ஆன்ம ஆதுரம்
மிகத்தூரத்தில் உன் குரல்
இதயத்தில் என்னவோ
குறுகுறுப்பு
நினைவுகள் மேலேழுந்து
புதுக்கதகதப்பு
பழைய கணங்களுக்குள்
காலடி வைக்கிறேன்
பூக்களாய் உள்ளத்தில் சொரியும் கவிதைகளால் கைகளில்
துறுதுறுப்பு
காலம் உறைந்து விட்டதோ
என்றுணர்த்தி விட்டது
அந்தக் குரல்
எத்தனைத் திரைகள்
எத்தனைப் பிரளயங்கள்
எத்தனை முகமூடிகள்
எத்தனை எதிர்ப்பயணங்கள்
எல்லாம் கடந்து
யாவும் உடைத்து
யாதும் உணர்ந்து
ஏகம் மிகைத்து
பிரியம் இழைந்து
வெள்ளந்தியாய்ச் சிரிக்கிறது
உண்மை நேசம்
அது வெளிப்பட்டே தீரும்
நிழலழித்து
நிஜமாய் சொரூபமெடுத்துக்
காட்டிக் கொள்ள விளைந்து விடும்
நெகிழ்ந்தும் மகிழ்ந்தும்
ஞாபகங்களின்
நித்திய கதைகளைப் பேசிக் கொள்ளத் தொடங்கி விடும்
அதுவொரு ஆன்ம ஆதுரம்
தேவசாயல் கொண்ட
உன் குரலின் மழையீரத்தில்
செழிக்கத் தொடங்குகிறது
அடர்வனப் பசுமை
கவிதை – 2
மெல்லத் துடித்தழுது சொல்லாது
செத்துக் கொண்டேயிருப்பது
சிறு சிரிப்பால் பூசி மெழுகப்படுகிறது
இன்னதென்று தெரியாத வல்லூறு இதயம் பிராண்ட
அதிகபட்சமாக வழியும்
இரத்தக்கசிவை சுருக்கமாக
மௌனச்சீலை கொண்டு துடைக்க முடிகிறது
மரம் வளர உதிர்ந்த வண்ணம் இருக்கும் பழுத்தவிலை வெயிலில் காய்ந்து சருகாவது போல ஒவ்வொரு நாளும் கழிவதில் கடப்பாடுதானே ஒழிய
திருப்திதானே தவிர பூக்களில்லை வாணாளில்
பூரண வருடல்களில்லை வரலாற்றில்
கழிந்து உதிர்ந்தவை
பின்னும் உரமாதலில் கூடுதல் திருப்தி அடைதல் கூடும்
அவர்கள்
இருக்கட்டும்..
காய்ந்து கொண்டேயிருப்பதுதான்
சருகின் இலட்சணம்
சருகின் இலட்சியம்
அறிந்தும் இவர்கள் அறியாதிருக்கிறார்கள்
பொழுதுகள் கடந்தாலும்
உபயங்கள் உபயோகித்தாலும்
தப்பர்த்தங்கள் தடயங்களாகித்
தொடர்ந்து ஊரும் கிழக்கில்..
எனினும் மேற்கு வானில்
மஞ்சள் பூசி உங்களை இரசிக்கச் செய்வேன்
இதுதவிர இன்னும் நிறையவே உள்ளன நினைவுகளில்
பாறை இடுக்குகளில் பாயும்
சுனை நீரென..
ஆயினும் சிலாகிக்கவொண்ணா
நிலை உறக்கத்தில்
ஆழ்ந்து விட்ட
மலைவாசிகளென உங்கள் விழிகள்
மறுபடியும் கனவுகள் வரும்
மறுபடியும் விடிவெள்ளி தோன்றும் விடியல் விரியும்
ஒருபோதும் விட்டுக்கொடுக்காத
அகத்தூண்டலில்
ஆழ்ந்த கிருபை பெற்றுவிட்டேன்
அஃதது அவ்வாறே இருக்கட்டும்
எத்தனையோ துயரங்கள் இருக்க இல்லையென்றேதானே
கவிதை
எழுத முடிகிறது….!!
கவிதை எழுதியவர்:
Dr. ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
காலம் உறைந்து விட்டதோ என்று உணர்த்தி விட்டது
உங்கள் கவிதைக் குரல்,,,,எத்தனையோ துயரங்கள் இருக்க அறிந்தும் இவர்கள் அறியாதிருக்கிறார்கள்….