Dr.பால் கலாநிதி எழுதிய "When Breath Becomes Air" புத்தகம் | Dr. Paul Kalanithi's When Breath Becomes Air Book Review in Tamil | www.bookday.in

Dr.பால் கலாநிதி எழுதிய “When Breath Becomes Air” – நூல் அறிமுகம்

“When Breath Becomes Air” – நூல் அறிமுகம்

வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான சுவாசம்

எதைச் சொல்வது, எதை விடுவது என்ற தடுமாற்றத்துடனே நான் இந்த விமர்சனத்தை எழுதத் தொடங்குகிறேன்.

ஆங்கில இலக்கியம் படித்து, ஒரு எழுத்தாளராக வேண்டும் என்ற கனவுடன் தனது பயணத்தைத் தொடங்கிய ஒரு இளைஞர், பின்னர் மருத்துவக் கல்வியைத் தேர்ந்தெடுத்து நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக ஆன டாக்டர். பால் கலாநிதிதான் இந்தப் புத்தகத்தின் நாயகன். அவரது சுயசரிதையான ‘When Breath Becomes Air’ -ன் தொடக்கம் நம்மை அதிர வைக்கிறது.

“சிடி ஸ்கேன் படங்களையும், அதனுடன் கண்டறியப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையையும் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். முதுகு தண்டுவடம் துவங்கி குடல்வரை புற்றுநோய் அணுக்கள் பரவியிருந்ததை காண முடிந்தது. நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவத்தின் கடைசி வருட பயிற்சியில் இருந்த நான், கடந்த ஆறு வருடங்களில் இது போன்ற மருத்துவ அறிக்கைகள், ஸ்கேன் படங்களை பலமுறை பார்த்திருக்கிறேன். நான் மேற்கொண்ட சில சிகிச்சை முறைகள் நோயாளிகளுக்கு பலனளித்திருக்கிறது. ஆனால் இந்த அறிக்கை முற்றிலும் வேறானது… இது என் உடலுக்கானது…”

இளந்துடிப்புள்ள ஒரு மருத்துவர், ஒரே வருடத்தில் சிறிது சிறிதாக நோய் முற்றி தனது 37-வது வயதில் (மே 2015) தனது மூச்சுக் காற்றை உலகிற்கு விட்டுப் போன, அவரது உண்மைக் கதை இது. தனது மரணத்தின் விளிம்பிலும்கூட, தன் கதை பலருக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற முனைப்பு அவர் எழுத்துகளில் ஆழமாகப் பதிந்திருக்கிறது.

நோயாளியிலிருந்து ஒரு நோயாளி

Dr.பால் கலாநிதி எழுதிய "When Breath Becomes Air" புத்தகம் | Dr. Paul Kalanithi's When Breath Becomes Air Book Review in Tamil | www.bookday.in

“நான் மற்றவர்களுக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கும் போது அணியும் உடையோ, வெள்ளை கோட்டோ, அல்லது கையுறைகளோ அணிந்திருக்கவில்லை. நோயாளிகளுக்கு அணிவிக்கப்படும் நீலநிற கவுனை அணிந்திருக்கிறேன்” என்று கலாநிதி தன் நிலையை விவரிக்கிறார்.

ஒரு மூத்த மருத்துவராகத் தனக்குத் தோன்றிய உடல் அறிகுறிகள் (தொடர் முதுகு வலி, மூச்சுச் சிரமம்) குறித்துத் தன் சக மருத்துவரிடம் அணுகியபோது, எக்ஸ்-ரே, IBU Bruphen மாத்திரைகள் என ஆரம்பகட்டச் சிகிச்சைகள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால், நிலைமை மோசமடைந்து MRI Scan மற்றும் Lungs X-Ray எடுக்கப்பட்டபோது, நுரையீரல் புற்றுநோய் பரவியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. அவர் ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தபோதிலும், இப்போது அவரே படுக்கையில் ஒரு நோயாளி.

காதல், கல்வி, எதிர்காலம்

மருத்துவர் கலாநிதியின் நினைவலைகள் இன்னும் பின்னோக்கிச் சென்று அவரது இனிமையான மாணவப் பருவத்தையும், அரிஸோனா மாகாணத்தில் கழிந்த பள்ளி நாட்களையும், ஆங்கில இலக்கியத்தின் மீது அவர் கொண்ட தீராத ஆர்வத்தையும் அழகாகப் பதிவு செய்கின்றன. எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு, ஒரு மருத்துவரின் புத்தகம் காரணமாக உடற்கூறியல் மற்றும் நரம்பியல் துறையின் மீது திரும்பியது. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவ மாணவராகச் சேர்ந்து, சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று, நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் பணியாற்றுகிறார்.

62 வயதான மைக்கேல் என்றொரு நோயாளிக்கு மொழியுணர்வு தொடர்பான பகுதியில் இருந்த கட்டிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்ததையும், அதன்மூலம் நோயாளியின் மொழியறியும் திறன் மீண்டதையும் அவர் விவரிக்கிறார். சிகிச்சை திறம்பட நடந்தபோதும், மைக்கேல் சில நாட்களில் இறந்துவிட்டார் என்ற நினைவு, மரணத்தின் தவிர்க்க முடியாத உண்மையைக் கலாநிதிக்கு உணர்த்துகிறது.

வாழ்வின் விளிம்பில் ஒரு புதிய பிறப்பு

Dr.பால் கலாநிதி எழுதிய "When Breath Becomes Air" புத்தகம் | Dr. Paul Kalanithi's When Breath Becomes Air Book Review in Tamil | www.bookday.in

தனது மனைவி, மருத்துவர் லூசியுடன் தீவிர ஆலோசனைக்குப் பிறகு, புற்றுநோய் மருந்துகளின் பக்கவிளைவுகள் கருதி, முதலில் தனது விந்தணுவைச் சேமித்து பாதுகாத்திடும் நடைமுறைக்கு உட்படுகிறார்.

அவருக்குள்ளே இருக்கும் மருத்துவர், தனது வாழ்நாள் காலம் எவ்வளவு இருக்கும் என்று கணக்குப் போடுகிறார்: “ஓரிரு வருடங்கள் என்றால் எழுதப் போகிறேன், 10 ஆண்டுகள் என்றால் மீண்டும் மருத்துவராக எனது சிகிச்சையளிக்கும் பணியைத் தொடரப் போகிறேன், அதோடு எங்களுக்கென்று ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறோம்.” என்று லூசியிடம் சொல்கிறார்.

தான் இறந்தபின் லூசிக்கு ஒரு துணையும், ஆறுதலும் இருக்க வேண்டும் என்பதற்காக, சேமித்து வைத்திருந்த விந்தணு மூலம் அவர் கர்ப்பம் தரிக்க வேண்டும் என்று கலாநிதி விரும்புகிறார். லூசியும் சம்மதிக்க, ஒருபுறம் கலாநிதிக்கு சிகிச்சை தொடர, மறுபுறம் லூசியின் வயிற்றில் குழந்தை கருவாகி வளரத் தொடங்குகிறது. கருவின் வளர்ச்சிக் குறிப்புகள் கலாநிதிக்குத் தெம்பைத் தருகிறது.

சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை

18 மாத இடைவெளிக்குப் பிறகு, தனது உடல்நிலை மற்றும் வலிகள் காரணமாக ஒரு நாளைக்கு ஒரு நோயாளிக்கு மட்டுமே அறுவை சிகிச்சை செய்வதாகவும், துணையாக மற்றொரு மருத்துவரைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடனும் கலாநிதி மீண்டும் மருத்துவப் பணிகளைத் தொடங்குகிறார்.
அவருக்கு இயல்பாகவே இருந்த நரம்பியல் சார்ந்த ஆவல் மற்றும் நுண்ணறிவு காரணமாக, கடினமான மூளை அறுவை சிகிச்சைகளையும், முதுகு தண்டுவடத்தில் பழுதான பகுதியை நீக்கும் அறுவை சிகிச்சைகளையும் முனைப்புடன் மேற்கொள்கிறார். தனது முடிவு வெகு சீக்கிரம் என்பதை அறிந்தும், எல்லா மனிதர்களையும் போலவே வாழும் ஆசை அவருக்குள்ளும் புரள்வதையும், பெற்றோரின் வேண்டுதல்களையும் ஒரு இளைஞனின் மனநிலையில் பகிர்ந்து கொண்டே செல்கிறார்.
கடைசி மூச்சு காற்றோடு கலக்கும்போது

தனது முடிவு நிச்சயம் என்பதை உணர்ந்தவுடன், தனது சுயசரிதையை எழுதத் துவங்குகிறார். வேதனை மற்றும் வலிகளுக்கு நடுவிலும் நிகழ்வுகளைப் பதிவு செய்வதில் அவர் அன்றாடம் கவனம் செலுத்தினார் என அவரது மனைவி குறிப்பிடுகிறார்.

அழகான பெண் குழந்தை பிறக்கிறது. Cady என்று பெயரிடப்பட்ட குழந்தையோடு அவர் மகிழ்ந்திருக்கும் நாட்களைக் கலாநிதி பதிவிடுகிறார். குழந்தைக்கு எட்டு மாதங்களாகும் போது, டாக்டர். பால் கலாநிதியின் உயிர் (மே 9, 2015) அன்று காற்றோடு கலக்கிறது.

கடைசி அத்தியாயத்தை, தனது கணவரின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கில், மருத்துவர் லூசியே எழுதியிருக்கிறார். கடைசி மூன்று நாட்களில் சுவாசத்தை எளிமைப்படுத்துவதற்கான கருவி பொருத்தப்பட வேண்டுமா என்ற கேள்வி வந்தபோது, “காற்றோடு எனது சுவாசம் கலக்க வேண்டும்” என்று தெரிவித்து வேண்டாம் என்கிறார் பால் கலாநிதி. தந்தை, தாய், சகோதரன், மனைவி என அனைவரும் அருகில் இருக்கையில் அவரது கடைசி மூச்சு காற்றோடு கலக்கிறது.

படைப்பின் தனித்துவம்

சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த சித்தார்த் நடித்த ‘180’ போன்ற திரைப்படங்கள், மருத்துவரின் இத்தகைய கதைக் கருவை மையமாகக் கொண்டிருந்தாலும், ‘When Breath Becomes Air’ ஒரு உண்மைச் சரிதம் (Memoir). டாக்டர். பாலின் மனைவி லூசி மற்றும் மகள் கேடி (Cady) இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கூகிளில் தேடினால், கேடியைத் திரு பால் கலாநிதி உறங்கும் கல்லறைக்கு லூசி அழைத்துச் செல்லும் நெகிழ்ச்சியான புகைப்படங்களைக் காணலாம்.

வாழும் ஆசையில் உயிரை எதிர்த்துப் போராடியது, ஒரு மருத்துவர் என்ற முறையில் தனது முடிவை அறிந்து அதை எதிர்கொண்டது, உடல் ஒத்துழைக்க மறுக்கும் நிலை வரை பிற நோயாளிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற வைராக்கிய முனைப்பு ஆகியவற்றை இந்த நூல் பேசுகிறது. ஏராளமான மருத்துவச் சொற்கள், அன்பு, காதல், மகிழ்ச்சி, வேதனை, வலி என உணர்வுகளைக் கலந்து படைக்கப்பட்ட ‘When Breath Becomes Air’ ஒரு அற்புதமான, தவிர்க்க முடியாத படைப்பு.

நூலின் விவரங்கள்:

நூல்: When Breath Becomes Air
ஆசிரியர்: Dr.பால் கலாநிதி (Dr.Paul Kalanithi)
பதிப்பகம்: Random House, New York
விலை: ரூ.555

எழுதியவர் : 

✍🏻 – சம்பத் ஸ்ரீனிவாசன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *