உலகின் எந்தவொரு படைப்பும் கவனம் பெறுவது என்பது அதன் பேசுபொருள் எவரும் பேசத் துணியாததாக இருக்க வேண்டும். மேடையை அலங்கரிக்க கூடிய கலைஞர்களின் இருள்பக்கங்கள் கிழிந்து தொங்குவதை விளிம்புநிலை மக்களாய் வாழக்கூடிய அக்கலைஞர்களின் உப்புகரிக்கும் வாழ்வை கண்ணீரை எழுத்தாக்கி இருக்கின்றார். அத்துறையில் நீண்டகாலமாக மேடையை அலங்கரித்து வரும் கலைச் சுடர்மணி விருது பெற்ற எழுத்தாளர் பேராசிரியர் மதுரை எஸ் மலைச்சாமி.
இத்தொகுப்பில் மொத்தம் 14 சிறுகதைகள் உள்ளன. அதில் 4 கதைகள் கரகாட்டக்கலைஞர்களின் வாழ்வியலை பற்றியது. அதிலும் குறிப்பாக மட்டை என்ற சிறுகதை நாம் எல்லோரின் பொதுப்புத்தியில் தவறாக உறைந்துள்ள கரகக் கலைஞர்களின் ஒழுக்கம் குறித்த பிம்பத்தை உடைத்து அவர்களின் தன்மானம் மிக்க உரப்பான வாழ்வை பற்றியது. நாட்டுப்புற கலைஞர்களின் குறிப்பாக பெண்களின் பரிதாப நிலைகளை தொட்டு செல்கிறார். அது நம் மனதில் ஊடுறுவி வலியேற்படுத்துகிறது.
திரைப்படக்கலைஞர்களை பார்க்கும் விதமும் தெருவிலாடும் நாட்டுப்புற கலைஞர்களை கையாளும் விதமும் நமக்குள் இருக்கும் கலைத் தீண்டாமையை உணர்த்தி செல்கிறது. சபாக்களில் ஆடும் பரதநாட்டியக்கலைஞர்களை நாம் அணுகும் விதமும் இறப்பு வீடுகளில் இறந்தவர் அருமை பெருமைகளை ஆடிப்பாடும் ஏழைக் கலைஞர்களை நாம் நடத்தும் விதமும் ஏற்புடையதுதானா என எண்ணிப்பார்க்க வேண்டும். கரகக் கலைசார்ந்த துறைச் சொற்களை நிறைய பயன்படுத்தி இருக்கிறார். அது நாம் அறியாதது கற்றுக்கொள்ள வேண்டியது.
கன்னத்தில் ரோஸ் பவுடரும் ஜிமிக்கியால் தைத்த ஆடைகளையும் அணிந்து கொண்டு இரவெல்லாம் ஒளிவெள்ளத்தில் ஆடி பகலெல்லாம் வாழ்வு இருண்டு கிடக்கும் கலைஞர்களின் வலியை அவர்களின் கரங்களில் ஒன்றாகவே எழுதிச் செல்கிறார். மலைச்சாமி ஒரு பேராசிரியர் தான் நேசிக்கும் கலைக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்ததோடு அக்கலைஞர்களோடு தானுமொரு கலைஞனாகவே பயணிக்கின்றார்.
திருநங்கைகள் குறித்து ஒரு 6 கதைகள் எழுதி இருக்கிறார். மனித இனம் பரிணமிக்க துவங்கிய காலத்தில் இருந்தே பால் திரிபும் தொடங்கியிருக்கவேண்டும். நவீனகாலச்சூழலில் பால்திரிபர்கள் குறித்தும் பொது சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருப்பது மிக சிறப்பானது. பழைய காலங்கள் மாதிரி எண்களால் அம்பெய்தும் வம்பர்கள் குறைந்திருக்கிறார்கள். இன்று திருநங்கைகள் திருநம்பிகள் தன் பாலின ஈர்ப்பாளர்கள் ஓரினப்புணர்ச்சியாளர்கள் என வகைவகையாய் பிரித்து அவர்களையும் மரியாதையுடன் பார்க்க கற்றுக்கொடுத்திருக்கின்றது நவீன உலகம்.
இதுவொரு அறிவியலின் முரண் என எல்லோரையும் ஏற்றுக்கொள்ள வைத்ததோடு அவர்களின் படிப்பிற்கு தகுந்த மரியாதையான அரசு வேலை உட்பட பெற்றுத் தந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. ஆனாலும் அவர்கள் செல்லவேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்கிறது. சமூகம் கூடி தேரிழுப்போம். அறிவியல் பிழைகளை புரிந்துகொள்வோம். சக மனிதர்களாக நம்மோடு அழைத்துச் செல்வோம்.
தந்தா, டபுள் டக்கர், கோத்தி ஆகியவை அவர்களின் சமூகப்பிரச்சனைகளை கண்ணீருடன் சொல்லிச்செல்பவை. கைதட்டி காசு கேட்டால் இயன்றதை கொடுப்போம். முழுமையான ஆண் பெண் இருவருக்குமிடையேதான் பால்திரிபர்கள் பிரசவிக்கின்றார்கள் என்றுணர்ந்து அன்பால் அரவணைப்போம். மற்ற 4 சிறுகதைகள் வழக்கமானவைதான் என்றாலும் சொல்லும் விதத்தில் கவர்கிறார்.
வயதான காலத்தில் தகப்பன் துணை தேடும் அழகம்மா சிறுகதை யதார்த்தமான உண்மையை முகத்தில் அறைந்து சொல்கின்றது. கடைசிச் சிறுகதை அறிவுரைகளால் நிரம்பி கதை அம்சத்தை இழக்கின்றது. தொடர்ச்சியாக பல சிறுகதையின் கதைமாந்தர்களுக்கு விஜி என்று பெயர் சூட்டி இருப்பதால் கதைகளை வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை. சிறுகதை எழுதுகிறோம் என்பதை மறந்து நாவலுக்கு சூட்டும் பெயர்களை பயன்படுத்தி இருப்பது சற்று குழப்பத்தை ஏற்படுத்துகிறது. கதாசிரியர் இதை தவிர்த்திருக்கலாம்.
நல்ல சிறுகதைகள் வசனங்கள் புதிய காட்சிகள் என தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு புதிய வரவாக கரகமாடி வந்திருக்கிறார் எழுத்தாளர் மதுரை எஸ் மலைச்சாமி. வண்ணமிக்க டோப்புக்கிளிகளும் வாழ்விழந்த காகிதச் சிறகுகளும் காலச்சிறுகதை பேரேட்டில் நிச்சயம் பதிவாகும். எல்லோரும் வாங்கி வாசித்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். கதையுலகம் மலைச்சாமியை கரகமேந்தி தலையில் தூக்கி கொண்டாடும். எழுத்தாளர் பேராசிரியர் மதுரை எஸ் மலைச்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நூலின் தகவல்கள்
பக்கம்: 148

செ. தமிழ்ராஜ்
1/254 காளியம்மன் கோவில் தெரு
வண்டியூர்
மதுரை-625020
[email protected]
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.