நாட்டைத் தாக்கியுள்ள இரட்டைப் பேரிடர்கள் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)

நாட்டைத் தாக்கியுள்ள இரட்டைப் பேரிடர்கள் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)

 

கடந்த ஒரு சில நாட்களில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவும், பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முடக்கம் காரணமாகவும் இருவிதமான நிகழ்ச்சிப்போக்குகள் அபாயகரமான முறையில் தலை தூக்கி இருக்கின்றன. இந்தியா, கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில், உலகில் பிரேசிலை முந்திக்கொண்டு, இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த செய்தி வருவதற்கு முன், ஏப்ரல்-ஜூன் மாதங்களுக்கான முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 24 சதவீத அளவிற்கு வீழ்ந்துவிட்டது என்பதாகும். இது உலகின் பெரிய அளவிலான 25 பொருளாதார நாடுகளின் மத்தியில் மிக மிக மோசமான வீழ்ச்சியாகும்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டும் பரவிக்கொண்டுமிருக்கிறது. இப்போது இது நாட்டின் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களுக்குள்ளும் பரவியிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றால் ஒவ்வொரு நாளும் பாதிப்புக்கு உள்ளாகிறவர்கள் எண்ணிக்கையில், இந்தியா உலகின் மற்ற அனைத்து நாடுகளையும் விஞ்சியிருக்கிறது. அதேபோன்று நாள்தோறும் இறப்பவர்கள் எண்ணிக்கையிலும் இந்தியாதான் முதலில் இருக்கிறது. இந்த விகிதத்தில் நிலைமைகள் தொடருமானால்,  அக்டோபர் இரண்டாம் வாரத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு உள்ளான உலக நாடுகளில், இந்தியா, அமெரிக்காவையும் முந்திவிடும் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

ஆனாலும், இவ்விரு பேரிடர்களும் நம் நாட்டின் பிரதமரையும் அவரது அரசாங்கத்தையும் கொஞ்சம்கூட எச்சரிக்கை செய்திடவில்லை என்றே தோன்றுகிறது. மோடி அரசாங்கம், கொரோனா வைரஸ் தொற்று அதன்போக்கில் போகட்டும் என்று தீர்மானித்திருப்பதுபோன்றே தோன்றுகிறது. சுகாதாரப் பாதுகாப்பு நெருக்கடி தொடர்பாக இவ்வாறு கிஞ்சிற்றும் பொறுப்பற்று இருப்பதன் காரணமாகத்தான் இவர்கள் சமூக முடக்கம் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது என்றும், இதனால் இறப்பவர்கள் எண்ணிக்கை விகிதம் உலகிலேயே இந்தியாவில்தான் குறைவு என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சவாலை எதிர்கொள்ள அரசாங்கம் விரைந்து தயாராகிவிடும் என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். மோடி, சமீபத்தில் ஆற்றிய உரை ஒன்றின்போது, இந்தியா உலகில் சுயபாதுகாப்புஉபகரணங்களை (PPEs) உற்பத்தி செய்வதில் உலகில் இரண்டாவது இடத்திற்கு மாறியிருக்கிறது என்று பீற்றிக்கொண்டுள்ளார்.

கடந்த ஆறு மாதங்களில், பொது சுகாதாரத்திற்காக, அரசாங்கத்தின் செலவினம் என்பது கணிசமான அளவிற்கு அதிகரிக்கவே இல்லை. சுகாதாரத்துறைக்கான நிதித் தொகுப்பில் அறிவிக்கப்பட்ட 15 ஆயிரம் கோடி ரூபாயைத் தவிர, கூடுதலாக தொகை எதுவும் ஒதுக்கப்படவில்லை. அதிலும்கூட, அந்தத் தொகையில் மிகவும் சிறிய அளவுக்குத்தான், சுகாதார நெருக்கடியைச் சமாளித்துக் கொண்டிருக்கும் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. உண்மையில், மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களுக்கு அவற்றுக்கு அளிக்க வேண்டிய நிதிகளை அளித்திடாமல் அவைகளைப் பட்டினிப் போட்டு வதைத்துக் கொண்டிருக்கிறது. அதன்மூலம் மாநில அரசாங்கங்கள் தங்களுடைய பொது சுகாதார அமைப்பை மேம்படுத்துவதற்கும், விரிவாக்குவதற்குமான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருக்கிறது.

இத்தகைய பொறுப்பற்ற தன்மைகளின் விளைவாக மனிதகுலத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மிகவும் திகிலூட்டக்கூடிய விதத்தில் இருக்கின்றன. போதிய மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் பலர் இறந்து கொண்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மத்தியதரக் குடும்பங்கள் தனியார் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்களில் தங்கள் சிகிச்சைகளுக்காக, கொள்ளையடிக்கும் விதத்திலான கட்டண வசூல்களின் காரணமாக, கடன் வலையில் சிக்கிக்கொண்டிருக்கின்றன. சுகாதார நெருக்கடி நம் பொருளாதார நடவடிக்கைகளையும் பாதித்துக் கொண்டிருக்கிறது. அது தன் வளர்ச்சியைப் புதுப்பிப்பதற்கான வாய்ப்புகளைத் தள்ளிப்போட்டுக்கொண்டிருக்கிறது.

பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதற்கு, ஏப்ரல் – மே ஆகிய இரு மாதங்களிலும் சமூக முடக்கத்தை முழுமையாக அறிவித்தது பிரதானகாரணமாகும். பொது செலவினத்தை அதிகரித்திருந்தால், ஏழைகளுக்கு ரொக்க மாற்று செய்திருந்தால், தேவைப்படும் குடும்பத்தினர் அனைவருக்கும் அதிக அளவில் உள்ள உணவு தான்யங்கள் இருப்பிலிருந்து உணவு தான்யங்களை இலவசமாக அளித்திருந்தால்,  நுண்ணிய, சிறிய நடுத்தரத் தொழில்பிரிவுகளுக்கு (MSMEs) நிதி உதவி செய்திருந்தால், நெருக்கடியின் பாதிப்பைத் தடுத்து நிறுத்தி இருக்க முடியும்.   ஆனால் அரசாங்கம் இவை அனைத்தையும் செய்ய மறுத்துள்ளது. அரசாங்கம் அறிவித்த நிதி ஊக்குவிப்புத் தொகுப்பில், கூடுதல் பொது செலவினத்திற்கான தொகை என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1 சதவீதம் மட்டுமேயாகும்.

இந்தியாவின் ஜிடிபி சரிவு ஏன்? - Polimer News - Tamil News | Latest Tamil  News | Tamil News Online | Tamilnadu News

அரசாங்கத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர், கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்ததற்கு கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுதான் முழுக்க முழுக்க காரணம் என்றும், இப்போது பொருளாதாரம் மிக வேகமாக மீண்டுகொண்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24 சதவீத எதிர்மறை வளர்ச்சி என்பதன் பொருள் நாட்டில் பெரிய அளவில் வேலைவாய்ப்பில், வருமானத்தில் மற்றும் நுகர்வில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பதாகும். இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (CMIE) கூற்றின்படி, ஏப்ரல் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை,  2 கோடியே 10 லட்சம் மாதாந்திர ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். முறைசாராத் தொழிலில் ஈடுபட்டுள்ள மேலும் பல லட்சக்கணக்கானவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். பொருளாதார நடவடிக்கைகள் மீளவும் புதுப்பிக்கப்பட்டாலும், இவை அனைத்தும் மீளவும் பழைய நிலைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் பரவத்தொடங்குவதற்கு முன்பே நாட்டில் பொருளாதார நிலைமை மந்த நிலைக்குச் செல்லத் துவங்கிவிட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு முன்பிருந்த நிலைக்குத் திரும்புவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருந்திடும். பொருளாதாரம் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியிருக்கிறது என்றும், பொருளாதார மந்தத்திலிருந்து மீண்டெழுந்துவிட்டோம் என்றெல்லாம் பேசுவது எதார்த்த நிலைமைகளின் காரணமாக அரசாங்கம் ரொம்பவும் குழம்பிப்போயிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

பொது செலவினம் மற்றும் பொது முதலீடு ஆகியவை மட்டும்தான் மக்கள் மத்தியில் தேவையை அதிகரித்திடும், நுகர்வை உயர்த்திடும் மற்றும் அவற்றின் மூலமாக தனியார் முதலீடு அதிகரிக்கப்பட்டு, உற்பத்திக்குப் புத்துயிரூட்டுவதற்கு இட்டுச்செல்லும். ஆனால் இதனையெல்லாம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகள் எதையும் எடுக்கப்போவதுபோல் தெரியவில்லை. மாறாக, மோடி அரசாங்கம் பின்பற்றக்கூடிய நடவடிக்கை வித்தியாசமாக இருக்கிறது. அந்நிய நேரடி முதலீட்டைக் கவர்வதற்காக, கனிம வளங்களைச் சுரண்டுவதற்காக  கார்ப்பரேட்டுகளுக்கு இலவச உரிமங்கள் அளித்தல், பொதுத்துறை நிறுவனங்களைப் பெரிய அளவில் தனியாரிடம் தாரை வார்த்தல், அனைத்து முனைகளிலும் தனியார்மயத்தைக் கொண்டுவருதல், தொழிலாளர் நலச்சட்டங்களை தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றி தொழிலாளர்களை அடிமைப்படுத்த முயற்சித்தல் முதலான வேலைகளில் இறங்கியிருக்கிறது. இவ்வாறு மக்களையும் நாட்டின் வளங்களையும் சுரண்டக்கூடிய விதத்தில் இந்தியப் பெரும் வர்த்தகப்புள்ளிகளுக்கும் அந்நிய மூலதனத்திற்கும் வசதிகள் செய்துதரக்கூடிய நவீன தாராளமயப் பாதையை அகலத் திறந்துவிட்டிருக்கிறது.

இத்தகைய மக்கள் விரோத அணுகுமுறை நாடு எதிர்கொண்டிருக்கும் மூன்றாவது நெருக்கடியில் – அதாவது ஜனநாயகத்தின் மீதான நெருக்கடியில் – பிரதிபலிக்கிறது. மார்ச் 24 தொடங்கிய சமூக முடக்கத்திற்குப் பின்பு கடந்த ஆறரை மாதங்களில், ஜனநாயகத்தின் மீது மிகவும் திட்டமிட்டமுறையில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. ஜனநாயக உரிமைகள் அனைத்தின்மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டத்தில் உள்ள தேசத்துரோகச் சட்டப்பிரிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தவர்கள், அறிவுஜீவிகள், மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது பீமா-கொரேகான் வழக்கில் பொய்யாகப் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள், ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்காக நோய்த்தொற்று சட்டம் (Epidemic Act) மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் (Disaster Management Act) பயன்படுத்தப்பட்டிருக்கின்றன, ஜம்மு-காஷ்மீரில் குடியேற்றச் சட்டம் உந்தித்தள்ளப்பட்டிருக்கிறது, இறுதியாக நாடாளுமன்றமே சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டிருக்டிகின்றன. ஆன்-லைன் கூட்டங்கள் அனுமதிக்கப்படவில்லை. வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதன்மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களின் உரிமைகள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவது முடிவே இல்லாமல் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

மாநிலங்களுக்கு அளிக்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை அளிப்பதற்குத் தங்களிடம் பணம் இல்லை என்று சொல்லக்கூடிய அதே சமயத்தில், மத்திய உள்துறை அமைச்சகம்  50 ஆயிரம் கோடி ரூபாய் நிதித்தொகுப்புடன் தேசிய உள்நாட்டுப் பாதுகாப்பு நிதியம் (NISF-National Internal Security Fund) அமைத்திட, நிதி ஆணையத்தைக் கேட்டிருக்கிறது.  கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை சம்பந்தமான தொழில்நுட்பங்களை திரட்டிக்கொள்வதற்காக இத்தொகையில் கணிசமான அளவு மூலதனச் செலவு மேற்கொள்ளப்பட இருக்கிறது.  இவ்வாறு உள்நாட்டுப் பாதுகாப்புக்கு என்று தனி நிதியம் தேவைப்படுகிறது என்றும் இதற்கான செலவினங்களை மத்திய மாநில அரசுகள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் கூறிக்கொண்டிருக்கிறார்.  எனவே, அநேகமாக, மாநிலங்கள் தற்போது பெற்றிருக்கும் சில வளங்கள் உள்நாட்டுப் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும், மாநிலங்களைக் கண்காணிப்பதற்காகவும் மத்திய உள்நாட்டுப் பாதுகாப்பு நிதியத்திற்குத் திருப்பிவிடப்படும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கம் ஜனநாயகத்தின் மீதும், குடிமை உரிமைகள் மீதும் ஏவியுள்ள தாக்குதல்களுடன் அரசாங்கத்தின் அனைத்து ஜனநாயக விரோத நடவடிக்கைகளுடனும் ஒத்துப்போகக்கூடிய விதத்தில் நீதித்துறையும் வளைந்துகொடுக்கத் தொடங்கியிருப்பதன் காரணத்தால், எதேச்சாதிகாரக் கட்டமைப்பு கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு மக்களின் சுகாதாரம் மற்றும் பொருளாதார நலன்கள் பலியாகியுள்ளன. இதுதான் கோவிட்-19 காலத்தில் மோடி ஆட்சியின் உண்மையான முகமாகும்.

(செப்டம்பர் 9, 2020)

 

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *