‘வண்ணத்துப்பூச்சி’ (Vannathupoochi – Butterfly) சிறுகதை – நூல் அறிமுகம்
“இதுநாள் வரையில், மரியாதைக்கு உரியதாக இருந்த பயபக்தியுடன் பார்க்கப்பட்டு வந்த வாழ்க்கைத் தொழில் ஒவ்வொன்றையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்க செய்துவிட்டது. அது மருத்துவரையும்,வழக்குரைஞரையும், மதகுருவையும், கவிஞரையும், விஞ்ஞானியையும் தன்னிடம் ஊதியம் பெறும் கூலி உழைப்பாளர்களாய் ஆக்கிவிட்டது.
“முதலாளித்துவ வர்க்கம் குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிப்பூர்வ உறவுத்திரையைக் கிழித்தெறிந்துவிட்டது. குடும்ப உறவை வெறும் பண உறவாகக் குறுக்கிவிட்டது”. – கம்யூனிஸ்ட் அறிக்கை.
இது போன்ற சூழலில் தான் அரசு மருத்துவர் அனுரத்னா தனது முதல் சிறுகதையான ‘வண்ணத்துப்பூச்சி’ என்ற கதையை எழுதி இருக்கிறார். இதற்கு முன் அவர் இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார் இது அவரது மூன்றாவது புத்தகம்.
பெரும்பாலும் கதைகள் என்றாலே ஒரு அலாதி விருப்பம் உண்டு. ஏனெனில் கதைகளால் தானே இந்த உலகம் நிரம்பி இருக்கிறது. கதைகள் மூலமாகத் தானே நாம் வளர்த்திருக்கிறோம். தங்களது வாழ்க்கையில் கதைகள் கேட்காமல் இந்த பூமியில் யாரும் பிறந்தும்,வளர்ந்ததும் இல்லை தானே, அதிலும் சிறுகதை என்பதில் பேரார்வம் கொண்டு இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்று புத்தகத்தை கையோடு பெற்றுக் கொண்டேன்.
‘வண்ணத்துப்பூச்சி’என்ற அட்டைப் படத்தை பார்த்தவுடன்
“பட்டாம்பூச்சி
பிடிக்கும்போது
கடவுளே வந்து
கூப்பிட்டாலும்
குழந்தைகள்
திரும்பிப் பார்ப்பதில்லை”
என்ற கவிதை நினைவுக்கு வந்தது.
மனதில் எண்ணற்ற வண்ணங்களுடன் வண்ணமயமான எண்ணங்கள் ஏற்பட்டன. பட்டாம்பூச்சியாய் என் எண்ணங்கள் வாசிக்கும் வரை பறந்து கொண்டிருந்தன. வாசித்து முடித்த பின்னர் பிரதீபா பற்றிய நினைவலைகள் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தன.
மருத்துவர் அனுரத்னா ஏற்கனவே அறிமுகமான தோழர் என்பதால் அவரது சிறுகதையை வாசிக்கும் போது நேரடியாகவே மனதில் அவருடைய குரல் பதிவு பெற்ற காரணத்தால் அவரது குரலிலேயே கதை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர் நேரடியாக சொல்வதைப் போலவே கதை ஆழ்மனதிற்குள்ளிருந்து கோவில் மணியோசை போல ரீங்காரமிட்டுக் கொண்டே கேட்கிறது.
பன்னீருக்கும் புஷ்பாவிற்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது அந்த குழந்தையின் பெயர் பிரதீபா. குழந்தைகளைப் போல இவளும் ஒரு குழந்தையாக வளர்ந்தாள்.பிரதீபா பருவம் எழுதிய பின் அவளுக்கு அவளுடைய அப்பா பெயர் கொண்ட பன்னீர் என்பவருடன் திருமணம் நடக்கிறது. அவள் குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே உடல்நலம் சரியில்லாமல் திருமணமான பின்னரும் தொடர்கிறது.
ஒருபுறம் மருத்துவமும் மறுபுறம் மந்திரவாதியின் (சாமியாரின்) மந்திரிப்புகள்.
இந்த காலக்கட்டத்தில் (அறிவியல் வளர்ந்த) கூட இது போன்ற மூடநம்பிக்கைகள் தொடருமா?.என்று கதை வாசித்துக் கொண்டு இருக்கையிலேயே மறுபுறம் நினைவுகள் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ‘கொட்டுக்காளி’ வயதிற்கு வந்த பெண்ணை காத்து, கருப்பு அடித்து விட்டது என்று மந்திரிக்க மந்திரவாதியிடம் இருசக்கர வாகனத்திலும் ,ஆட்டோவிலும் பயணிக்கும் காட்சிகள் ஒரு கணம் கண் முன் வந்துச் சென்றன.
இந்த சிறுகதையிளும் “ஒரு இருசக்கர வாகனம் வேகமாக கிளம்பியது. அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டுவது ஒரு ஆண் பின்னால் ஒரு வாலிப பெண் அமர்ந்து இருக்க அவரை பிடித்தபடி அவர் பின்னால் இன்னும் ஒரு ஆண் இருக்க அந்த வண்டி வேகமாக கிளம்பியது சாலையில், சாலையின் இடப்பக்கம் இருக்கும் மரங்களுக்கு நடுவில் இருந்து அந்த வண்டி சாலையில் அவ்வளவு வேகமாக சென்றது. நடுவில் இருக்கும் பெண்ணின் கைகள் இரண்டும் பிணத்திற்கு தொங்குவதுபோல் தொங்க,அவரை பின்னால் இருக்கும் ஆண் அனைத்துப் பிடித்திருக்கும் காட்சி மங்கைக்கு பாலின வன்புணர்வுகளை நினைவுபடுத்த அந்த சாலையில் உதவி கேட்டு கத்திக்கொண்டே முன்னோக்கி ஓடினார் மருத்துவர் மங்கை”
அந்த மங்கை வேறு யாருமில்லை நம்ம அனுரத்னா தோழர் தான்.
இப்படி ஆரம்பிக்கும் சிறுகதையில் மங்கை என்ற மருத்துவர், பிரதீபாவிற்கு செய்யும் மருத்துவ உதவிகள் மூலம் மூடநம்பிக்கையிலிருந்து விடுதலைப் பெற்று அறிவியல் ரீதியான மருத்துவத்தை அனுகியதால் அவளது உயிர் காப்பாற்றப்படுகிறது.
இந்த சிறுகதை உண்மையில் நடந்த சம்பவம். அதுவும் ‘வண்ணத்துப்பூச்சி’ என்ற பெயர் வைப்பதற்கு என்ன காரணம் என்று எழுத்தாளர் அனுரத்னா விளக்கியிருப்பது சிறப்பு. இதுவரை ஒரு சிறுகதைக்கு ஏன் இந்தப் பெயர் வைத்திருக்கிறார் என்ற காரணம் எந்த சிறுகதை தொகுப்பிலும் வாசித்ததில்லை.
அவர்கள் தினந்தோறும் செய்யும் மருத்துவ தொழில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று செய்யும் போது அதே மருத்துவ தொழில் சேவையாக மாறுகிறது, போற்றப்படுகிறது. பழங்குடி மக்களுக்கு வாரம் ஒருமுறை நேரடியாக அவர்களது வாழும் இடத்திற்கே சென்று மருத்துவம் பார்க்க கூடியவர் மருத்துவர் அனுரத்னா.
தன் அனுபவத்தை சிறுகதையாக சொல்லியிருப்பது அதுவும் மருத்துவ விளக்கங்களுடனும் ,குறிப்புகளுடனும் கதை எழுதிருப்பது சிறப்பு. ஆனால் சிறுகதையை எழுதும்போது சொல்லுகின்ற மொழி முக்கிய பங்கு வகிக்கிறது நாம் எந்த மொழியில் (பேச்சு) எழுதுகிறோம் என்பது சிறுகதை வாசிக்கும் போது நாம் அதை உணர முடியும். சிறுகதைக்கு என்று ஒரு மொழி தேவைப்படுகிறது அந்தக் கதை சொல்லலில் பழங்குடி மக்கள் பேசுகையில் அவர்களுடைய பேச்சு மொழியிலேயே சொல்லி இருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும். சிறுகதையை வாசிக்கையில் எழுதியிருப்பதை வாசிப்பதை விட யாரோ ஒரு கதை சொல்லி நம்மிடம் சொல்வதைப் போல இருக்கிறது. தனது அனுபவத்தை சிறுகதையாக (புனைவு) எழுதும்போது கொஞ்சம் கூடுதல் கற்பனையை சேர்க்கும்போது கதை சுவாரசியமாகிறது.
இச்சிறுகதையில் தன்னை படிக்க வைத்த தாயின் பெயரையே (மங்கை) மருத்துவருக்கு வைத்திருப்பது மருத்துவரிடம் ஒரு தாய்மை குணமும் அவர் அம்மாவின் மீது வைத்திருக்கும் அன்பும் நேசத்தையும் பிரதிபலிக்கிறது.
மருத்துவர் அனுரத்னா இயல்பிலேயே ஒரு கவிஞர். ஒரு சில கவிதைகளையும் எழுதியிருக்கிறார். அவருடைய எழுத்து நடை சரளமாக இருக்கிறது ஆனால் சிறுகதை என்று எழுதும் போது இன்னும் ஆழமாக கதை தளத்தை உருவாக்கிக் கொண்டிருந்தால் இந்த சிறுகதை இன்னும் வீரியமிக்கதாக இருந்திருக்கும் என்பது எனது சிறு எண்ணம்.
ஆகவே, ‘வண்ணத்துப்பூச்சி’ என்ற சிறுகதை எல்லா கிராமங்களிலும், நகரங்களிலும் மூடநம்பிக்கை பரவியிருக்கும் இடங்களிலெல்லாம் கொண்டுச் சேர்க்க வேண்டிய சிறந்த புத்தகம்.
இன்னும் நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மந்தரித்துக் கொண்டும், தாயத்து கட்டிக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த மூடநம்பிக்கைகளியிருந்து விடுதலை பெற கல்வி அவசியம் பெறுகிறது.
அதிலும் வாசிப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் இதுபோன்ற விழிப்புணர்வு சார்ந்த சிறுகதைகள் நூறு பூக்கள் மலர வேண்டும் என்பதைப் போல நூறு சிறுகதைகள் மலர வேண்டும்.
மருத்துவர் அனுரத்னா எழுத்தாளர் அனுரத்னாவாக மென்மேலும் வளர்ந்து நிறைய கதைகள் எழுதவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
அவர் சொன்னதைப் போல மருத்துவர் தொழிலை விட களப்பணி மிகச் சிறந்தது. ஒரு களப்போரளியாக மருத்துவர் அனுரத்னாவை நான் பார்க்கிறேன்.
இறுதியாக புத்தகத்தில் பிரதீபா தன் கையால் எழுதிய கடிதத்தை வாசிக்கையில் வண்ணத்துப்பூச்சி நம் மனங்களிலும் வண்ணமயமாக அப்பிக் கொள்கிறது. இதுவும் ஒரு வகையில் நோய் தான். வாசிப்பு என்னும் நோய்.
அறிவியல் மக்களுக்கே, நாட்டிற்கே,சுயசார்பிற்கே…
என உங்கள் மக்கள் பணி தொடரட்டும். உங்கள் காலடி படாத தமிழக கிராமங்கள் இல்லாத நிலை இங்கு உருவாகட்டும்.
மீண்டும் ஒருமுறை உங்களுக்கும் இந்த புத்தகத்தை வெளியிட்ட தமிழ்நாடு அறிவில் இயக்கத்திற்கும் எனது வாழ்த்துக்களும், நன்றியும்.
நூலின் தகவல்கள் :
புத்தகம்: ‘வண்ணத்துப்பூச்சி’
ஆசிரியர் : மருத்துவர் சு. அனுரத்னா (Dr. S. Anurathna)
வெளியீடு: தமிழ்நாடு அறிவில் இயக்கம் (அறிவியல் வெளியீடு)
விலை: 30
நூல் அறிமுகம் எழுதியவர் :
அமுதன் தேவேந்திரன் (Amudhan Devendiran)
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.