“ஒத்த வீடு” எளிய மனிதர்களின் வாழ்க்கையை
உயர் காவியமாக படைத்திருக்கிறார்
கவிஞர் புதியவன்.
கதை கவிதை என பல நூல்களை
திறனாய்வு செய்திருக்கிறார்.
நாளும் பொழுதும் நொடியுமாக
ஹைக்கூ கவிதைகளோடுதான் வாழ்கிறார்.
ஒவ்வொரு விடியலும் புதியவனுக்கு
ஹைக்கூ கவிதையாகத் தான் விடிகிறது
கோழி கூவுவது போல, சூரியன் உதிப்பது போல
அனிச்சை செயலாக
அப்படி ஹைக்கூ கவிதைக்குள்
குடியிருந்த கம்பம் புதியவன்
திடீரென ஒத்த வீட்டில் குடியேறி இருக்கிறார்.
எனக்குத் தெரிந்து மதுரைக்கு மேற்கே உள்ள
பல கிராமங்களில் ஒத்த வீடு உள்ளது.
இவர் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள
ஏதோ ஒரு ஒத்த வீட்டுக்கு
நம்மை அழைத்துச் செல்கிறார்.
ஹைக்கூ கவிஞர் என்பதால்
ஹைக்கூ கவிதை போல சின்னச்
சின்ன கதையாக சொல்லிக்
கொண்டே போகிறார்.
‘முடிவு’ அப்படிங்கற தலைப்புல ஒரு கதை.
“ஏலே பந்தல ஒசத்தி கட்டுடா! கூட்டம் நிறைய வரும்”
“ஏப்பா மொக்க என்னாடா எப்ப சங்கதி”
என்னடா எப்ப சங்கதி என்றால்
எப்போது அந்த மனிதன் மரணமடைந்தான்
என்று கேட்கிறார்.
“கோழி கூப்பிட அஞ்சு மணி கிட்ட சிய்யா”
“சரிடா என்ன செஞ்சிருக்கீக”
அப்படி என்றால் மற்ற ஏற்பாடுகள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கிறார் அந்த சிய்யான்.
“அறிவு பந்தலப் போடுது
மார்க்கண்டையன் கோட்டைக்கு
கொட்டுக்கு சொல்லிவிட்டு இருக்கு
ஆட்டோவுல அலோன்ஸ்
பண்ணச் சொல்லியாச்சு”
இப்படியாக அந்தக் கதை தொடங்குகிறது.
அந்த வீடு எழவு வீடு என்று தெரிந்து விட்டது
நாட்டு நடப்பிலும் வட்டார வழக்கிலுமாக
கதை நகர்கிறது.
ஒப்பாரி சத்தமும்
மைக்ல தட்டுற கொட்டுச் சத்தமுமாக
இழவு வீட்டுச் சத்தம் காதை கிழிக்கிறது
தனம் என்கிற சின்ன வயதுப் பெண்ணின்
கணவன்தான் இறந்து
போயிருக்கிறானென்றும்
அவன் குடித்துக் குடித்தே
குடி நோயாளியாகி
இறந்து போயிருக்கிறானென்பதும்.
பெண்களின் ஒப்பாரியே நமக்கு புரிய வைக்கிறது.
எழவு வீட்டின் வழக்குப்படி
ஒவ்வொரு சாத்திரமும்,
சம்பிரதாயமும்
கடைபிடிக்கப்படுகிறது.
பிணத்தைத் தூக்கி பாடையில்
வைக்க வேண்டும் இறுதி ஊர்வலம்
புறப்பட தயாராகிறது. அப்போதுதான்
இந்தக் கதை துவங்குகிறது.
‘விரித்த தலையோடு சொரணையற்று
கிடந்த தனத்தின் அருகில் வந்தாள் முனியம்மாள்.
முனியம்மா அருகில் பரவுமே
பெண்கள் கூட்டம் அலறியது.
அந்த அலறலில் தனம் விழித்துக் கொள்கிறாள். சுற்றிலும் பார்த்த தனம் அருகில் நிற்கும் முனியம்மாவை பார்த்து,
“என்னத்தா செய்யப் போற”
“உன் தலையில இருக்க
பூவை எடுக்கணும்,
வளையல உடைக்கணும்,
உன் தாலிய இறக்கனும்”
“என்னத்த சொல்ற பொறந்தப்ப இருந்தே
பூ வச்சுருக்கேன் வளையல் போட்டிருக்கேன்
அதை எதுக்கு எடுக்கணும்”
கூட்டம் கலவரமானது.
“இது எல்லா சாதிகளையும் உள்ள வழக்கம்தானே”
“என்னாத்தா பழக்கம் வழக்கம்.
நேத்து ராத்திரி என்னோட பேசிகிட்டு
இருந்தாரு குடிய நிறுத்துறேன்னு
சொன்னாரு. தினமும் சொல்ற மாதிரி
சொல்லி சத்தியமும் பண்ணுனாரு…
இன்னைக்கு ஆளு காலி
குடிச்சு குடிச்சு குடியவே அழிச்சிட்டாரு
அதுக்கு நான் பலிகடா ஆக முடியுமா?”
“அடியே தொட்டு தாலி கட்டுன புருஷன் டி”
“அதனால தான் சொல்றேன்,
சொன்னபடி கேட்காம என்னோட
வாழ்க்கையை சீரழிச்ச
அந்த ஆளு கட்டுன தாலிய
நானே கழட்டி தாரேன்…..”
,ஒத்த வீடு, என்கிற நூலின் உள்ளடக்கம் இதுதான்.
இந்த நூலில் என்ன இருக்கிறது, இது இதுகுறித்து பேசுகிறது என்பதற்கு உதாரணமாகத்தான் மேலே உள்ள ஒரு கதை.
இது போன்ற கதைகளாகவே இந் நூலில் 18 கதைகள் உள்ளது.
ஒவ்வொரு கதையும் ஹைக்கூ கவிதை போல நான்கு பக்கம் ஐந்து பக்க அளவிலேயே நிறைவு பெறுகிறது.
18 கதைகளையும் 92 பக்கத்திற்குள் எழுதி முடிக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு கதையும் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல
மெதுவாக நைஸாக அதே நேரத்தில் நறுக்கென்றும் குத்தி விடுகிறது நம் இதயத்தில் சிறிய வலியை உண்டு பண்ணுகிறது.
சமூகத்தில் நாம் தினம் பார்க்கின்ற அவலங்கள் தான். அந்த அவலங்களைத் தான் நம் கண் முன்னே எழுத்தாளர் கதையாக கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். நாம் அன்றாடம் பார்க்கின்ற மனிதர்கள் தான், ஏன் சில இடங்களில் நாமே ஒரு கதாபாத்திரமாக அந்த கதைக்குள் இருப்பதை உணர முடிகிறது.
அப்படி உணரச் செய்த வகையில் கம்பம் புதியவனும் அவர் எழுதிய இந்த ஒத்த வீடு சிறுகதை தொகுப்பும் வெற்றி பெறுகிறது.
இதில் ஒரு கதை கூட கற்பனையாக இல்லை.
உண்மையை மட்டுமே எழுதுவது என்பது கடினம்.
அந்த கடினமான பணியை கம்பம் புதியவன் சிறப்பாக செய்துள்ளார்.
கம்பம் புதியவனுக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது மு.செந்தில் குமார். கம்பம் புதியவன் என்ற பெயரில்தான் எனக்கு அறிமுகமானார். கம்பம் புதியவன் என்ற பெயர்தான் புனைபெயர் என்பதை பின்னால் தெரிந்து கொண்டேன். ஆனால் கவிஞருக்கு புனைபெயரை வைத்துக் கொண்ட பிறகும் தனது சொந்தப் பெயரையும் விட்டு வர மனதில்லை போல. இரு பெயரில் இயங்க வேண்டாம். கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போலில்லாமல் ஏதாவது ஒரு பெயரில் இயங்குங்கள். உங்கள் பெயரையும் நீங்கள் யார் என்பதையும் காலம் கண்டெடுக்கும்.
கண்டதை எல்லாம் கவிதையாக்கியவர் இன்று கதைகளாக்குகிறார். கண் முன் நடக்கும் அவலங்களை ஒரு எழுத்தாளராக இருந்து கொண்டு எழுதாமல் இருக்க முடியாது அதுவும் முற்போக்கு சிந்தனை கொண்டவரால் இருக்கவே முடியாது. அப்படித்தான் இந்த கதைகள் அனைத்தும் அவருக்குள் முகில்த்திருக்கிறது. இன்னும்.. இன்னும் ஏராளமாய் முனைவர். மு. செந்தில்குமார்( கவிஞர் புதியவனிடம்) எதிர்பார்க்கிறோம். நேர்மையான உங்கள் எழுத்து தமிழ் உலகில் நீண்ட காலம் ஜீவித்திருக்க எமது வாழ்த்துக்கள்.
ஒத்த வீடு (கம்பம் பள்ளத்தாக்கு கதைகள்)
ஆசிரியர்: முனைவர் மு.செந்தில்குமார் (கம்பம் புதியவன்)
வெளியீடு: வேரல் புக்ஸ்
தொடர்புக்கு : 9578764322
நூல் அறிமுகம் எழுதியவர்:
பொன் விக்ரம்
[email protected]
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.