ஏமாற்று வித்தைகள் கருத்துப் பிரச்சாரத்தில் சிக்காதீர்
“ஃபர்ஸி (Farzi) வெப் சீரிஸ் மாதிரி பக்காவா பிளான் போட்டு கள்ள நோட்டு அடிச்சீங்க. அப்படியும் எப்படிண்ணே மாட்டினீங்க?”
“அது ஒண்ணுமில்லடா… அடிச்ச நோட்டுல காந்திக்குக் கண்ணாடி போட மறந்துட்டேன்.”
இந்தக் கள்ளநோட்டுக் கடிஜோக்கில் வருவது போலவே, “மக்கள் நலன்” என்ற பெயரில் அமல்படுத்தப்படும் முதலாளித்துவக் கொள்கைகளும் தங்களின் இயல்பான சுரண்டல் குணத்தால் அம்பலமாகிவிடுகின்றன. ஒருமுறை, இருமுறை அல்ல; உலகம் முழுவதும் பல்வேறு திட்டங்களில் இது மீண்டும் மீண்டும் நடக்கிறது. அவை அம்பலமான பிறகும், முதலாளித்துவத்துக்கு எதிரான மக்களின் உணர்வு வலுப்பெற்றுவிடாமல் அவர்கள் தொடர்ந்து சிதறடிக்கப்படுகிறார்கள். இதற்காகச் சாதி, மதம் தொடங்கிப் பல்வேறு அரசியல் கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன.
பழியைத் திசைதிருப்பும் தந்திரம்
“உனக்கு நேரும் துன்பத்துக்கு நீயே காரணம்; அது உன் முற்பிறவியின் பலன்” என்கிறது மதம். அந்த மதத்தையும் தன்வயப்படுத்திக் கொண்டு இன்றைய உலகை ஆளும் முதலாளித்துவமும் இதே வேலையைத்தான் செய்கிறது. சமூகத்தில் நடக்கும் பெரிய அநீதிகளுக்கும் சீர்கேடுகளுக்கும் தனிமனிதர்களே காரணம் என்று சொல்லி, மக்களை ஒருவர்மீது ஒருவர் குற்றம் சாட்டவைக்கிறது. இதன்மூலம் உண்மையான குற்றவாளியான முதலாளித்துவம் தப்பித்துவிடுகிறது. அமைப்பிலுள்ள பெரும் கோளாறுகளை மறைத்து, எல்லாப் பழியையும் சாமானிய மனிதர்கள் மீது சுமத்துவதுதான் அதன் மிகப்பெரிய தந்திரம்.
இது பல வடிவங்களில் வெளிப்படுகிறது. உலகையே மாசுபடுத்திச் சுற்றுச்சூழலை அழிப்பவை பெருநிறுவனங்கள். ஆனால், “நீங்கள் கார் ஓட்டுவதால் இருசக்கர வாகனம் ஓட்டுவதால் தான் புவி வெப்பமாகிறது” என்று பழி சாமானிய மக்கள் மீது போடப்படுகிறது. அம்பானி, அதானி, எலான் மஸ்க், பில் கேட்ஸ் போன்றோர் உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்து வருகின்றனர். தங்கள் லாபத்துக்காகத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் நாடுகளின் சட்டங்களையே வளைக்கின்றனர். செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் தங்கள் லாபத்துக்காகப் போர்வெறி பிடித்த நாடுகளுக்கு ஆயுதம் தயாரிக்கவும் உளவு பார்க்கவும் உதவுகின்றன. இவை ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி லாபம் ஈட்டியும், விலைவாசி உயர்வுக்கு ஏற்பக்கூடத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு தர மறுக்கின்றன. இந்தச் சுரண்டலை மறைத்துவிட்டு, “நீங்கள் சரியாக உழைக்கவில்லை, தவறான முடிவுகளை எடுக்கிறீர்கள், அதனால்தான் உங்கள் வருமானம் உயரவில்லை” என்று தொழிலாளர்களையே குற்றம் சாட்டுகின்றனர்.
ஐடி உள்ளிட்ட பல துறைகளில் ஊழியர்களின் ஊதியத் தகவல்கள் பெரும் ரகசியமாக வைக்கப்படுகின்றன. நெருங்கிய நண்பர்களுக்குக்கூட ஒருவர் ஊதியம் மற்றவருக்குத் தெரியாது. அல்லது பெருமளவு பகிர மாட்டார்கள். இதனால் ஒன்றுபட்ட ஊதியக் கோரிக்கையை முன்னெடுப்பதற்குப் பதிலாக, “என்னைவிட மற்றவனுக்குக் கூடுதலாக இருந்துவிடக் கூடாது” என்ற மனநிலையே உருவாகிறது.
காவல்துறையின் அராஜகம் அதிகரிக்கும்போது, “பாதிக்கப்பட்டவர் ஏன் அதிகாரிகளின் உத்தரவுக்குக் கீழ்ப்படியவில்லை?” என்று கேட்டுப் பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்குகிறது சமூகம்.
ஒவ்வொரு நாட்டிலும் ஒரு முதலாளித்துவக் கட்சியின் மீது நம்பிக்கை இழக்கும் மக்கள், இன்னொரு முதலாளித்துவக் கட்சியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். வெற்றி பெறும் அந்தக் கட்சியும் பணக்காரர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறது; போரையும் வன்முறையையும் தூண்டுகிறது; மக்கள் விரோதக் கொள்கைகளையே அமல்படுத்துகிறது; மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் திட்டங்களைக் கொண்டுவருவதில்லை. இங்கே பிரச்சனை எந்தக் கட்சி என்பதல்ல; முதலாளித்துவக் கட்சிகளின் பொருளாதாரக் கொள்கைகளே காரணம். ஆனால், அந்தக் கொள்கைகளை முழுமையாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள்தான் “சரியான வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை” என்று பழிக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
இரட்டை அளவுகோல்
இந்தப் “பழிபோடும்” தந்திரம் எப்போதும் சாமானியர்களுக்கு எதிராக மட்டுமே வேலை செய்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
இயற்கையை அழிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. போர்களை நடத்திப் பல லட்சம் மனிதர்களைக் கொல்லும் நபர்கள் போர்க்குற்றவாளிகளாகச் சிறையில் அடைக்கப்படுவதில்லை. ஆயுதங்கள், மருந்துகள் மூலம் பல்லாயிரம் கோடி லாபம் பார்க்கும் கார்ப்பரேட் ஆதிக்கச் சக்திகள், ஆளும் அரசாங்கங்களையோ விலைக்கு வாங்கி சுகபோகமாக வாழ்கின்றன.
சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் தவறு செய்யும்போது, இந்த அமைப்பு “தனிநபர் மீது பழிபோடும்” தந்திரத்தை அவர்களிடம் பயன்படுத்துவதில்லை. மாறாக, அந்த முதலாளிகளை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை “தீவிரவாதி”, “திமாகி நக்சல்” என்று முத்திரை குத்துகிறது.
வறுமையால் சிறு தவறு செய்யும் ஏழையைச் சிறையில் அடைப்பதை நியாயப்படுத்தும் இந்த அமைப்பு, வாக்குத் திருட்டையும், எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கும் கட்சிகளையும், கோடீஸ்வரர்களையும் தண்டிக்காமல் பாதுகாக்கிறது. ஒரு தொழிலாளி முதலாளியின் பணத்தைத் திருடினால் அது குற்றம்; சரிதான். ஆனால், ஒரு முதலாளி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் கூலியைத் திருடினால்? சட்டமும் அதிகாரமும் அவர்களுக்குச் சாதகமான அரசியல்வாதிகளும் அவர்களைத் தப்பிக்கவைக்கிறார்கள்.
நம் மூளைக்குப் பழக்கப்படுத்தப்படும் சிந்தனை பிறந்தது முதலே இந்த முதலாளித்துவ அமைப்புக்கு ஆதரவாகச் சிந்திக்கும்படி நம் மூளை பழக்கப்படுத்தப்படுகிறது:
“கடினமாக உழைத்தால் தனிநபராகவே எல்லாவற்றையும் சாதித்துவிடலாம்” என்ற கதைகளைத் திரைப்படங்களும் தொடர்களும் மீண்டும் மீண்டும் காட்டுகின்றன. வறுமை, வீடற்றோர் நிலை, இயற்கை அழிவு, ஊழல், கட்சித்தாவல் போன்ற உண்மையான பிரச்சனைகளை மறைத்துவிட்டு, பரபரப்பான சர்ச்சைகளையே செய்தி நிறுவனங்கள் விவாதிக்கின்றன. சமீபகாலமாகப் பல செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்ட கட்சிகளின் ஐடி விங்காகவே மாறிவிட்டன.
கல்வி தொடங்கி அனைத்துத் துறைகளிலும், “முதலாளித்துவம்தான் உண்மையான சுதந்திரம்; அதைவிடச் சிறந்த அமைப்பு இருக்கவே முடியாது” என்று சிறுவயது முதலே நமக்குப் புகட்டப்படுகிறது.
இதனால், தற்போதைய சமூக அமைப்பு இயல்பானது என்றும், அமைப்பின் ஒவ்வொரு தோல்வியும் தனிநபரின் தோல்வி என்றும் நம்பும்படி நம் மனது பழக்கப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு கொடூர விளையாட்டு
இந்த முதலாளித்துவ உலகம் ஒரு கொடூரமான விளையாட்டுத் தளம். ஒரு மூடிய அறைக்குள் நூற்றுக்கணக்கான மனிதர்களை அடைத்து, தண்ணீரைத் திறந்துவிட்டு, “மூழ்குவதற்குள் பக்கத்தில் இருப்பவன் மீது ஏறி நின்று தப்பித்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னால் என்ன நடக்கும்? தாம் பிழைப்பதற்காகப் பிறரை மிதித்துக்கொண்டு ஓடுவார்கள்.
நம் ஊரில் ஒரு சொல்வழக்கு உண்டு,சட்டியில் நண்டுகளை அள்ளிப்போட்டால் ஒன்றுகூட வெளியேறாது. ஒன்று ஏறினால், இன்னொன்று அதன் காலைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளிவிடும். அதுதான் முதலாளித்துவ அமைப்பின் குரூரமான நிலவரம். ஏமாற்றிப் பிழைப்பதையும், ஒருவரின் காலை வாரிவிட்டு மேலேறுவதையும் புத்திசாலித்தனம் என்று அது கற்றுத்தருகிறது. இது வாழ்க்கை அல்ல. சக மனிதரை அரவணைத்து, இணைத்துக்கொண்டு முன்னேறுவதுதான் மனிதநேயம். அந்த மனிதநேயத்தையே முதலாளித்துவம் சிதைத்துவிடுகிறது.
“இன்னும் கடினமாக உழை” – அறிவுரை
“சம்பளம் போதவில்லை; வீட்டு வாடகை, பள்ளிக் கட்டணம், மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை” என்று புலம்பினால், “இன்னும் கடினமாக உழை, தேவையில்லாமல் செலவு செய்யாதே, இன்னொரு வேலையையும் சேர்த்துப் பார்” என்று அறிவுரை கூறுகிறார்கள். உலகம் முழுவதும் இதுதான் நிலை.
இந்த அறிவுரைகள், வயிற்று வலி என்று சொன்னவரிடம் “மருத்துவரைப் பார்க்க வேண்டாம், இரண்டு நாளில் சரியாகிவிடும்” என்று சொல்வது போன்றது. வயிற்று வலிக்கு மருந்து சாப்பிட வேண்டும்; வலி எப்படி வந்தது என்ற மருத்துவப் பரிசோதனையும் தேவை. அப்போதுதான் சரியான மருந்தைக் கொடுக்க முடியும். அதுபோல, சமூகம் ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது என்று சிந்தித்து, அதற்கான மாற்று அரசியல் எது என்றும் நாம் தேட வேண்டும்.
நாம் செய்ய வேண்டியது
இனியும் இந்த ஏமாற்று வித்தைகளிலும் கருத்துப் பிரச்சாரத்திலும் நாம் சிக்கிக்கொண்டிருக்கக் கூடாது. அமைப்பின் தோல்விகளுக்குச் சக மனிதர்களைக் குற்றம் சாட்டுவதையும், வாழ்வாதாரத்துக்காக ஒருவரையொருவர் மிதித்து மேலேற முயல்வதையும் நிறுத்த வேண்டும். மனிதர்களை இந்த ஆபத்தான விளையாட்டில் அடைத்துவைத்து வேடிக்கை பார்க்கும் முதலாளித்துவ சமூகத்தை, அது கொடுத்த கல்வியைக் கொண்டே வீழ்த்த வேண்டும்.
அதற்கு நமக்கு இரண்டு தேவை. ஒன்று, மனிதநேயத்தை முன்னிறுத்தி, சுரண்டலின்றி அனைவரின் வாழ்க்கையையும் மேம்படுத்தும் இடதுசாரிக் கொள்கை. மற்றொன்று, நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்படத் தேவையான ஒற்றுமை உணர்வு.
📚 எழுதியவர் :
✍🏻 – சேது சிவன்,
துணை ஆசிரியர்
தீக்கதிர் நாளிதழ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

