கீழடி அகழாய்வுக்குப்பிறகு தமிழ் மக்களிடையே தொல்லியல் பற்றிய கவனம் அதிகரித்துள்ளது. முறையாகத் தொல்லியலைப் பற்றி அறிந்து கொள்வதற்கு, கங்காராணி பதிப்பகம் “தொல்லியல் ஆய்வும் – அகழ்வாய்வும்” என்கிற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டுள்ளது. தொல்லியல் துறையில் பொறுப்பு ஆணையராகச் சிறிது காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற முனைவர் சீ.வசந்தி இந்த நூலை எழுதியுள்ளார். முனைவர் சீ.வசந்தி அவர்கள் இளம் ஆய்வாளர்களான த.ஐஸ்வர்யபிரதினா, கே.சுரேஷ் பாலாஜி ஆகியோரும் இணைந்து இந்த நூலை எழுதியுள்ளார்.
சுமார் நூறு பக்கங்களில் தொல்லியல் பற்றி அறிந்து கொள்வதற்குத் தேவைப்படுகிற அனைத்தையும் உள்ளடக்கிய நூலாக இது இருக்கிறது. தொல்லியலை முதன்முறையாகப் படிப்பவர்கள் இந்த நூலில் இருந்து தொடங்கலாம். இந்த நூல் ஒர் எளிய அறிமுகம் என்பதால் 1.தொல்லியல் ஓர் அறிமுகம், 2.வரலாறு அறிவியற் பிரிவுகள், 3. ஆய்வும் அகழாய்வும், 4.காலக்கணிப்பு முறைகள், 5.தொல்பொருள் பாதுகாப்பு என்கிற தலைப்புகளில் ஐந்து இயலாக இந்த நூல் பிரிக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் ஆய்வாளர்கள் என்றால் எதோ பழைய காலத்தையும், பழைய பொருட்களையும் ஆய்வு செய்பவர்கள் என்று சுருக்கிப் புரிந்து கொள்ளக்கூடாது. தொல்லியல் (Archaeology) என்பது மனிதச் சமுதாயத்தின் கடந்தகால வாழ்வை, அவர்கள் விட்டுச் சென்ற பொருள் சான்றுகள் (material remains) மூலம் ஆராயும் அறிவியல் துறை. இது வெறும் “பழமையான பொருட்கள் தேடுதல்” அல்ல; மாறாக, மனிதச் சமூக வளர்ச்சி, உற்பத்தி முறைகள், பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், குடியேற்றம், வணிகம் போன்றவற்றை அறிவியல் முறையில் விளக்கும் சமூக அறிவியல் ஆகும். தொல்லியல் என்பது சென்ற காலத்தை மட்டும் ஆய்வதாகக் கருதிடக்கூடாது, இன்றைய காலத்துத் தேவைகளையும் இணைத்து ஆய்வு செய்கிறது. அதுமட்டுமல்லாது புதிய அறிவியல் துறைகளையும் இணைத்துக் கொண்டுள்ளது.
தொல்லியலின் இன்றைய கால ஆய்வுகள் (Contemporary Archaeological Research) என்பது வெறும் அகழாய்வை மட்டுமே குறிக்கவில்லை; அது புவியியல், உயிரியல், வேதியல், இயற்பியல், கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு போன்ற பல துறைகளின் இணைப்புடன் முன்னேறுகிறது. டி.என்.ஏ (DNA) என்கிற உயிரணு ஆய்வு என்பது பழங்கால மனித எலும்புடன் மட்டும் நின்றுவிடவில்லை, இன்றைய மனிதனின் தொடர்ச்சியினையும் சேர்ந்தே ஆய்வு செய்கிறது. மதுரையில் உள்ள ஜோதிமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த விருமாண்டியின் மரபணு பரிசோதனை, அவர் இந்தியத் துணைக்கண்டத்தின் தொடக்ககால மனிதக் குடியேற்றத்தின் தடயங்களைத் தாங்கி நிற்கும் நபர் என்பதைக் காட்டுகிறது.
தொல்லியல் ஆய்வு என்பது பழைமை மட்டுமல்ல இன்றைய காலத்தையும் சேர்த்தே ஆய்வு செய்கிறது. அதனால் தொல்லியல் என்கிற துறை மிக முக்கியமான துறையாக இருக்கிறது. இந்தத் துறையில் பல புதியவர்கள் வர வேண்டும். அப்போதுதான் எதிர் காலத்தில் விரிவான ஆய்வுகள் செய்வதற்குத் தேவையானவர்கள் கிடைப்பார்கள். பல்துறை சார்ந்த மாணவர்கள் தொல்லியலில் ஈடுபட வேண்டும். அப்படிப் பட்ட தொடக்கநிலை மாணவர்களுக்கு உதவிடும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.
முதல் இயல், தொல்லியல் ஓர் அறிமுகம்.
இந்த இயலின் தொடக்கமே தொல்லியல் பற்றிய தவறான கருத்தைப் போக்கும் வகையில் காணப்படுகிறது.
“தொல்லியல் என்பது கடந்த கால மனிதர்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் புரிந்துகொள்ள உதவும் ஓர் இன்றியமையாத அறிவியல் துறை. இது வெறும் பழங்காலப் பொருள்கள் பற்றிய படிப்பாக மட்டுமில்லாமல், கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் மனித இன வரலாற்றின் புதிர்களைத் தீர்க்கும் ஆழமான ஆய்வுக் களமாகும்.”
இது ஒர் அறிமுக நூல் என்பதால், தொல்லியல் ஒரு துறையாக உருவாகி வளர்ச்சி பெற்றதற்கு உழைத்த பல அறிஞர்கள் பற்றிய அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1.மைக்கேல் மெய்காட்டி, 2.ஹெய்ன்ரிச் சிலிமென், 3.ஆர்தர் ஈவான்ஸ், 4.பால் எமிலி போட்டா, 5.உ.ஏ.தாம்சன், 6.ஜெனரல் பிட் ரிவர்ஸ், 7.தாமஸ் ஜெபர்சன், 8.சர் பிளின்டர்ஸ் பெட்ரி, 9.கார்டன் சைல்ட், 10.ஹெச்.டி.சங்காலியா, 11.எஸ்.ஆர்.ராவ், 12.ஏ.கோஷ், 13.பி.பி.லால், 14.சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல். 15.ஸ்டூவர்ட் பிக்காட், 16.சர் இராபர்ட் புரூஸ் பூட், 17.மார்டிமர் வீலர் ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல், .சர் இராபர்ட் புரூஸ் பூட் ஆகிய இருவரும் இந்தியத் துணைக்கண்டத்திலும் குறிப்பாகத் தமிழகத்திலும் அதிகமாகப் பேசப்பட வேண்டியவர்கள். சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் 1902 முதல் 1931 வரை இந்தியத் தொல்லியல் பரப்பாய்வு துறையின் இயக்குநராகச் செயல்பட்டவர். 1920ஆம் ஆண்டுகளில் மொகஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகளில் அகழாய்வு செய்து அந்த நாகரிகத்தை வெளிப்படுத்தியவர். சிந்து வெளி நாகரிகக் கண்டுபிடிப்பின் மூலம் இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு ஆதாரத்துடன் அறிவியல் முறைப்படி தொடங்கியது. ஆதாரமற்ற பழைய புராண மரபார்ந்த வரலாறு முடிவுக்கு வந்தது.
சர் இராபர்ட் புரூஸ் பூட் என்பவர் இந்தியத் துணைக்கண்டத்தில் தொல்லியல் தந்தை என்று போற்றப்படுகிறார். இந்தியாவில் முதன்முதலாக, 1863ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதியில், தமிழ் நாட்டில் சென்னை, பல்லாவரத்தில் பழைய கற்காலக் கருவிகளைக் கண்டறிந்தார். சென்னை கைக்கோடாரி மரபு என்கிற ஒன்றைத் தனித்துக் குறிப்பிட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதிரம்பாக்கம், பரிக்குளம், குடியம், பூண்டி ஆகிய இடங்களில் பழைய காலத்தைச் சேர்ந்த நான்கு கைக்கோடரிக் கல்லாயுதங்களைக் கண்டறிந்து வெளியிட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் குடியம் குகையை இவர்தான் முதன்முதலில் கண்டுபிடித்தார், இங்கே பழங் கற்கால மனிதன் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தாக அறியப்படுகிறது.
இந்தியாவில் உள்ள தமிழர்களுக்குத் தொல்லியல் துறையின் மீது ஈடுபாடு அதிகம் கொள்வதற்குக் காரணம் இருக்கிறது. ஆதிச்சநல்லூர், கீழடி மட்டுமல்லாது அண்மையில் எகிப்தில் கிடைத்த தமிழி கல்வெட்டு, தமிழகத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன்பான இரும்பின் கண்டுபிடிப்பும் பயன்பாடும் பற்றிய அறிவியல் முடிவு போன்றவை அனைத்தும் தமிழர்களிடையே தொல்லியல் பற்றிய ஆர்வம் துளிர்விடத் தொடங்கி உள்ளது.
என்னைப் போன்றோர்களுக்கு மார்க்சியத் தொல்லியல் ஆய்வு முறைக்குக் காரணமான கார்டன் சைல்ட் என்கிற ஆய்வாளர் மீது ஈடுபாடு அதிகம். கார்டன் சைல்ட் தொல்லியலை வெறும் “பொருட்கள் சேகரிப்பு” எனப் பார்க்கவில்லை. அவர் அதைச் சமூக மாற்றங்களின் வரலாறு எனக் கண்டார். சைல்ட் நேரடியாகக் கட்சி அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும், அவரது சிந்தனை தெளிவாக வரலாற்றியல் பொருள்முதல்வாதம் (Historical Materialism) அடிப்படையிலானது. இன்று கட்சியில் இருந்து செயல்படுகிற, கட்சியில் இருந்து செயல்படாத அனைவருக்கும் கார்டன் சைல்ட் வழிகாட்டியாக இருக்கிறார். இங்கு விவரித்த அனைத்துத் தொல்லியல் அறிஞர்களையும் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவது இயல், வரலாறும் அறிவியற் பிரிவுகளும்.
இந்த இயலின் தொடக்கத்தில் தொல்லியலின் பரப்பும், வரலாற்று வரைவியலில் அதற்குள்ள முதன்மையும் தெளிவாக விளக்கப்படுகின்றன.
“தொல்லியலின் வரலாறு, பண்டைய முயற்சிகளில் தொடங்கி, நவீனக் கால அறிவியல் துறையாக வளர்ந்தது. இது, மனித நாகரிகத்தைப் பற்றிய நமது புரிதலை ஆழப் படுத்தியுள்ளது. வரலாற்றை உருவாக்கப் பயன்படும் பல்வேறு மூலங்களுள் தொல்லியல் முதன்மை இடத்தைப் பெறுகிறது. குறிப்பாக வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மனிதனின் வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்வதில், தொல்லியல் தோன்றாத் துணையாக விளங்குகிறது. எழுத்துச் சான்றுகள் இல்லாத கற்கால மக்களின் வாழ்வை அறிய, அவர்கள் வசித்த இடங்களை அகழ்வாய்வு கண்டுபிடிக்கப்படும் கருவிகள், குடியிருப்புகள் போன்றவற்றின் மூலம், மனிதன் எவ்வாறு படிப்படியாக நாகரிகத்தை நோக்கி முன்னேறினான் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. எனவே தொல்லியல், வரலாற்றின் கண்களுக்கு எட்டாத பழங்கால இருளில் ஒளிவிளக்காய்த் திகழ்கிறது.”
பழங்கால வரலாற்றை அறியப் பல துறைகள் இருந்தாலும், தொல்லியல் முதன்மை இடம் பெறுகிறது.
சங்க இலக்கியம் என்பது புனைவு இலக்கியம் கிடையாது, அது அன்றைய சமூகத்தின் வெளிப்பாடு என்பதைத் தொல்லியலே உறுதிப்படுத்துகிறது. சங்க இலக்கியத்தில் “யவனர்” என்று கூறப்படுபவர்கள் கிரேக்கரும் ரோமரும் ஆவர். அவர்கள் வணிகத்திற்காக தமிழ்நாட்டுக்கு வந்தனர். அதேபோல் தமிழர்களும் அயல் நாடுகளுடன் வணிகம் செய்ததை தொல்லியல் ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக, ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, பூம்புகார், கொற்கை, கரூர், உறையூர் ஆகிய இடங்களில் செய்யப்பட்ட அகழாய்வைக் கூறலாம். தமிழகம் மட்டுமல்ல அனைத்து நாட்டு மனிதர்களின் வரலாற்றை அறிவியல் வழியில் தொல்லியல் ஆய்வுகள் எடுத்தியம்புகிறது.
நவீன மனிதயினத்தின் வரலாறு 10,000 ஆண்டுக்குள் அடங்குகிறது, ஆனால் மனிதயினத்தின் தோற்ற வரலாறு 1,00,000 ஆண்டுகளைக் கொண்டது. இதனை அறிந்து கொள்வதற்குத் தொலியலைத் தவிர வேறு வழிகிடையாது. இன்றைய நவீன மனிதன் இதே தோற்றத்தில் பிறந்திடவில்லை, ஹேமோ சேபியன்ஸ் கிளையில் இருந்து படிநிலை பெற்றவன் என்பதை இன்றைய டி.என்.ஏ வழியிலாக அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பழம் பெருமை பேசுவதற்காக, புராணங்களையும், தொன்மங்களையும் ஆதாரமாகக் கொண்டு எழுதுவது வரலாறாகாது. வரலாறு அறிவியல் வழிப்பட்டதாக மாறிவிட்டது. அறிவியலுக்குப் புறம்பானது வரலாறாகாது.
பழைய வரலாறு என்பது தொன்மைச் சிறப்பைப் புகழ்வதற்காக அல்ல. நேற்றைய வரலாறே இன்றையதைப் புரிய வைக்கிறது; நேற்றும் இன்றும் சேர்ந்த வரலாறே நாளைய வரலாற்றை நோக்கி நம்மை நடத்துகிறது. அதனால் கடந்த பாதையை அறிந்தால் நாம் சரியான வழியில் விரைவாகப் பயணிக்கலாம்.
மனிதயின வரலாற்றை இரண்டாகத் தொல்லியல் பிரிக்கிறது, வரலாற்றுக்கு முந்திய காலம் வரலாற்று காலம். எழுத்துகளைக் கொண்டு அறியப்படுகிற காலம் வரலாற்றுக்காலம் அதற்கு முன்பானக் காலம் வரலாற்றுக்கு முந்திய காலம். தொல்லியல், வரலாற்றுக்கு முந்திய காலத்தை, பழைய கற்காலம், இடைக் கற்காலம், கடைக் கற்காலம், நுண்கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம் என்று பிரிக்கிறது. பெருங்கற்காலமே உலோகத்தைப் பயன்படுத்திய காலமாகும். இந்தக் காலத்தின் இறுதியில்தான் மனிதயினம் நாகரிகத்துக்குள் நுழைகிறது. அனைத்துக் காலங்களும் அந்தந்தக் காலத்தில் மனிதயினம் பயன்படுத்திய கருவிகளைக் கொண்டே கணிக்கப்பட்டுள்ளது. அதனால் கருவிகள் வரலாற்றின் கண்ணாடி என்று கூறலாம்.
அனைத்து நாடுகளிலும் கிடைத்ததைக் கொண்டு பொதுக் கோட்பாட்டைத் தொல்லியல் உருவாக்கியது. அதே காலக்கட்டம், அதே படிநிலை வளர்ச்சியை மட்டும் மனதில் கொண்டு ஆய்வு செய்ய முடியாது. கால அளவும் மாறுபடுகிறது, அனைத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். பல்வேறு நாடுகளில் பழங்கற்கால மக்களின் பாறை ஓவியம் கிடைத்துள்ளது, ஆனால் தமிழகத்தில் உள்ள பாறை ஓவியம் கற்காலத்தின் இறுதிப் பகுதியான பெருங்கற்காலத்தில் கிடைக்கிறது. அதனால் விதிவிலக்காக இருக்கின்றதையும் தொல்லியல் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.
தமிழக வரலாற்றில் மனிதன் நடமாட்டம் என்பது ஹேமோ சேபியன்ஸ் காலக்கட்டத்தில் மட்டும் நடைபெறவில்லை, ஹேமோ எரெக்டஸ் மனிதயினத்தின் நடமாட்டம் சென்னையில் உள்ள பல்லாவரம் என்கிற இடத்திலும், திருவள்ளூர் மாவட்டத்தில் அதிரம்பாக்கம், கொற்றலை ஆறு, குடியம் குகை இடங்களில் காணப்படுகிறது. இந்த இடங்களில் கிடைக்கப்பட்ட கற்கருவிகளைக் கொண்டு 15 முதல் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, மனிதயினம் வாழ்ந்ததை அறிய முடிகிறது. இந்தக் கணக்கை வைத்து, இங்கு லெமூரியா மனிதயினம் வாழ்ந்ததாகச் சிலபேர் கூறிவருகின்றனர். இதற்கு அறிவியல் ஆதாரமோ, டி.என்.ஏ ஆதாரமோ இதுவரை கிடைக்கவில்லை. அறிவியல் உறுதிப்படுத்தாதவரை இதனை ஒரு கருதுகோளாகத்தான் கருதமுடியும்.
ஆப்பிரிக்காவில் இருந்து ஹேமோ எரெக்டஸ், நியாண்டர்தால், ஹேமோ சேபியன்ஸ் போன்ற மனிதயினங்கள் வெளியேறிப் பரவியதை அறிவியல் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் அறிவியல் பட்டதையே பேசும், ஆதாரம் கிடைத்ததையே ஏற்றுக் கொள்ளும். அதுவே தொல்லியலின் சிறப்பு.
தமிழகத்தின் சிவகளைப் பகுதியில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டதாக உலகத் தரமான ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு, இரும்புப் பயன்பாடு தமிழகத்திலிருந்து பிற பகுதிகளுக்குப் பரவியிருக்கலாம் என்ற கருத்தை மேலும் ஆய்வு செய்து உறுதிப்படுத்தலாம்.
அகழாய்வில் கிடைக்கிற பொருட்களைச் சேகரிப்பதோடு தொல்லியல் நின்றுவிடுவதில்லை, அந்தப் பொருட்களைப் பயன்படுத்திய மக்களின் வாழ்க்கை முறையினை ஆராய்ந்து கண்டுபிடிக்கிறது.
தொல்லியலுடன் பல்வேறு ஆய்வுத் துறைகள் இணைந்துள்ளது. குறிப்பாக 1.மண்வகை ஆய்வியல், 2.புவியியல், 3. நாணயவியல், 4.கல்வெட்டியல், 5.தொல்லெழுத்தியல், 6. புதைபடிவயியல், 7.மானிடவியல் என்கிறவற்றைச் சொல்லாம். தமிழகத்தில் தற்போது மானுடவியல் பற்றி நூல்கள் நிறைய வந்துகொண்டிருக்கிறது. அயல்நாடுகளில் பலகாலத்துக்கு முன்பே மானுடவியல் புகழ்பெற்ற துறையாக இருக்கிறது. தற்போது தமிழகத்தில் மானுடவியல் துறை புகழடைந்து வருகிறது.
மானிடவியலைப் பற்றி இந்த நூல் சுருக்கமாகக் கூறியிருந்தாலும் சிறப்பாக இருக்கிறது. மானிடவியல் மனிதனின் வாழ்வியலைப் பேசுவதால் இந்தத் துறை மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. தொல்லியலும் மானிடவியலும் ஒரே அறிவியலின் இரட்டைக் கிளைகள் என்று கார்டன் சைல்டு கூறியதை இந்நூல் மேற்கோளாகக் கொடுத்துள்ளது. மேலும் அதைப் பற்றிய விளக்கம் சுருக்கமாகவும் செறிவாகவும் இருக்கிறது.
“தொல்லியல் என்பது கடந்தகால மனிதச் சமுதாய வரலாற்றைப் புலப்படுத்துகிறது. மானிடவியல் என்பது மனிதனின் சமூக, பண்பாட்டு, பொருளாதார, உயிரியல் சார்ந்த பரிமாணங்களை ஆராய்கிறது.”
இந்த நூலில் குறிப்பிடுகிற கார்டன் சைல்டு என்பவர் மார்க்சியத் தொல்லியல் ஆய்வாளர். ஏன் இவரை மார்க்சியத் தொல்லியல் ஆய்வாளர் என்று கூறப்படுகிறது என்றால், இவர் ஆய்வு முறையாக மார்க்சிய வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளார். இதுபோல் பல ஆய்வு முறைமையில் இருக்கிறது. அண்மையில் தமிழில் வெளியான மார்கனின், “பண்டைய சமுதாயம்” என்கிற நூல் செவ்விந்தியரைப் பற்றி பொருள்முதல்வாதப் பார்வையில் எழுதப்பட்டுள்ளது. அதனால் ஆய்வு முறைமையிலையும் சேர்த்து எழுத வேண்டும். ஆய்வு முறைமையிலே ஆய்வின் முடிவைத் தீர்மானிக்கிறது, அதனால் அய்வு முறைமையியல் முக்கியமானதாக இருக்கிறது. தொல்லியலை அறிமுகம் செய்யும் நூலாக இருந்தாலும் ஆய்வு முறைமையியலையும் (Research Methodology) சேர்த்துக் கொடுக்க வேண்டும். பொதுவாகத் தமிழகத்தில் ஆய்வு முறைமையிலுக்கு அதிகம் கவனம் செலுத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது.
மூன்றாவது இயல், ஆய்வும் அகழாய்வும்.
தமிழகம் முழுவதையும் அகழாய்வு செய்திட முடியாது, அதனால் எந்த இடத்தை அகழாய்வு செய்ய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு உதவுவது, இலக்கியச் சான்று, கல்வெட்டுகள், அயல்நாட்டார் குறிப்புகள், மண்மேடுகள், ஆற்றின் ஓரங்கள், ஆகாய நிழற்பட முறை, காந்தசக்தி அளவை முறை ஆகியவற்றை இந்நூல் குறிப்பிடுகிறது. ஆற்றின் ஓரங்கள் என்கிற முறையில் வைகை ஆற்று ஓரங்களின் தேடலில் கிடைத்ததே கீழடி அகழாய்விடம். இலக்கியச் சான்றாகச் சங்க இலக்கியத்தைக் கொள்ளலாம், சங்க இலக்கியம் புனைவுகளாகவோ, தொன்மங்களாகவோ இல்லாது இருப்பதால், அதில் குறிப்பிடுகிற இடங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம். சங்க இலக்கியத்தில் குறிப்பிடுகிற ஊர்கள் இன்று கண்டுபிடிக்கப்படக் கூடியதாக இருக்கிறது. சில இடங்களில் அகழாய்வும் செய்யப்பட்டுள்ளது.
அதிகமாகத் தமிழகத்தில் புதைப்பிடங்கள் கிடைக்கின்றன, புதைப்பிடம் இருக்கின்றன என்றால் அதற்கு அருகில் கண்டிப்பாக அவர்களது வாழ்விடம் இருக்கும். நமக்குப் புதைப்பிடம் கிடைத்த அளவுக்கு வாழ்விடம் கிடைக்கவில்லை. வாழ்விடத்தைத் தேடிப் பயணிப்பது, தொல்லியலின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். இதைப் பற்றி தொல்லியல் ஆய்வாளர்களும் அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேற்பரப்பு ஆய்வுகள் நிறைய செய்தால்தான் வாழ்விடத்தைக் கண்டுபிடிக்க முடியும். இதற்குப் பணம் அதிகமாக ஒதுக்க வேண்டும். கீழடி அருங்காட்சியகம் மற்றும் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், பொருநை அருங்காட்சியகம் போன்றவை மிகுந்த பொருள் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு சுற்றுலாத் தளமாக மாற வேண்டும். அப்போதுதான் செலவழித்த பணமும், தொல்லியலுக்குத் தேவைப்படுகிற பணமும் கிடைக்கும். தொல்லியல் என்பது பழம்பெருமை பேசுவதற்கல்ல, நமது வரலாற்று தடத்தை அறிவதற்கு, அதனால் தொல்லியல் சார்ந்த இடங்களைச் சுற்றுலாத் தளமாக மாற்ற வேண்டும்.
இந்த நூல் தொல்லியலை அறிமுகம் செய்வதாக இருப்பதால், தேவைப்படுகிற தகவல்கள் சுருக்கமாகவும் செறிவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. மேற்பரப்பு ஆய்வை பற்றி தந்திருப்பது சுருக்கமாகவும் செறிவாகவும் இருக்கிறது. அகழாய்வு செய்ய வேண்டிய இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்குச் செய்யப்படுவதே மேற்பரப்பு ஆய்வு. கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், பழம் பொருட்கள், பழைய நாணயங்கள், எலும்புகள், மணிகள் போன்றவை எங்குக் கிடைத்தாகத் தகவல்கள் இருக்கிறதோ அங்கே மேற்பரப்பு ஆய்வுகள் செய்ய வேண்டும். இலக்கியத்தில் அதிகமாகப் பேசப்படுகிற ஊர்களில் ஆய்வுகளைத் தொடர வேண்டும். தொடக்க நிலை ஆய்வுகளாக இந்த நூல், களச்சுற்றாய்வு (Site Survey), முன்னீடான ஆய்வு (Reconnaiance), களத்தொல்லியல் (Field Archeology), புத்தாய்வு (Exploration) ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.
தொடக்கநிலை ஆய்வுக்குத் தேவையான கருவிகள் எவை என்பதையும் இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது. மேலும் அகழாய்வு முறைகளைக் குறிப்பிட்டுச் சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் குறிப்பிடும் அகழாய்வு முறைகள், பரவலாகத் தோண்டும் முறை, ஆழத்தோண்டும் முறை, சுற்றகழாய்வு, நீள்குழி அகழாய்வு, குகை அகழாய்வு, சவக்குழி அகழாய்வு, ஆழ்கடல் அகழாய்வு. தொல்லியலை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொள்பவர்களுக்கும், தொல்லியல் மாணவராகப் படிப்பவர்களுக்கும் இந்த நூல் அடிப்படைத் தகவல்களைத் தருகிறது.
நான்காவது இயல், காலக்கணிப்பு முறைகள்.
தொடக்கக் காலத்தில் கிடைக்கின்ற பொருட்கள் எந்த மண்ணடுக்குகளில் கிடைக்கிறது என்பதை வைத்துக் காலக்கணிப்பு செய்யப்பட்டது. இன்று நவீனக் காலக்கணிப்பு முறைகள் வந்துவிட்டது. இந்த இயலில் காலக்கணிப்பு வகைகளைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
ஒப்பீட்டு காலக்கணிப்பு, ரேடியோ கார்பன் முறை, மரவளையம் முறை, ஹைட்ரஜன்-புளூரின்-நைட்ரஜன் முறை, மகரந்தப் பொடி ஆய்வு, காந்தவியல், ஒலி அதிர்வாய்வு, தெப்ரா படிவக் கணக்கீடு, பொட்டாஷியம் ஆர்கான், ஆப்ஸிடியன் படிவக் கணிப்பு முறை எனப் பல காலக்கணிப்பு முறைகளைப் பற்றி இந் நூல் விவரிக்கிறது.
ஐந்தாவது இயல், தொல்பொருள் பாதுகாப்பு.
அகழாய்வு என்பது மிகவும் பொறுமையாகச் செய்ய வேண்டும். அகழாய்வில் கிடைக்கப்பட்ட பொருட்களைப் பதிவு செய்ய வேண்டும், பொருட்கள் எந்த இடத்தில் எந்த நிலையில் கிடைத்தது என்பதை முறையாகப் பதிவு செய்ய வேண்டும். மண்ணில் புதைந்து கிடைப்பதையே வெளியில் எடுக்கப்படுவதால், கிடைக்கின்ற பொருட்கள் சிதையாமல் எடுக்க வேண்டும், அதற்குப் பயிற்சி பெற்றவர்களையே வேலையில் ஈடுபடுத்த வேண்டும். பழம் பொருட்களைச் சிதையாமல் எடுத்தால் மட்டும் போதாது, அதனைப் பாதுகாப்பாகப் பராமரிக்க வேண்டும். இதுநாள்வரை இயற்கை காப்பாற்றியதை நாம் காப்பாற்ற வேண்டும்.
இந்த இயலில், பாதுகாப்பாகச் செயல்படுவதற்கான கருவிகளையும் பயன்படுத்தக் கூறிய வேதியல் பொருட்களைப் பற்றி விவரிக்கிறது. அருங்காட்சியகம் என்பது வெறும் பழம்பொருள் சேகரிப்பு இடம் மட்டுமல்ல, நமது வரலாற்றை இயம்பும் கூடம், அதனால் கிடைத்த பொருட்களைக் கால வாரியாக அடுக்கி வைப்பது பற்றியும் இந்த நூல் பேசுகிறது.
நமது வரலாற்று தடங்களைக் காட்டும் தொல்பொருட்களைப் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களக்கு ஏற்படச் செய்ய வேண்டும். கீழடி அகழாய்வு பொதுமக்களிடம் இன்று பரவலாகப் போய்ச் சேர்ந்துள்ளது. பழம்பொருட்கள் இருப்பதை அறிந்தால் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதுப் பற்றி விவரங்களை அருங்காட்சியகத்தில் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அருங்காட்சியகத்தைச் சுற்றுலாத் தளமாக மாற்றுவதன் மூலம் தொல்லியல் பற்றியும் பழம் பொருட்களின் அருமைப் பற்றியும் அதனைக் கண்டவுடன் செய்ய வேண்டியது பற்றியும், பாதுகாப்பதின் அவசியத்தைப் பற்றியும் பெரிய அளவிலான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
தொல்லியல் என்பது பழைய வரலாற்றை மட்டும் பேசவில்லை, இன்றைய வரலாற்று தொடர்ச்சியை வெளிப்படுத்துகிறது, எதிர்காலச் செல்வழிக்கு வழிகாட்டுகிறது என்பதை அறியும் போது தொல்லியல் முதன்மையான துறையாகத் தெரிகிறது.
பழைய மரபை அறிவோம் புதிய மரபைப் படைப்போம்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | தொல்லியல் ஆய்வும் – அகழ்வாய்வும் (சனவரி 2026) |
| ஆசிரியர்: | முனைவர் சீ.வசந்தி- த.ஐஸ்வர்யபிரதினா- கே.சுரேஷ் பாலாஜி |
| வெளியீடு: |
கங்காராணி பதிப்பகம் |
| விலை: | ₹.110 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 அ.கா.ஈஸ்வரன் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
