[இணைய வழி ஆங்கில இலக்கிய வெளியீட்டகம் வாட்பேட் (wattpad.com). அதில் எழுத்தாளர் சூப்பர்சாவா – அநேகமாக அது ஒரு புனைப்பெயராக இருக்கக்கூடும் –2080ம் ஆண்டில் ஸ்வீடன் நாட்டில் சர்வாதிகாரம் தலைவிரித்தாடுமானால் எப்படி இருக்கும் என்ற கற்பனையின் அடிப்படையில் ‘சேக்ரிஃபைஸ்’ என்ற தலைப்பில் புனைந்துள்ள புத்தம் புதிய சிறுகதை இது.]
கண்களைத் திறக்கிறேன். ஒரு சலிப்போடு கட்டிலில் நிமிர்ந்து உட்கார்கிறேன். என் அறையிலிருக்கும் டிஜிட்டல் கடிகாரத்தைப் பார்க்கிறேன் – அது காலை 7.58 என்று தெளிவாகக் காட்டுகிறது. உடலைச் சற்று விரைப்பாக்கிக் கொண்டு காலை உணவு ஏதாவது எடுத்துக்கொள்ளலாமே என்று கிச்சனுக்குப் போகிறேன். கண்களைக் கசக்கிவிட்டுக்கொள்கிறேன். கொட்டாவி விடுகிறேன். ‘ஆண்டிரியாஸ்’ என்று அடர்ந்த நீல நிறத்தில் பொறிக்கப்பட்டிருக்கிற ஏணம் ஒன்றை எடுக்கிறேன். அந்தப் பெயர் பொறிக்கப்பட்டிருப்பது எனக்குப் பிடிக்கவில்லைதான். அது அந்த வெள்ளை நிற ஏணத்தை அசிங்கமாக்குகிறது என்பது என் கருத்து. ஆனால் அது நாங்கள் தேர்வு செய்ததில்லையே, அப்படியெல்லாம் சொந்தமாகத் தேர்வு செய்ய முடியாதே. இன்று எங்கே பார்த்தாலும் எதையெடுத்தாலும் அந்த ஆள்தான்.
ஸ்வீடனை ஒரு சர்வாதிகார நாடாக மாற்றியது ஆண்டிரியாஸ்தான். இந்த அழகிய நாட்டின் மக்களை ஆட்டிப்படைத்து இதனைத் தலைகீழாக மாற்றியவர் அவர். “இந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் ஸ்வீடனை மாபெரும் நாடாக, மகத்தான வல்லரசாக மாற்றுவதற்காகத்தான்,” என்று தனது முதல் உரையில் சொன்னார். அதை நான் அப்படியே நம்பினேன்.
ஆனால் ஸ்வீடனை மாபெரும் நாடாகவும் மகத்தான வல்லரசாகவும் மாற்ற அவர் டென்மார்க்கை, நார்வேயை, வேறு சில நாடுகளை வளைக்க விரும்புகிறார், அதற்காக எங்களைப் போருக்கு அனுப்பப் போகிறார் என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
எல்லா நேரத்திலும் எந்தச் செய்தியானாலும் ஆண்டிரியாஸ்தான். அவர்தான் செய்தியே. நீங்கள் அவருக்கு எதிர்ப்பாகப் போவீர்களானால் அவருடைய ஆட்கள் தேடி வருவார்கள் –உங்களைக் கொல்வதற்கு. நடந்தது தற்கொலைதான் என்று சொல்லக்கூடியதாக ஒரு காட்சியை ஏற்படுத்திவிட்டுத் திரும்புவார்கள்.
ஏணத்தில் கொஞ்சம் பயறு எடுத்துக்கொண்டு சாம்பல் வண்ண சோஃபாவில் உட்கார்ந்து சாய்ந்துகொண்டேன். “டி.வி. ஆன் பண்ணு ஆனி” என்றேன். “செய்துவிடுகிறேன்,” என்று பதில் வந்தது. மனிதக் குரல்தான் என்றாலும் அதிலே கொஞ்சம் ரோபோத்தனம் கலந்திருந்தது. ஆனி ஒரு புதிய சிரி. (சிரி என்பது குரல்வழி ஆணைப்படி செயல்படும் டிஜிட்டல் கருவி – அலெக்ஸா போல). மிகவும் நவீனமானது என்பதோடுடீ ஆனி என்ற பெயர் ஆண்டிரியாஸ்சுக்கு நெருக்கமானது, புதிய கருவிக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டதற்குக் கூட அதுதான் காரணம்.
பெரிய டிவி உயிர் பெற்றது. நேராக அதில் சேனல் – 1 வந்தது. மொத்தம் மூன்றே சேனல்கள்தான். ஒன்று குழந்தைகளுக்கானது. இன்னொன்று பெரியவர்களுக்கானது. மற்றொன்று செய்திகளுக்கானது. ஆனால் எல்லா நாட்களிலும் காலை 8 மணி ஆகிவிட்டால் எல்லோருமே செய்தி ஒளிபரப்பைக் கண்டிப்பாகப் பார்த்தாக வேண்டும்.
திரையில் வந்தது ஆண்டிரியாஸ்தான். இன்றைய நிகழ்வுகளை விளக்குகிறார். கழுத்துப் பட்டியுடன் கறுப்பு முழுக்கை அங்கி அணிந்திருக்கிறார். அவருடைய தலைமுடி நிறம் என்னுடைய தலைமுடி போல இருக்கிறது. உதடுகளை விரித்து, நேர்த்தியாகத் துலக்கப்பட்ட தன் பற்களைக் காட்டியபடி உதடுகள் விரியப் பளிச்செனச் சிரித்துக்கொண்டு பேசுகிறார். பார்ப்பதற்கு உற்சாகமாகத் தெரிகிறார். ஆனால் அவருடைய மந்தமான, புகை வண்ணக் கண்களை உற்றுக் கவனித்தால் எதுவும் தெரியாது. ஏதும் இருக்காது. எந்த உணர்வும் வெளிப்படாது. சவப்பார்வைதான்.
“மாதர் குல திலகங்களே, மாண்பு மிகு கனவான்களே, நமது புதிய நடைமுறைகள் குறித்துச் சில புகார்கள் இருப்பதாகத் தெரியவருகிறது.” வார்த்தைகளைக் குலுக்கியெடுத்துப் பேசுவார் ஆண்டிரியாஸ். முகத்தில் அந்தச் சிரிப்பு மாறாமல் பேசுவார்.
புகார்கள் இருப்பதென்னவோ உண்மைதான். எப்போதுமே இருக்கும். ஆனால் புகார் சொல்வது விரைவிலேயே முடிவுக்கு வந்துவிடும். ஏனென்றால் ஏழைகளுக்கு மூளைச் சலவை செய்வதில் வல்லவர் அவர்.
தனது கைகளை உயர்த்தி ஏதோ சொல்ல வருகிறார். அப்போது டிவி சட்டென ஆஃப் ஆகிறது. தெரியாத ஒரு நம்பரிலிருந்து எனது மொபைலுக்கு ஒரு தகவல் வருகிறது. போனைக் கையில் எடுத்து, குரல் வழி ஆணையிட்டு அதை அன்லாக் செய்கிறேன். போன் திரையில் மூன்று சொற்கள் வருகின்றன – மிகவும் அர்த்தமுள்ள சொற்கள் அவை.
“உங்கள் நேரம் வந்துவிட்டது.”
மடியிலிருந்த காலி ஏணத்தை எடுத்துப் போய் அங்கணத் தொட்டியில் வைக்கிறேன். அங்கேயிருந்து வழியெல்லாம் சபித்துக்கொண்டே எனது அறைக்கு வேகமாகச் செல்கிறேன். சாதாரண உடைக்கு மாறிக்கொண்டு, ஷூ அணிந்துகொண்டு, நாளை என்பதே இருக்காது என்பது போல விரைந்துசென்று வாசலை அடைகிறேன்.
மின்னல் வேக மெக்ஹூ வண்டியோ? புகை வண்ணக் கண்ணாடிச் சன்னல்களுடன் ஒரு கறுப்புக் கார் வீட்டின் முன்னால் வந்து நிற்கிறது. பயணிகளுக்கான கதவு தானாகத் திறந்துகொள்கிறது. உள்ளே நுழைகிறேன், உட்கார்ந்துகொள்கிறேன், சீட் பெல்ட் மாட்டுவதற்காகக் கைகளை உயர்த்துகிறேன், அதுவோ தானாகவே மாட்டிக்கொள்கிறது. கார் டிரைவர் என்னை வெறுமையாக உற்றுப் பார்க்க நான் சிரித்து வைக்கிறேன்.
“சாரி, பழக்க தோஷம்.”
அவன் தலையாட்டியபடி காருக்குள் பொருத்தப்பட்டிருக்கும் டேப்லெட்டில் ஏதோ எழுதுகிறான். கார் உடனே புறப்படுகிறது. என்னைத் திரும்பிப் பார்க்கும் அவன், “என் பெயர் டோபியாஸ். ஆனா இதெல்லாம் சரியா வரும்னு நீங்க நினைக்கிறீங்களா,” என்று ஒரு புருவத்தை உயர்த்திக் கரகரப்பான குரலில் கேட்கிறான். கொஞ்ச நேரமாக அவன் யாருடனும் பேசவில்லை என்பது அவனுடைய குரலிலிருந்து தெரியவருகிறது. அது புரிந்துகொள்ளக் கூடியதுதான். உங்கள் பேச்சை யார் கேட்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியப்போவதே இல்லையே.
தன்னுடைய பச்சை விழிகளால் எனது ஆன்மாவைத் துருவுவது போலப் பார்க்கிறான். அவனுடைய தலைமுடி கட்டிலின் சாய்மானத் தலையனை போல இருக்கிறது.
“ஒண்ணும் ஒர்ரி பண்ணிக்காதே. தப்பாக எதுவும் நடந்துவிடாது. மக்கள் தங்கள் முடிவுகளைத் தாங்களே எடுக்குறதுக்கு ஒரு வழி இருப்பதைக் கண்டுபிடிப்பாங்க. அது ஆண்டிரியாஸ்சுக்குக்கூட தெரியாது,” என்று நான் அவன் முதலில் கேட்ட கேள்விக்குப் பதில் சொன்கிறேன். ஆறுதலடைந்தது போலப் புன்னகை செய்கிறான் அவன்.
“எப்படி உங்களால் இதை இவ்வளவு கூலா எடுத்துக்க முடியுது?”
இப்படிக் கேட்டுவிட்டு முன்னால் பார்க்கிறான். அந்த ஆட்டமேட்டிக் கார் தானாக நிற்கிற இடத்தைக் கவனித்தான். யாரோ சிலர் கூட்டமாகக் கூடியிருக்கும் இடத்தில் ஒரு மேடை எழுப்பப்பட்டிருக்கிறது. அதைச் சுட்டிக்காட்டியவன், “வந்துட்டோம். இங்கேதான் நீங்க வரலாற்றை மாத்தப் போறீங்க. குட் லக். இது பலனளிக்கும்னு நான் நம்புறேன்,” என்கிறான்.
நான் பற்றிக்கொள்வதற்காகத் தனது கையை நீட்டுகிறான். நான் அந்த வெதுவெதுப்பான உலர்ந்த கைகளைப் பிடித்துக் குலுக்குகிறேன். “நானும் நம்புறேன் டோபியாஸ்.”
காரிலிருந்து வெளியேறி கூட்டத்திற்குள் நடந்து அந்த மையமான இடத்தை அடைகிறேன். சிலர் என்னைப் பார்த்து முகம் சுளிக்கிறார்கள். சிலர் தங்களுக்கிடையே கிசுகிசுக்கிறார்கள். சிலர் நான் பேசுவதைக் கேட்பதற்குத் தயாராகக் காத்திருக்கிறார்கள். எல்லோருக்குமே பொதுவானதாக இருந்தது என்னவென்றால், என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது என்பதுதான்.
தொண்டையைச் செருமிக்கொண்டு ஒரு மைக்ரோ போனைப் பிடித்துக்கொள்கிறேன். காரிலிருந்து இறங்குவதற்கு முன் டோபியாஸ்சிடமிருந்து அதை வாங்கியிருந்தேன்.
“மாதர் குல திலகங்களே, மாண்பு மிகு கனவான்களே,” என்று பேச்சைத் தொடங்குகிறேன் – ஆம் கொஞ்சம் கிண்டல் தொனியோடுதான். அப்படித்தானே ஆண்டிரியாஸ் எப்போதும் தனது பேச்சைத் தொடங்குகிறார்.
“நாம் இங்கே ஒரு மாற்றத்திற்காகக் கூடியிருக்கிறோம். நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதறகாகக் கூடியிருக்கிறோம்…”
என்னப்பா நடக்குது இங்கே என்று ஆளுக்கு ஆள் தங்களுக்கிடையே பேசிக்கொள்கிறார்கள்.
“மிகப் பெரிய, வல்லரசான ஸ்வீடனுக்காக அல்ல. மக்களுக்காக…”
இப்போது அவர்கள் தங்களுக்கிடையே கிசுகிசுப்பதை நிறுத்திக்கொண்டு கவனித்துக் கேட்கத் தொடங்குகிறார்கள்.
“எல்லாரும் என்னைப் படுகிழம்னு சொல்றாங்க. வயசாயிட்டதாலே ஞாபகமறதியிலே விழுந்துட்டேன்னும் சொல்றாங்க. ஆனா, நம்ம நாட்டுல ஜனநாயகம்னு ஒண்ணு இருந்த காலம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.”
வாய்விட்டுச் சிரிக்கிறேன். “மக்கள் தங்கள் விருப்பப்படி எதையும் தேர்வு செய்ய முடிஞ்ச காலம் அது. நம் எல்லாம் வல்ல ஆண்டிரியாஸ் வருவதற்கு முன் இருந்த காலம் அது.”
ஒரு சோகமான உண்மை என்னவென்றால் பலருக்கு ஜனநாயகம் என்பதாக ஒன்று இருந்ததே தெரியாது. அதை அறிந்திருந்த பலர் மூளைச்சலவைக்கு உள்ளாகிவிட்டார்கள். மற்றவர்கள் செத்துப்போகிறார்கள் அல்லது வாயடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதை மாற்றுவதற்காகத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். நச்சுத்தனமான எதிர்காலத்தை உருவாக்குவதிலிருந்து அவரைத் தடுத்து நிறுத்துவதற்காக வந்திருக்கிறேன்.
“நீங்களும் நானும் நமது அதிகாரத்தை மீட்பதற்காகத்தான் இங்கே வந்திருக்கிறோம். நாம வெறும் பொம்மைகளாக நடத்தப்படுகிற, நமக்கென்று எந்தவொரு முடிவெடுக்கும் சுதந்திரமும் இல்லாத ஒரு இடத்தில் வாழத்தான் உண்மையிலேயே நீங்கள் ஆசைப்படுறீங்களா?”
“இல்லை” என்று பலரும் சொல்வது காதில் ஒலிக்கிறது. நான் பேச்சைத் தொடர்கிறேன் – அல்லது ஏதோவொன்று என் இதயத்தைத் துளைக்காமல் இருந்திருந்தால் பேச்சைத் தொடர்ந்திருப்பேன்.
உரக்க அலறிக்கொண்டே கீழே விழுகிறேன். மைக்ரோ போனைப் போட்டுவிட்டு கையை மார்புக்குக் கொண்டுவருகிறேன். திரவத்தை உணர்கிறேன்.
துப்பாக்கியால் சுடப்பட்டுவிட்டேன். உலகம் கலங்கலாகத் தெரிகிறது. ஆனாலும் அது என் கண்கள் கையில் ஒரு துப்பாக்கியோடு நிற்கிறவனைப் பார்ப்பதற்குத் தடையாகிவிடவில்லை. அவன் என்னை நோக்கி நடந்து வருகிறான். அவனுடைய மரத்துப்போன கண்களிலிருந்து கண்ணீர் வடிவதை என்னால் பார்க்க முடிகிறது. ஆக அவனுக்கு உணர்ச்சி இருக்கிறது. அவனுடைய அடக்கப்பட்ட சிரிப்பு கண்ணீரை மீறி வெளிப்படுகிறது. கண்ணீரைத் தனது சட்டைக் கையால் துடைத்துக்கொள்கிறான்.
“கடவுளே, மக்கள் மனதில் பதிய வைக்க நீ ஏன் இவ்வளவு பாடுபடுற?” அவன் பேசத் தொடங்குகிறான்.
நான் மூச்சை உள்ளிழுக்கிறேன் – ஆனால் நுரையீரலுக்குள் ரத்தம்தான் பாய்கிறது. நீரில் மூழ்கிக்கொண்டிருப்பது போல இருக்கிறது. கிட்டத்தட்ட என் முடிவு நெருங்குகிற வரையில் அவன் வேறு எதுவும் சொல்லவில்லை. இறுதி மூச்சை இழுத்துவிடுகிறபோது என் காதில் சன்னமாக ஒலிப்பதைக் கேட்கிறேன்.
“உனக்காகத்தான் இதையும் நான் செஞ்சேன். புரிஞ்சிக்கிடவே மாட்டாயா? தாயே… ஒருபோதும் உனக்குப் பெருமிதம் ஏற்படவே மாட்டேனென்கிறதே, ஏன்?”
[மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: இக்கதையைப் படித்ததும் பாசிச/சர்வாதிகாரப் போக்கை மக்கள் சக்தி தடுக்கத் தவறினால் நாளை இங்கேயும் “நம் நாட்டில் ஜனநாயகமென்று ஒன்று இருந்தது நன்றாக நினைவில் இருக்கிறது” என்று சொல்கிற எதிர்காலமும், ஜனநாயகம் என்பதற்குப் பதிலாக மதச்சார்பின்மை, சமூகநீதி, மனித உரிமைகள் போன்ற சொற்களைப் போட்டுக்கொள்கிற நிலைமையும் வரலாம் என்ற பதைப்பு ஏற்பட்டது. அந்தப் பதைப்பு இதனை உடனடியாக மொழிபெயர்க்கத் தூண்டியது.]
(நன்றி: செம்மலர், ஜூன் 2020)
அ. குமரேசன்
என் வலைப்பூ: அசாக்
http://asakmanju.blogspot.com