அன்ரோமேடாவில் ஒரு காதல் – மரு. உடலியங்கியல் பாலா

Dr. Balasubramanian K Short Story Andromedavil Oru Kadhal. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.என் பெயர் “அறிவு.”… எண்பதுகளின் இடைப்பட்ட காலத்தில்.. அதிர்ஷ்டவசமாய் நான் வேளாண் கல்லூரியில் சேர்ந்தேன். சேர்ந்த முதல் நாளே.. பெயர் பட்டியலில் எனக்கு அடுத்த பெயர் கொண்ட “அழகு”எனும் அழகிய பெண்ணின் அழகால் மயங்கி “என்ன விலை அழகே… உனை விலைக்கு வாங்க வருவேன்”..என்ற பாடலுக்குக், காலப்பயணம் செய்து அன்ரோமேடாவில் டூயட் பாடினேன்.

முதல் முதலாய் கோ-எட் கல்லூரி நுழைவால் சொர்க்கபுரியில் சிறகடித்தேன்.

அழகு என்னை கண்டுகொள்வதே இல்லை.. எப்போதும் உர்ரென்று, விஜயசாந்தி ஸ்டைலில் இருப்பாள்.. ஒரு நாள், கெமிஸ்ட்ரி செய்முறை வகுப்பில், எனக்கு மிக நெருக்கத்தில் அவள் “உப்பு” ஆராய்ச்சி செய்ய, நான் என் உப்பை மறந்து, அவளையே பார்த்து கொண்டிருந்தேன்.. அவளுடன் பேச எடுத்து கொண்ட என் அனைத்து முயற்சிகளும் தோல்விகண்டன.

இதற்குள், சிடுமூஞ்சி சிவசங்கரி மேடம், “என்னப்பா எதாவது, செய்தாயா? ” என்று கோபக்குரலில் கேட்க.. என் உப்பை, உப்புமா போல் பார்த்தேன்.

அடுத்த வாரம், அதே மேடத்தின் விரிவுரை வகுப்பில், அழகின் பேனா மக்கர் பண்ண, அந்த சின்சியர் சிகாமணி, மேடத்திடம் முறையிட, அவளைத் திட்டித் தீர்த்து, “யாராவது உதவுங்கள் “என்று சொன்ன மாத்திரத்தில், என் ஒரே பேனாவை தானம் பண்ணினேன், பேனா திருப்பி வாங்கும் போது எப்படியும் பேசி விடலாம் என்ற நப்பாசை பிளானோடு.

வகுப்பு முடிந்ததும் பேனாவை பெஞ்சின் மேல் வைத்துவிட்டுப் போய்விட்டாள். “என்ன பெரிய ராங்கிகாரியாய் இருப்பாளோ? ” என எண்ணிய, அடுத்த கணமே, என் உள்மனம் “சேச்சே.. கூச்ச சுபாவத்தில் அப்படி பண்ணி இருப்பாள்” என்று சமாதானம் சொல்லியது.

மாதங்கள் நகர்ந்தன, என் ஒருதலைக் காதலோ.. மீட்டர் வட்டி போல் விஸ்வரூபமாய் வளர்ந்தது.
ஓரிரு முறை, அவள் என்னை ஓரக்கண்ணால் பார்ப்பது போல், எனக்குள் பிரமை ஏற்படுவது உண்டு.. மற்றபடி தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாள்.

வருடங்கள் மறைந்தன…

Dr. Balasubramanian K Short Story Andromedavil Oru Kadhal. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

இறுதி ஆண்டு முடியும் தறுவாயில், ஒருநாள் எனக்கு ஜாக்பாட் அடித்தது.. தவறாகப் பெயர் படித்த ஆசிரியர், அவள் கெமிஸ்ட்ரி ரெகார்ட் நோட்புக்கை என்னிடம் கொடுக்க.. அது கடைசி பீரியட் என்பதால் ,.. உடனே நான் அவள் ரெகார்டுடன் சிட்டாய் என் ரூமுக்குப் பறந்தேன்.

ஏதோ புதையல் கிடைத்தது போல் ஓர் உணர்வு. உடனே நான் ஒரு பிளான் போட்டேன்.. அவளுக்குக் காதல் கடிதம் எழுதி, இந்த நோட்டில் மறைத்துக் கொடுத்தால், என்ன?

நினைத்த மாத்திரத்திலேயே, அவள் பத்ரகாளியாக மாறி, பிரின்சிபால் கிட்ட போட்டுக்கொடுப்பது போலவும், என்னை உடனே கல்லூரியில் இருந்து வெளியேற்றி போலீசில் ஒப்படைப்பது போலவும், என் தந்தை என்னைக் கழுமரம் ஏற்றுவது போலவும்… ஏதேதோ காட்சிகள், மனத்திரையில் வந்து நின்று பயமுறுத்தியது.

ஆனால் என் காதல் மனமோ, இதைவிட்டால், வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்று என்னை உசுப்பிவிட… காதல் கடிதம் எழுதியே ஆக வேண்டும் என்று முடிவு செய்தேன்.

இரவு என் தூங்குமூஞ்சி ரூம்மேட் தூங்கியபிறகு, ஆயிரம் வார்த்தைகள் கூட்டிப் பெருக்கி, பிறகு கழித்து , நீக்கி, இறுதியில், ஏதோ ஒன்றை.. ஒரு கவிதை என எழுதி, அவள் நோட்டில் வைத்து, கீழே விழாமல் ஜெம் கிளிப் சொருகி.. அப்படியே தூங்கி போனேன்.. இரவில் ஏதேதோ துஷ்ட கனவுகள் வந்ததால், தூக்கமின்றி தூங்கினேன்.

அடுத்தநாள் அதிகாலை எழுந்து, சந்து பிள்ளையாரை தரிசித்து, சந்தனம் குங்குமம் சகிதம், கல்லூரி சென்றேன்.. நுழைவுவாயிலில் காத்திருந்த அவள், என்னை கண்டதும் “நான் கூப்பிட கூப்பிட.. என் ரெகார்டை தூக்கிகிட்டு ஏன் ஒட்னே, நீ சர்யான… “என்று பொரிந்து தள்ளி, அவள் ரெகார்டை வாங்கிகொண்டு , என் ரெகார்டை, வெறுப்புடன் கொடுத்துச் சென்றாள்.

அன்று வகுப்புக்கு செல்வது எனக்கு உசிதமாகப் படாததால், நேரே ரூமுக்குச் சென்று, இரவு தூக்கம் கெட்டதால், அயர்ந்து தூங்கி விட்டேன்.. கனவில், என்னை போலீஸ், அவள் அப்பா, என் அப்பா ஆகிய மூவரும், காட்டுக்குள் துரத்த, நான் ஒரு பெரிய பள்ளத்தில் விழுவது போன்று பயங்கர கனவில் மூழ்க….

என் தூங்குமூஞ்சி நண்பன் என்னை “டேய் டேய்”என்று உசுப்ப “போலீஸ் எங்க? போலீஸ் எங்க? ” என்று கத்தியபடி எழுந்த என்னை ” கீழே ஏண்டா இப்டி தொபுக்கட்டீனு விழுந்தே? அதோ பார்.. உன் ரெகார்ட் நோட்ல இருந்து லெட்டர் மாதிரி ஏதோ கீழே விழுந்து கிடக்குது பார்” என்றான்..

நானோ “இன்னும் எப்படி என்ன போலீஸ் தேடி வராம இருக்கு?”என்று ஒரே குழப்பத்துடன், அந்தக் கடிதத்தைப் பார்த்துப் படித்ததும், மனதுள் துள்ளினேன்..

ஆம் அழகு தன் அழகிய கையெழுத்தில் “அறிவு.. உன் வெள்ளை உள்ளம் என்னை மயக்கியது… நீதான் என் உயிர்.. என்னுள், இணைந்துகொள், ! பிணைந்துகொள்.!.என் இனியவனே !!.”. என்று எழுதி கையொப்பம் இட்டிருந்தாள்,..

மீண்டும் என் மனம், கால பயணம் செய்து “அன்ரோமேடா” சென்று “தென்மேற்கு பருவக் காற்று சில்லென்று”என்ற வைரமுத்து பாடலுக்கு அவளுடன் டூயட் பாடியது. ..

************

மரு. உடலியங்கியல் பாலா

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.