“தைவாயத்தம் குலே ஜன்ம மதயத்தம் து பௌருஷம்” – மகாபாரதம்
மேல் குறிப்பிட்ட சமஸ்கிருத மொழி ஸ்லோகமானது ஒருவன் குறிப்பிட்ட குலத்தில் பிறப்பது தெய்வச் செயலினால்; ஆனால் அவன் மேன்மை பெறுவது தன் சொந்த முயற்சியினால்” என்கிற அர்த்தத்தை தருகின்றது. 1500 வருடங்களுக்கும் மேலாக சனாதனத்தின் கோர கைகளால் பிய்த்து எறியப்பட்டு, நால்வர்ண அமைப்பின் வெளியில் தூக்கி வீசப்பட்ட தீண்டப்படாதவர்களின் வகுப்பில் பிறந்த “பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின்” வாழ்க்கை வரலாற்றினை தக்க சான்றுகளின் வழி படம் பிடித்துக்காட்டும் நூல் இஃது. இந்நூலின் ஆசிரியர் வசந்த் மூன், மகாராஷ்டிர அரசின் சார்பில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட டாக்டர்.அம்பேத்கரின் அனைத்துப் படைப்புகளின் தொகுப்பு நூல்களின் முதன்மை ஆசிரியர் ஆவார். இந்த நூலை எளிய மொழியில் தமிழாக்கம் செய்தவர்,சென்னை மாநிலக் கல்லூரியின் “இந்துத்துறை தலைவர்” முனைவர் என்.ஸ்ரீதரன் ஆவார். இந்நூலை நேஷனல் புக் ட்ரஸ்ட் (NBT) வெளியிட்டுள்ளது.
பொதுவாக அம்பேத்கர் என்றால், பெரும்பான்மையினரின் மனக்கண்ணில் உதிப்பது, “கோட் சூட் அணிந்து கையில் கனமான புத்தகமும், நிமிர்ந்த நடையுடன் கூடிய நேர்கொண்ட பார்வை, ஊதா சாயம் பூசப்பட்டு இரும்பு கூண்டினுள் அடைக்கப்பட்ட தலித்திய தலைவர், இதனையும் தாண்டி இந்திய அரசியலமைப்பின் தந்தை( father of Indian Constitution)” அவ்வளவுதான். முன்குறிப்பிடப்பட்ட எல்லாமும் தான் டாக்டர் அம்பேத்கர். ஆனால், அஃது மட்டுமே முழுமை கிடையாது. ஞான ஒளியாக சுடர் விட்ட அவரது ஆளுமை கதிர்களிள் பலத்துறை சார்ந்த அறிவும், அனுபவமும் ஊடுருவி ஒன்றாக கலந்திருந்தது.
“நான் வழி நடத்தும் இயக்கம் பிராமணர்களுக்கு எதிரானதல்ல; பிராமணியத்தை தான் நான் எதிர்க்கிறேன்.” – டாக்டர் அம்பேத்கர்.
“அம்பேத்கர் எனும் பிராமண ஆசிரியரின் மேலுள்ள அன்பின் வெளிப்பாடாக, தன் இயற்பெயரான “பீம் ராவ் ராம்ஜியோடு” இணைத்துக் கொண்டு, பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் ஆனார்.” மகாராஷ்டிர ரத்தனகிரி மாவட்டத்திலுள்ள அம்பவாடே என்னும் கிராமத்தில் பீமாபாய், ராம்ஜிவல்த் மாலோஜி தம்பதியருக்கு 14வது மகனாக 14/04/1891 அன்று பிறந்தார்.
ஆரம்பகால பள்ளி படிப்பில் சுமார் ரகம் என்றாலும் காலப்போக்கில் ஊன்றிப்படிக்க தொடங்கிவிட்டார்.1907-இல் நடைபெற்ற மெட்ரிக் பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற்ற அம்பேத்கர், அத்தேர்வில் வெற்றி பெற்ற முதல் தலித் மாணவர் என்ற சாதனையை படைத்தார்.மேட்டுக்குடியினரின் வாரிசுகள் மட்டுமே அக்கால மெட்ரிக் பள்ளியில் படிப்பது வழக்கம். அத்தகைய நிலையில் டாக்டர் அம்பேத்கரது தேர்ச்சி மாபெரும் சாதனையே!
தனது 22-வது வயதில் பரோடா மன்னரின் நிதியுதவியோடு அமெரிக்காவின் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1913 முதல் 1916 வரை என மூன்று வருடங்களில் அரசியல், வரலாறு, சமூகவியல்,மானுடவியல் தத்துவவியல்,உளவியல், பொருளியல் முதலான பாடங்களில் உலகின் தலைசிறந்த பேராசிரியர்களின் வழிகாட்டலில் கற்று தேர்ச்சி பெற்றார். தனது கல்லூரி நாட்களில் தினமும் 18 மணி நேரம் வரை படித்திருக்கிறார். பின்பு 1916-இல் லண்டன் சென்று அரசியல் பொருளாதாரத்தை லண்டன் பொருளியல் கல்லூரியிலும்(LSE),சட்டத்தை கிரேஸ் இன் கல்லூரியிலும் பயின்றிருக்கிறார்.8 வருடத்தில் முடிக்க வேண்டிய பட்டப் படிப்பான் D.Sc மற்றும் M.Sc- யை நிதி மற்றும் நேரப் பற்றாக்குறையால் 2 1/2 வருடத்திலேயே முடித்து பட்டம் பெற்றிருக்கிறார். லண்டன் அருங்காட்சியக நூலகத்திற்குள் காலை 8 மணிக்கு நுழைபவர் இடையில் எவ்வித ஆகாரங்களுமின்றி இரவு 8 மணி வரை படிப்பை தவம் போல் பாவித்து முடித்திருக்கிறார். இக்காலகட்டத்தில் டாக்டர்.அம்பேத்கர் பொருளியல், சட்டம் மற்றும் சமூகவியலில் ஞானவொளிக் கொண்டு மிளிந்திருக்கிறார். லண்டனில் பெற்ற அறிவை உரைக்கல்லாக கொண்டே பின்நாட்களில் இந்திய அரசியலின் சிற்பியாக பரிணமித்தார்.
மாமேதை அம்பேத்கரை ஒரு குறிப்பிட்ட சட்டகத்திற்குள் அடைத்து வைக்க முடியாது. இடைவிடாத புத்தக வாசிப்பு அவரது சிந்தனையை கூர்மைப்படுத்தியுள்ளது. அவரது அறிவும், ஞானமும் விஸ்தாரமானவை. அந்நாட்களில், தனி ஒரு ஆளாக 33,000 புத்தகங்களை சேகரித்து வைத்திருந்திருக்கிறார். இந்தியாவில் மிகப்பெரிய தனிநபர் நூலகம் அம்பேத்கருடையது.தனது ஏழ்மையான சூழ்நிலையிலும் தொடர்ந்து புத்தகங்களை வாங்கிய அம்பேத்கர், பின்நாட்களில் லட்சங்களில் கேட்கப்பட்ட அந்நூல்களை தனியாருக்கு விற்க மறுத்து, தான் தொடங்கிய சித்தார்த்தா கல்லூரியின் நூலகத்திற்கு வழங்கிவிட்டிருக்கிறார். அம்பேத்கர் அளவிற்கு புத்தகங்களை காதலித்தவர்கள் வெகு சிலரே.
பரோடா மன்னரின் சமஸ்தான சேனையில் முன் ஒப்பந்தத்தின் பெயரில் சில காலம் பணியாற்றியவர், தீண்டாமையின் காரணமாக அப்பணியிலிருந்து விடைப்பெற்றார். பின்பு, இரண்டு பார்சி இனத்து மாணவர்களுக்கு தனிப்பயிற்சி ஆசிரியராக (tutor) பாடம் கற்பித்தார். இச்சமயத்தில் துணைத்தொழிலாக பங்குச்சந்தையில் தரகர்களுக்கு ஆலோசனை வழங்க ஒரு நிறுவனமும் நடத்திருக்கிறார். பெரும் வாழ்க்கை போராட்டத்தின் இறுதியில் மாதம் ரூபாய் 450க்கு லிடன்ஹம் கல்லூரியில் அரசியல் பொருளாதாரம் (political economics) பிரிவில் விரிவுரையாளராக அரசாங்கத்தால் பணியமர்த்தப்பட்டார்.
குடும்பம் நடத்த போதுமான வருமானம் இல்லாததால் ஜூலை 1923 இல் வழக்குரைஞராக தொழில் தொடங்கினார். சட்டத்துறையில் நுட்பமான அறிவு பெற்றிருந்த டாக்டர.அம்பேத்கர் ஒரு வழக்குரைஞர், சட்டவியல் அறிவோடு சேர்ந்த சமூகவியல், மானிடவியல் (Anthropology), தர்க்கவியல், விவாதவியல், வரலாறு, பேச்சுக்கலை முதலான திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.
1927 மார்ச் 20ஆம் தேதியன்று டாக்டர்.அம்பேத்கர் தலைமையில் மஹத் சத்யாகிரஹம் நடைபெற்றது. மஹத் மாநாடு இந்தியாவில் தலித்திய புரட்சிக்கு வித்திட்டது. தனது அரசியல் பிரவேசத்தை மஹத் சத்தியாகிரகத்தின் வழி தொடங்கிய அம்பேத்கர், ”பஹிஷ்க்ருத் பாரத்” (ஒடுக்கப்பட்டோர் இந்தியா) என்கிற பத்திரிக்கையையும் தொடங்கி நடத்தியிருக்கிறார். இதில் தொடர்ந்து தலித்திய மக்களின் நலனுக்காக எழுதியிருக்கிறார்.
1928-ஜூனில் மகாராஷ்டிர அரசின் சட்டக்கல்லூரியின் பொறுப்பாசிரியராக பதவியேற்றுள்ளார். பாடம் கற்பிப்பதில் விற்பன்னரான அம்பேத்கர் தனது அசாத்திய அறிவினால் மாணவர்கள் மத்தியில் நன்மதிப்பும், பிரபலியமும் பெற்றிருக்கிறார்.
1930 முதல் 1932 வரை நடைபெற்ற மூன்று வட்டமேசை மாநாட்டிலும் (Round table conference) கலந்து கொண்ட அம்பேத்கர், உலகினரின் பார்வைக்கு தீண்டப்படாதோரின் இன்னல்களை எடுத்துக்கொண்டு சேர்த்திருக்கிறார். தீண்டப்படாதோரின் நலன் குறித்து எவ்வித சமரசமும் இன்றி கராராக இருந்திருக்கிறார். அரசியலில் முதிர்ந்த ஞானம் கொண்டவரான அம்பேத்கர், காந்தியார் மற்றும் காங்கிரசாரின் தலித்திய விரோத செயல்களுக்கு தொடர்ந்து எதிர்வினையாற்றியிருக்கிறார்.
விவசாயிகளின் நிராதரவான நிலைக்கண்டு தலித்திய புரட்சியில் விவசாய, தொழிலாளர் பிரச்சனைகளையும் இணைத்தே நடத்திவந்திருக்கிறார். மகாராஷ்டிர மாநிலத்தின் விவசாய கொத்தடிமைக்கு எதிராகவும் போராட்டங்கள் பல நடத்தியவர்,அம்பேத்கர்.
ஜூன் 2,1935-இல் சட்டக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்நாட்களில் சட்டக்கல்லூரி முதல்வர் பதவி என்பது உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கான நுழைவுச்சீட்டாக இருந்திருக்கிறது. இந்திய நாட்டின் ஜனாதிபதி பதவிக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார் அம்பேத்கர். ஆனால், எவ்வித பதவி ஆசையுமின்றி, தன்னை தலித்திய மக்களின் மீட்பராகவே வெளிப்படுத்தியிருக்கிறார் அம்பேதகர்.
அம்பேத்கர், 1936 ஆகஸ்டில் சுதந்திர தொழிலாளர் கட்சி (Independent labour party) என்கிற அரசியல் கட்சியை தொடங்கி, தேர்தலில் போட்டியிட்டு 17/12/1937-இல் வெற்றி பெற்றிருக்கிறார். மகாராஷ்டிர மாநிலத்தில் 1937 தேர்தலில் போட்டியிட்ட 17 தலித் வேட்பாளர்களில் அம்பேத்கரையும் சேர்த்து 13 பேர் வென்றிருக்கின்றனர். சுதந்திரத்திற்கு முந்தைய இந்திய சட்டமன்றம் ஒன்றில் குடியானவர்களின் நலனுக்காக மசோதா இயற்றிய முதல் இந்தியத்தலைவர் என்கின்ற பெருமையும் அம்பேத்கருக்கு உண்டு.
அம்பேத்கர் 1942 முதல் 1946 வரை ஆங்கில அரசால், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இக்காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் தொழிலாளர் நலனுக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். வேலை வாய்ப்பு அலுவலகம், தொழிலாளர் நல அலுவலர்களை நியமித்தல், தொழிற்கல்வி வழங்குதல், சுரங்க தொழிலாளர்கள் மத்தியிலான கள ஆய்வு, தொழிலாளர் காப்பீடு, பால் பேதமற்ற ஊதியம்,8 மணிநேர வேலை,ஊதியத்துடன் விடுப்பு, முன்னோடியான தாமோதர் அணைக்கட்டும் திட்டம் முதலிய புதுமையான தொலைதூரப் பார்வைக் கொண்டு பல திட்டங்களை அம்பேத்கர் கொண்டு வந்தார். இன்றைய தொழில்துறைக்கு, இந்திய சுதந்திரத்திற்கு முன்பே பாதை சமைத்தவர் அம்பேத்கர்.
வாசிப்பின் மீதான அவரது தீராக்காதல், அவரைத் தொடர்ந்து பல ஆய்வில் ஈடுபாடுக் கொள்ளச் செய்தது. சாதி குறித்தான காலணிய அறிஞர்களின் ஆய்வுகள் பல யதார்த்த நிலையோடு ஒத்துப் போகவில்லை.தனது விசாலமான அறிவைக் கொண்டு பகுப்பாய்வு செய்து சாதி ஆய்வுக்குறித்து பல புதிய முறைமைகளை கையாண்டவர்,அம்பேத்கர். தனது இறுதி மூச்சுள்ள வரையிலும் எழுத்துப் பணியை மேற்கொண்டிருக்கிறார் அண்ணல் அம்பேத்கர்.”மக்கள் கல்வி கலை கழகம்” என்கிற அமைப்பை தொடங்கி அதன் சார்பில் 20/06/1946 அன்று சித்தார்த்த கல்லூரியை தொடங்கி இருக்கிறார். அதனை தொடர்ந்து, 30/10/1946-இல் அம்பேத்கர் அரசியல் பள்ளியும் (Ambedkar School of politics)மற்றும் 09/09/1951-இல் மிளிந்த் கல்லூரியையும் அவுரங்காபாத்தில் தொடங்கினார்.
புரட்சியாளர் அம்பேத்கர் சிறந்த பெண்ணியவாதியும் கூட. ஆண் தவறு செய்தால் பெண்கள் அதற்கெதிராகப் போராட வேண்டும். “மொத்த சமூகத்தின் கௌரவமும், முன்னேற்றமும், புகழும் பெண்கள் கையில்தான் உள்ளன” என்று கூறியிருக்கிறார் அம்பேத்கர். அவர், தலித் சமூக முன்னேற்றத்தின் அளவுகோலாக பெண்களின் முன்னேற்றத்தையே கொண்டிருந்தார். தனது அதிகப்படியான அரசியல் சொற்பொழிவுகளில் எந்தவொரு இயக்கமும் பெண்களின் ஒத்துழைப்பின்றி வெற்றியடைய முடியாது என்கிற கருத்தை வலியுறுத்தியிருக்கிறார். பெண் கல்வி, பெண் சுதந்திரம், ஊதியத்துடன் பேறுகால விடுப்பு, தேவதாசி முறை ஒழிப்பு, என பெண்களின் மேன்மைக்காக பெரும்பாடு பட்டவர் அண்ணல் அம்பேத்கர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் சிறந்ததா, இல்லையா என்பது இதனை செயல்படுத்துவோரை பொறுத்தே உள்ளது. –டாக்டர் அம்பேத்கர்.
ஒரு நாடு என்பது ஒரு மொழி பேசக்கூடிய,ஒத்த பண்பாட்டினர் வசிக்கும் நிலம் என்ற பொருள். ஆனால், இந்திய நாட்டு மக்களிடத்தே மொழி,பண்பாடு,சமயம்,சாதி பழக்க வழக்கம் என வேறுபாடே உருவமாய் திகழ்கிறது. அத்தகைய இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை தனி ஒரு நபராக தனது உடல் நலத்தையும் சட்டை செய்யாமல் ஆறே மாதங்களில்,315 பிரிவுகளும் 8 இணைப்புகளும் கொண்ட சட்ட வரைவை உருவாக்கியவர், அண்ணல் அம்பேத்கர்.
பண்டித நேருவின் வேண்டுகோளுக்கிணங்க சுதந்திர இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அம்பேத்கர், தனது மக்களுக்கு யாதொரு நன்மையும் செய்யவியலாத பொழுதில், “காங்கிரஸ் ஒரு எரியும் வீடு” என்று சாடி,தனது அமைச்சர் பதவியை தூக்கியெறிந்திருக்கிறார். தான் வாழ்ந்த காலங்களில் முன்னோடியாக பல புதுமைகளுக்கும், சீர்திருத்தங்களுக்கும் வழிகோழிய பெரும் அறிவு அம்பேத்கரை, கொலம்பிய பல்கலைக்கழகம் 05/06/1952 அன்று டாக்டர் ஆஃ ப் லா(L.L.D) பட்டம் வழங்கி கௌரவித்தது. இந்தியாவில் ஹைதராபாத்திலுள்ள உஸ்மானியா பல்கலைக்கழகம் 12/01/1953- இல் டாக்டர் ஆஃப் லிட்ரேச்சர்(D.Lit) பட்டத்தை அம்பேத்கருக்கு வழங்கி கௌரவித்தது.
சிறந்த பேச்சாளராக, ஆய்வாளராக, எழுத்தாளராக அரசியல் ஞானியாக, அரசியல் கட்சி தலைவராக, தலித் மீட்பராக, வழக்குரைஞராக, ஆசிரியராக,பொருளாதார வல்லுனராக, அமைச்சராக என பன்முக ஆளுமை கொண்டு ஜொலித்த மாபெரும் அறிவு ஜீவியின் ஒட்டுமொத்த எழுச்சியையும், அவரது பாண்டித்தியத்தையும் கால ஓட்டத்தில் சரியான தரவுகளுடன் முன்வைக்கும் இந்தப்புத்தகம் சட்டக்கல்வி மாணவர்கள், சமூகவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் போட்டி தேர்வு ஆர்வலர்கள் என அனைவரும் வாசித்து பயன்பெற வேண்டிய முக்கியமான புத்தகமாகும்.
நூல்: டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்
ஆசிரியர்: வசந்த் மூன்
வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட்
விலை: ₹240
பக்கங்கள்: 266
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அருமை நேர்த்தியாக இருந்தது