ஒன்றிய அரசு பின்பற்றவில்லை என்பது தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். உண்மையில் சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தது C2 + 50% என்பதாகும்.

செலவு A1 என்பது நில உரிமையாளர்களின் வேளாண் விலைபொருட்களின் உற்பத்திக்காக ரொக்கமாகவும், கருணையாக அளிக்கக்கூடிய (kind) செலவுகள் அடங்கியதாகும் இச் செலவுகள் கூலிக்காக வேலைசெய்யும் தொழிலாளர்களின் உழைப்பின் மதிப்பு, சொந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான வாடகை மதிப்பு, இயந்திரங்களுக்கு அளிக்கப்படும் வாடகைத் தொகை, பயன்படுத்தும் விதைகளின் (சொந்த மற்றும் வாங்கப்படும்) மதிப்பு, பூச்சிக்கொல்லிக்குச் செலவிடும் மதிப்பு, இயற்கை உரம் (சொந்த மற்றும் வாங்கப்படும்) பயன்படுத்தப்பட்டதின் மதிப்பு, உரத்தின் மதிப்பு, நீர்ப்பாசன செலவுகள், பயிர்செய்வதற்குப் பயன்படுத்தும் பொருட்களின் தேய்மானம், நிலத்தின் வருமானம், நடைமுறை மூலதனச் செலவின் மீதான வட்டி மற்றும் பிற வகைச் செலவுகள் ஆகும்.

செலவு A2 என்பது செலவு A1 உடன் குத்தகைக்கு விடப்பட்ட நிலத்திற்கான வாடகையையும் சேர்த்தது.

செலவு B1 என்பது செலவு A1 உடன் நிலம் தவிற பிற சொந்த மூலதனச் சொத்தின் மதிப்பிற்கான வட்டி.

செலவு B2 என்பது செலவு B1 உடன் சொந்த நிலத்திற்கான குத்தகை மதிப்பு மற்றும் குத்தகைக்குப் பயிரிடும் நிலத்திற்குச் செலுத்தப்படும் குத்தகை மதிப்பு.

செலவு C1 என்பது செலவு B1 உடன் சொந்த குடும்ப நபர்கள் நல்கிய உழைப்பின் மதிப்பு.

செலவு C2 என்பது செலவு B2 உடன் சொந்த குடும்ப நபர்கள் நல்கிய உழைப்பின் மதிப்பு.

தற்போது ஒன்றிய அரசு இதில் செலவு A2 உடன் சொந்த குடும்ப நபர்கள் நல்கிய உழைப்பின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு அத்துடன் 50 விழுக்காடு சேர்த்து குறைந்தபட்ச ஆதரவு விலையினை அறிவித்துவருகிறது. ஆனால் ஒன்றிய அரசு வசதியாகச் செலவு C2 யைக் கணக்கிடாமல் தவிர்த்துள்ளது. எனவே சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையினை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது. இவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டதால் எவ்வளவு வேறுபாடு உள்ளது என்பதை கீழ்கண்ட அட்டவணையில் விளக்கப்பட்டுள்ளது.

அட்டவணை : தற்போதைய குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும், செலவு C2யின் அடிப்படையில் கணக்கிடுவதற்குமான உள்ள வேறுபாடு

 

பயிர்A2 + FLC2குறைநத்தபட்ச ஆதரவு விலைA2 + FL வைவிட அதிகரித்த விளிம்பு அளவு (%)C2 வைவிட அதிகரித்த விளிம்பு அளவு (%)
(1)(2)(3)(3) /  (1)(3) /  (2)
நெல்12451667186850.0412.06
கோதுமை92314291925108.5635.08


குறிப்பு
: 2020-21ஆம் ஆண்டு செலவின் அடிப்படையில் கணிக்கிடப்பட்ட விவரங்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Sukhpal Singh et al 2021.

இந்த அட்டவணையில் சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையான செலவு C2 உடன் 50 விழுக்காட்டினை கணக்கிட்டு குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டால் விவசாயப் பொருட்களின் விலை தற்போது அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட அதிகமாக உள்ளது. எனவே செலவு C2 வின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலையானது விவசாயிகளுக்கு நன்மை தருவதாக இருக்கும்.

2015ல் ரமேஷ்சந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின்படி சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையான செலவு C2 உடன் கூடுதலாகச் சில செலவுகளையும் சேர்க்கவேண்டும் என்றது. அதன்படி வேளாண்மையில் ஈடுபடும் குடும்பத் தலைவரின் உழைப்பினை திறனுடைய உழைப்பாளர் என கருதி கணக்கிடவேண்டும், நடைமுறை மூலதனத்தின் மீதான வட்டி முழு சாகுபடி காலத்திற்குக் கணக்கில் கொள்ள வேண்டும், எந்த வரையறையின்றி நிலத்தின் உண்மையான வாடகையை கணக்கில் கொள்ளுதல், அறுவடைக்குப்பிந்தைய நிலையில் வயல்களை சுத்தம் செய்தல், தரப்படுத்துதல், உலரவைத்தல், கட்டிடுதல், சந்தைப்படுத்துதல், போக்குவரத்து செலவு போனவற்றைக் கணக்கில் கொள்ளவேண்டும் என்கிறது. மேலும் இக்குழு செலவு C2 உடன் 10 விழுக்காட்டிற்கு விவசாயிகளின் இடர்களை எதிர்கொள்வதற்கும், மேலாண்மை செய்வதற்கும் என்ற அடிப்படையில் அதிகரிக்க வேண்டும் என்கிறது. இவ்வாறு ரமேஷ்சந்த் குழுவின் பரிந்துரையானது அடிப்படையில் பார்த்தால் செலவு C2 ஆனது கோதுமைக்கு 30.38 விழுக்காடும், நெல்லுக்கு 24.61 விழுக்காடும் அதிகரிக்கும் என கணக்கிடப்படுகிறது. மொத்த செலவு அளவில் கூடுதலாக 50 விழுக்காடு (C2 + 50%) அதிகரித்தால் நெல்லுக்கு தற்போது உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையினை விட 66.80 விழுக்காடு அதிகமாகவும், கோதுமைக்கு 44.77 விழுக்காடு அதிகமாகவும் கிடைக்கும். அதாவது 2020-21 விலையின் அடிப்படையில் நெல்லுக்கு ரூ.1868 என்பதற்கு பதில் ரூ.3116 என்றும், கோதுமைக்கு ரூ.1925க்கு பதில் ரூ.2787 என்றும் கிடைக்கும். எனவே ரமேஷ்சந்த் குழுவின் பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதரவு விலையினை தீர்மானிப்பது என்பது விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதாக உள்ளது (Sukhapl Singh et al 2021). தற்போது 2021-22ல் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.1940 (2010-11ல் ரூ.1000), கோதுமைக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2015 (2010-11ல் ரூ.1120) (https://farmer.gov.in/) ஆக உள்ளது. இந்திய அளவில் 6 விழுக்காடு விவசாயிகள் மட்டுமே இக்குறைந்தபட்ச ஆதரவு விலையினைப் பெற்று பயன் அடைகின்றனர் குறிப்பாகப் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் அதிக அளவில் பயன்பெறுகின்றனர். மேலும் இந்த பயனை பெரிய மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்ற விவசாயிகளைவிட அதிக அளவில் பயன் பெறுகின்றனர். தனியார் சந்தைகளில் பெருமளவிற்கான விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விற்பதால் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக் குறைவாக விற்று இழப்பினைச் சந்திக்கின்றனர். எனவே வேளாண்மை செய்வது சாத்தியமில்லா தொழிலாக மாறுவதால் அதிக அளவில் விவசாயிகள் பயிர் தொழிலை விட்டு வெளியேறுகின்றனர். எனவே குறைந்தபட்ச ஆதரவு விலையினை அனைத்து விவசாயிகளும் பெரும் நிலையினை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலையினை ஏன் சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற குரல் தற்போது ஓங்கி ஒலிக்கிறது என்பதற்கு பல பின்புலங்களைச் சுட்டிக்காட்டலாம். 77வது தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி (NSS) 2018-19ல் கிராமப்புறங்களில் வசிக்கும் மொத்த குடும்பங்களில் 55 விழுக்காடு வேளாண்மையினைச் சார்ந்து வாழ்கின்றனர் இதில் 80 விழுகாட்டினர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளனர். 86 விழுக்காடு விவசாயிகள் 2 ஹெக்டேருக்கு கீழ் நிலம் வைத்திருக்கிறார்கள், மொத்த வேளாண்மையில் ஈடுபடுபவர்களில் 55 விழுக்காடு வேளாண் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். 50.2 விழுக்காடு விவசாய குடும்பங்கள் கடனாளிகளாக உள்ளனர் (சராசரி குடும்ப கடன் அளவு ரூ.74121), இக்கடனில் மூன்றில் ஒரு பங்கு நிறுவனமல்லாக் கடனாக உள்ளது. கிராமப்புற விவசாயிகளின் குடும்ப சராசரி வருமானத்தில் 92.3 விழுக்காடு வருமானம் வேளாண்மை வழியாகப் பெறப்படுகிறது. உலகில் உள்ள குறை-ஊட்டச்சத்து உடையவர்கள் அதிகமாக (28 விழுக்காடு மக்கள்) இந்தியாவில் வாழ்கின்றனர், இந்தியாவில் நான்கில் மூன்று பங்கு மக்கள் ஊட்டமான உணவினைப் பெறமுடியாத நிலையில் உள்ளனர், 6.2 கோடி மக்கள் உணவு பாதுகாப்பின்றி வாழ்கின்றனர் (ORF 2021). மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வேளாண்மைத் துறையின் பங்களிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது, வேளாண் துறையின் வளர்ச்சி குறைவாக கடந்த 70 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 2-3 விழுக்காடு மட்டுமே அதிகரிக்கிறது. வேளாண் துறையிலிருந்து அதிக அளவில் விவசாயிகள் வெளியேறி வேளாண் சாராத் தொழிலுக்குச் செல்வது அதிகரித்துள்ளது (2004-05 மற்றும் 2017-18ஆம் ஆண்டுகளுக்கிடையே 64 மில்லியன் விவசாயிகள் வெளியேறியுள்ளனர்) மற்றும் வேளாண் துறையில் வேலைவாய்ப்பு பெருக்கம் குறைந்துள்ளது. இத்துடன் ஒன்றிய அரசினால் அசோக் தல்வாய் குழுவானது விவசாயக் குடும்பங்களின் வருமானத்தை 2015-16ல் மாதத்திற்கு ரூ.8059 ஆக இருந்ததை 2022-23ல் ரூ.16118 என இருமடங்காக (பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டு, உண்மை நிலையில்) அதிகரிக்கவேண்டும் என்ற திட்டத்தை செப்டம்பர் 2018ல் முன்வைத்தது. ஆனால் இந்த இலக்கினை அடையமுடியவில்லை. இவற்றை அடைய வேளாண் துறை ஆண்டுக்கு 10.4 விழுக்காடு வளர்ச்சியினை அடைய வேண்டும் (Ashok Gulati et al 2020). எனவே இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு குறைந்தபட்ச ஆதரவு விலையினைச் சட்டப்பூர்வமாக்க வேண்டும். வேளாண் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையினை அனைத்து விவசாயிகளுக்கும், அனைத்து வேளாண் உற்பத்திக்கும் அளித்து உள்ளடக்கிய பொருளாதார வளர்சியனை அடைய முற்படவேண்டும். அரசு இதற்கான பொது சந்தைக் கட்டமைப்பை வலுப்படுத்துவது, வேளாண் உற்பத்தி செலவினைக் குறைப்பது, திரனுடைய சந்தையினை உருவாக்குதல், கிராமப்புற பொது நலனை உறுதிப்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.

References:

Ashok Gulti, Devesh Kapoor and Marshall M Bouton (2020): “Reforming Indian Agriculture,” Economic and Political Weekly, Vol 55 (11), pp 35-42.
Biswajit Dhar and Roshan Kishore (2021): “Indian Agriculture Needs a Holistic Policy Framework< Not Pro-market Reforms,” Economic Political Weekly, Vol 56 (16), pp 27-35.
Gopi Sankar Gopikuttan and Gopal Naik (2022): “Markets for Farmers- Revisiting the Role of Mandis in the Context of Farm Law’s Repeal,” Economic and Political Weekly, Vol 57 (8), pp 33-38.
Kadasiddappa Malamasuri, Soumya B, Prasanth P and Sachin Himmatrao Malve (2013):”A Historical Perspective for Minimum Support Price of A griculture Crops,” Kisan World , Vol40 (12) pp 46-48.
National Sample Organization (2022): “Situation Assessment of Agricultural Households and Land and Holdings of Households in Rural India, 2019,” Ministry of Statistics and Programme Implementation, Government of India.
NITI Aayog (2018): “Doubling Farmer’s Income,”| National Institution for Transforming India, Government of India.
Nitya Nanda (2021): “Agricultural Reforms in India- Need for a Unique Model,” Economic and Political Weekly, Vol 56 (8), pp 25-29.
ORF (2021): “Global Nutrition Report 2021 – India’s Nutrition Profile and How to meet Global Nutrition Target,” Observer Research Foundarion, 2.12.2021.
Sukhpal Singh and Shruti Bhogal (2021): “MSP in a Changing Agricultural Policy Environment,” Economic and Political Weekly, Vol 56 (3), pp 12-15.
Udit Misra (2022): “Explained: What are MSPs, and how are they decided?,” The Indian Express, 03.03.2022.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *