Dr K Gandhidasan's Sanga Ilakkiyathil Paanar Vazhviyal Tamil Book Reviewed by AK Eswaran

முனைவர் க.காந்திதாசன் எழுதிய “சங்க இலக்கியத்தில் பாணர் வாழ்வியல்” – நூல் அறிமுகம்

“சங்க இலக்கியத்தில் பாணர் வாழ்வியல்” – நூல் அறிமுகம்

சங்க இலக்கியத்தைப் படிப்பது என்பது பழைய காலத்தில் தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை மட்டும் அறிவதல்ல. அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் மரபும், அதன் தொடர்ச்சியும் இன்றும் சிலரின் வாழ்க்கையில் காணப்படுகிறது. இதை ஆராய்வது மானுடவியல் ஆய்வாகும். இந்தக் கோணத்தில், சங்க இலக்கியத்தில் பாணர் வாழ்வியல் என்கிற நூலை முனைவர் க.காந்திதாசன் எழுதியுள்ளார். இந்த நூல் 2011ஆம் ஆண்டு வெளியானது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வந்த நூல் என்றாலும், பாணர் வாழ்க்கையை அறிய இது இன்றும் பயனுள்ள நூலாக இருக்கிறது. பாணர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி இந்த நூல் சிறப்பாக எடுத்துரைக்கிறது.

இந்நூலில் முன்னுரை, நிறைவுரை மற்றும் மூன்று இயல்கள் உள்ளன.

முதல் இயல் “கலையும் நிகழ்த்துக்கலையும் – அறிமுகம் மற்றும் விளக்கம்” என்பதாகும். பாணர்களையும் அவர்களின் கலைகளையும் பேசுவதற்கு முன், நிகழ்த்துக்கலை பற்றி சுமார் 40 பக்கங்கள் அறிமுகமாக எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் சங்க இலக்கியத்தில் காணப்படும் நிகழ்த்துக்கலை குறித்து ஒரு தெளிவான புரிதல் கிடைக்கிறது.

இந்த நூல் ஒரு கல்வியியல் நூலைப் போல, முதலில் “கலை” பற்றிய பல அறிஞர்களின் கருத்துகளைத் தொகுத்து வழங்குகிறது. உதாரணமாக, லியோ டால்ஸ்டாய் கலை என்பது மனிதரின் உணர்வுகளின் வெளிப்பாடு என்று கூறுகிறார். அது ஒருவரின் உணர்வை வெளிப்படுத்துவதோடு, அதையே பிறரிடமும் தூண்டும் சக்தி கொண்டது என்றும் அவர் விளக்குகிறார். மேலும், எல்லாக் கலைகளின் நோக்கமும் மனிதனின் உலகியலான உணர்வுகளை எழுப்புவதே எனவும் கூறப்படுகிறது.

இவ்வாறு, கலை பற்றிய பல்வேறு சிந்தனைகளை இந்த நூல் ஒருங்கிணைத்து வழங்குகிறது.

இந்த நூல், கலையின் வளர்ச்சியை நான்கு நிலைகளாக விளக்குகிறது; தொன்மைக் கலை நிலை, பழங்குடி மக்கள் நிலை, நாட்டுப்புறக் கலை நிலை, செவ்வியல் கலை நிலை. இவற்றில், செவ்வியல் கலை என்பது தொன்மையான கலைகளின் வளர்ச்சி பெற்ற வடிவமாகக் கருதப்படுகிறது. பழைய வாழ்க்கை முறையைத் தொடர்ந்து வாழும் மக்கள், அந்தப் பழமையான கலை மரபுகளையும் பின்பற்றுகின்றனர்.

மனிதக் கலையின் தொடக்கம் பாறை ஓவியங்களிலிருந்தே ஆரம்பமாகிறது. பழங்கற்கால மனிதன் தங்கியிருந்த குகைகளில் ஓவியங்களை வரைந்தது இதற்குச் சான்றாகும். பின்னர் வரலாற்று காலத்தில், தமிழ் சமூகத்தில் இயல், இசை, நாடகம் என “முத்தமிழ்” கலைகள் வளர்ச்சி பெற்றன. மேலும், கலைகள் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன; நிகழ்த்து கலைகள், நிகழ்விலாக் கலைகள்.

ஆடல், பாடல், இசைக்கருவி வாசித்தல், கூத்து, நாடகம், வித்தை போன்றவை நிகழ்த்து கலைகள் ஆகும். ஓவியம், சிற்பம், இலக்கியம் போன்றவை நிகழ்விலாக் கலைகள் ஆகும்.

இந்த நூல் குறிப்பாகச் சங்க இலக்கியத்தில் காணப்படும் நிகழ்த்து கலைகளை மையமாகக் கொண்டு விவரிக்கிறது.

தொடக்கக் காலத்தில் கலை, சமூக இனக்குழுக்களின் ஒற்றுமையையும் ஆற்றலையும் வளர்க்கப் பயன்படுத்தப்பட்டது. பழங்குடி மக்களின் கலை, வெறும் பொழுதுபோக்காக உருவாகவில்லை; அது அவர்களின் ஒருமைப்பாட்டையும் ஒரே சிந்தனையையும் உருவாக்கும் அடிப்படையாக இருந்தது. பின்னர்த் தான் கலை பொழுதுபோக்கிற்காகவும், “கலை கலைக்காக” என்ற எண்ணமும் உருவானது. ஆனால், கலையை மனித வாழ்க்கையிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கலை மனிதனின் உணர்வுகளைத் தூண்டும்; அந்தத் தூண்டுதல் காரணமற்றதாக இருக்காது. அது சமூகத்தைப் புரிந்துகொள்ள உதவ வேண்டும்.

மேலும், கலை நிகழ்த்துபவரையும் பார்வையாளரையும் ஒரே உணர்வில் இணைக்கும் தன்மை கொண்டது. அது காண்பவரின் மனதைக் கவர்ந்து புதிய உணர்வுகளையும் உள மாற்றங்களையும் உருவாக்கும்.

பார்வையாளர்களின் முன் நிகழ்த்தப்படும் கலையே “நிகழ்த்து கலை” எனப்படுகிறது. அது நிகழ்த்தப்படும் தருணத்திலேயே உயிர்ப்புடன் இருக்கும் கலை வடிவமாகும். இந்நூலின் படி, நிகழ்த்து கலைகள் கடந்த காலத்தின் அடிப்படையில், நிகழ்காலத்தில் செயல்பட்டு, எதிர்காலத்தை நோக்கி நகரும் ஒரு தொடர்ச்சியான பயணமாகும்.

எனவே, கலை என்பது பொழுதுபோக்கிற்கானது மட்டுமல்ல; அது நேற்று, இன்று, நாளை ஆகியவற்றை இணைக்கும் ஒரு சமூகப் பயணமாகும். கலை கோட்பாடுகளுடன் செயல்படுவதால், அது வர்க்கச் சார்ந்த தன்மையையும் பெறுகிறது.

இந்நூல் இவ்வகை கோட்பாடுகளை விரிவாக ஆராயாமல், பாணர்கள், அவர்களின் கலைகள் மற்றும் அவற்றின் மரபு தொடர்ச்சியாக இன்று காணப்படும் வடிவங்களைப் பற்றி முக்கியமாக விவரிக்கிறது.

இரண்டாம் இயல், சங்க இலக்கியத்தில் பாணர்களின் கலை வாழ்க்கை.

சங்கக் காலத்தில் கலைஞர்கள் இரண்டு வகையாக இருந்தனர்; தொழில்முறை அல்லாத கலைஞர்கள், தொழில்முறை கலைஞர்கள்.

ஐவகை நிலங்களில் வாழ்ந்த பொதுமக்கள், கலையை ஒரு தொழிலாக அல்லாமல் நிகழ்த்தியவர்கள் தொழில்முறை அல்லாத கலைஞர்கள். கலையைத் தொழிலாகக் கொண்டு அதன்மூலம் வாழ்ந்தவர்கள் தொழில்முறை கலைஞர்கள்.

அந்தக் காலத்தில் கலைஞர்கள் பயன்படுத்திய இசைக்கருவிகள் மற்றும் அவர்களின் வகைப்பாடுகளையும் இந்நூல் தொகுத்து வழங்குகிறது:-

நரம்பிசைக் கருவி வாசித்துப் பாடியவர்கள் – பாணர், பாடினி, விறலியர்.

தோல் இசைக்கருவி வாசித்தவர்கள் – துடியர், பறையர், முழவர்.

துளை இசைக்கருவி வாசித்தவர்கள் – குழுலர், கோடியர், வயிரியர், இயவர், கோவலர்.

ஆடல், நடிப்பு செய்தவர்கள் – கூத்தர், கூத்தியர், கண்ணுளர்.

அரசனை எழுப்பிப் பாடியவர்கள் – சூதர், வேதாளிகர்.

போர்க்களத்தில் பாடியவர்கள் – பொருநர்.

ஊர் தோறும் கூத்து நடத்தியவர்கள் – ஆரியக் கூத்தர், வேழம்பர்.

இவர்கள் அனைவரும் கலையை வாழ்வாதாரமாகக் கொண்டு, அரசர்களிடமும் வேளிர்களிடமும் பரிசு பெற்று வாழ்ந்தனர். இதனால் அவர்கள் “பரிசிலர்” என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் ஒரே இடத்தில் தங்காமல் அலைந்து வாழ்ந்தனர்.

ஒரு இடத்தில் பரிசு பெற்றபின், மற்ற கலைஞர்களுக்கும் அந்த இடத்தையும் அரசனையும் அறிமுகப்படுத்தினர். இதனால் உருவான இலக்கிய வகை “ஆற்றுப்படை” எனப்பட்டது.

பாணர் என்பது ஒரு குறிப்பிட்ட கலைஞரை மட்டுமல்ல; பல்வேறு அலைந்து திரியும் கலைஞர்களின் பொதுப்பெயராகவும் பயன்படுத்தப்பட்டது. பாணர், பாடினி, விறலியர், கூத்தர், கோடியர், பொருநர், வயிரியர், கண்ணுளர், துடியன், பறையன், கிணைவன், பாண்மகள், ஆடுமகள், கிணை மகள் போன்ற அனைவரும் இதில் அடங்குவர்.

இவர்கள் அனைவரும் கலையைத் தொழிலாகக் கொண்டவர்கள். இடமிருந்து இடம் சென்று நிகழ்த்து கலைகளை நிகழ்த்தி வாழ்ந்தனர். சிறிய யாழை வாசித்தவர்கள் “சிறுபாணர்” என்றும், பெரிய யாழை வாசித்தவர்கள் “பெரும்பாணர்” என்றும் அழைக்கப்பட்டனர்.

அலைந்து திரியும் வாழ்க்கை கொண்ட பாணர்கள், பொதுமக்கள், குறுநில மன்னர்கள் (வேளிர்கள்), பெருமன்னர்கள் ஆகியோரின் முன் கலைகளை நிகழ்த்தினர். அவர்கள் ஒரே இடத்தில் தங்காமல், செல்லும் இடங்களில் உள்ள பொது மன்றங்களிலும் ஊருக்கு வெளியிலும் தற்காலிகக் குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்தனர். இந்தக் குடியிருப்புகள் “பாண்சேரி” என அழைக்கப்பட்டன.

பழங்காலத்தில் இவ்வகை கலைஞர்கள் தோன்றியதால், அவர்கள் தங்கள் சுற்றத்தாருடன் சேர்ந்து வாழ்வதை வழக்கமாகக் கொண்டனர். வரலாற்று காலத்திலும் இதே வாழ்க்கை முறையே தொடர்ந்தது. அவர்கள் செல்வத்தைச் சேர்த்து வைப்பதிலும், ஒரு இடத்தில் நிலையாக வாழ்வதிலும் விருப்பம் இல்லாமல் நாடோடிகளாக வாழ்ந்தனர். கலைக்குப் பெருமை கொடுத்த அவர்கள், பொருள் செல்வத்தைச் சேமிக்கவில்லை. தங்களிடம் இருந்ததைச் சுற்றத்தாருடன் பகிர்ந்து வாழ்ந்தனர்.

ஆனால் வரலாற்று காலத்தில் இந்த வாழ்க்கை முறை தொடர முடியாமல், பாணர்களின் வாழ்க்கை சிதைந்தது. அந்தச் சிதைவின் எச்சங்கள் மரபாக இன்றும் சில இடங்களில் தொடர்கின்றன என்பதை இந்நூல் காட்டுகிறது. குறிப்பாக, மூன்றாம் இயல் முழுவதும் இந்த எச்சங்களைப் பற்றியே விளக்குகிறது.

இந்த நூல், பாணர்களின் வீழ்ச்சி ஆரியப் பிராமணர்கள் வந்ததாலும், அவர்கள் பெருமன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்களுடன் ஏற்படுத்திய தொடர்பாலும் ஏற்பட்டது என்று கூறுகிறது. “சங்கக் காலத்தில் உயர்ந்த நிலையில் இருந்த பாணர்கள், பின்னர் மெல்லக் கீழிறக்கப்பட்டனர். சங்கக் காலத்தில் நுழைந்த ஆரியப் பிராமணர்கள், பெருவேந்தர்களும் குறுநில மன்னர்களும் உடன் உறவு கொண்டதால், பாணர்கள் மெதுவாக விலக்கப்பட்டனர்” (பக். 61) என்று இதில் குறிப்பிடப்படுகிறது. ஆனால், இந்தக் கருத்துக்கு உறுதியான ஆதாரங்கள் நூலில் காட்டப்படவில்லை.

மாறாக, பாணர்களின் வாழ்க்கை முதலில் பழங்குடி மக்களிடையே தோன்றியது. பின்னர், வரலாற்று காலத்தில் வேந்தர்கள் உருவாகியபோது, புலவர்கள் அரசர்களிடம் முக்கிய இடம் பெற்றனர். இதனால் பாணர்கள் அரசர்களிடம் இருந்து விலகியதாகச் சங்க இலக்கியத்தில் பல ஆதாரங்கள் உள்ளன. சில பாணர்கள் அரசர்களுக்கு நெருக்கமாக இருந்தாலும், புலவர்களின் வருகையும் செல்வாக்குமே அவர்களின் இடத்தைக் குறைத்ததாகத் தெரிகிறது.

இத்தகைய விளக்கங்களைக் கே.பழனிவேலு தனது “சங்க இலக்கியம் பாட்டு மரபும் எழுத்து மரபும்” என்ற நூலில் ஆதாரங்களுடன் விளக்குகிறார். மானுடவியல் பார்வையில் அவர் கூறுவது நம்பத்தகுந்ததாக உள்ளது. ஆகவே, “சங்க இலக்கியத்தில் பாணர் வாழ்வியல்” என்ற நூலுடன் சேர்த்து இந்த நூலையும் அறிமுகப்படுத்த வேண்டும். இந்த இரண்டு நூல்களையும் படித்தால் பாணர்களின் வாழ்க்கையை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

“சங்க இலக்கியத்தில் பாணர் வாழ்வியல்” என்ற இந்நூல், பாணர், பாடினி, விறலியர், கூத்தர், கோடியர், பொருநர், வயிரியர், கண்ணுளர், துடியன், பறையன், கிணைவன், பாண்மகள், ஆடுமகள், கிணைமகள் போன்ற பல்வேறு கலைஞர் சமூகங்களின் வாழ்க்கையைத் தனித்தனியாக விவரிக்கிறது.

பண் இசைத்துப் பாடுபவர்கள் பாணர்கள். இவர்களின் வாழ்க்கை குறித்துச் சங்க இலக்கியத்தில் பல பாடல்கள் உள்ளன. ஆனால் அவற்றில் அவர்கள் வாழ்வு பெரும்பாலும் வறுமையால் பாதிக்கப்பட்டதாகவே காட்டப்படுகிறது. கலை நிகழ்த்துவது முக்கியமானதாக இருந்தாலும், பசியைத் தீர்ப்பதே அவர்களின் வாழ்க்கையின் முதன்மை நோக்கமாக இருந்தது. இதனால், பாணர்களின் படிப்படியான வீழ்ச்சி சங்க இலக்கியப் பாடல்களில் பதிவாகியுள்ளது என்று கூறலாம்.

பாணர்களின் வீழ்ச்சிக்கான ஆறு காரணங்களை இந்நூல் குறிப்பிடுகிறது. அவற்றில் நான்கு காரணங்கள் பொருத்தமானவையாகத் தெரிகின்றன. பாணர்கள் நாடோடிக் குழுவாக வாழ்ந்தது, செல்வத்தைச் சேமிக்காத பழக்கம், கலைத் தொழிலுக்கு அப்பாற்பட்டு நிலையான பொருளாதார வளர்ச்சியைத் தேடாத நிலை, மேலும் சங்கக் காலத்திற்குப் பிறகு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டது ஆகியவை.

ஆனால், கள்ளுண்ணும் பழக்கம், ஒழுக்கச் சிதைவு, மற்றும் பிராமணர்களின் சடங்கியல் செல்வாக்கு ஆகியவை பாணர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ற விளக்கம் ஆதாரப்பூர்வமாகத் தெரியவில்லை. கள்ளுண்ணுதல் புலவர்களிடமும் இருந்தது; அது அக்காலப் பொதுமக்களிடமும் பரவலாக இருந்தது. அதேபோல், பிராமணர்களின் வருகையால் பூசாரிகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகக் கூறலாம்; ஆனால் அதையே பாணர்களின் வீழ்ச்சிக்குக் காரணமாகச் சொல்லுவது நியாயமாகத் தெரியவில்லை.

எனவே, இத்தகைய விவாதப்புள்ளிகளை அறிமுகத்தில் சுட்டிக்காட்டுவது மட்டுமே பொருத்தமான அணுகுமுறையாக இருக்கும்.

“பாடுநர்” என்ற ஆண்பால் சொல்லுக்கு இணையான பெண்பால் சொல் “பாடினி”. பண்ணிசைத்துப் பாடும் பெண் கலைஞரே பாடினி எனப்படுகிறார். பாடலுக்கேற்ப ஆடும் பெண்கள் “விறலியர்” என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் ஆடுவதுடன் இசைக் கருவிகளையும் வாசிக்கத் தெரிந்தவர்கள். ஔவையார், நச்செள்ளையார் போன்றவர்கள் முதலில் விறலியராக இருந்து பின்னர்ப் புலவர்களாக உயர்ந்ததாக இந்நூல் கூறுகிறது.

ஆடல், பாடல், இசை, நடிப்பு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து நிகழ்த்துபவர்கள் “கூத்தர்”. சங்கக் காலத்தில் சில புலவர்கள் “கூத்தர்” என்ற பெயருடன் அழைக்கப்பட்டனர். உதாரணமாக, தமிழ் கூத்தனார், மதுரை தமிழ்க்கூத்தனார், உறையூர் முதுகூத்தனார் போன்ற பெயர்கள் காணப்படுகின்றன. இதனால், கூத்தர்கள் புலவர்களாக வளர்ந்தார்களா, அல்லது கூத்தர்களிடமிருந்து புலவர்கள் தோன்றியதால் இந்தப் பெயர் வந்ததா என்பது மேலும் ஆய்வு செய்ய வேண்டியதாகும். மேலும், “கூத்து” என்ற சொல்லின் எச்சமாக இன்றும் பல ஊர் பெயர்கள் இருப்பதை இந்நூல் சுட்டிக்காட்டுகிறது.

“கோடு” என்ற இசைக் கருவியை வாசிப்பவர்கள் “கோடியர்” எனப்படுவர். சங்க இலக்கியத்தில் பாணர்களுக்குப் பிறகு அதிகமாகக் குறிப்பிடப்படுபவர்கள் “பொருநர்”. “பொருநன்” என்ற சொல் வீரன், அரசன், இசைக் கலைஞன், கூத்தன் போன்ற பல அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. அகநானூறு பாடல்களில், அரண்மனையில் இசை நிகழ்த்துபவராகப் பொருநர் குறிப்பிடப்படுகிறார். மேலும், பொருநராற்றுப்படை என்னும் பத்துப்பாட்டு நூலில், பொருநர் எனும் கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் செயற்பாடுகள் விரிவாக விளக்கப்படுகின்றன.

“வயிர்” என்ற ஊது கருவியை வாசிப்பவர்கள் “வயிரியர்”. இவர்கள் பாணர்களின் இசைக் குழுவில் இசை வழங்குபவர்கள். கண்ணைக் கவரும் ஆடல் கலைஞர்கள் “கண்ணுளர்” எனப்படுவர். “துடி” என்ற பறைக் கருவியை வாசிப்பவர் “துடியன்”; துடியர்கள் பாணர் குழுவில் முக்கியமான இசைக் கலைஞர்களாக இருந்தனர். “பறை” கருவியை வாசிப்பவர்கள் “பறையர்”; இவர்கள் தொல்குடி சமூகங்களில் முக்கியமான இடம் பெற்றவர்கள்.

“கிணை” என்ற தோல் கருவியை வாசிப்பவர்கள் “கிணைவன்”. யானைகளை விரட்டக் கிணை கருவி முழங்கப்பட்டதாக நற்றிணை பாடல்களில் குறிப்பிடப்படுகிறது. “பாண்மகள்” என்பது பாணர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களைக் குறிக்கும்; அவர்கள் பாணனின் மனைவியாகவோ மகளாகவோ இருப்பர். ஆனால், அவர்கள் இசைச் செயல்பாட்டில் நேரடியாக ஈடுபட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. “ஆடுமகள்” என்பது பாடலுக்கேற்ப ஆடும் பெண் கலைஞர். “கிணை மகள்” என்பது கிணை கருவியை வாசிக்கும் பெண் கலைஞர்.

மொத்தத்தில், இந்நூல் பாணர்களின் பல்வேறு வகைகள், அவர்களின் பணிகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றைச் சுருக்கமாக விளக்குகிறது. இதனால், பாணர்களின் வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

மூன்றாவது இயலில், சங்க இலக்கியங்களில் காணப்படும் கலைகளும் கலைஞர்களும் இன்றுவரை எவ்வாறு தொடர்கின்றன என்பதைக் கூறுகிறது. சங்கக் காலக் கலைஞர்கள் வீழ்ச்சி அடைந்திருந்தாலும், அவர்களின் கலை மரபின் சில எச்சங்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்று இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. இன்றைய பாடல், ஆடல், கூத்து, இசை போன்ற கலை வடிவங்களில், சங்கக் காலக் கலைகளின் தாக்கத்தையும் தொடர்ச்சியையும் காணலாம்.

உதாரணமாக, பூம்பூம் மாட்டைக் கொண்டு குறிசொல்தல், வருவதுரைத்தல், கைரேகை சொல்லுதல், கழைக்கூத்து, முருகன், அனுமான், கிருஷ்ணன் போன்ற வேடங்களில் வீதிகளில் ஆடுதல் போன்றவை, சங்கக் கால நாடோடிக் கலைஞர்களின் மரபின் எச்சங்களாகக் கருதப்படுகின்றன. அதேபோல், இன்றும் பழங்குடி மக்களிடம் காணப்படும் சில கலை வடிவங்களும் சங்கக் கால நிகழ்த்து கலைகளின் தொடர்ச்சியாக இந்நூல் குறிப்பிடுகிறது.

மேலும், சங்கக் காலத்திற்குப் பிறகு சமணமும் பௌத்தமும் வளர்ந்த காலத்தில், நாடகம், இசை, ஆடல் போன்ற கலைகள் தமிழ்நாட்டில் வளர்ச்சியடைய வாய்ப்பு குறைந்தது; இந்த மதங்கள் இக்கலைகளை எதிர்த்தன என்றும் நூல் கூறுகிறது. அதேபோல், களப்பிரர் காலம் தமிழ்நாட்டின் “இருண்ட காலம்” என்று கருதப்பட்டதால், அந்தக் காலத்தில் இசை மற்றும் கலைகள் ஆதரவின்றி வீழ்ந்தன என்ற பார்வையையும் இந்நூல் ஆதரிக்கிறது. ஆனால், இந்தக் கருத்தை முழுமையாக ஏற்க முடியாது. சங்கக் காலக் கலைஞர்கள் வீழ்ச்சி அடைந்தது உண்மை என்றாலும், சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை போன்ற காப்பியங்களில் கலைகள் வளர்ச்சி பெற்றதாகவே தெரிகிறது. குறிப்பாக, ஆடல் கலை செவ்வியல் வடிவமாக உயர்ந்ததைக் காண முடிகிறது.

இத்தகைய விமர்சனங்கள் இருந்தாலும், பாணர்களின் வாழ்க்கையைப் பற்றிய அடிப்படை புரிதலை இந்த நூல் வழங்குகிறது. பாணர்களைப் பற்றி அறிய விரும்புவோர் இந்த நூலிலிருந்து தொடங்கலாம். தொடர்ந்து, பக்தவத்சல பாரதி எழுதிய “பாணர் இனவரைவியல்”, கே. பழனிவேலு எழுதிய “சங்க இலக்கியம் பாட்டு மரபும் எழுத்து மரபும்” ஆகிய நூல்களையும் சேர்த்து வாசித்தால், பாணர்களைப் பற்றிய முழுமையான புரிதலை பெற முடியும்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:“சங்க இலக்கியத்தில் பாணர் வாழ்வியல்”
ஆசிரியர்:
முனைவர் க.காந்திதாசன்
வெளியீடு:
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் / 2011
விலை:₹.80
அறிமுகம் எழுதியவர்:  
✍🏻 அ.கா.ஈஸ்வரன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *