வழக்கமான ட்விட்டர் பயனராக, இணையத்தில் என்னைப் பின்தொடரும் நபர்களையும், நிறுவனங்களையும் நான் மிகவும் கவனமாகத் தேர்வு செய்து வருகிறேன். அதுவே எனக்குப் பிரச்சினையாகவும் இருக்கிறது. சமூக ஊடகங்களில் உள்ள நமது கருத்துக்களுடன் ஒத்துப்போவதற்கும், அதன் உள்ளடக்கத்துடன்  ஒன்றிப் போவதற்கும், அவற்றை அப்படியே நம்புவதற்கும் அதிக வாய்ப்புகள் நமக்கு இருக்கின்றன. ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ள கருத்துக்களால், நாம் நிறைவுற்றவர்களாகி விடுகிறோம்.

ஊடகங்களில் வருகின்ற சில கருத்துக்கள் அரசியல் அல்லது மதரீதியிலான சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டவையாகவும், மற்றவை  மிகக்குறைவான ஆதாரங்கள் அல்லது மிக மேலோட்டமான, நம்பமுடியாத தகவல்களின் அடிப்படையில் இருப்பவையாகவும் உள்ளன. முரண்பட்ட கருத்துக்களும், ஒருமுனைப்படுத்தப்பட்ட உலகக் கண்ணோட்டமும் இருக்கின்ற பின்னணியில் பார்த்தால், இப்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் அறிவியலையும், அறிவியலாளர்களையும்   மட்டும் நம்புமாறு நாம் தொடர்ந்து கேட்டுக் கொள்ளப்படுகிறோம்.

இந்த கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது, இணையதளத்தில் உள்ள அனைவருமே ’அறிவியல்’ கருத்துக்களுடன் இருப்பதாகத்  தெரிகிறது. மாதிரி உருவாக்கம், அதிவேக வளைவுகள், தொற்று விகிதங்கள் மற்றும் நோயெதிர்ப்பு பொருள் சோதனைகள் என்று அனைத்தையும் பற்றி அனைவரும் இப்போது விவாதித்து வருகிறோம். திடீரென்று நாம் அனைவரும், தொற்றுநோய், நோயெதிர்ப்பு மற்றும் வைராலஜி ஆகியவற்றில் வல்லுநர்களாகி விட்டோம்.

புதிய அறிவியல் சான்றுகள் அரசின் கொள்கைகளில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக அறிகின்ற பொதுமக்களிடம், தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறிவியலாளர்கள் அறியாது இருக்கிறார்கள், எனவே அவர்கள் சொல்வதை நம்ப முடியாது என்று முடிவு செய்யும் போக்கே இப்போது நிலவுகிறது. அறிவியலாளர்களை விட அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்கின்ற திறமையுடன்  பத்திரிக்கையாளர்கள் இருக்கின்ற போது, அரசியல்வாதிகள் அறிவியல் தகவல்களைத் தெளிவாகவும், வெளிப்படையாகவும் பரிமாறிக் கொள்வதில் திறமையற்று இருப்பதை நிச்சயம்  தவிர்க்க முடியாது.

இதற்கு முன்னர் எப்போதும், அறிவியல் செயல்படும் முறையைப் பற்றி தெரிந்து கொள்வது இந்த அளவிற்கு மிக முக்கியமானதாக இருந்திருக்கவில்லை. அரசியலைப் பொறுத்த வரையில், ஒரு தவற்றை ஒப்புக்கொள்வது பலவீனத்தின் வடிவமாகக் கருதப்படுகிறது. ஆனால் அதற்கு முற்றிலும் நேர்மாறானதாக, அறிவியலைப் பொறுத்த வரை,  தவறுகளே அறிவின் அடிப்படையாக இருக்கின்றன. அத்தகைய தவறுகள், பழைய கோட்பாடுகள் மற்றும் கருதுகோள்களை புதியதாக, மிகவும் துல்லியமானதாக மாற்றி ஒரு விஷயத்தைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற உதவுகின்றன.

Jim Al-Khalili: ‘I’m a cuddly atheist. I don’t need to tell my mum …

கணித மாதிரிகளைக் கொண்டு, தரவு மற்றும் கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் நாங்கள் கணிப்புகளைச் செய்கிறோம். கொரோனா வைரஸைப் போன்ற புதிய ஒன்று குறித்த குறைந்த அறிவைக் கொண்டே நாங்கள் ஆய்வுகளைத் தொடங்கியிருக்கிறோம். புதிய தரவுகளைச் சேகரிக்கும் போது, எங்களால் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள மாதிரிகளும், கணிப்புகளும்  தொடர்ந்து மேம்பட்டுக் கொண்டே இருக்கும்.

சந்தேகத்திற்கிடமின்றி இருக்கின்ற உண்மையை  சந்தேகிப்பது, அறிவியல் முறையின் இரண்டாவது முக்கியமான அம்சமாக இருக்கிறது. சந்தேகம் என்ற கருத்து நன்கு ஆராயப்பட வேண்டியதாகும். அதன் தோற்றத்தை, இடைக்கால அறிவுசார் இயக்கத்தின் மூலம், குறிப்பாக அரபு அறிஞரான அபின் அல் ஹெய்தம் (அல்ஹாசென்) மற்றும் பாரசீக அறிஞரான ராஜி (ரேஸஸ்) ஆகிய இரண்டு  நபர்களின் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த இயக்கம் அரபு மொழியில் அல்-ஷுகுக் (அதாவது “சந்தேகங்கள்” என்ற பொருளில்) என்று அழைக்கப்பட்டது.

1,000 ஆண்டுகளுக்கு முன்னர், வானியல் மற்றும் மருத்துவம் போன்ற பாடங்களில் பண்டைய கிரேக்க அறிஞர்களிடமிருந்து பெறப்பட்ட அறிவை இது மறுத்தது. ஆரம்பகாலத்தில் அறிவியல் முறை குறித்து ஆதரித்து வந்தவரான அல்-ஹெய்தம், ஹெலெனிக் வானியலாளரான தாலமியின் கருத்துக்கள் குறித்து சந்தேகங்களை  எழுப்பினார்.

ஏற்கனவே  இருந்து வருகின்ற அறிவை மட்டுமல்லாது, தன்னிடம் உள்ள சொந்த கருத்துக்களையும் ஒருவர் கேள்வி கேட்க வேண்டும் என்றும், மாறுபட்ட ஆதாரங்களின் வெளிச்சத்தில் அவற்றை மாற்றவோ அல்லது ஒதுக்கி வைக்கவோ தயாராக இருக்கவும் வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். நம் கண்கள் பொருள்களின் மீது ஒளியை வீசுவதன் மூலமே, நாம் பொருட்களைக் காண்கிறோம் என்ற பழமையான கருத்தை அவர் தூக்கி எறிந்தார். பார்வை செயல்படும் விதம் குறித்த  சரியான  விளக்கத்தை  முதன்முதலாக அவர் வழங்கினார்.

இன்றளவும் நாம் அறிவியலை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை இந்த அணுகுமுறை தெரிவிக்கிறது. உண்மையில் அறிவியல் முறை  இவ்வாறுதான் சதி கோட்பாட்டாளர்களின் நிலைப்பாட்டிலிருந்து வேறுபடுகின்றது. அறிவியலாளர்களைப் போலவே, தாங்களும் எல்லாவற்றையும் கேள்வி கேட்பவர்களாகவும், ஆதாரங்களின் முக்கியத்துவத்தை மதிக்கின்ற சந்தேகவாதிகளாக இருப்பதாகவும் சதிகோட்பாட்டாளர்கள் வாதிடக்கூடும்.

Jim Al-Khalili’s The World According to Physics is a thrilling …

அறிவியலைப் பொறுத்த வரை, இந்த உலகைப் பற்றிய நமது கோட்பாடுகள் மற்றும் விளக்கங்கள் சரியானவை என்று நம்மால் நம்ப முடியும் என்றாலும், ஒருபோதும் நம்மால் அந்த நம்பிக்கையில் முழுமையாக உறுதியாக இருக்க முடியாது.  புதிய  கண்டறிதல் அல்லது புதிய சோதனை முடிவு என்று ஏதேனும் வந்து, ஏற்கனவே உள்ள கோட்பாட்டுடன் அது முரண்படுமேயானால், பழைய முன்மாதிரிகளை நாம் கைவிட்டு விட வேண்டும். உண்மையான பொருளில் பார்த்தால், சதி கோட்பாட்டாளர்கள் அறிவியலாளர்களின் எதிர்துருவமாக இருக்கிறார்கள். தங்கள்  அடிப்படை நம்பிக்கைகளுக்கு முரணான  ஆதாரங்களை ஒருங்கிணைக்கின்ற அவர்கள், அந்த ஆதாரங்களைக் கொண்டு தங்களுடைய நம்பிக்கைகளை நிராகரிப்பதை விட அவற்றை உறுதிப்படுத்துகின்ற வகையில்  விளக்குகிறார்கள்.

இத்தகைய கருத்தியல் நம்பிக்கைகள் குறித்த விஷயத்தில், ’அறிவாற்றல் ஒத்திசைவு’ என்ற வார்த்தையை நாம் பெரும்பாலும் கேள்விப்படுகிறோம். தங்களிடம் இருக்கின்ற பார்வைக்கு முரணான ஆதாரங்களை எதிர்கொள்ளும்போது, ஏற்படுகின்ற மன அசௌகரியத்தை உணர்வதை அது குறிக்கிறது.

அது முன்பே இருந்து வருகின்ற நம்பிக்கைகளை வலுப்படுத்துவதற்கே உதவுகின்றது. உங்களுடைய மனதை  மாற்றிக் கொள்வதற்கு, உங்களுக்கு என்ன தேவைப்படும் என்ற கேள்வியை சதி கோட்பாட்டாளர் ஒருவரிடம் கேட்டுப் பாருங்கள். தனது பார்வையில் முற்றிலும் உறுதியுடன் இருப்பதால், யராலும் எதுவும் செய்ய முடியாது என்பதே அவர்களுடைய பதிலாக இருக்கும். ஆனால்  அறிவியலைப் பொறுத்தவரை நாம், தவறுகளை ஒப்புக் கொள்ளவும், இந்த உலகு குறித்த புதிய  ஆதாரங்களுன் அடிப்படையில்  நமது  மனதை  மாற்றிக் கொள்ளவும்  கற்றுக் கொள்கிறோம்.

தற்போதைய தொற்றுநோயைப் பொறுத்த வரை, இது மிகவும் முக்கியமானது. நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரையிலும், வைரஸைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்கு இந்த உலகம் காத்திருக்காது என்பது தெளிவாகத் தெரிகிறது. அதே நேரத்தில், புதிய ஆதாரங்கள் கிடைத்த போதிலும், குறிப்பிட்ட  உத்தியையே பிடிவாதமாக கடைப்பிடிப்பது பேரழிவையே தரும். அதிகமான தரவுகள் சேகரிக்கப்படும் போது, எங்களுடைய மாதிரி கணிப்புகள் மிகவும் நம்பகமானதாக இருக்கும் என்பதால், எங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும். உண்மையில் அவ்வாறு இருப்பது, அறிவியல் முறையின் வலிமைதானே தவிர, பலவீனம் அல்ல.

How physics is helping in the war against COVID-19 – YouTube

அறிவியல்ரீதியிலான கல்வியறிவு பெற்றதாக சமூகம் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியே இதுவரையிலும் என்னுடைய வாழ்க்கையை நான் கழித்து வந்திருக்கிறேன். அண்டவியல் அல்லது குவாண்டம் இயற்பியலை நாம் அனைவரும் நன்கு அறிந்திருக்க வேண்டும் அல்லது ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாட்டை முழுமையாகப் புரிந்திருக்க வேண்டும் என்ற பொருளில் நான் இதைச் சொல்லவில்லை.

ஆனாலும் பாக்டீரியாவிற்கும் வைரஸ்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நாம் அனைவரும் நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டும். அதைவிட முக்கியமாக, இந்த நெருக்கடிக்கான தீர்வை நாம் அடைய வேண்டுமென்றால், நம் அனைவரிடமும் அறிவியல் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய அடிப்படை புரிதல் அவசியம் இருக்க வேண்டும். இது போன்றதொரு நெருக்கடியின் போது, ஏற்கனவே இருக்கின்ற உண்மையை நம்புவதாக  நடிப்பதை விட, சந்தேகத்தை ஒப்புக்கொள்வது அறிவியல் வலிமைக்கான  ஆதாரமாக இருக்கக்கூடும்.

ஜிம் அல்-கலிலி, சர்ரே பல்கலைக்கழக கோட்பாட்டு இயற்பியல் துறை பேராசிரியர்

தி கார்டியன், 2020 ஏப்ரல் 21

https://www.theguardian.com/commentisfree/2020/apr/21/doubt-essential-science-politicians-coronavirus

தமிழில்

முனைவர் தா.சந்திரகுரு

2 thoughts on “சந்தேகம் – அது அறிவியலுக்கு மிகவும் அவசியம்: ஜிம் அல்-கலிலி (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *