மொழிப்பகை மறக்க வழிகாண வேண்டாமா? | முனைவர் ம. இராசேந்திரன் (மேனாள் துணைவேந்தர்)

உலகெங்கும் கடந்தகாலக் கசப்புணர்வுகளைக் காலம் மாற்றிக் கொண்டு வருகிறது. இணக்கமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க, புதிய தலைமுறை முன்வந்து கொண்டிருக்கிறது. மக்களின் வாழ்வியலை அரசியலாக்க அனுமதிக்காத இளைஞர்கள் எழுச்சி பெறும் காலம் கனிந்துகொண்டு வருகிறது. இறந்த காலத்தில் வாழ யாரும் விரும்புவதில்லை; கட்டாயப்படுத்தினால் வளர்ச்சி முட்டும். முன்னோர் அனுபவங்களும் சிந்தனைகளும் எருவாகலாம்;

பயிருக்கு உணவாகலாம்; எருவே உணவாக முடியாதே!  இந்தியாவின் மொழிக்கொள்கை, வளர்ந்துவரும் நாடுகளின் வழிகாட்டுதலோடும் கைவரப் பெற்றிருக்கும் தொழில்நுட்பச் சாத்தியப்பாடுகளின் துணையோடும் இப்போதேனும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

அவ்வப்போது இந்தி தலைகாட்டினாலும் ஆட்சிமொழிப் பிரச்சினைக்கு நேருவின் உறுதிமொழி தடுப்பணையாகி இருக்கிறது. இந்தியாவில் ஆட்சிமொழி பற்றி விவாதம் நடந்த அளவுக்குக் கல்விமொழி பற்றிய விவாதம் நடைபெறவில்லை.

இந்தியா விடுதலை அடைவதற்கும் முன்பாகவே மொழிப் பிரச்சினை தொடங்கிவிட்டது. இந்தியாவின் ஆட்சிமொழி / அலுவல்மொழிபற்றிய சிக்கல் வெளிப்படும் முன்பே கல்விமொழி பற்றிய சிக்கலைக் கண்டுகொண்டு 1938 ஆம் ஆண்டிலேயே போராட்டக் களத்தில் இறங்கியிருக்கிறது தமிழகம். பள்ளிக்கூடத்தில் பாடமொழியாக இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியைக் கட்டாயமாக்கினார் ஆட்சியில் இருந்த இராஜாஜி. அதை எதிர்த்துத் தமிழகம் கிளர்ந்து எழுந்தது.

இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாகும் முன்பே மொழிப் பிரச்சினை உருவாகிவிட்டது. அது ஆட்சிமொழி அல்லது அலுவல்மொழிப் பிரச்சினை இல்லை; கல்விமொழிப் பிரச்சினை; கல்வியில் பாடமொழிப் பிரச்சினை.
இப்போது தேசியக் கல்விக்கொள்கையில் பாடமொழி பிரச்சினை. ஆட்சிமொழி, பயிற்றுமொழி பிரச்சினைகளை ஒதுக்கித் தள்ளி இருக்கிறது இந்தியாவின் கல்விமொழிக் கொள்கை எப்படி இருக்கும் என்று இந்த வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தேசியக் கல்விக்கொள்கையில் குறைந்தது மூன்று மொழிகள் என்று கூறப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தையும் சேர்த்தால் நான்கு மொழிகள் பாடமொழிகளாகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.
முதலில் இந்தி பேசாத மாநிலத்தில் மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் என்றும் இந்தி மாநிலங்களுக்கு அவர்கள் விரும்பும் இந்தியமொழி என்றும் சொன்னார்கள். தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பைக் கண்டு இந்தி பேசாத மாநிலங்களுக்கும் ஏதாவதொரு இந்தியமொழி என்று இந்தியா முழுவதற்கும் ஒரே மாதிரியான பாடமொழிக் கொள்கை என்று சொல்லி இருக்கிறார்கள்.

முதல் இரு மொழிகளில் சிக்கல் இல்லை. மூன்றாவது மொழியில்தான் சிக்கல் உருவாகி இருக்கிறது. மூன்றாவது மொழி மாணவர்கள் விரும்புகிற ஏதாவது ஒரு இந்திய மொழி என்பது முழங்கையில் தேன் தடவிவிடுகிற வேலை. கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டாடலாமே தவிர நடைமுறையில் பயன்பாட்டளவில் அதற்கான வாய்ப்பே இல்லை.

ஏனெனில் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள் ஒவ்வொன்றிலும் அரசமைப்புச் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் தனித்தனி ஆசிரியர்களை நியமிக்க முடியாது. எனவே மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஏதாவதொரு இந்திய மொழி என்பது ஆட்சியாளர்கள் விரும்புகிற மொழியாக, அதாவது இந்திமொழியே, இந்தி பேசாத மாநிலங்களின் மூன்றாவது மொழியாகும் சூழலைப் படிப்படியாக உருவாக்கும் என்று அவர்கள் நம்புவதை உணர முடிகிறது.

தமிழ்நாட்டின் மொழிக்கொள்கை மிகவும் தெளிவானது. ஆட்சிமொழி தமிழ் மட்டுமே. கல்விமொழிக் கொள்கையில் பாடமொழிகள் இரண்டு மட்டுமே: தமிழும் ஆங்கிலமும்.
புதிய தேசியக் கல்விக்கொள்கையில் இந்தியா முழுவதற்கும் மூன்று பாடமொழிகள் என்று பரிந்துரைத்திருக்கிறார்கள். இவ்வாறு கொள்கை வகுப்பதற்கு இவர்கள் கண்டறிந்ததாகச் சொல்லப்படும் எதிர்காலத் தேவைகளை நம்புவதற்கான தரவுகள் வரைவு அறிக்கையில் இடம்பெறவில்லை.

சான்றாக, முன்னாள் மத்திய மனிதவள அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்துள்ள வாழ்த்துரையில், 2020 இல் 120 கோடி இந்திய மக்கள் தொகையில் 60 கோடி பேர் 26 வயதுக்குள் இருப்பார்கள்; உலகின் இளமையான நாடாக 26 வயதுடையவர்கள் அதிகம் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். கொள்கை அறிக்கை தந்துள்ள கஸ்தூரிரங்கன், நிகழ்காலம் மற்றும் எதிர்காலச் சவால்களைச் சமாளிக்கும் வகையில் இந்திய மாணவர்களுக்கான புதிய தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு மாணவர் பலமொழிகளைக் கற்றால்தான் சாதனையாளராக ஆகலாம் என்றும் அறிவை எளிதில் பெறலாம் என்றும் எதையும் விரைவில் கற்கலாம் என்றும் வாழ்க்கையில் சிறப்பாக முன்னேறலாம் என்றும் உலக நாடுகள் கண்டறிந்துள்ளன என்று கல்விக் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளன. (5.4).

ஆனால் இவற்றுக்கான சான்றாதாரங்கள் உலக நாடுகளின் பாடமொழிக் கொள்கைகளில் காணக் கிடைக்கவில்லை. இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் தொடக்கக் கல்வியில், அதாவது ஐந்தாம் வகுப்புவரை ஒரு மொழியும் ஆறாம் வகுப்பிலிருந்து இரண்டாவது மொழியும் கற்றுத்தரப்படுகின்றன. அமெரிக்காவில் ஆங்கிலம், ஸ்பானிஷ் அல்லது மாணவர் விரும்பும் இன்னொரு மொழியும் ஜப்பானில் ஜப்பானிய மொழியும் ஆங்கிலமும் ஹாங்காங்கில் ஆங்கிலம் மற்றும் சீன மாண்ட்ரின் மொழியும் எகிப்தில் அராபிக் மொழியும் ஆங்கிலமும் கற்றுத்தரப்படுகின்றன.

உலகம் முழுதும் சில காலனிய நாடுகளைத் தவிரத் தொடக்கக் கல்வியில் ஒரு மொழியும் நடுநிலைப் பள்ளியில் இரண்டாவது மொழியும்தாம் கற்றுத்தரப்படுகின்றன என்று இந்திய மக்கள் மொழி ஆய்வுத் தலைவர் ஜி.என். டேவி தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தியாவில் மூன்றுமொழிகள் கட்டாயம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மூன்று மொழிகளில் முதல்மொழியாகத் தாய்மொழி இடம்பெறாத மாணவர்கள் நான்கு மொழிகளைக் கற்க வேண்டியிருக்கும்.
மேலும் புதிய தேசியக் கல்விக் கொள்கையில், ஒரு குழந்தைக்கு இரண்டு வயது முதல் எட்டு வயதுவரை பல மொழிகளைக் கற்கும் ஆற்றல் இயல்பாகவும் எளிதாகவும் இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் மழலையர் கல்விமுதலோ முதல் வகுப்பிலிருந்தோ மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம் என்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆனால் உலகக் கல்விநிலையைப் பற்றிக் கண்காணிக்கும் யுனெஸ்கோ அமைப்பின் 2016 ஆம் ஆண்டு அறிக்கை, ஒரு புள்ளிவிவரம் தந்துள்ளது. அதில் இந்தியாவில் நான்கு கோடியே எழுபது இலட்சம் பேர் பத்தாம் வகுப்பில் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டிருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதைவிட அதிர்ச்சிதரும் செய்தி, அவ்வாறு இந்தியாவில் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போவதற்கான காரணங்களைப் பட்டியலிடும்போது, பெற்றோர் பொருளாதாரநிலை, கழிவறை போன்ற அடிப்படை வசதியற்ற பள்ளிகள், குறிப்பாகப் பெண்களுக்கான பண்பாட்டு சூழல், வேலைவாய்ப்பின்மை, ஆகியவற்றோடு மாணவர்களுக்கு மன அழுத்தம் தரும் பாடமொழிச் சுமையும் முக்கியக் காரணமாகப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

நவீனத் தொழில் நுட்பம் செயற்கை நுண்ணறிவுத் திறனை வளர்த்தெடுப்பதில் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் மொழிப்பிரச்சினையையும் தீர்த்துக் கொண்டிருக்கிறது. கூகுள் மொழிபெயர்ப்பு செயலி தமிழ், மலையாளம், வங்காளம், இந்தி, அராபிக், ஆங்கிலம், சீனம் என்று இந்திய உலக மொழிகளில் 103 மொழிகளுக்கு உடனடி மொழிபெயர்ப்பு தருகிறது. நமக்குப் புரியாத மொழி பேசுவோரோடு செல்லிடப் பேசியில் அவரவர் மொழியில் பேசினால் அடுத்தவர் மொழியில் அவருக்கு மொழிபெயர்த்து விநாடிகளில் சொல்கிறது.

ஜப்பானில் வாங்கிய ஒரு பொருளின் பயன்பாட்டு குறிப்பு ஜப்பானிய மொழியில் இருந்தால் அந்த மொழி புரியாத எழுத்துகளைப் படமெடுத்துப் போட்டால் நமது மொழியில் பெயர்த்துத் தருகிறது. நமது மொழியில் கையால் எழுதிக் காட்டினால் அடுத்தவர் மொழியில் பெயர்த்துச் சொல்கிறது. இப்படி உலகத்தில் மொழித்தடைகளைத் தொழில் நுட்பம் உடைத்தெறிந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்தியா போன்ற நாட்டில் வாழும் ஒரு குழந்தைக்கு மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட மொழிகள் தெரிய வேண்டும் என்று சொல்கிறபோது பன்மொழிச் சூழல் மிக்க இந்தியாவின் ஆட்சிமொழியாக இந்தி மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தர்க்க விதிகள் தகராறு செய்கின்றன.

ஒருவர் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். இங்கே யாரும் யாரையும் தடைசெய்ய முடியாது. கல்வி, மருத்துவம் போல ஒரு குறிப்பிட்ட மொழியைக் கற்பிக்க அரசாங்கம் முயற்சிக்க வேண்டிய தேவைகள் குறைந்துவிட்டன. அப்படியே ஒருவர் இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்ள அரசாங்கத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய அவசியமும் இப்போது இல்லை.

விரும்புகிறவர்கள் விரும்பும் மொழியை வீட்டிலிருந்தே, செல்லிடப் பேசி வழியாகவே இணையவழி கற்றுக் கொள்ளும் வாய்ப்பினையும் தொழில்நுட்பம் வழங்கி இருக்கிறது. இனிவரும் காலத்தில் மொழி வளர்ச்சி என்பது வளரும் தொழில் நுட்பத்தில் மொழியை இணைப்பதுதான்.

ஆகவே இப்போது நமது மொழிக்கொள்கை என்பது நவீனத் தொழில்நுட்பப் புரட்சியை உள்ளடக்கியதாக இருக்கவேண்டுமே தவிரக் கடந்த காலத்திற்குள் வாழக் கட்டாயப்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது.
எனவே, எதிர்கால இந்தியாவை உருவாக்கும் நோக்கத்திற்கோ, உலகின் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்த்தெடுப்பதற்கோ, இந்திய ஒற்றுமையை வளர்த்தெடுப்பதற்கோ புதிய தேசியக் கல்விக் கொள்கையில் இடம்பெறும் மொழிக்கொள்கை உதவும் என்பதை ஆட்சியாளர்களின் அதிகார ஆசையும் நம்பிக்கையும்தாம் தெரிவிக்கின்றனவே தவிர ஏற்றுக்கொள்ளுவதற்கான அறிவியல், உளவியல் தரவுகள் ஏதும் கிடைக்கவில்லை.

எனவே புதிய தேசியக் கல்விக் கொள்கை, மொழிகள் தன்மானத்தோடு வாழவும் மொழிப் பகையை மக்கள் மறக்கவும் வழி காணவேண்டாமா?

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *