வாழ்க்கை என்பது ஒரு பயணம், இந்த பயணம் பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிவடைகிறது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலம் தனது கடமையை செவ்வனே செய்து கொண்டிருக்கிறது. ஆனால் மனிதன் தன்னுடைய நேரத்தைச் சரியாகச் செலவிடுகிறானா என்ற கேள்வி எழுகிறது.  நேரம் விலை மதிப்பற்றது என்று சும்மா கூறவில்லை. இழந்த பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்து விடலாம். ஆனால் இழந்த நேரத்தைச் சம்பாதிக்க முடியாது. ஏழைக்கும் பணக்காரனுக்கும் நேரம் மட்டுமே சரிசமமாகக் கிடைக்கிறது. அந்த நேரத்தைச் சரியாக ஆக்கப்பூர்வமாகச் செலவு செய்பவர்கள் வெற்றியாளர்களாகிவிடுகின்றனர். காலத்தின் அருமையை உணர்ந்தவர்கள் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கின்றனர். மனமகிழ்வோடு பயணத்தை முடிக்கின்றனர். பலர் வாழ்க்கையின் நோக்கம் என்னவென்றே தெரியாமல் பயணம் செய்கின்றனர். இவர்கள் வெந்தால் சோறு; விதி வந்தால் சாவு என்ற நிலையில் வாழ்கின்றனர். அவர்களுக்குக் காலத்தின் அருமை புரியாது. சிலர் காலத்தின் அருமை தெரிந்தாலும் தள்ளிப் போடுதல் என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆம் நமது வாழ்க்கையில் நாம் எல்லோருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நமது வேலைகளைத் தள்ளிப்போட்டிருப்போம் பின்பு வருத்தப்பட்டிருப்போம். நானும் இதைச் செய்திருக்கிறேன். பலநேரங்களில் இதனால் வருத்தப்பட்டிருக்கிறேன். இதனை மிக மோசமான நோய் என்றே கூறலாம். அதாவது சோம்பல், நாளை பார்த்துக் கொள்வோம் என்று நமக்கு நாமே கூறிக்கொள்ளும் பொறுப்பற்ற நிலை.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன் (குறள்: 605)
அதாவது காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறிய தூக்கம் ஆகிய இந்நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாகும்.  இப்படிப்பட்ட குணம் படைத்த மனிதன் தன்னையும், தன் குடும்பத்தையும் வறுமை நிலையிலேயே வைத்திருப்பான். அவர்களிடம் எதிர்மறையான சிந்தனை, விரக்தி அதிகமாக இருக்கும். இவர்கள் கற்பனை கவலை உலகத்திலேயே வாழ்ந்து மறைவார்கள்.
நிலவின் கீழே துயில் கொண்டிருந்தான்
சூரியனின் கீழே குளிர் காய்ந்திருந்தான்
செய்யத்தான் போகிறோம் என்றே வாழ்ந்திருந்தான் – 
எதுவும் செய்யாமலே மாய்ந்துவிட்டான். 
என்று ஜேம்ஸ் அல்பெரி கூறுகிறார்.  நம்மில் பலர் பல்வேறு விசயங்களில் சோம்பேறித் தனம் கொள்கிறோம். சோம்பல் என்பது மிக மோசமான குணமாகும். அந்தக் குணத்தின் செயல் பூர்வமான வெளிப்பாடுதான் தள்ளிப் போடுதல் அல்லது ஒத்திப் போடுதல். தள்ளிப்போடுவதால் நமது வாழ்வின் பல அற்புதமான விசயங்களை இழந்து வருகிறோம். அதை வாழ்வின் இறுதியில் உணர்கிறோம். அப்போது எந்த மாற்றமும் ஏற்படப்போவது இல்லை.


பயம், பதட்டம், சோர்வு போன்ற பலவிசயங்களுக்கு நேரம் தவறுதலே முக்கியக் காரணமாக இருக்க முடியும். பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள இந்த வாழ்க்கைப் பயணத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டிய விசயங்கள் பல உள்ளன. ஒரு சிலர் மட்டும் இதனை முழுமையாக அனுபவிக்கின்றனர். வெற்றியும் அடைகின்றனர். பலர் கிடைத்த வாய்ப்புகளை இழந்து விட்டு வருத்தப்பட்டது தான் மிச்சம்.
வரம் கொடுக்கும் தேவதைகள்
வந்த போது தூங்கினேன்
வந்த போது தூங்கிவிட்டு 
காலம் முழுவதும் ஏங்கினேன் 
என்று காலத்தின் அருமையைக் கவிஞர். மு.மேத்தா கூறுகிறார்.
சின்னஞ்சிறு பையன் ஒருவன் நான் பெரியவனாகி விட்டால் இதைச் செய்வேன், அதைச் செய்வேன் நான் சந்தோசமாக இருப்பேன் என்பான். அவன் பெரிய பையன் ஆகிவிட்டபோது நான் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் இதைச் செய்வேன், அதைச் செய்வேன், நான் சந்தோசமாக இருப்பேன் என்றெல்லாம் சொல்லுவான். அவன் கல்லூரிப் படிப்பு முடித்தவுடன், வேலை கிடைத்தவுடன், திருமணம் முடிந்தவுடனும் என் குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் நான் இதைச் செய்வேன், அதைச் செய்வேன், நான் சந்தோசமாக இருப்பேன் என்றே சொல்வான். பிள்ளைகள் பள்ளிப்படிப்பை முடித்த பின்பும், நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவுடன் நான் இதைச் செய்வேன், அதைச் செய்வேன், நான் சந்தோசமாக இருப்பேன் என்றெல்லாம் சொல்லுவான். அவன் வேலையிலிருந்து ஒய்வு பெற்றவுடன் அவன் எதைப் பார்க்கிறான்? தன் கண்களுக்கு முன்னாலேயே அவனது வாழ்க்கை கடந்து போய் விட்டதைப் பார்க்கிறான். சிலர், நான் சூழ்நிலையை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன், நான் தயாராகிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு வேலைகளைத் தள்ளிப் போடுவார்கள். நிகழ்காலத்தை முழுமையாக அனுபவிப்பதை விட்டு விட்டு எதிர்காலத்தை எண்ணி காரியங்களைத் தள்ளிப்போடுவது நம்மை அல்ல. நமது வெற்றியை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு நொடியின் அருமை, ஒரு நிமிடத்தின் அருமை, ஒரு மணியின் அருமை அந்த சமயத்தில் செய்யமுடியாமல், தவறவிட்ட மனிதனைக் கேட்டால் தெரியும். நாம் காலங்களை எண்ணிக் காத்திருக்கலாம். ஆனால் காலங்கள் நமக்காக ஒருபோதும் காத்திருக்காது. இது இப்படி இருந்திருக்கலாம். நான் இதைச் செய்திருக்க வேண்டும் நான் இதைச் செய்திருக்க முடியும். இதை மட்டும் நான் செய்திருந்தால்… நான் மட்டும் இன்னும் கொஞ்சம் அதிகம் முயற்சி எடுத்திருந்தால்… போன்ற வார்த்தைகளைப் பேசுவதால் மட்டும் மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை.  அதனை உடனே செய்து முடிக்க வேண்டும்.
இன்றே உங்களால் செய்ய முடிந்ததை ஒரு போதும் நாளை வரை தள்ளிப் போடாதீர்கள் என்று பென்ஜமின் ஃப்ராங்களின் கூறுகிறார். காலத்தின் அருமையை வாழ்வின் இறுதியில் உணர்ந்து பயன் இல்லை. வாழ்க்கை என்பது வாழ்வதற்கான ஒரு வாய்ப்பு. இந்த வாய்ப்பை முழுமையாக அனுபவிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதனை ஆக்கப்பூர்வமான வழிகளில் மனித நலனுக்காகச் செலவழிக்க வேண்டும். காலத்தின் அருமையை நன்கு உணர்ந்து கடினமாக உழைத்தால் சாப்பாடு, தூக்கம், பொழுதுபோக்கு போன்றவை ஒரு பெரிய விசயமாகத் தெரியாது. வெற்றி மட்டுமே கண்ணுக்குத் தெரியும். அது வாழ்க்கையை வென்றவர்களின் வரலாற்றைப் படித்தால், வாழ்வில் அனுபவித்தால் புரியும். இனியாவது நேரத்தின் அருமையைப் புரிந்து கொண்டு தள்ளிப் போடாமல் நிகழ்கால கடமைகளையும், எதிர்கால திட்டங்களையும் செய்து முடித்து வெற்றி காண்போம்.
முனைவர் இல.சுருளிவேல்
உதவிப் பேராசிரியர், மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை 
டாக்டர் எம். ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி-601 204
மின்னஞ்சல்: [email protected]



4 thoughts on “தள்ளிப் போடாதே! – முனைவர் இல.சுருளிவேல்”
  1. மிக அருமையாக இருந்தது வாசிப்பதற்க்கும் உணர்வதற்க்கும். நல்ல கட்டுறைக்கு நன்றி தோழரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *