தஸ்தயேவ்ஸ்கி கதைகள் – நூல் அறிமுகம்
புத்தகம் : தஸ்தயேவ்ஸ்கி கதைகள்
ஆசிரியர் : தஸ்தயேவ்ஸ்கி
தமிழில் : ரா. கிருஷ்ணையா , சி.எஸ்.வெங்கடேஸ்வரன்
பக்கங்கள் : 90
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் , சந்தியா பதிப்பகம்
நூலைப் பெற : thamizhbooks.com
சிறுகதைகளை வாசிப்பதால் அது ஒரு மனிதனை என்ன செய்து விட முடியும்? அவனுடைய வாழ்வில் மாற்றத்தை கொண்டுவர முடியுமா? அவனது வாழ்வையே புரட்டிப் போட முடியுமா? அவனது வாழ்வில் நிகழும் துயரங்களையும் துன்பங்களையும் தீர்த்து விட முடியுமா? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடையாக இந்த தாஸ்தோவ்ஸ்கி சிறுகதைகள் என்ற புத்தகம் அமைந்துள்ளது என்றால் அது மிகையில்லை.
பொதுவாக ஒவ்வொரு சிறுகதையிலும் நமக்கு ஒரு சிறு விஷயம் கிடைக்கும் என்றாலும் இவரது இந்த சிறுகதைகள் அனைத்தும் உளவியல் சார்ந்ததாக அமைந்துள்ளதோடு ஒவ்வொரு கதையனுள்ளும் உளவியல் கருத்துக்கள் நிறைந்துள்ளன. சுமார் 150 வருடங்களுக்கு முன்பே ஆசிரியரால் இத்தகைய உளவியல் சார்ந்த சிறுகதைகளை எழுத முடிந்திருப்பதும் அது இன்றும் அனைவருக்கும் ஏற்புடையதாக இருப்பது மிக்க வியப்பையும் பிரமிப்பையும் அளிக்கிறது.
மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையினர். யாரும் யாரையும் திருத்தவோ மாற்றவோ இயலாது.ஆனால் நீண்ட கால தனிமை என்பது பாகுபாடில்லாமல் எவருக்கும் துயரத்தை அளிக்கவல்லது. தனிமையில் இருக்கும் போது மற்றொரு நபரின் நட்பு எவ்வளவு இதமாக ஆறுதலாக இருக்கும் என்பதன் அருமை தனிமையில் இருப்பவருக்கு தான் தெரியும். தனிமையில் இருப்பவருடன் வந்து சேரும் நபர் இவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அவரின் துணை அவரை ஆறுதல் படுத்தும் என்பதை நேர்மையான திருடன் என்ற கதையில் அறிய முடிகிறது. ஒருவன் தவறிழைத்து விட்டால் அவன் தனக்கு வரும் அபாயத்தை தொலைதூரத்தில் இருக்கும்போதே கண்டுபிடித்து விடுவான் என்ற உண்மை இன்றும் ஏற்புடையதே.
முதலை என்ற சிறுகதையில் மனிதர்களின் பணத்தாசையின் உச்சகட்டத்தை கூறி இருப்பதாகப் பார்க்கிறேன். பணத்தாசை ஒரு மனிதனை எப்படி எல்லாம் சிந்திக்க வைக்கிறது என்பதை இத்கதையினுள் அறியலாம். சுமார்150 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மனிதருக்கே இத்தகைய பணத்தாசை எனில் இன்றைய மனிதர்களுக்கு சொல்ல வேண்டுமா என்ன?

போபோக் என்றால் சமீபத்தில் இறந்து போனவர்கள் கல்லறையில் உயிருள்ளவரை போன்றே பேசிக் கொள்வது எனும் கற்பனை. கல்லறையில் உள்ள மனிதர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டால் அந்த உரையாடல் எப்படி இருக்கும் என்று ஆசிரியரின் இந்த கற்பனை நயம் மிகவும் சுவாரசியமாக இருந்தது. இப்படி ஒரு கற்பனையை இதுவரை நான் நினைத்துப் பார்த்ததில்லை. உயிரற்ற சடலங்களுக்குள்ளேயே இப்படிப்பட்ட உரையாடல்கள் இருப்பின் உயிருளள மனிதர்களின் உரையாடல்கள் பலதரப்பட்டவையாக இருப்பதில் வியப்பேதுமில்லை.
பிறர் கேலிக்கு ஆளானவனின் கனவு என்ற சிறுகதை பல ஆண்டுகளுக்கு முன்பே ஆழ்ந்த அறிவுடன் ஆசிரியரால் எப்படி எழுத முடிந்தது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இக்கதையை வாசிக்கையில் நமக்குள் எழும் கருத்துக்கள், சிந்தனைகள் அளவில்லாதவை..இவை நம்முள் பல புரிதல்களையும், தெளிவையும் ஏற்படுத்துவன. இக்கதையை வாசிப்பவரின் மனதில் உள்ள கோபதாபங்களையும், விருப்பு வெறுப்புகளையும் நீக்கி அன்புடன் வாழும் வழியை இச்சிறுகதையின் மூலம் ஆசிரியர் நமக்கு அளித்துள்ளார். பல புத்தகங்கள் அளிக்காத புரிதலை இச்சிறிய கதை அளித்துள்ளது என்றால் அது மிகையில்லை.
இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஆசிரியரின் உளவியல் கருத்துக்கள் அனைத்தும் இக்காலத்துக்கும் ஏற்புடையதாக இருப்பது மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது. இது வரை வந்துள்ளபல உளவியல் நிபுணர்களுக்கு முன்னோடியாக தாஸ்தோவ்ஸ்கி திகழ்ந்துள்ளார். இக்கதைகளை மிகச் சிறந்த முறையில் நேர்த்தியாக தமிழாக்கம் செய்த ஆசிரியர் வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு நன்றி
நூல் அறிமுகம் :
ச.சுபாஷிணி
திருச்சி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


சிறப்பான விமாசனம்
இது போன்ற நூல் அறிமுகம் வாழ்க்கையின் நோக்கத்தினை இடித்துரைப்பது போன்று உள்ளது. அருமை அருமை!!
புத்தக கருத்துரை அருமை
வாழ்த்துகள்.