மாதவிடாய் ஜாதிகள் இருக்கேடி பாப்பா போன்ற பெண்களின் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப்படங்களை இயக்கியவரும் சமூகச் செயற்பாட்டாளரும் பெண்ணிய சிந்தனையாளருமான கீதா இளங்கோவன் அவர்களின் பெண்ணியச் சிந்தனைகள் வளர்க்கும் கட்டுரைத் தொகுப்பு இது.
ஆணாதிக்கச் சிந்தனைகளில் பெண் மீதான பார்வை எப்படிப்பட்டது என்பதையும் பெண்ணியம் என்பது பெண்களுக்கு மட்டுமான தனிப்பதம் அல்ல என்பதையும் பெண் மீதான சமத்துவப் பார்வை ஆணின் சிந்தனைக்குள் எழாத வரை பெண்ணடிமைத்தனம் தீராது தொடரும் என்பதையும் எளிய மொழியில் அன்பான வார்த்தைகளில் மனதிற்கு இதம் தரும் பிரியமான கருணையில் எழுதப்பட்டிருக்கும் இந்நூல் ஆணாதிக்க மனப்பாங்கை விட்டொழிக்கும் எல்லா மனிதர்களுக்கான மனிதத்தைப் பேசுகிறது.
கட்டாய ஒழுக்க விதிகள் அன்பு காதல் பாசம் பாராட்டு பாதுகாப்பு பண்பாடு குடும்ப உறவுகள் பேணுதல் இல்லறச் செயல்பாடுகள் என இன்றைய ஆணாதிக்கச் சிந்தனை ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான நிலைகளில் சமமான வடிவங்களில் பேணுவதில்லை.
இவற்றை ஆணைவிட பெண்ணுக்கே அதிகமாகத் திணித்து கட்டுப்பாடுகள் புகுத்தி பெண்களின் மீதான வலையாகப் பின்னிவைத்திருக்கும் சமூகத்தை நோக்கி தனக்கான உரிமைகளைக் கேட்டுப் பெறத் துடிக்கும் பெண் மனதின் எண்ண வெளிப்பாடே இந்நூலின் ஆதார மையமாகிறது.
இதன்மூலம் முழுமையான விடுதலை தந்து அவர்களைக் காணாமல் புறம் தள்ளிவிடுதலை தமக்கான தீர்வாக பெண்கள் எதிர்பார்ப்பதில்லை. ஆணாதிக்கச் சிந்தனைகள் பெண்களுக்கான உடல்ரீதியான பிரச்சனைகளை உணர்ந்து கொள்ளவும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை பகிர்ந்து கொடுக்கவும் சிந்திக்க வேண்டும் என்றே பெண்களின் மனம் போராட்டங்கள் விளம்புகின்றன.
ஆண்களுக்கான உடையை பெண் தீர்மானிக்காதபோது பெண்களின் உடையை மட்டும் எப்படி ஆண்கள் தீர்மானித்தல் இயல்பாகும் என்பதை சிந்திக்கக் கேட்கும் அவர்களின் வினாக்களில் எத்தனையோ நூற்றாண்டு கால அடிமைத்தனத்தின் வலிகள் இருப்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அறிவியலின் வேகயுக வளர்ச்சியில் எத்தனையோ கருவிகள் வீட்டுவேலையை எளிமையாக்கிட உதவினாலும் பெண்களுக்கான தனித்துவம் என ஆண்கள் நிர்ணயித்திருக்கும் வேலைகளை இன்னும் பெண்கள் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள்.ஆணுக்கு நிகரென ஊதியம் பெறும் வேலையில் பெண் தன்னிறைவை எட்டிவிட்டாலும் குடும்பத்தில் அவளுக்கான வேலைகள் அவளுக்காகவே காத்திருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.ஆண்களின் உடைகள் எல்லாவற்றிலும் விதவித பாக்கெட்கள் இடம்பெறுகையில் பெண்களின் உடைகளை பாக்கெட்கள் அலங்கரிக்க பல நூற்றாண்டுகள் காத்திருக்கும் நிலைதானே பெண்களுக்கு நேர்ந்தது.
இன்றைய நிலையிலும் திருமணம் என்பதில் தனித்த கருத்தை தனக்கான எண்ணத்தை வெளிப்படுத்த பெண்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்படுகிறதா என்பதை நாம் எண்ணிப் பார்த்தல் அவசியம்.
ஆண் மனதில் பெண் என்பவள் பலவித வேலைகளை ஒரே நேரத்தில் சிறப்பாகச் செய்யும் திறமை பெற்றவள் என்ற எண்ணம் வலுத்திருக்கிறது.ஆனால் இதுவே ஒரு பெண்ணுக்கான கைவிலங்காக மாறிவிடுகிறது என்பதை ஆண்கள் புரிந்துகொள்ளல் அவசியம்.
குடும்பத்தில் நிகழும் எல்லாவிதமான நிகழ்வுகளுக்கும் பெண் முதுகெலும்பாக நின்று வேலை செய்திடவேண்டும்.ஆனால் முடிவெடுக்கும் நிலையில் மட்டும் அவளுக்கான சமநிலை பேணப்படுவதில்லை.திருமணம் செய்வதிலும் குழந்தை பெறுவதிலும் என எல்லா முடிவுகளும் அவளது முடிவுகளை எதிர்நோக்காமல் அவள்மீது திணிக்கப்படுகின்றன.திருமணம் நடக்கும் வரை செக்ஸ் பற்றி எதுவுமே அறியாமல் பாதுகாக்கும் சமூகம் திருமணத்தின் மறுதினமே அதுபற்றிய முழுமையான புரிதல் இருக்கவேண்டும் என இருவரிடமும் எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.ஆடைக்காட்டிலும் பெண்ணுக்கு இதன் மீதான அழுத்தங்கள் குடும்பத்தின் வழியாகவும் நிகழ வாய்ப்புகள் இருப்பதை நாம் உணரவேண்டும்.
சமூகம் பெண்களின் மீது செலுத்தும் புற அழுத்தங்களைச் சுமந்தபடி நடமாடும் பெண்ணுக்கு சில சமயங்களில் குடும்பமும் மன உணர்வுகளைப் பற்றி புரிந்துகொள்ளாமல் அழுத்தங்களைக் திணிக்கையில் பெண்ணால் தனது செயல்களை சிறப்புற அமைக்க இயலாத சூழலுக்குத் தள்ளப்படுகிறாள்.இத்தகு காலகட்டத்தில் வெளிவந்திருக்கும் இந்த நூலின் மூலம் ஒவ்வொரு அத்தியாயத்திலும் பொண்ணை முன்னேற்றும் நற் சிந்தனைகளை விதைத்திருக்கிறார் ஆசிரியர்.
தான் கண்ட ஆளுமைகளின் பண்புகளை எடுத்தியம்பியும் பார்த்த திரைப்படங்களின் வழியே பெண்ணுக்கான முன் நகர்வை உணர்த்தியும் படித்த புத்தகங்களின் மூலம் சிந்தனைகளை வளர்த்தும் சமத்துவத்தை நிலைநிறுத்திட பாடுபடுகிறது எழுத்தாளரின் உள்ளம்.
தனது உடலைப் பற்றி எந்த குற்றவுணர்வும் கொள்ளாமல் ஆளுமையை வளர்த்துக் கொண்டு முன்னேறச் சொல்லித் தரவேண்டும். “குடும்பப் பெண்” என்ற பதம் விவரிக்கும் அர்த்தம் இன்றைய காலகட்டத்தில் பொருந்துமா என்பதை ஆணாதிக்கச் சிந்தனை மறுபரிசீலனை செய்தல் காலத்தின் கட்டாயம்.
உடலை மறைப்பதற்குத் தேவையான உடை பெண்கள் தற்சார்புடனும் உழைப்பதற்கு வசதியாகவும் ஆளுமையைத் தன்னம்பிக்கையுடன் வெளிப்படுத்தும் வகையிலும் இருத்தல் வேண்டும்.அத்தகு வசதியான எளிய உடைகளை பெண்களுக்கு அறிமுகம் செய்தல் அவசியம்.
பெண் சமத்துவம் பற்றிய புரிதலை ஆண்களுக்கு நமது குடும்பத்திலிருந்து தொடங்கி சுற்றுப்புறங்களுக்கு விரிவாக்கி
சமூகத்திற்கு ஏற்படுத்திட ஆணாதிக்கச் சிந்தனைகள் விரிவடைதல் அவசியம்.
பெண்ணை அடிமையாகவே வைத்திருக்கும் மோசமான உத்தியாக கற்பைக் கொண்டு அவளை எடைபோடுதலை தடை செய்தல் நலம் பயக்கும்.பெண்ணின் மீது நம்பிக்கையை வளர்க்கவேண்டுமே தவிர கற்பைங் சொல்லி ஒவ்வொரு முறையும் விமர்சித்தலை கைவிடுதலே சிறப்பான லிளைவைத் தரும்.
அரசியலில் சுயசார்பை பின்பற்றுதல் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைதல் தனக்கான நட்பு வட்டங்களைப் பேணிப்பராமரித்தல் இல்லறத்தில் எல்லோரும் உரிய மரியாதையை வழங்குதல் என பெண்ணுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் எல்லா ஆண்களின் தலையாயக் கடமையாகும்.
பெண்ணுக்கான வெளியை ஆண் முறையாக அங்கீகரிக்கத் தொடங்கிவிட்டால் அவளை அடிமைப்படுத்தும் எண்ணம் எழாது. உடலை மையமாகக் கொண்டு துன்புறுத்தும் வக்கிரங்கள் அரங்கேறாது.பெண்ணை சக உயிரியாக மதிக்கும் மாண்புகள் பெருகிட வாசிப்போரின் எண்ணங்களில் கல் விதைகளைத் தூவுகிறது துப்பட்டா போடுங்க தோழி நூல். நூலாசிரியரின் எளிய மொழியும் வலுவான கருத்துகளும் ஆணாதிக்கச் சிந்தனைகளுக்குள் பெண்களுக்கான இடத்தை அங்கீகாரம் செய்ய துணைநிற்கின்றன.
நூலின் தகவல்கள்:-
நூல் : துப்பட்டா போடுங்க தோழி
நூலாசிரியர் : கீதா இளங்கோவன்
வெளியீடு : ஹெர் ஸ்டோரிஸ்
தொடர்புக்கு : 9840969757
முதல் பதிப்பு : மார்ச் 2022
விலை : ரூ. 160/-
பக்கங்கள் : 128
நூலறிமுகம் எழுதியவர்:-

இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

