அணுக்க விமர்சனக் கோட்பாடு எனும் திறனாய்வுக் கலை
பேரா. எ. பாவலன்
கோட்பாடு என்பது ஒரு சிந்தனைக்கு வலு சேர்க்கும் காரணி. எந்த நிகழ்வையும் அல்லது செயலையும் கொண்டு அது கொண்டிருக்கும் கொள்கையின் உறுதித் தன்மையை ஆராய்வதே கோட்பாடு. இதுவரையில் தமிழ்ச் சிந்தனை மரபில் எண்ணற்ற கோட்பாடுகள் தோன்றி வளர்ந்துள்ளன. சான்றுக்காக 1. அமைப்பியல் கோட்பாடு, 2. அறவியல் திறனாய்வுக் கோட்பாடு, 3. அறிவுறுத்தல் கோட்பாடு, 4. உளப் பகுப்பாய்வு கோட்பாடு, 5. எடுத்துரைப்பியல் திறனாய்வுக் கோட்பாடு 6. ஒப்பீட்டு கோட்பாடு, 7. கட்டுடைப்பியல் திறனாய்வுக் கோட்பாடு, 8. சூழலியல் கோட்பாடு, 9. தொல் படிமவியல் திறனாய்வுக் கோட்பாடு, 10. நவீனத்துவ கோட்பாடு, 11. பின்நவினத்துவக் கோட்பாடு, 12. பின் அமைப்புக் கோட்பாடு, 13. புது திறனாய்வுக் கோட்பாடு, 14. புது வரலாற்றில் கோட்பாடு 15. புனைவியல் கோட்பாடு, 16. மொழியியல் கோட்பாடு, 17. யதார்த்தவியல் கோட்பாடு, 18. வரலாற்றில் திறனாய்வு கோட்பாடு, 19. பெண்ணியக் கோட்பாடு, 20. தலித்தியக் கோட்பாடு இப்படி எண்ணற்றக் கோட்பாடுகளைக் கூறமுடியும். இவை அனைத்தும் மேலைநாட்டின் தாக்கத்தின் காரணமாகத் தோன்றி வளர்ந்தன.
முதன்முறையாக ஒரு கோட்பாடு தமிழில் உருவாகியது என்றால் அது அணுக்க விமர்சனக் கோட்பாடு என்பதை கூற முடியும். இது முழுக்க முழுக்க தமிழில் தோன்றிய புதியக் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின் காலம் 2000 ஆண்டுகள் என்று கூறமுடியும். இது தொல்காப்பியர் காலத்தில் உருவான கோட்பாடு என்று பேரா. முனைவர் த. விஜயலட்சுமி அவர்கள் பதிவு செய்துள்ளார். இந்தக் கோட்பாட்டின் தொன்மை தோற்றம் பற்றி மிகவும் ஆழமாகவும் நேர்த்தியாகவும் சான்றுகள் காட்டி நிறுவமுயன்றுள்ளார். அந்த வகையில் அணுக்க விமர்சனக் கோட்பாடுப் பற்றி இந்தக் கட்டுரை விரிவாக ஆராய்கிறது.
எந்த ஒரு கோட்பாடும் ஒரு Application முறையில் apply செய்து பார்க்க முடியும். படைப்பையும் படைப்பாளையும் Application முறையில் Apply செய்து ஏன் எதற்கு இந்தக் கோட்பாடு தோற்றம் பெற்றது. படைப்பாளி அந்தப் படைப்பின் வழியாக சொல்ல விரும்பும் கருத்து யாது? என்பதை அறிந்து கொள்வதற்கு திறனாய்வுக் கோட்பாடு முக்கிய பங்காற்றுகிறது.
இலக்கிய தரத்தையும் மனித குணத்தையும் அறிந்து கொள்ள பயன்படும் கோட்பாடுகள் முன்னர் சுட்டியதைப் போன்று மேலைநாட்டின் தாக்கத்தின் காரணமாக தமிழில் தோன்றி வளர்ந்தது என்று கூற முடியும். குறிப்பாக 19ஆம் நூற்றாண்டுக்கு பிறகு உலகில் பல்வேறு மாற்றங்கள் தோன்றின. அறிவியல் புரட்சி, தொழிற் புரட்சி உள்ளிட்ட காரணத்தால் பெரும் தாக்கம் இச் சமுதாயத்தில் ஏற்படுத்தியது. அறிவியல் கண்டுபிடிப்பாளர்களைப் போன்றே, கோட்பாட்டையும் கண்டுபிடித்தவர்களின் பெயரும் அடையாளப்படுத்த இயலும். சான்றுக்கு அமைப்பியல் கோட்பாடு, நவீனத்துவ கோட்பாடு பின் நவினத்துவ கோட்பாடு கண்டுபிடித்தவர்களை அடையாளப்படுத்துவது எந்த அளவிற்கு முக்கியமோ? அந்த வரிசையில் அணுக்க விமர்சன கோட்பாட்டைத் தமிழில் புதிய சோதனை முயற்சிகள் செய்து அதில் வெற்றி பெற்றவராக அணுக்க விமர்சன கோட்பாட்டைத் தோற்றுவித்த பேரா. முனைவர் த. விஜயலட்சுமி அவர்களைச் சாறும்.
அணுக்க விமர்சனக் கோட்பாட்டுச் சிந்தனை என்பது முழுக்க முழுக்க ஆசிரியரின் சொந்த அனுபவத்தில் இருந்து உருவானது. ஆனால் இந்த கோட்பாடு மிகப் பழங்காலம் தொட்டே தமிழில் தோன்றியுள்ளது. குறிப்பாக சங்க இலக்கியம் அதற்கு முன்னர் தோன்றிய தொல்காப்பியம் அதன் ஆசிரியர் தொல்காப்பியர். தொல்காப்பியரே ஒரு கோட்பாட்டு சிந்தனையாக இருந்துள்ளார். தொல்காப்பியர் தொடங்கி, சங்க காலம், சங்க மருவிய காலம், ஔவையார் உள்ளிட்ட சான்றோர் பெருமக்கள் எழுதிய படைப்புகள் அனைத்தும் மிகவும் அணுக்கமாக, நெஞ்சுக்கு நெருக்கமாக, மக்களுக்கு தேவையானதை உணர்ந்து படைத்துள்ளனர். அணுக்கம் என்றால் நெருக்கம் என்று பொருள். நெருங்கிய என்ற பொருளில் ஆளப்பட்டு வந்துள்ளது. நெஞ்சுக்கு நெருக்கமாகிய படைப்பு என்று பொருள். அப்படியெனில் தமிழ் இலக்கியம் யாவும் மனித வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமாகவும் அணுக்கமாகவும் படைக்கப்பட்டது. அணுகி பார்ப்பதற்கும், அணு அணுவாக பிரித்து பார்ப்பதற்கும் துணை புரிகிறது. விமர்சனம் யாரோ ஒருவர் மூன்றாவது மனிதர் சொல்வதைவிட தானே உணர்ந்து செயல்படுவது தான் உண்மையாக இருக்க முடியும். அந்த வகையில் அணுக்க விமர்சனக் கோட்பாடு தமிழ் இலக்கியத்தில் மிக நெருக்கமான உறவு கொண்டதை விளக்குகிறது. இந்த நூலில் அணுக்க விமர்சன கோட்பாட்டைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை அணுவணுவாய் ஆராய்ந்து எழுதியுள்ளார். இந்த நூலின் சிறப்பை சிலவற்றை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அதில் மிக முக்கியமானது ஆசிரியரின் அணுக்க விமர்சனக் கோட்பாட்டை காரண காரியத்தை இயல்பாக ஆராய்ச்சி செய்தாரே ஒழிய, வலிந்து செயல்படுத்தி திணிக்கவில்லை என்பதைப் பதிவு செய்ய வேண்டும். அதற்கான சான்றுகளை நிறுவுவதற்கு மேலே நாட்டின் கோட்பாடுகளை துணைக்கு அழைக்கவில்லை. மாறாக கோட்பாட்டிற்கு தேவையானவற்றைக் கண்டு ஆராய்ந்து விதியை உருவாக்கி அதன் அடிப்படையில் இந்த கோட்பாட்டைப் பதிவு செய்துள்ளார். இதில் மொத்தம் ஆறு இயல்கள் உள்ளன.
- விமர்சன மரபு
- அணுக்க விமர்சனம்
- புனைதல்
- வனைதல்
- உய்த்துணர்தல்
- இன்னும் தொடரும்.
இந்த ஆறு தலைப்புகளும் கோட்பாட்டைப் பற்றி விளக்குவதற்கு போதுமான இயல்கள் (கட்டுரைகள்). அவ்வந்த கட்டுரைக்கேற்ப வலுவான காரணிகளை சொல்லி விளக்கும்போது ஆராய்ச்சி கணப்படுகிறது. அடுத்து ஒவ்வொரு இயலின் தன்மையைப் பற்றியும் தேவையைப் பற்றியும் அணுக்க விமர்சன கோட்பாட்டை எப்படி பொருத்தி பார்க்க வேண்டும் என்பதையும் காணமுடிகிறது. அதற்கு முன்பாக அணுக்க விமர்சனம் என்பது என்ன என்பதை பற்றி ”ஒரு புனைவை அல்லது ஒரு இலக்கியத்தை மிக அணுக்கமாக அணுகி போய் அந்தப் புனைவுக்குள் சஞ்சரித்து அதன் நலன்களை, குறைகளை எடுத்து விமர்சிக்கும் ஒரு விமர்சனக்கலைக்கு அணுக்க விமர்சனம் என்ற தலைப்பு இருக்கும் (ப.17) என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அதே போன்று கோட்பாட்டிற்கான காரணத்தையும் பின்வருமாறு பதிவு செய்வதும் குறிப்பிடத்தக்கது. எந்தவித இலக்கிய பாரம்பரிய மரபும் இல்லாமல் திடீரென்று தோன்றி உலக அளவில் பரவி புதுப்புது மரபுகளை தன்னகத்தே தோற்றுவித்து அதை கொண்டாடும் ஒரு திடீர் மொழி அல்ல தமிழ். நமது மொழிக்கு மிகப் பெரிய பாரம்பரியம் உள்ளது. தமிழ் மரபில் ஒரு நூல் எவ்வாறு எழுதப்பட வேண்டும்? அதில் கடைபிடிக்க வேண்டிய யாப்பு வடிவமைப்பு எது? அதன் உட்பொருள் எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும்? அதன் பின்னணி எவ்வாறு அமைக்க வேண்டும்? என்பது குறித்து எல்லாம் திட்டவட்டமான இலக்கியங்கள் இருந்தன (ப.18) என்பதையும் ஒரு நூலின் குண நலன்களை பற்றி எவ்வளவு நுணுக்கமாக பதிவு செய்தது தமிழ் மொழியில் உருவான அடிப்படைக் காரணம் என்பதை பதிவு செய்வதை காணமுடிகிறது
திறனாய்வு செய்வதற்கு முன்பாக ஒரு நூல் என்றால் என்ன அது எப்படி இருக்க வேண்டும் அதன் கட்டமைப்பு அது யாருக்கானது, நூலை உருவாக்கியவன் மூளை ஆக்கியும் நூலின் அழகு நூலின் குணங்கள் ஆசிரியர் மாணவர் உறவு இப்படி எல்லாவற்றை பேசிய மொழி தமிழ்மொழி. அதனால்தான் தொல்காப்பியம் நன்னூல் நம்பியகப் பொருள் புறப்பொருள் வெண்பாமாலை அதிவீரராம பாண்டியன் உரையாசிரியர்கள் ஆகிய அனைவரும் நூலைப் பற்றியும் அதன் அழகைக் குறித்தும் சிந்தித்த வண்ணம் இருந்துள்ளனர். நூல் எனப்படுவது நுவலும் காலை என்று தொல்காப்பியம் நூலுக்கான இலக்கணத்தைப் பகிர்கிறது. நன்னூல் நூலின் பத்து வகையான அழகையும் பத்து வகையான குற்றங்களையும் . இப்படி பழந்தமிழ் இலக்கியம் இலக்கண நூல்கள் அனைத்தும் நூலின் சிறப்புகளை விளக்கி செல்கிறது இப்படி ஒரு விமர்சன நோக்குடன் தோன்றி வளர்ந்தவை தான் நூல்களின் சிறப்பை நாம் உணர முடியும் என்பதற்கு பழந்தமிழில் தோன்றிய நூல்கள் ஒரு காரணம் என்பதை ஆசிரியர் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி எண்ணற்ற தகவல்கள் அணுக்க விமர்சனக் கோட்பாட்டு எனும் நூலில் நிறைந்துள்ளன. வரிக்கு வரி அடிக்கோடிட்டு படித்து அதை குறிப்பெடுத்து படிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்திய மரபில் ஒரு கோட்பாட்டாளர் படைப்பாளியாக இருப்பதும், ஒரு படைப்பாளி கோட்பாட்டுச் சிந்தனையுடன் இருப்பதும் மிகவும் குறைவு. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் கோட்பாட்டுச் சிந்தனையாளர் ஒரு ந்ல்ல படைப்பை தருவது என்பது கேள்விக்குறிதான். ஒன்று அவர்கள் ஆராய்ச்சியில் கவனம் செலுத்துவதில் இருந்து விலகி புனை விளக்கியங்களில் கத்திரமாக ஈடுபட முடிவதில்லை. புனைவு இலக்கியங்களில் கவனம் செலுத்துபவர் சுதந்திரமாக செயல்பட முடியாது. ஆனால் பேரா. த. விஜயலட்சுமி அவர்கள் நவீன சிந்தனை மரபில் கடந்த கால் நூற்றாண்டாக பெண்ணிய கோட்பாட்டாளராக அறியப்பட்டவர். அதன் பிறகு தமிழ் இலக்கிய கோட்பாடுகள் எனும் நூலை தமிழுக்கு தந்துள்ளார். புனைவிலக்கியத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தீவிரமாக எழுதி வரும் ஒரு படைப்பாளியாகவும் அவரை அறியமுடியும்.
அதேபோன்று இலக்கிய உலகில் தோன்றும் புதியப்புதிய கோட்பாடுகளை சோதனை முயற்சியாக தமிழில் புகுத்தி வெற்றியும் கண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாகத்தான் இன்று அணுக்கள் கோட்பாடு எனும் நூல் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய வரலாற்று நிகழ்வாக கொள்ள முடியும்
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | அணுக்க விமர்சனக் கோட்பாடு (Anukka Vimarsana Kotpadu) |
| தொகுப்பாசிரியர்: | த. விஜயலட்சுமி |
| வெளியீடு: | |
| விலை: | ₹. |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 பேரா. எ.பாவலன் |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அருமெய்